தலையங்கம்

குடியரசு தின வாழ்த்துகள்!

பவள சங்கரி

தலையங்கம்

12548991_499602483576517_5793127922693701004_n

கொடியேற்றம், அணிவகுப்பு, தேசிய அளவில் வெளிநாட்டு பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாநில அளவில் ஆளுநர் கொடியேற்றம், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளர்கள் கொடியேற்றம், பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் வீர சக்கரா விருதுகள், மாநில அளவில் காவல்துறை விருதுகள் அளித்தல் போன்றவை வருடங்கள் தோறும் பெயரில் மட்டும் மாற்றங்களுடன் தவறாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆம் இவையனைத்தும் வெறும் சடங்குகளாக மட்டுமே நடைபெறுகின்றன. நாட்டின் இன்றைய வளர்ச்சியின் நிலையே சுதந்திர நாட்டின் வெற்றி விழாக் கொண்டாட்டமாக அமையும்!

பாரதப் பிரதமராகப் பதவியேற்றபின் மேதகு மோடி அவர்கள் எடுத்த பல முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தன. அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதிலும், மேக் இன் இந்தியா செயல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருதலில் அவர் காட்டிய முனைப்பு போன்றவைகள் பாராட்டுதலுக்குரியன. அது போல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் போன்றோர்கள் எடுத்துவரும் முயற்சிகளும் பாராட்டிற்குரியவைகளாகவே உள்ளன. தங்களுடைய மாநிலங்களை தொழில்வளம் மிக்க நாடுகளாக மாற்றுவதற்கு அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் போற்றத்தக்கது. ஆந்திராவில் ஏர்பஸ் கம்பெனியுடன் இணைந்து விமானம் தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதும் பாராட்டிற்குரியது. வெறும் அறிவிப்புகளுடன் மட்டுமே நின்றுவிடாமல் , செயலிலும் வேகம் காட்டுவது வரவேற்பிற்குரியது. மிகவும் பின் தங்கிய பீகார் மாநில முதல்வர் நிதீஸ் குமார் அவர்கள் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளதும் மன நிறைவை ஏற்படுத்தக்கூடிய செயல். இப்படி குறிப்பிடும் வகையில் ஒரு சில முதல்வர்களே மக்கள் நல்வாழ்விலும், தொழில் வளத்திலும் அக்கறை காட்டி நம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆளும் கட்சியோ, பிரதான எதிர் கட்சிகளோ முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் தங்களுடைய மாநிலங்களை, தொழில் தலைநகராக மாற்றுவோம் என்பது போன்ற கோசங்களைக்கூட முன்வைப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம். தேர்தலுக்கு முந்தைய சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் தனது ஆளுநர் உரையில் முழு மதுவிலக்கு என்பது இயலாத காரியம் என்று கூறியிருப்பது வருந்தக்கூடிய விசயமாகும். சில புள்ளிவிவரங்களின்படி விஸ்கி, பிராந்தி போன்ற மது அருந்துவோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதும். அதே நேரத்தில் மதுவின் பாதிப்பு குறைவாக உள்ள பீர் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றன. மற்றொரு புள்ளி விவரத்தின்படி புகை பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தும், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருவதாகவும் தெரிய வருகின்றன. இதைப் பற்றியெல்லாம், ஆளும் கட்சியோ அல்லது ஆள ஆசைப்படும் கட்சிகளுக்கோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. பொருளாதாரம், தொழில் துறைகளில் வளர்ச்சியடைந்து வரும் தமிழகத்தைப் பாரதப் பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தையொற்றி மேக் இன் தமிழ்நாடு என்ற கோசத்தை முன்வைத்துப் போட்டியிட எந்தக் கட்சியும் தயாராக இல்லை. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இலவசங்களைப் பற்றி மட்டுமே அறிவித்து மன மயக்கத்தை ஏற்படுத்துகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 1% பேர் மட்டுமே இந்த இலவசத் திட்டங்களுக்கு எதிர்ப்பும், 24% பேர் வரவேற்றும், 24% இலவசங்களில் மாற்றங்களும் தேவை என்று கூறியிருக்கின்றனர். விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பல சதவிகிதத்தினர் வரவேற்றுள்ளனர். இது அதிர்ச்சிக்குரிய தகவலாகவும், மக்களின் எதிர்மறை சிந்தைகளை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. பசிப்பவனுக்கு இரண்டு மீன்களைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்போம் என்ற பெரியோரின் கருத்துகளை எள்ளி நகையாடும் விதமாக அரசு கருவூலங்கள் காலியானாலும் கவலையில்லை என்ற நோக்கில் வெற்றி பெறுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் விதமாக இல்லை என்பதே வேதனையான விசயம்.

வாழ்க சுதந்திரம்!
குடியரசு தின வாழ்த்துகள்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க