இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (178)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே!
இனிய வணக்கங்கள். அடுத்தொரு வாரம் அவசரமாய் ஓடி விட்ட நிலையில் உங்களுடன் மடல் வழி இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உள்ளம் இருக்கிறதே! அது ஒரு விசித்திரமானது. அதிலே சதிராடும் உணர்வுகளின் காரணம் தெரியாமலே எண்ணங்கள் உருவெடுக்கும். அவ்வெண்ணங்களின் நதிமூலம் தேடினால் கிடைப்பது ஏமாற்றமே!
இவ்வாரம் எனது அன்னையின் 16 வது சிரார்த்த தின வாரமாகும். ஆம், அவர் மறைந்து பதினாறு வருடங்கள் காற்றோடு கலந்து பறந்து விட்டது. அவரின் சுவாசம் கூட அவ்வகையில் தான் பறந்தோடியதோ? அன்னையின் எடை எமது இதயத்தில் எத்தகையது என்பதை அளந்து கூறக்கூடியவர்கள் யாராவது இருந்தால் அது அதிசயமே! என் அன்னையின் எண்ணங்கள் என் நெஞ்சில் நிழலாடும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு என் நெஞ்சினை அடைத்துக் கொள்ளும். அவரின் பாசமிகு பார்வைகள், பரிவு மிகு மென்மையான வார்த்தைகள் எத்தகைய துயரோடு அவரை அணுகினாலும் அதனை ஒரு வினாடிக்குள் எம்முள் இருந்து களைந்தெறிந்து விடும் அவரின் தாய்மை ஆற்றல்கள் என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது.
நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எமது அடையாளமாக, அதாவது ஆங்கிலத்தில் legacy என்று கூறுவார்கள் … விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. ஆனால் ஒரு உண்மையான தாய்மையின் அடையாளச் சின்னமான அன்னையருக்கு அக்கேள்வி எழ நியாயமேயில்லை எனலாம். அவர்கள் தமது அடையாளமாக தமது சின்னமாக விட்டுச் செல்வது தாம் பெற்ற குழந்தைச் செல்வங்களையே! தமது கனவுகளை தமது உள்ளத்தினுள் புதைத்து விட்டு, தமக்காக ஆண்டவன் அருளிய குழந்தைச் செல்வங்களின் நலன் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்து முடித்து விடும் அவர்களின் தியாகத்தின் முன்னே எதுவுமே ஒப்பாகாது. இதை உணர்த்தும் முகமாகவே எமக்கு எமது முன்னோர்கள் தாம் படைத்த இதிகாசங்களில் குந்தியை, காந்தாரியை, கோசலையை, யசோதையை உதாரணங்களாகக் காட்டிச் சென்றுள்ளார்கள்.
வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடும் அவசரத்திலும் தாய்மையெனும் செல்வத்தை விட மற்றைய செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதினாலும் பல சமயங்களில் நாம் எமது அன்னையருக்குக் கொடுக்க வேண்டிய நியாயமான கெளரவத்தை அளிக்க வேண்டும் எனும் உண்மையை மறந்து விடுகிறோம். காலம் கடந்த பின்பு, காலன் அவர்களை எம்மிடமிருந்து பறித்துச் சென்ற பின்பு அவர்களின் மகிமை எம்முன்னே மகத்தான ஒளியாகப் பிரகாசிக்கிறது. என் அன்னை கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கும் போது அவர்களின் கால்களில் பதிந்த முட்களின் ரணங்களின் வலியின் கொடூரத்தை உணர்கிறேன். அதை உணர்ந்து கொண்டேன் என்று அவருக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தைத்தான் naan இழந்து விட்டேன்.
இம்மடலின் முக்கிய நோக்கம், என் இனிய வாசக நெஞ்சங்களுக்கு அவர்தம் பெற்றோரின் பெருமையைக் காலம் கடந்திடாமல் உணர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு ஞாபகமூட்டுதலே! அன்னைக்கான திதிக்கான கடமைகளை ஆற்றும் போதெல்லாம் அவ்வன்னை எனக்காகத் தான் ஆற்றிய கடமைகளின் மகத்துவம் புரிகிறது. “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” கவிஞர் வாலியின் வரிகள் மனதின் வலிகளைக் கொஞ்சம் இதமாய்த் தடவிக் கொடுக்கின்றன. என் அன்னைக்கு நான் சமர்ப்பிக்கும் அஞ்சலிக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யும் முக்கிய கடமையாகிறது.
அம்மா !
எனும் இந்த
மந்திரச் சொல்லினுள்
அர்த்தங்கள்
ஆயிரம் எனும்
அற்புத உண்மைதனை
அழியாமல் என்னிதயத்தில்
பதித்து வைத்த
அன்பு அன்னையே
உன் பாதம் பற்றி
வணங்குகிறேன்
உன் உள்ளமெனும்
உத்தம ஆலயத்தில்
அன்பு எனும் நெய் ஊற்றி
உன் சுவாசக் காற்று
உனை விட்டு அகலும் வரை
அணையாது பாதுகாத்த
அன்புத் தெய்வம் நீயம்மா !
மந்திரப் புன்னகையினால்
மனதின் மந்தகாசங்களை
மத்தாப்புக்களாக மாற்றும்
மாபெரும் வித்தையின் நாயகி
விதையாகி உந்தன் கருவறையில்
முகிழ்த்தெழுந்த நாள்முதல்
முழுமனிதனாய் வலம் வந்ததுவரை
முற்று முழுதான தாயன்பின்
தத்துவம் பயிற்றுவித்த
தமிழன்னை நீயம்மா !
வேதனையில் என் வதனம்
வாடிடும் வேளை கண்டால்
சோதனையில் உன் மனம்
வெந்திடும் விந்தையறிவேன்
சாதனையேதும் புரியாத
சாதாரண மகன்தான் நானெனினும்
சாதனை புரிந்தவன் போல்
பெருமையில் பூரித்தவள் நீயம்மா !
காலமெல்லாம் நிறைவேறா பல
கனவுகளை உன்னுள்ளம் தாங்கிடினும்
கண்களின் மணிகள் போல எமை
காத்துக் கரையேற்றிய காவியத்தலைவி நீ !
உன்னுள்ளம் நானறிவேன் அம்மா !
உன் ஏக்கம் நானுணர்ந்தேன்
வீண் கழித்துக் காலங்கள் பல
மண்ணாக்கிய பொழுதுகள் பலவுண்டு
கண்விழித்து வாழ்வின் பொருளுணரும் போது
காற்றோடு காற்றாக நீயும்
விண்ணேகி மறைந்து விட்டாய்
நீ வாழும் போது நானுனக்கு
கவிமாலை சாத்தவில்லை அம்மா !
உன் உயிர் பிரியும் வேளையிலே
உனக்காக நான் யாத்தேன் முதற்கவிதை
அதுவே என் கவியுலகின் பிரவேசத்திற்கு
முதல் படியானதம்மா ! இன்று
நாளெல்லாம் பல கவிதை
நான் பாடி முடிக்கின்றேன் ஆயினும்
குயில் பாடும் இசை கேட்க செவியில்லை
என்பது போல, என் கவி கேட்க
தமிழ் தந்த என் தாயில்லையே !
என் எழுத்துக்களின் ஜீவ நாடியாய்
அன்னையும், தந்தையும் என் தெய்வங்கள்!
என் விரல்கள் வழி வழிந்தோடும்
எண்ணங்களின் நதிமூலம் எனை ஈன்ற
என் அன்புத் தெய்வங்கள் தானென்பேன்
அம்மா ! அம்மா ! என்று நானழைத்த பொழுதுகளும்
தம்பி, தம்பி என்று நீ அணைத்த பொழுதுகளும்
கண்ணுக்குள் என்றும் உறங்காத காட்சிகளாய்
காலத்தின் முன் அழியாத சாட்சிகளாய்
அன்னையுந்தன் பெருமை உரைக்கும்
கல்பதிந்த எழுத்துக்களாய் மிளிரும்
அன்னை உந்தன் சிரார்த்த தினமதில்
அழியாத தெய்வமாய் உனை நிறுத்தி
ஆலயத்தில் நான் செய்யும் ஆராதனைகள்
அனைத்தும் அம்மா உன் பாதங்களில் இவன்
வடிக்கும் கண்ணீர்ப் பூக்களே !
நான் வாழும் காலவரை என் எழுத்துக்கு
எனையீன்ற தமிழ்த்தாய் நீ வலு கொடுப்பாய்
உனக்கெந்தன் அஞ்சலிகள் செலுத்துகிறேன்
அன்னலஷ்மி எனும் அன்புத் தெய்வமே !
வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan