— எஸ். வி. நாராயணன்.

Krishnan with butter

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். முக்கியமாக, சிறுவர், சிறுமிகள் இந்தப் பண்டிகையை வெகுவாக எதிர்பார்த்து இருப்பர். ஏனெனில், தின்பதற்கு நிறைய பட்சணங்கள் கிடைக்குமே! பட்சணங்கள் ஒன்றா, இரண்டா? சீடை, முறுக்கு, தேன்குழல், ஓமப்பொடி, லட்டு, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அப்பம் என பல்வேறு பட்சணங்களை ஸ்ரீஜெயந்திக்காக ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்களே! ஒரு காலத்தில், வைணவ குடும்பங்களில், போட்டிபோட்டுக் கொண்டு, 21 வகையான தின்பண்டங்கள் செய்வார்கள். இவற்றைத் தயாரிப்பதற்கான வேலைகள், பண்டிகைநாளுக்கு 15, 20 நாட்கள் முன்னதாகவேத் துவங்கிவிடும். வீட்டிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும், சாமான்களை வாங்குவது, மாவு அரைப்பது, சீடை உருட்டுவது போன்ற பல்வேறு பணிகளில் குதூகலமாக ஈடுபடுவார்கள். பட்சணங்களை பலர் இப்போது கடைகளில் வாங்கினாலும், இன்றும் கூட பல குடும்பங்களில் இந்தப்பண்டிகைக்கான பணிகள் மிகுந்த சிரத்தையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

சீடையும், முறுக்கும், லட்டும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலே ஆச்சரியமாக விவரிக்கிறார். ஒரு கோபிகை யசோதையிடம் போய் முறையிடுவது போல இந்தப்பாசுரம் அமைந்திருக்கிறது. அந்தக் கோபிகை கூறுகிறாள்:- இலட்டு, சீடை, எள் உருண்டை போன்ற பட்சணங்களைச் செய்து, உரிய பாத்திரங்களில் பத்திரமாகப் போட்டு, என் வீடுதானே என்று காவல் வைக்காமல் சற்று வெளியே சென்று வந்தேன். அதற்குள் கண்ணன் என் வீட்டிற்குள் புகுந்து, நான் பத்திரமாக வைத்திருந்த பட்சணங்களையெல்லாம் அள்ளிச் சென்றுவிட்டான். அத்துடன் நில்லாமல், என் வீட்டில் உள்ள உறியில், வெள்ளை வெளேரென்று விளங்கும் வெண்ணெய் இருக்கிறதா என்று சோதிக்கின்றான். இவ்வாறு அந்தக் கோபிகை யசோதையிடம் முறையிடுவதை பெரியாழ்வார் வர்ணிப்பதைப் பார்ப்போமா!

“கன்னல் இலட்டுவத்தோடு சீடை
காரெள்ளின் உருண்டை கலத்தில் இட்டு
என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன்;
இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான்…..”

இத்தகைய முறையீட்டில் இன்னொரு கோபிகையும் சேர்ந்து கொள்கிறாள். அவள் சொல்கிறாள்:-
யசோதைத் தாயே! செந்நெல் அரிசி, சிறு பயற்றம்பருப்பு இவற்றை பாலில் வேகவைத்து, அத்துடன் நல்ல வெல்லமும், நறு நெய்யும் சேர்த்து அக்கார அடிசில் செய்தேன். அத்தோடு, பன்னிரெண்டு திருவோணத் திருநாளுக்கும் நோன்புக்கு வேண்டிய பலகாரங்களைச் செய்து வைத்திருந்தேன். இந்தக் கண்ணன் அவை அனைத்தையும் விழுங்கிவிட்டு, இன்னமும் உகப்பன் நான் என்று சொல்லி சிரிக்கிறான். அக்கார அடிசில் செய்த பாங்கை கோபிகை எப்படி விளக்குகிறாள் பாருங்கள்!

“செந்நெல் அரிசி சிறு பருப்புச்
செய்த அக்காரம் நறுநெய்பால் ஆல்
பன்னிரெண்டு திருவோணம் அட்டேன்……
‘இன்னம் உகப்பன் நான்’ என்று சொல்லி
எல்லாம் விழுங்கிவிட்டுப் போந்த நின்றான்”

கோபியர்கள் மேலுக்காகக் கண்ணனைக் குறை கூறினார்களே தவிர, அவர்களுக்கு அந்த பாலகிருஷ்ணன் பட்சணங்களை அமுது செய்ததில் ஏகதிருப்தி. இல்லாவிட்டால், அவன் வீடு புகுந்து அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக வீட்டைத் திறந்து போட்டு விட்டுச் செல்வார்களா? கண்ணனுக்கு பட்சணங்கள் பிடிக்கும் என்பதை யசோதையே காட்டித் தருகிறாள். நீராட முரண்டு பிடிக்கும் கண்ணனை நைச்சிய வார்த்தைகள் கூறி யசோதை அழைப்பதை பெரியாழ்வார் படம் பிடித்துக் காட்டுகிறார்:-

“அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதியேல் நம்பீ!……
சொப்பட நீராட வேண்டும்…..”

“உனக்காக நான் செய்து வைத்துள்ள அப்பம் மற்றும் இதர பட்சணங்களைத் தின்ன விரும்பினால், நன்றாக நீ நீராட வேண்டும்‟ என்று யசோதை கண்ணனிடம் வேண்டுகிறாள். காது குத்தி, அழகான காதணிகளைப் போட விரும்பும் யசோதை, அதற்காகக் கண்ணனை அழைக்கிறாள். லேசில் வருகிறதா அந்தக் குழந்தை! ஆசைவார்த்தைகள் கூறி அழைக்கும் யசோதை, “பெரிய, பெரிய அப்பங்கள் தருவேன். வந்து காது குத்திக் கொள்‟ என்று கூறுகிறாளாம்.

கண்ணன் பட்சணப் பிரியன் என்பதாலேதான் ஸ்ரீஜெயந்தியை நாம் மணக்க மணக்கக் கொண்டாடுகிறோம். பட்சணம் மட்டுமா? கண்ணனுக்குப் பழங்களும் இஷ்டம். ஒரு கோபிகையின் இல்லம் புகுந்து, அவளுடைய மகளைக் கூவி, அந்தப் பெண்ணின் கையில் இருந்த வளையைக் கழற்றிக் கொண்டு, கண்ணன் என்ன செய்தான் தெரியுமா?

“கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற்பழங்கள் கொண்டு
நானல்லன் என்று சிரிக்கின்றானே” என்று விவாpக்கிறார் பெரியாழ்வார்.

கண்ணனை தன்வழிக்குக் கொண்டுவர யசோதை என்னவெல்லாம் செய்கிறாள்! பட்சணங்களைத் தருவதோடு, உண்ணக் கனிகள் தருவேன், பலாப்பழம் தருகிறேன், நாவற்பழம் தருகிறேன் என்றெல்லாம் கூறுகிறாள்.

ஆக, கண்ணன் பட்சணங்களை மட்டுமின்றி பழங்களையும் விரும்புகிறான் என்பது தெளிவு. அதனால்தான், ஸ்ரீஜெயந்தியன்று, பட்சணங்களுடன், பழங்களையும் கண்ணனுக்கு நிவேதனம் செய்கின்றோம். அதுவும், நாவற்பழம் அவனுக்கு மிகவும் இஷ்டமாயிற்றே!.

ஸ்ரீஜெயந்தி நன்னாளில் பாலகிருஷ்ணனை விமரிசையாக வரவேற்போம். மணக்க, மணக்க வரவேற்போம். அவன் எப்படி வருவான் தெரியுமா? “ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்‟ பொருந்தியுள்ள பாதரேகைகள் பதியப் பதிய, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் அந்த மாயக் கண்ணன் வருவான். நிச்சயம் வருவான். நம்பி இருப்போம்.

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய்
வெண்ணெய் உண்ட வாயன்
என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன்
என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணாவே‟

கிருஷ்ணகானம்

பாலகிருஷ்ணனின் லீலைகளிலே மனதைப்பறிகொடுக்காத பக்தர்களே இல்லை எனலாம். கிருஷ்ணலீலைகள் அவ்வளவு ரசமானவை. கிருஷ்ணானுபவத்திலே மூழ்கித்திளைத்த மகான்கள், அந்த மாயக்கண்ணனை நினைத்து, நினைத்து நெஞ்சுருகி, அவன் செய்த குறும்புகளையெல்லாம் மனக்கண்ணில் நிலைநிறுத்தி, தாங்கள் பெற்ற அந்த இன்ப அனுபவங்களையெல்லாம் மிகச்சிறந்த பாடல்களாக, உயர் ஸ்தோத்திரங்களாக, கவிதா ரத்தினங்களாக படைத்துத் தந்திருக்கிறார்கள்.

“ஆடாது, அசங்காது வா, கண்ணா
உன் ஆடலில் ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்து ஆடுதே”

அதனால், “ஆடாது, அசங்காது வா‟ என்று கிருஷ்ண கானத்தை அருளிய ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடினார்.

