வையவன்

ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை.

அனகாபுத்தூரில் திஷ்யா வீட்டுக்கு எதிரில் ஒரு டாக்ஸி நின்றிருந்தது. தெரு வாசற்படியில் ஏகப்பட்ட செருப்புகள் காணப்பட்டன. வீட்டுக்கு வெளியே ஒரு பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துக்களில் “கங்கோத்ரி பார்ம சூடிகல்ஸ்’ என்று எழுதியிருந்தது.

அனகாபுத்தூர் வாண்டுப் பையன்கள் குழாம் ஒன்று அந்த டாக்ஸியைச் சுற்றிக் கூடியிருந்தது. ஒரு அம்பாஸிடர் வண்டி.
திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியாக ஒரு பையன் கையை நீட்டி ஸ்டேரிங் நடுவில் கை விட்டு ஹாரனை அழுத்த முயற்சித்தான். கொஞ்சம் பயம்; கையில் வலு இல்லாமல்அதை அழுத்தினான். ஓசை வரவில்லை.

“டேய்… நீ நவுர்றா… சொண்டி…” என்று இன்னொரு சிறுவன் அவன் திறமையின்மைக்காக அதட்டினான்.
“நீ அடிச்சிடுவியா?”
“அவன் அடிக்கிறானோ… இல்லையோ, நீ நவுரேன்.”

“இவனாலயும் அடிக்க முடியாது…”
“அடிச்சுட்டா…இன்னா பெட் கட்டறே?”
“பெட் கட்டற மூஞ்சியைப் பாரு… எடறா அம்பது பைசா.”

“பசுபதி… வாங்கிவைடா அந்த அம்பது பைசாவை. நவுருடா நீ” என்று பந்தயத்திற்கு அழைக்கப் பட்டவன் ஹீரோ மாதிரி முன் வந்தான். அம்பாஸிடருக்குள் கை விட்டு ஹார்னை அழுத்தினான். ஒருமுறை இருமுறை மும்முறை விட்டு விட்டு ஹார்னை அழுத்தினான்.
“பாய்ங்… பாய்ங்… பாய்ங்”
‘ஹை ஹை’ என்று கூட்டம் கும்மாளமிட்டது.

உள்ளேயிருந்து கையில் ஒரு மாதப் பத்திரிகை பிரதியோடு ஓடி வந்தான் சிவா.

“அஞ்சு நிமிஷம் வண்டியை தன்னை மறந்து விட்டுட்டா போதும்! ஓடி வந்திடுவிங்கடா… யார்ரா அவன் இப்ப ஹார்ன் அடிச்சவன்?” என்று சிவா கேட்டுக் கொண்டே தெருவில் இறங்கினான்.

அதற்குள் சிறுவர்களின் கூட்டம் மூலைக்கு ஒன்றாகப் பறந்து விட்டிருந்தது.

பாக்கெட்டில் கையை விட்டு சிவா சாவியைத் தேடினான்.

கையிலிருந்த மாதப் பத்திரிகையில் பக்க அடையாளமாக வைத்த விரலை எடுத்தான். காரின் பானெட்டின் மீது அந்த மாதப் பத்திரிகையை வைத்து விட்டு கார்க் கதவைத் திறந்தான்.

கண்ணாடிக் கதவை உயர்த்துவதற்கு வைத்த ‘நாப்’ஐ நன்றாகச் சுழற்றி அதை முழுக்க மூடினான். கதவைப் பூட்டிக் கொண்டிருக்கும் போது எவனோ ஒரு சிறுவன் மாதப் பத்திரிகையின் பெயரை எழுத்துக் கூட்டி தன் படிப்பறிவைச் சோதித்து கொண்டிருந்தான்.

“மோ…தி…ர…ம்… மோதிரம்.”
“டேய்… நீ தானே ஹார்ன் அடிச்சவன்?”
“சார்… நான் இல்லே சார்! நான் பக்கத்து வீடு! அதோ டில்லி கீறான் பாரு சார்… அடுத்த தெருவு பையன்… அவன் தான்… அவன்படா வால் சார்.”

இவன் என்னமோ மகா உத்தமன் மாதிரி பேசுகிறான் என்று அந்த வயசின் விஷமத்தையெல்லாம் ரசித்துக் கொண்டே “மோதிரம்” பிரதியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அந்த இதழில் அவன் எழுதிய குறுநாவலும் அவன் பேட்டியும் பிரசுரமாகியிருந்தன. கூடம் முழுவதும் கூட்டம்.

வெற்றிவேல் ஒரு நாற்காலியில்; பிரீதா ஒரு நாற்காலியில்; புண்ணியகோட்டி பெஞ்சின் மீது; குழந்தைகள் எல்லாம் தரையில். பிரேம் மட்டும் சைக்கிள் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

சமையல் அறைக்குள் சிவாவின் அம்மா பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு முறை எட்டிப் பார்ப்பது… ஒரு நடை கூடத்திற்கு வருவது என்று திஷ்யா சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.

“எப்பவோ ஒரு தடவை வர்றீங்க! அதுக்குள்ளே ஒங்களை நல்லா வேலை வாங்கிடறேன் அம்மா” என்று சிவாவின் அம்மாவைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்த திஷ்யா, சிவா தெருவிலிருந்து வந்ததைப் பார்த்து மீண்டும் கூடத்திற்கு வந்தாள்.

அவன் எழுந்து போன நாற்காலி காலியாக இருந்தது. ஆனந்து அந்த நாற்காலியைப் பிடித்து ஏறி உட்கார முயன்றான். சிவா நாற்காலி காலியாகட்டும் என்று நின்றான்.

“ஆனி…ஆனி” என்று கூப்பிட்டார் புண்ணியகோடி…
திஷ்யா அதைப் பார்த்து விட்டாள்.

“ஆனந்து… இந்தா அப்பிச்சி” என்று ஒரு பஜ்ஜியை எடுத்துக் காட்டினாள். ஆனந்து அவளிடம் ஓடினான்.
சிவா நாற்காலியில் உட்கார்ந்தான்.

“ம்ம்… நீ அந்த பேட்டியை வாசிப்பா”
மோதிரம் இலக்கிய மாத இதழுக்குத் தான் அளித்த பேட்டியைத் தானே படித்துக் காட்டத் தொடங்கினான் சிவா.

கேள்வியை ஒரு தினுசாகவும் அதற்கு நான் அளித்த பதிலை ஒரு தினுசாகவும் மாற்றி மாற்றி தானே இரண்டு நபர்கள் போன்று நாடக பாணியில் படித்துக் காட்டினான் சிவா.

“இந்தியாவிலேயே பி.டி. டாக்ஸி டிரைவரா இருக்கிற எழுத்தாளர் நீங்க ஒருத்தரா தான் இருக்க முடியும்னு நெனைக்கிறோம்.”

“அதெப்படி சொல்றது, இந்தியா ரொம்பப் பெரிசு.. ஒரு வேளை மெட்ராஸிலேயே நான் ஒருத்தன் தாண்ணு சொல்லலாம்.”
“நீங்க அனுபவங்களை அதிகம் சம்பாதிக்கலாம்ணு தான் டாக்ஸி ஓட்டறிங்களா?”

“இல்லே. தமிழ்நாட்டிலே எழுத்தை மட்டும் நம்பி வாழ முடியாது. நான் சுதந்திரமா எழுத ஆசைப்படறேன். எழுத்தையே முழுக்க நம்பினா வியாபார ரீதியிலே ஏதாவது சீப்பா எழுத நேரிடும், ஸோ… எனக்கு ஜீவனோபயத்துக்கு வசதியா இல்லேண்ணாலும் அடிப்படைத் தேவைகளுக்காவது எனக்கு ஒரு தொழில் வேணும். எனக்கு கார் ஓட்டத் தெரியும்! ஸோ…நான் ஒரு பி.டி. டிரைவர் ஆனேன்.”

“சுதந்திரமா எழுதறதுண்ணு எதைச் சொல்றீங்க?”

“சமூகத்திலே நடக்கிற நிகழ்ச்சியைப் பத்தி எனக்குத் தோணியதை நான் சொல்ல விரும்பறேன். அதற்கு எந்த கட்டுப்பாடாவது இருந்தா எனக்குப் பிடிக்கலே. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமே இந்த சமூகம் இயங்குகிற விதத்தைப் பத்தி ஒரு எழுத்தாளனாக இந்த சமூகத்தின் நலத்தை விரும்பி எழுதுவதைத்தான் என் அளவில் சுதந்திரம்ணு நான் நெனைக்கிறேன்.”

“வேற ஏதாவது நல்ல வேலை கெடைச்சா டாக்ஸி ஓட்டறதை விட்டுடுவீங்களா?”
“ஏன்… வேற ஏதாவது வேலை வச்சிருக்கீங்களா?”

கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் நாலைந்து பேர் சிரித்தனர். சிவா மட்டும் படித்துக் கொண்டிருந்த ‘மொனாடனி’ அகன்று கூடத்தில் உயிர்க் களை பரவிற்று.

“டேய்… கிண்டலா பண்றே?” என்று பேட்டியில் சிவா கூறியதில் வெற்றிவேல் குறுக்கிட்டான்.”
“மீதியைக் கேட்டுட்டு சொல்லேண்டா” என்று சிவா தொடர்ந்தான்.

“நீங்க ஒரு பி.டி. ஓட்டறதை விட்டுட விரும்புவீர்களாண்ணு கேக்கறோம்!”
“இல்லை பி.டி. ஓட்டறது நல்ல வேலை இல்லைன்னு யார் சொன்னது?”
“ஒரு பி.டி. டிரைவருக்கு சமூகத்திலே இருக்கிற அந்தஸ்து வேறே; ஒரு எழுத்தாளருக்கு சமூகத்திலே இருக்கிற மதிப்பு வேறே இல்லையா?”

“இருக்கலாம்…எனக்குத் தெரியாது! அந்த அளவு அந்தஸ்து பேதம் பார்க்கிற மாதிரி என்னை நான் வேறு படுத்திக்கலே.”
“உங்கள் அபிப்பிராயத்தை நீங்கள் விளக்க முடியுமா?”

“நான் இந்த சமூகத்திலே வசிக்கிறேன். என் தொழில் இந்த சமூக நலனை விரும்புவது. இதன் மேம்பாட்டுக்காக என்னால் என்ன முடியுமோ அதை வஞ்சனையில்லாம செய்யறது. நீங்க முன்னே ஒரு கேள்வி கேட்டீங்களே…வேற வேலை இல்லாதலே பி.டி. ஓட்ட வந்தீங்களாண்ணு. அதுக்கு இப்ப விளக்கமா பதில் சொல்றேன். வேலையை… ஐ மீன் வைட் காலர்ட் ஜாப்ஐ தேடிக்கிட்டு நானும் கொஞ்ச நாள் அலைஞ்சேன். எனக்கு ரொம்ப அவமானமா இருந்தது…”

“வேலை தேடி அலையறது அவமானம்கறீங்களா?”
“இல்லியா பின்னே?”
“வேலை இல்லாதவர்கள் வேலை தேட வேண்டியது தானே, அதிலே என்ன அவமானம் இருக்கு?”

“எதுக்குமே அலைஞ்சா அவமானமா இருக்கு. நான் மனிதன். இந்த கர்வம் இருக்கே, இந்த பெருமிதம் இருக்கே, இந்த விசாலமான இருதய வலிமை இருக்கே இதை, எதைத் தேடி அலைந்தும் நான் இழந்துடத் தயாராயில்லை.”
“நீங்க ஒரு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ ஆக இருக்கலாம்.”

“நான் ஒரு எக்ஸ்க்ளூஸிவ்’ இல்லே. சாதாரண மனிதன்தான். வெள்ளைக் காலர் வேலைதான் வேலை என்று கருதாத தொழிலாளி. இந்தத் தொழில்லே எனக்கு சமூகத்தின் சகல விதமான நாடி ஓட்டங்களும் தெரியுது. நான் பலதரப்பட்டவங்களை சந்திக்கிறேன். பல்வேறு மக்களோட பழகறேன். எனக்கு இந்த சமூகம் எப்படி இயங்குகிறதுண்ணு தெரியுது. அதனால் இந்தத் தொழில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”

“நீங்க ஒங்க சொந்த வண்டியை ஓட்டறீங்களா… அல்லது டாக்ஸி கம்பெனியிலே ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபா கொடுத்துடணும்ணு ஒரு கட்டுப்பாட்டின் கீழே வேலை செய்யறீங்களா?”
“நான் ஒரு டாக்ஸி கம்பெனியிலே தான் இருக்கேன்.”
“அப்போ ஒங்களுக்கு எழுத நேரம் கெடைக்காதே!”

“டாக்ஸி ஓட்டி நெறய சம்பாதிக்கணும்ணு ஆசைப்பட்டா எனக்கு நேரம் கெடைக்காது. எனக்கு அதிக தேவைகள் இல்லே. நான் கல்யாணமாகாதவன். எனக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க. எழுதறதுக்கு எப்ப தோணுமோ அப்ப நான் டாக்ஸி ஓட்ட மாட்டேன். நிறுத்திட்டு எழுத ஆரம்பிச்சுடுவேன். சில சமயங்கள்ளே அவசரமான சந்தர்ப்பங்கள் வரும்… பிரசவ கேஸ், ஆக்ஸிடெண்ட் ஆவணங்களை தூக்கிட்டுப் போறதுன்ஙனு சிக்கல் வரும். அப்ப எழுத்தை கொஞ்சம் ஒத்தி வச்சுட்டு சவாரி போவேன். எனக்கு மானத்தோடு உயிர் வாழப் போதுமானது இதுலே கெடைக்குது.”

“இந்த வேலையை எக்காரணத்தைக் கொண்டும் நீங்க வட விரும்பலியா?”

“இந்த வேலை எனக்குப் பிடிச்சிருக்கு! இதை விடப் பிடிக்கற வேலை ஏதாவது என் முன் எதிர்ப்பட்டா ஒருக்கால் விட்டுடலாம். வாழ்க்கையில் எது நிரந்தரம்? எந்த வேலையும் நல்ல வேலை தான். ஒரு வக்கீலின் வேலைக்கு, நல்ல முறையில் செருப்புத் தைக்கும் ஒரு செருப்புத் தொழிலாளியின் வேலை இளைத்தது அல்ல என்று நமது தேச பிதா காந்திஜி சொல்லியிருக்காரே! எனக்குத் தெரிஞ்ச வேலை கார் ஓட்டறது. ஓட்டிகிட்டிருகேன். எழுதறது, எழுதிட்டிருக்கேன். தட்ஸ் ஆல்.”

“நன்றி”
“வணக்கம். நன்றி”
“அற்புதமான பேட்டிதாம்பா” என்று புண்ணியகோடி ஒப்புக் கொண்டார்.

“பிரேம்… சீதா… கொஞ்சம் இப்படி வர்றீங்களா?” என்று திஷ்யா
மையல் அறையிலிருந்து அழைத்தாள்.

“எதுக்கு அக்கா?”
“இந்த பஜ்ஜி பிளேட்களை எல்லாம் எல்லாருக்கும் கொண்டு போய் வைங்க.”
பஜ்ஜி தட்டுகள் ஒவ்வொன்றாக கூடத்திற்கு வந்தன. எல்லோரும் சாப்பிடத் தொடங்கும் போது சிவா எழுந்தான்.
“என்ன சிவா!” என்று புண்ணியகோடி கேட்டார்.”

“கொஞ்சம் மொகம் அலம்பணும் போலேருக்கு!”
“பொழக்கடையிலே சிமிட்டித் தொட்டிலே தண்ணி இருக்குமே… திஷ்யா” என்று கூப்பிட்டார்.
“இதோ வந்துட்டேம்பா. தொட்டியிலே தண்ணி ஆய்ட்டிருக்கும்.”

“சிவா மொகம் அலம்பணுமாம்மா! சோப்… டவல் எல்லாம் கொண்டு போ. தண்ணியை சேந்தி ஊத்திவிட்டு வா!”
தான் வருவதற்காகக் காத்திருப்பது போல அவர்கள் பஜ்ஜியைத் தொடாமலிருந்தனர்.

“நீங்க சாப்பிடுங்க!”
அவன் புழக்கடைக்குப் போனான்.
சோப்பும் டவலுமாக திஷ்யா பின் தொடர்ந்தாள்.

டவலை பாத்ரூம் கம்பியின் மீது போட்டு விட்டு அவள் திரும்பும் போது சிவா கையைப் பிடித்தான்.
“மொகமா அலம்பணும்?… என்று குறும்பாகக் கேட்டாள் திஷ்யா.
“ராயல்டி?… கங்கோத்ரி பார்மசூட்டிகல்ஸுண்ணு பேர் வச்சதுக்கு!”

அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சிவா. அந்த இடுப்பும் தோளும் மார்பும் விறுவிறுவென்று துடிப்பதை அவன் உணர்ந்தான்.

சட்டென்று அவள் உதடுகளை நோக்கிக் குனிந்தான். ஒரு நிமிஷத்திலே வாயைத் துடைத்துக் கொண்டு அவனிடமிருந்து விடுபட்டு வாளியை கிணற்றில் இறக்கினாள் திஷ்யா.

ராட்டினம் கிறீச்சிட்டுக் கொண்டு உருண்டது. தண்ணீர் மட்டத்தை அது தொட்ட ஒலி வந்தது. அப்போது திஷ்யா கேட்டாள்.
“வெற்றிவேல் எதுக்கு வந்திருக்காரு?”
“அக்ரிகல்சர் ஆபீஸ்லே ஏதோ தகவல் தேவையாம்! அதுக்கு வந்திருக்கான்”

“இன்னும் ரெண்டு நாள் இருப்பாரா?…”
“இல்லே, இன்னிக்கு நைட் மெய்லே பொறப்பட்டுடுவான். ஹி ஈஸ் வெரி பிஸி”
“ஆமா… பேட்டியிலே தேவைகள் ரொம்பக் குறைவுண்ணு சொல்லியிருந்தீங்களே… கல்யாணமாய்ட்டா என்ன பண்ணுவீங்க?”

“கல்யாணமானா என்ன பண்றது? ஹனிமூன் போகணும். அப்புறம் கொழந்தை பெத்துக்கணும்.”
“இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது! இது பேட்டியில்லே. நெஜம்மா கேக்கிறேன்”

“ஆகட்டும்… அப்புறம் பார்ப்போம். அன்றன்றைய பாடும் கவலையும் அன்றன்றைக்குப் போதுமானது. மொதல்லே அம்மாவுக்குக் கூட டாக்ஸி ஓட்டறது பிடிக்கலே. பிரீதா வீட்டிலே சொமையா தங்கியிருக்க வேண்டாமேண்ணு சொன்னதும் ஒப்புக்கிட்டாங்க…”

“பிரீதா வெற்றிவேலைத் திருமணம் செஞ்சுகிட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்!”

“யார் இல்லேண்ணாங்க… ஆனா பிரீதா தயங்குறா! பார்ப்போம்… ஒரு வேளை அவளுக்கும் தாமு ஞாபகம் மாறலாம்.”
அவள் தண்ணீரை இழுக்கத் தொடங்கினாள்.

“திஷ்யா… நந்தவனத்திலே என்னை ஒரு தொடர் கதை கேட்டிருக்காங்க?”
“அப்படியா… சபாஷ்… கங்க்ராசுலேஷன்ஸ்… இதை ஏன் மொதல்லேயே சொல்லலே?”

“தொடர் கதைக்கு ஒரு தலைப்பு தேடிக்கிட்டிருந்தேன் கெடைச்சப்புறம் சொல்லலாம்ணு. ஜஸ்ட்… இதோ இப்ப தான் ஒன்னை… ஒன்னை பாத்ரூமிலே தொட்டப்போ தான் தலைப்பு கொடைச்சுது!”
“என்ன தலைப்பு?”

“இது உதயம் இல்லையோ?”
“ஆமாம்.. இப்பொழுது உதயமில்லைதான்!”

“இப்பொழுதுண்ணா… இந்தப் பொழுதுண்ணு சொல்லலாம். எந்தப் பொழுதுக்கும் ஓர் உதயம் உண்டு இல்லியா?”
“கரெக்ட்”

வாளிக்கு மாட்டியிருந்த கயிற்றை நீளமாக இழுத்து வந்து சிமிட்டித் தொட்டியில் தண்ணீரை நிரப்பினாள் திஷ்யா.
அவன் அவள் தண்ணீர்த் தொட்டியிலிருந்து நிமிர்வதை குறுகுறுவென்று பார்த்தான்.
“ஏய்… என்ன பார்க்கிறே?”

“இது உதயம் இல்லையோ?”
“எது?”
“இது கூடத்தான். அது?”
“அது அப்புறம்!”
“எப்புறம்?” என்று கேட்டான்.

“சீக்கிரமா மொகத்தை அலம்பிட்டு உள்ளே வா.” என்று அவள் கூடத்திற்குள் நுழைந்தாள்.
* * *

முற்றும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.