— அனவை நரா அப்பாஸ்.

internetபெருநகரம் கொண்ட பிரச்சனைகள், குக்கிராமத்தில் பெரிதாக பேசப்படுகின்றன. பெரு நகரத்தையும் குக்கிராமத்தையும் இணைக்கும் பாலம் எது? இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது?

பரந்த இந்த உலகில் நமக்காக வியாபித்துக் கிடக்கின்ற சாதனங்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா என்பதைச் சிந்தித்து பார்த்தோம் எனில், கொஞ்சம் யோசனையில் மௌனித்துத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் குழந்தைகள் தொடங்கி இளைஞர் முதல் திருமணமாகி வேலைக்குச் செல்பவர்கள் வரை பெரும்பாலானோர் வாட்சப், செல்ஃபி, கேம்ஸ் ஆகியவற்றிலேயே தன் பொழுதை பெரும் அளவில் கழிக்கின்றனர்.

இன்றைய தொடர்பு சாதனங்களும் அதன் சேவைகளும் ஒரு பார்வை:
1.செய்தித்தாள்கள்.
2.வானொலி.
3.தொலைக்காட்சி.
4.அலைப்பேசி.
5.இணையம்.

1.செய்தித்தாள்கள்:
‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று பாரதியார் பாடியதை உண்மையாக்கியதே நான்தான் என மார்த்தட்டிக் கொண்டு தினமும் காலையில் அனைத்து வீட்டிலும் தன் ராஜ்ஜியத்தை நிகழ்த்துகிறது செய்தித்தாள்கள்.

பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு பதினைந்து நிமிடங்கள் நம்மை அமைதியாய் அமர வைக்கும் செய்தித்தாள்களின் பணி அரும்பணிதான். இன்றைய நிலையில் உள்ள செய்தித்தாள்களில் சில: தினகரன், தினமணி, தினமலர், தமிழ் முரசு, தினத்தந்தி, மாலை மலர், தமிழ் மலர், தினக்குரல், தின நேசன், சுடர் ஒளி, உதயன், புதிய தலைமுறை, மாலை தமிழகம், மக்கள் ஓசை, வீர கேசரி, தினச்சுடர் ஆகியவை அடங்கும். உலகச் செய்திகள், மாநிலச் செய்திகள், மாவட்டச் செய்திகள், வேலைவாய்ப்பு தகவல்கள், விளையாட்டுச் செய்திகள் மட்டுமல்லாது மாப்பிள்ளை, மணமகளைக் கூட தேடி கண்டுபிடிக்கலாம் மணப்பந்தல் வழியே….

2.வானொலி:
வானொலி என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி அறிவிப்பு பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி, ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர். ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

இன்று செய்தித்தாள்கள் சென்றடையாத குக்கிராமங்கள் நம்நாட்டில் இருக்கின்றன என்பதைச் சொல்வதற்கு, சற்றே மனதைக் கவலை வருடுகிறது. அங்கு வாழும் பெரியவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் வானொலி வழியே ஒரு இடத்தில் என்ன நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்கின்றனர். வேகமாக நகரமாகிக் கொண்டிருக்கும் கிராமங்களுக்கிடையே, ஒரு கொட்டகைக்குள்ளே இருக்கும் டீக் கடையும், அதில் உள்ள ஒரு மூங்கிலில் தொங்கவிடப்பட்டிருக்கும் வானொலியும்,
மரப்பலகையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டே டீ பருகிக் கொண்டிருக்கும் தலை நிறைத்த முதியவர்கள் உள்ள கிராமங்கள் , இன்றும் இருக்கின்றன. தற்போதெல்லாம் அப்பகுதியில் தான் வானொலி அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் வானொலியில் ஒலிபரப்பப் படுகின்றன.

3.தொலைகாட்சி:
படிக்கும் செய்தியையும் , கேட்கும் செய்தியையும் காட்சியாக உடனுக்குடன் அளிக்கிறது தொலைக்காட்சி. சற்று முன் கிடைத்த செய்தி என்று ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியிருக்கிறது நிலநடுக்கம் என்ற கணமே பூகம்பம் நடந்த இடத்தை , பாதித்த பகுதிகளை தெளிவாகக் காட்டுகிறது. தொலைக்காட்சியில் வரும் பயனுள்ள தகவல்களை எழுதுவதற்குப் பக்கங்கள் பத்தாது. தினம் ஒரு தகவல், வயலும் வாழ்வும், மூலிகை மருத்தவம் என்று வரிசைப்பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். தொலைக்காட்சியின் முக்கியம் கருதியே ,அரசாங்கமே இலவச தொலைக்காட்சி வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே..

4.அலைப்பேசி:
செய்தித்தாள்களும், வானொலியும், தொலைக்காட்சியும் நுழைய முடியாத இடத்தில் கூட நுழைந்து தனக்கே உண்டான இடத்தைப் பிடித்திருக்கிறது கைப்பேசி என்ற அலைப்பேசி. மின்கம்பி இணைப்பு இன்றி மின்காந்த அலைகளால் இயங்கி ஒலியலைகளை கேட்கவும், அனுப்பவும் செய்கிறது தொலைப்பேசி. படிக்காத பாமர மக்கள் கையில் கூட கைப்பேசி உள்ளது. இன்று ஒரு வீட்டில் குறைந்த பட்சம் இரண்டிற்குக் குறையாத செல்போன்கள் இருக்க வேண்டும் என்பதே நியதி போல் ஒவ்வொரு வீட்டிலும் ஆளுக்கொரு செல்போன்கள்.

ரூபாய் ஐந்நூறு முதல் துவங்குகிறது அதன் விலை. ‘ஊருக்குப் போய் கடிதம் போடு’ என்ற வார்த்தைகள் மா’றி, ‘போய் இறங்கிய உடன் போன் பண்ணு’ சொல்கிற காலம் ஆகிப்போச்சு…

5.இணையம்:
தொலைப்பேசி சென்ற இடமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தன் காலடியை பதித்துக் கொண்டு வருகிறது இணையம்.

இணையம் என்ற சொல்லானது, செம்பு கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, ஒரு தகவலிலிருந்து மற்றொன்றிற்கு மீயினைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புப்படுத்தப்பட்ட இணைய தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது. நகரமக்கள் பெரும் பகுதியாக இணையத்தினை பயன்படுத்துகின்றனர். படிப்பறிவு பெற்ற கிராமங்களிலும் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நமக்குத் தேவையான தகவலின் ஒரு முக்கிய வார்த்தையை எழுதினாலே அது தோன்றிய தினம் முதல் இன்றைய தினம் வரையிலான அனைத்துத் தகவல்களையும் கொடுத்து விடும். இணையத்தில் ஒரு செய்தியை அனுப்பினால் அது அடுத்த நிமிடம் உலகம் முழுவதும் தெரிந்துவிடும். இணையத்தின் மூலம் பணம் எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதையும் இணையமே சொல்கிறது.

இன்றைய நிலை:
நம் வாழ்வோடு இணைந்திருக்கும் இவற்றின் பங்கு அளப்பரியது. ஆனால் வாட்ஸப்பிலும், ஃபேஸ் புக்கிலும், செல்ஃபியிலும், கேம்மிலும், மூழ்கிய இன்றைய இளைஞர்கள் இவற்றை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதில்லை.
பின்பற்றவேண்டியவை:
இன்றைய இளைஞர்களே நாளைய நல் சமுதாயம் என்பதை யாராலும் மறக்க முடியாது.

1.ஒரு நாளில் பத்து நிமிடங்களாவது நாளிதழோடு அமருங்கள்.

2.அலைபேசியில் பாடல்களை பதிவிறக்கம் செய்து அதை இயர்ஃபோன் மூலம் கேட்கும் நேரத்தில் வானொலியில் பாடல்களை கேளுங்கள். பாடல்களுக்கு நடுவே நல்ல பயனுள்ள விஷயங்கள், அறிவிப்புகள், செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

3.ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தொலைக்காட்சி செய்திகளைக் கவனியுங்கள்.

4.உங்களது பொழுது நேரத்தை, அரட்டை அடிக்கும் சேட்டிங்கிலும், கமண்ட் அடிக்கும் வாட்ஸ் அப்பிலும், அபாயம் கொடுக்கும் செல்ஃபியிலும் கழிக்காமல் உங்களுக்குத் தெரிந்த நல்ல தகவல்களை நண்பர்களுக்கு அலைப்பேசியில் பரிமாறுங்கள். உங்களது வாட்ஸ்அப்பும், ஃபேஸ்புக்கும் ஒரு பயனுள்ள தகவலைத் தாங்கியதாய் இருக்கட்டும்.

5.இணையம் நல்ல முறையில் பயன்படுத்துபவர்களுக்கு நன்மையே தரும். தீய முறையில் பயன்படுத்துபவர்களுக்கு தீயவையும் தரும். நல்லதென்றும் தீயதென்றும் பிரியுங்கள். உங்கள் எண்ணங்களை நல்லதாக்குங்கள். இணையதளத்தில் உங்கள் தளத்தை உருவாக்குங்கள்.

பரவிக் கிடக்கிறது வானம்,
அதில் உங்கள் கையொப்பம் பொறித்திடுங்கள்..
சாதிக்கப் பிறந்தவர்கள் நாங்களென்று, சாதித்து நீருபியுங்கள்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *