’’கண்டேன் அனுமனை’’….
கிரேசி மோகன்
————————————————
திருத்துழாய் காட்டில் கருத்துடன் ராமன்
திருப்பெயர் ஓதும் தவமே -மருத்துவக்
குன்றேந்தி வந்தோய் குணமயக்கம் போக்கிட
இன்றேந்தி வாருமய்யா இங்கு….(19)
பொன்னும் கிடைக்கும் புதனும் அகப்படும்
எண்ணும் எழுத்தும் இருவிழியாய் -மின்னும்
கவிக்குல முக்யன் கமல பதங்கள்
தவிக்கையில் தோன்றும் துணைக்கு….(20)
மூவாசை கொள்ளா முதல்வோன் ரகுராம
சேவைசெய் ஆசை சிவரூபன் -பூவாச
அன்னையைக் கண்டு அசோக வனத்திடை
இன்னலைத் தீர்த்தோன் இவன்….(21)
ஆஞ்ச நேயன் அசாத்திய சாதகன்
காஞ்சன அன்னையைக் கண்டன்று -வாஞ்சையாய்
வில்லாளி நாயகன் வாக்களிப்பை விண்டுரைத்த
சொல்லாளி சுந்தரன்பேர் சொல்லு….(22)
புலன்களாம் ஐவரோடு ஆறா காது
விலங்கினைப் பூட்டிய வாயு -குலன்மகன்
தாசரதி தோழன் தசகண்ட ராவணன்
வாசலெதிர் வந்தோன்வால் வாள்…. (23)
இராமன் இளையோன் இருதோள் இருக்க
இராவணன் போரில் இறக்க -அரோஹரன்
அம்சனே அஞ்சனை ஆண்மகனே வானர
வம்சனே வாழியநின் வாகு….(24)….கிரேசி மோகன்….