மீனாட்சி பாலகணேஷ்

3

‘கூடிப் பிரியாமலே ஓரிராவெலாம் கொஞ்சிக் குலாவியங்கே….
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடீ….’
******************

திலகாவும் சைலஜாவும் உற்சாகத்தின் எல்லையில் நின்று கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பள்ளி ஆண்டு விழாவில் ராஜராஜ சோழன் நாடகம் போடப் போகிறார்கள். சைலஜா தான் இளவரசி குந்தவை. குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் எல்லாப் பெண் குழந்தைகளும் தங்களை அரசிளங்குமரியென்று பாவித்துக் கனவு காண்பார்கள். சைலஜா போன்ற சிலருக்கே அக்கனவு நாடகத்திலாவது நினைவாகப் போகிறது. அம்மாவின் கிளிப்பச்சை நிற வைர ஊசிப் பட்டுப் புடவை தான் குந்தவையின் உடை. பாக்கி ‘இமிடேஷன்’ நகைகளுக்கு ‘ உமா ஜுவெல்லரியில்’ இருந்து வாடகைக்கு எடுக்கப் பள்ளியில் இருந்து ஏற்பாடாகியிருந்தது.

ஒத்திகைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சனிக்கிழமை மதியம் சாப்பாட்டுக்குப் பின் திலகா ரகசியமாக வந்து சைலாவைக் கூப்பிட்டாள். அலமுவும் பாட்டியும் சற்றே கண்ணயர்ந்திருந்த நேரம்.

“என்ன திலகா? நான் இப்போ வந்தா பாட்டி கத்துவா,” என்று ஜாடை காட்டினாள்.

“எங்கம்மா சரின்னுட்டாங்க. நீயும் வாயேன்,” என ரகசியக் குரலில் அவசரமாக விளித்தவளைத் தொடர்ந்து மெல்ல அடி எடுத்து வைத்தவளாக, கொலுசு சப்திக்காமல் வெளியே வந்தாள் சைலஜா.

“சைலா, சூப்ரண்டு எஞ்சினியர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலியா மருதாணிச் செடி தான் இருக்குடீ, நாம போய் இலை பறிச்சுக்கிட்டு வந்தா எங்க அண்ணி அரைச்சு இட்டு விடுவாங்க. உனக்கு நாடகத்துக்கும் அலங்காரமாச்சு. இல்லாட்டி டீச்சர் சிவப்பு மசியால தான் டிசைன் போட்டு விடுவாங்க.” இதைக் கேட்ட உடன் சைலாவின் ஆர்வம் பல மடங்காகி விட்டது.

“சரி திலகா, உங்கம்மா ஒத்துக்கிட்டாங்கன்னா எங்க பாட்டியும் கோவிச்சுக்க மாட்டாங்க. இரு வரேன்,” மெல்ல, வாயிற் கதவைச் சாத்தி விட்டு வர, இருவரும் ஓட்டமும் நடையுமாக மருதாணிச் செடிகளைத் தேடி ஓடலானார்கள்.

பருத்தி புடைவையாகக் காய்த்தது மாதிரி சூப்ரண்டு எஞ்சினியர் மனைவி மரகதம், வேலைக்காரி வேலாயியை விட்டு மருதாணி பறித்து அரைக்கச் சொல்லியிருந்தாள். இவர்களைக் கண்டதும், “வாங்கடி பெண்களா, எங்காத்து ராதாவுக்கு நாளைக்குப் பூச்சூட்டல். மருதாணி இட்டு விட வேலாயி அரைக்கிறா. நீங்களும் அதிலேயே எடுத்து இட்டுக்கலாம், நிறைய இருக்கு,” என்று தாராள மனசுடனும் முகம் கொள்ளாத சிரிப்புடனும் கூறவே, இரண்டு சிறுமிகளும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

மரகதம் மாமியின் கை ‘பர பர’வென்று வேலை செய்யும். விராளி மஞ்சள், பாக்கு, செப்புப் பைசாக் காசு எல்லாம் வைத்து அரைத்த மருதாணியை முதலில் ராதாவுக்குக் கால்களிலும் கைகளிலும் அழகாக இட்டு விட்டாள். ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி, “வாடி இங்கே, கையைக் காட்டு,” என்று உரிமையோடு சைலஜாவை இழுத்து உட்கார்த்தி, அவள் கையிலும் மருதாணி இடலானாள்.

“என்ன விஷயம்? திடீர்னு மருதாணி ஆசை ரெண்டு பேருக்கும்?”

திலகா வெட்கப்பட்டுக் கொண்டு பேசாமல் சைலாவைப் பார்த்தாள்.

“மாமி, எங்க ஸ்கூல்லே ஆண்டு விழா. அதிலே நாடகத்திலே நான் இளவரசி குந்தவையா நடிக்கிறேன். ஒரு சின்ன டான்சும் ஆடணும். அதான்,” என்று உற்சாகமாகச் சைலஜா கண்கள் பளபளக்க விவரித்தாள்.

“அடி சக்கை! அப்படியா சேதி? பின்ன யாராம் வேங்கி நாட்டு இளவரசன் விமலாதித்தன்? உங்களுது தான் பெண்கள் பள்ளிக்கூடமாச்சே? யாராவது ஒரு பெண் தான் இல்லையா?” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு குறும்புத்தனமாக ராதா கேட்ட போது சைலஜாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.

“திலகா தான் விமலாதித்தனா நடிக்கிறா,” என்றாள்.

“அப்போ உனக்கு மருதாணி இட வேண்டாமாக்கும். பரவாயில்லை. இந்தா, உங்க அண்ணி, அம்மா எல்லாருக்கும் கொண்டு போய்க் கொடு,” என்று அரைத்த மருதாணியை பெரிய சாத்துக்குடி அளவில் உருட்டி இரண்டு உருண்டைகளை ஒரு வாழையிலையில் வைத்து மடித்துத் திலகாவின் கையில் தந்தாள் மரகதம் மாமி.

“நல்லாக் காஞ்ச பிற்பாடு ராத்திரி சாப்பாட்டுக்கு முந்தி களுவினாப் போதும் புள்ளே,” என்று சொல்லியனுப்பினாள் வேலாயி.

சைலாவுக்கு வீடு திரும்ப மனமேயில்லை. ராதா அக்காவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்க வேண்டும் போல இருந்தது. ராதாவின் அன்பான குறும்பான பேச்சும், அந்தக் குடும்பத்தினரின் தோழமையும், சகஜ பாவமும், தாய்மையின் விளிம்பில் ராதா நின்ற கோலமும் சைலாவின் மலரும் கனவுகளுக்கு மிக சுவாரஸ்யமான இலக்காயிருந்தன. சைலாவுக்குக் கற்பனைகள் அதிகம். ராதாவைப் போன வருடம் ஒரு திருமணத்தில் பார்த்து விட்டு அவளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக நின்று கூடிய சீக்கிரமே அவளை மணந்து கொண்ட கஸ்தூரிரங்கன் மாமா சைலாவைப் பொறுத்த வரை ஒரு பெரிய ஹீரோ.

அவரைப் பற்றிப் பேசும்போது ராதாவின் முகம் தாமரை போல விகசிக்குமே, சைலஜாவுக்கு அது காணக் காணத் தெவிட்டாத காட்சி. சிறிது நாணம், பொங்கி வழியும் காதல், நிரம்ப உரிமை எல்லாம் கலந்த ஒரு விகசிப்பு அது. தான் அது போன்ற அந்த நூதன உணர்வை என்று அனுபவிப்போம் என்று விரியத் தயராக நின்ற மொட்டு ஏங்கி நின்றது.

ஆனால் அவள் ஏக்கங்களும், கனவுகளும் ஒரு இளவரசனையும், தன் காதல் சாம்ராஜ்யத்தையும் மட்டும் சுற்றி உலா வருவதில்லை. திடீரென்று குதிரை வேகமெடுத்து உயரத் தாவி விடும். ‘டாக்டர் சைலஜா, எம். பி. பி. எஸ். என்று போர்டு மாட்டியிருக்கும். எல்லா பேஷண்டையும் பார்த்து மருந்து கொடுத்து அனுப்பினப்புறம் வாசலில் ‘அவர்’ காரோட காத்துக் கொண்டிருப்பார். ஏறிக்கொண்டு வெளியிலே கிளம்பிடுவோம்’, என்ற ரீதியில் முகமில்லாத ஒரு ‘அவர்’ சைலஜாவின் பேதைமை நிறைந்த சிந்தையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்.

**********************

bm

பள்ளி ஆண்டு விழா தினம். மேடையின் பின்புற அறைகளில் அலங்காரங்கள், வேஷங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. திலகா மஞ்சள் பட்டாடை உடுத்தி, தோலின் நிறத்திலான ஆடலரசின் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு, மார்பில் புரண்ட மணிமுத்து மாலைகளும், பட்டு உத்தரீயமுமாக, அழகான பிறைச் சந்திர வடிவில் அமைந்த ஒரு சந்தனப் பொட்டும், காதில் அணிந்த குண்டலங்களுமாக, மையில் வரைந்து கொண்ட அரும்பு மீசையில், குறும்பும் கம்பீரமுமான ஆணழகனான விமலாதித்தனாக நின்றாள், நின்றான்!

தமிழ் டீச்சர் ருக்மிணி, குந்தவைக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்ட சைலஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. உள்ளம் எழுச்சியில் விம்மியது. “ஏய் திலகா, இவளுக்கு நல்லா ஒரு அழகான பொட்டு நெத்தியில் எழுதி விடறியா?” என்ற ருக்மிணி டீச்சர், ராஜராஜனின் பக்கம் திரும்பி, அவனுடைய பஞ்சகச்சத்தைச் சரி செய்யலானாள்!

செஞ்சாந்துக் குப்பியுடனும், சிறிய குச்சியுடனும், குந்தவையான சைலஜாவின் பக்கம் திரும்பி, அவளை நெருங்கி, நெற்றியில் மயில் போன்ற ஒரு வடிவை எழுத விமலாதித்தனாக நின்ற திலகா முற்பட்டாள். மூச்சை லேசாக்கிக் கொண்டு சிரத்தையாக நின்ற சைலாவின் கண்கள் திலகாவின் முகத்தை ஏறிட்டன. திடீரென, திலகாவிற்குப் பதில், யார் இது? ஒரு இளம் வாலிபன், ஆடலரசு தான் நிற்கிறானா?- தன் நாட்டியத்தை அவன் ஒளிந்து நின்று ரசித்தது நினைவிற்கு வந்தது.

இடது கையால் சைலாவின் முகவாய்க்கட்டையைப் பிடித்து நிமிர்த்தி, தன் உத்தரீயமும் புஜங்களும் அவள் தோள்களிலும் கன்னத்திலும் படுகின்ற சிந்தையே இன்றி, நெற்றியில் எழுதும் செஞ்சாந்துப் பொட்டின் அழகொன்றே பொருட்டாக முனைந்திருந்த அந்த இளைஞனின் (திலகா தான்!) முகத்தில் லயித்து சைலஜா மயங்கினாள். பதின்மூன்று வயதில், இனிய கன்னிப் பருவத்தின் தலைவாசல்- உடலும் உள்ளமும் மலரத் தயார் என்று சொல்லாமல் சொல்லி, துள்ளாமல் துள்ளின.

இந்த வினோதமான உணர்வுகளைப் பூரணமாக உணர்ந்து கொள்ள சைலஜாவால் இயலவில்லை. இந்த மாதிரியான எண்ணங்கள் தவறோ என்ற பயம் அடிமனதில் நெருடிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் சிறகுகளை விரித்து உல்லாசத்துடன் குதி போடும் மனது கட்டுக்கடங்காமல் அல்லவா பறக்கிறது?

இந்த சுந்தரக் கனவிலிருந்து விடுபட அவளுக்கு மனமே இல்லை. விமலாதித்தன் பால் காதல் வயப்பட்ட குந்தவையாகவே மாறி விட்டாள். அந்த லயிப்பிலிருந்து மீளாமலே நாடகம் நடந்ததும், தான் நடனம் ஆடியதும், பலத்த கைதட்டலும், எல்லாம் முடிந்து பெற்றோருடன் வீடு திரும்பியதும், பாட்டியும் திலகாவின் அம்மாவும் இரு பெண்களையும் ஜோடியாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டதும் எல்லாமே கனவு போலத்தான் இருந்தது.

*********************

உறங்கி விட்டாள் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் சொல்வது காதில் விழுகிறது. “என் கண்ணே பட்டு விடும் போல் இருக்குன்னா. இந்தப் பேச்சும் ஓட்டமும் ஆட்டமும் எத்தனை நாளைக்கோ? நாளைக்கே பெரியவளாகி விட்டால் பாவம், அடக்க ஒடுக்கமாகத் தான் இருக்கணும் …”. சைலாவுக்குத் திக்கென்றிருந்தது. “பாவம் குழந்தை,” என்று வெங்கடேசனின் கரம் அவள் தலையை வருடியது. தூக்கத்தில் திரும்புவது போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

கனவில் திரும்பவும் உருவமற்ற ‘அவர்’ முகம் வந்தது. ஒரு சமயம் விமலாதித்தனாக- மறு பொழுது ஆடலரசாக- ச்சீ, அது எப்படி முடியும்? கனவுகளின் அழுத்தம் தாளாமல் விழிப்பு வந்தது. கூடவே ஒரு வினோத உணர்வும், இனம் புரியாத உடல் அயர்வும் தவிப்பும்; தாயுடன் பகிர்ந்து கொண்டபோது சிறுமி சைலஜா இளங்கன்னியென மலர்ந்து விட்ட செய்தி புரிந்தது.

(தொடரும்)

****************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.