“காலினில் சிலம்பு கொஞ்ச,
கைவளை குலுங்க,
முத்துமாலைகள் அசைய”

அந்த நீலவண்ணக்கண்ணன், விண்ணவரும் மண்ணவரும் மகிழும்படியாக நர்த்தனமாடிய அழகை படம் பிடித்துக் காட்டினார். அந்த ஊத்துக்காடு மகான் தம்முடைய பாடல்களினால்.

“பரப்ரும்மம் “அம்மா‟ என்றழைக்க என்ன தவம் செய்தனை” என்று யசோதையைப் பார்த்து கேட்கும் பாவனையில் அற்புதமாகப் பாடினார் பாபநாசம் சிவன். கண்ணன் ஒரு “தீராத விளையாட்டுப்பிள்ளை‟ எனப் பாடினார் நமது சுப்ரமணிய பாரதி.

உலகையே உத்தாரணம் செய்த அந்த “ஜகதோத்தாரணனை‟, தொட்டிலில் இட்டு ஆட்டும் பாக்கியத்தைப் பெற்ற யசோதையை நினைத்துப் பரவசமுடன் பாடினார் புரந்தரதாசர். “கிருஷ்ணா நீ பேகனே பாரோ” என்ற கனகதாசரின் கீர்த்தனையை யாரால் மறக்க முடியும்?

கிருஷ்ணானுபவத்தில் ஈடுபட்டு, மெய்மறந்து, ஊன் உருக, உடல் உருகப் பாடிய பக்தர்கள் அனேகர் உண்டு. ஆழ்வார்கள், ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், ஆசாரியர்கள், கவிஞர்கள், இசை வல்லுனர்கள் என சகலரும் கிருஷ்ணலீலைகளை உளமார உணர்ந்து பாடினார்கள்.

அத்தகைய மகான்களிலே, கேரளத்தைச் சேர்ந்த லீலா சுகரும் ஒருவர். லீலாசுகர், முதலில், சிந்தாமணி என்ற ஒரு பெண்ணிடம் அதீத ஆசை வைத்திருந்தார். ஒருசமயம் அந்தப் பெண்மணி லீலா சுகரிடம் சொன்னாள்:-
“என்னிடம் வைத்துள்ள ஆசையில் ஆயிரத்தில் ஒருபங்கு பகவானிடம் வைத்தால் நற்கதியடையலாமே” என்றாள். இந்த உபதேச வார்த்தைகள் லீலா சுகரின் நெஞ்சத்தைத் தொட்டன. அந்த நொடியிலிருந்தே, இறையருளால், வைராக்கியம் பெற்ற லீலாசுகர் கிருஷ்ணனை ஆராதிக்கத் துவங்கினார். செவிக்கு அமுதமாக, 328 சுலோகங்கள் அடங்கிய “கிருஷ்ணகர்ணாம்ருதம்‟ என்ற நூலும் அவரால் இயற்றப்பட்டது. அந்த நூலிலிருந்து ஒரு சில துளிகளை இங்கு பார்ப்போம்.

ஒருசமயம், கிருஷ்ணன் அன்னையின் மடியில் படுத்திருந்தான். “அம்மா! பசிக்கிறது. அம்மம் கொடு” என்கிறான். “இப்போது அம்மம் இல்லையடா” என்கிறாள் தாய். “எப்போது இருக்கும்?” எனக் கேட்கிறது குழந்தை. “ராத்திரியில் இருக்கும்” என்கிறாள் யசோதை. “ராத்திரி என்றால் என்ன?” என்று ஒன்றும் அறியாதவன் போல வினவுகிறான் மாயக்கண்ணன். “ராத்திரி என்றால் இருட்டாக இருக்கும்” என பதில் தருகிறாள் யசோதை. கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்ட குழந்தை, “ராத்திரி வந்துவிட்டது. அம்மம் கொடு‟ என்று அம்மாவின் புடவைத்தலைப்பை இழுத்து அடம் பிடிக்கிறதாம். நான்கே வரிகள் அடங்கிய சமஸ்கிருத ஸ்லோகத்தின் வாயிலாக இந்த நாடகம் முழுவதையும் படம்பிடித்துக் காட்டுகிறார் லீலாசுகர்.

கிருஷ்ணன் மண் தின்ற கதையை மற்றொரு ஸ்லோகத்தின் மூலம் அற்புதமாகச் சித்தரிக்கிறார் லீலா சுகர். விளையாடச் சென்ற கண்ணன் மண்ணைத் தின்றான் என்ற புகார் வரவே, யசோதை கண்ணனைக் கூப்பிட்டு “மண்ணைத்தின்றாயா? உண்மையைச் சொல்” என்று மிரட்டுகிறாள். “யார் சொன்னது மண்ணைத் தின்றதாக?” என்கிறான் மண்ணை உண்ட மாயன். “உன் அண்ணன் பலராமன்தான் சொன்னான்” என்கிறாள் யசோதை. “அண்ணன் பொய் சொல்கிறான் அம்மா. வேண்டுமானால் என் வாயைப் பார்” எனத் தனது பவளச்செவ்வாயைத் திறந்து காட்டுகிறான் கண்ணன். அந்த வாயினில் உலகம் அனைத்தையும் கண்டு மிகுந்த ஆச்சரியத்தை அடைகிறாள் யசோதை. அப்படி, தாயை ஒரு நொடி பிரமிக்கவைத்து, விந்தை புரிந்த அந்த க்ருஷ்ணன் நம்மையெல்லாம் காப்பவனாக இருக்கட்டும் என்கிறார் லீலாசுகர்.

குழந்தை கண்ணன் தூங்குகின்றான். தூங்குகையில் அந்த மோகன க்ருஷ்ணன் ஏதேதோ பேசுகிறானாம். “சம்போ மகாதேவா, வாருங்கள் உட்காருங்கள். பிரம்மாவே, இப்படி எனது இடது புறத்திலே அமரலாம். கார்த்திகேயா! சுகமா? தேவேந்திரா! என்ன உன்னை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை”. தூங்குகிற குழந்தை ஸ்வப்னத்தில் பிதற்றுவதாகக் கருதிய யசோதை மிகவும் பயந்து, குழந்தைக்கு திருஷ்டி கழிக்கிறாளாம்.

மற்றெhரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் காண்போம். கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி “யார் நீ?” எனக் கேட்கிறாள். “பலராமனின் தம்பி” என சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை. “இங்கு எங்கு வந்தாய்?” என வினவுகிறாள் அந்தப்பெண். “என்வீடு என நினைத்து நுழைந்து விட்டேன்” என்கிறான் கண்ணன். (ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா!) அந்தப் பெண் விடவில்லை. மேலும் கேட்கிறாள். “அதுசரி, வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?” என்கிறாள். “கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை. ஒருவேளை அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்” என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன். கன்றுக்குட்டியை வெண்ணெயிருக்குமிடத்தில் தேடிய அந்த குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள்.

கோகுலத்திலே, கிருஷ்ணன் வெண்ணெயை மட்டும் திருடவில்லை. கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். அதனால் தான், தயிர், மோர், பால் எனக்கூவி விற்க வேண்டிய ஒருபெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த பிரேமை மிகுதியால், “கோவிந்தா, தாமோதரா, மாதவா” என கூவிக்கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.

கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு அரிய ரத்தினமாகும். க்ருஷ்ணனின் ரூபலாவண்யத்தைப் பற்றி லீலாசுகர் கூறுகிறார்.

ஆலிலை மேல் பள்ளி கொண்ட அந்த பாலகிருஷ்ணன், தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற பாதத்தை எடுத்து, தாமரை போன்ற வாயில் வைத்துக் கொண்டிருக்கிறானாம். அத்தகைய முகுந்தனை தியானம் செய்வோம் என்கிறார் லீலாசுகர்.

கிருஷ்ணனின் அழகிய உருவத்தினை நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள இதோ லீலாசுகரின் மிக அழகிய தொரு ஸ்லோகம்:-

“கஸ்தூரி திலகம் லலாட பலகே
வஷ:ஸ்தலே கௌஸ்துபம்
நாஸாக்ரே நவமௌக்திகம்
கரதலே வேஹம் கரே கங்கணம்
ஸகண்டே ச முக்தாவலிம்
கோபஸ்திரி பரிவேஷ்டித:
விஜயதே கோபால சூடாமணி”

நெற்றியில் கஸ்தூரி திலகம், மார்பில் கௌஸ்துப மணி, மூக்கு நுனியில் புதிய முத்து, கையில் புல்லாங்குழல், கரத்தில் வளை, திருமேனி முழுவதிலும் நல்சந்தனம், கழுத்தில் முத்துமாலை இவற்றையெல்லாம் தரித்துக்கொண்டு, கோபிகைகள் சூழ வெற்றி வலம் வருகிறான் ஆயர்தலைவனான கோபால சூடாமணி. அந்த கோபாலசூடாமணியை நம் மனக்கண்முன் கொண்டு வந்து விட்டால் எல்லையற்ற இன்பத்தை நாமும் பெறலாமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *