கிரேசி மோகன்
——————————————

வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால்
சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய்
உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு
எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140)

முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு
அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா
பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால்
நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141)

சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத
அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம்
அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின்
உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142)

கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம்
கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் -நல்விதமாய்
யாசிக்கும் எங்களுக்காய் யோசிக் காதுசெய்வாய்
பூசிக்கும் பார்மூன்றும் பார்….(143)

நாடாது போயினும் நண்பன் வசந்தனுன்
னோடேதான் நிற்பனென நம்புகிறேன் -ஆடாத
மொட்டனைய அக்கினியை மூண்டு வளர்த்திட
கட்டளைக்காய் காக்குமோ காற்று….(144)

அனங்கன் அதைக்கேட்(டு) இணங்கி சுரர்கள்
இனங்கோனின் ஆணையை ஏற்று -வணங்க
அயிரா வதமடக்கும் ஆஜானு கையை
தயவோடு வைத்தான் தலை….(145)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *