வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்.

3

           இனிய விடுதலைத் திருநாள் தினம்!        

 எங்கே செல்லும் பாதை?

 

பல்லாண்டுக் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த நம் பாரத தேசம், தன்னலமற்ற பெருந் தலைவர்களின், போராட்டத்தினால்  ஓர் நாள் நடு இரவில் பெற்ற  சுதந்திரத்தால் இற்றைத் திங்களில், 64 ஆண்டுகளுக்குப் பிறகும், வளமானதொரு வாழ்க்கை பெற்றிருக்கிறோமா என்றால், இல்லை என்ற கசப்பான உண்மையே விடையாக அமைகிறது. பொருளாதாரம், தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு என்று ஒரு புறம் வளர்ந்து கொண்டிருந்தாலும், கொத்தடிமைகளாக பணி புரியும் சாரார் ஒரு புறமும், மனித கழிவுகளை மனிதர்களே  துப்புரவு செய்யும் சாரார் மறு புறம என்ற நிலையே இன்றும் நிலவுகிறது.. இதையெல்லாம் சரி செய்யும் எண்ணமே துளியும் இல்லாத ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு.

பொருளாதாரத்தின், மேல் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே மேலும் மேலும் உயரும் வாய்ப்பே அதிகமாக உள்ளது என்பதும் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

திரைப்படங்களில், கதாநாயகன், வில்லனைத் துரத்தித் துரத்தி தவறுகளைத் தட்டிக் கேட்பதை கைதட்டி ரசிக்கும் நாம், நம் கண் முன்னால் மற்றவருக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கும் மனோபாவமே இல்லாமல், எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல எந்த ஒரு உணர்வுமே இல்லாமல், சுயநலமாக இருக்கும் போக்கே காண முடிவதும் மறுக்க முடியாத உண்மை. அப்படி துணிந்து தட்டிக் கேட்பவரின் நிலையும் கவலைப் படும்படியே உள்ளதும் நிதர்சனம்.

இன்றைய சூழலில் மக்களின் ஒரே நம்பிக்கையாக உள்ளது நீதி மன்றங்கள் மட்டுமே. அதுவும் வலியவருக்கு மட்டுமே நல்லதொரு நீதியை வழங்க முடிவதாக இருக்கிறது. எளியவர்களென்றால், சில நேரங்களில் தவறே செய்யா விட்டாலும் கூட தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதையும் கண்டு நொந்து போகும் நிலையும் தவிர்க்க இயலவில்லை.

அன்னா ஹசாரே, சாரதாமணி தேவி போன்ற சமூக ஆர்வலர்கள் தங்களின் தள்ளாத வயதிலும் ஊழலுக்கு எதிராக காந்தீய முறையில் போராடிக் கொண்டிருந்தாலும் சரியான தீர்வு கிடைப்பதாகவும் இல்லை.

பிரதமராக இருப்பினும், உச்ச நீதி மன்ற நீதியரசராக இருப்பினும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றே நம் அரசியல் சாசனத்தில் கூறியுள்ளது போல்  லோக் பால் மசோதா ஏன் மறுக்கப்பட வேண்டும் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.

நாட்டில் அனைவருக்கும் சமமான நீதி, சமமான வாய்ப்புகள், மற்றும் ஊழலற்ற நிர்வாகம் கிடைத்தாலே நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின்  2020 ல் வல்லரசாக வேண்டும் இந்தியா என்ற மாபெரும் கனவிற்கு அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது என்பதும் திண்ணம்!

வாழ்க நம் பாரதம்!
வாழ்க நம் செந்தமிழ் நாடு!

 

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்.

  1. லண்டன் டைம்ஸ் நாளிதழ் (ஆகஸ்ட் 6, 2011) தலையங்கத்தில். ‘…தனது உலகளாவிய மேன்மையையும், நாட்டின் செழிப்பையும் முன்னிறுத்தும் நிலையில் உள்ள இந்தியாவின் தேவை, ஆரோக்கியமான ஆளுமை. ஆனால், நாம் காணும் காட்சியோ, அடி சறுக்கும் இந்திய யானை, தடுமாற்றம், வலுவிழந்த அரசியல்…’ என்ற பொருள்பட எழுதியுள்ளது. அதாவது, டா.அப்துல் கலாம் விழையும் இந்தியாவின் பொற்காலம் 2011லியே வந்திருக்கக்கூடும் என்கிறது. இந்த அடி சறுக்கும் இந்திய யானையை தூக்கி நிறுத்த மக்களின் விழிப்புணர்ச்சி தேவை.

  2. அடிமை இந்தியாவில் காந்தி பல முறை உண்ணாவிரதப் போராட்டங்களை
    நடத்திய போது கூட ஆங்கிலேய அரசு பெரும் கெடுபிடிகளை உருவாக்கியதாகச்
    செய்தி இல்லை. அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
    3 நாட்கள் கெடு விதிக்கப் பட்டிருப்பதும், போராட்டத்திற்கு வரும் அன்பர்களின்
    எண்ணிக்கை கட்டுப்படுத்தப் பட்டிருப்பதும், அங்கு வரும் வாகனங்களின்
    எண்ணிக்கை கட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் வேடிக்கையாயும் வேதனை
    தருவதாயும் இருக்கின்றன. போராட்டம் என்பதே தவறு என்றால் நாம்
    பெற்ற சுதந்திரம் தவறான செயலால் வந்ததா? சுதந்திர தினத்தையும்
    குடியரசு தினத்தையும் வெறும் சம்பிரதாயச் சடங்காகக் கொண்டாடுவதால்
    என்ன பயன் விளையப்போகிறது?
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  3. வணக்கம். இன்றைய நீதி மன்றங்கள் வழக்கறிகர்களின் வாதத்திறமைமையினை வைத்தே முடிவு செய்யபடுகின்றது நீதி. வக்கீல்களின் வாதத்திறமையும் வாதிகளின் பணவசதியினை பொறுத்தே அமையும். இன்றய நீதி தேவதைகள் பணத்துக்கும்
    வக்கீல்களின் வாதத்திறமைக்கும் மயங்கி கிடக்கின்றன என்பதுதான் நடை முறை உண்மை. இதனால் பல நேரங்களில் நேர்மையானவர்களுக்கு தண்டனையும், நேர்மையற்றவர்களுக்கு விடுதலையும் கிடைக்க வழி வகை செய்கிறது என்பதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *