வெள்ளி மணி ஓசையிலே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கண்ணதாசன் – வாலி இவ்விரு கவிஞர்களின் கைவண்ணங்கள் தமிழ்த்திரை வானில் எழுதியிருக்கும் கோலங்கள் வகை வகையானவை. வண்ணத்தமிழுக்கு மகுடங்கள் போன்றவை. மனதைப் பறிகொடுத்தே ஆகவேண்டிய அளவிற்கு இசையோடு அவை நடனமாடுபவை. பல நேரங்களில் இது யார் பாடல் என்கிற சந்தேகம் தருபவை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்பதை தம் வசந்த வரிகளால் வரைந்துகாட்டியவர்கள்!
கற்பனையில் உருவாகிறது கவிதை என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை உண்மையல்ல. கவிதை, அது உள்ளத்தே ஊறிவரும் ஊற்று! திரைக்கதையை உள்வாங்கி, பாடல் இடம்பெறும் காட்சியை மனதில் பதித்து, அந்தக் கதாப்பாத்திரங்களாகவே தங்களை உருக்கொண்டு, உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை வார்த்தைச் சரங்களால் வளைத்து, இனிமை சேர்த்து இன்பம் பயக்கும் வரிகளைச் சமைத்து, இசைக்குக் காணிக்கையாக்குவதில் இருபெரும் வல்லவர்கள் இவர்கள் என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இதோ ஒரு பாடல். இந்தப் பாடல் இடம்பெறும் படம் ‘இருமலர்கள்’. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்ற பாடலாய், அன்பின் ஆனந்த எல்லையில் ஒரு பெண்ணின் மனம் சொல்லும் இன்பஸ்வரங்களில் விளைந்த கீதமிது! கே.ஆர்.விஜயா திரையில் நடிகர் திலகத்துடன். முகபாவங்கள் வெட்கக் கோலங்கள். துள்ளிவருகிற உற்சாகத்தை அள்ளித்தருகிற அற்புதப் பாடல்!
பாலும் பழமும் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதியிருக்கும் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலின் சாயல் இந்தப் பாடலில் எதிரொலிக்க, வெள்ளி மணி ஓசை முழங்குவது இரு மலர்களுக்காக. விஸ்வநாதன் அவர்களின் இசையின் பங்கு இரண்டிலும். வாலி அவர்கள் வழங்கியிருக்கும் வரிகளில் பரவச அலைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. நாயகி தன் நாயகனை எண்ணி, கவிதைசொல்லி வணங்குகிறாள். கண்கள்மூடி மலர்கிறாள். இன்பமழை பொழியுமிந்தப் பாடலை இதயம் நனையக் கேளுங்கள்..
காணொளி: https://www.youtube.com/watch?v=tUyBqJzBuv8
வெள்ளி மணி ஓசையிலே …
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே…
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே…
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே…