வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி

நாட்டிற்கு நாம் என்ன செய்தோம்?

நம் இந்திய மக்களின் அடிப்படை மனம் என்பது தெய்வ சக்தி என்கிற ஆன்மீகம் என்ற சக்தியின் தாக்கம் கொண்டது. நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அதை அழகாக,

“ நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுட்ன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை” என்பார் தம் ‘அக்னிச் சிறகுகளில்’.

அந்த தெய்வ சக்தி நம்மை இலவசங்களின் பால் அதிக ஈடுபாடு கொள்ளச் செய்வது நிதர்சனமாகிறது. இலவசங்கள் என்ற பெயரால் அரசியல்வாதிகள் மக்களை அடிமைப்படுத்தி, யாசகராக ஆக்கி வைக்க முயலுவதைக் கூட உணர இயலாத, பலர் அந்த இலவசங்களுக்காக மணிக்கணக்காக் வரிசையில் நின்றோ, முட்டி மோதியோ வாங்கத் தயாராகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், நல்ல உயர் அரசாங்கப் பதிவியில் இருப்பவர்கள் கூட இலவசங்களை வாங்கத் தயங்குவதில்லை. கூச்சமே இல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன?

நம்மிடையே அந்த தவறுக்கான விழிப்புணர்வே இல்லை என்பதுதானே? இலவசங்களை கைநீட்டி வாங்கும் போதே நாம் அவர்களிடம் அடிமைப்பட்டுப் போவதுடன் அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமையும் இழந்து விடுகிறோம். அந்த இலவசங்களும் எந்த அரசியல்வாதிகளும் தங்கள் சட்டைப் பைகளில் இருந்து எடுத்து வாரி வழங்குவதில்லை. அதுவும் நாம் வரியாகக் கட்டும் நம் பணம்தானே!

நம் நாடு முன்னேறுவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? முதலில் நம்மைச் சுரண்டி தம் வம்சம் வளர வழி பார்க்கும் ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு, களைந்தெறியும் வழி கண்டோமா? அதற்கும் கூட ஒரு முதியவர் உயிரைப் பணயம் வைத்துப் போராட வேண்டியுள்ளது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி நம் ராணுவத்தில் சராசரியாக 14,000 அதிகாரிகள் பதவி பற்றாக்குறை இருக்கின்றன. அதற்கும் மேலாக 3000 உயர் அதிகாரிகள் பணிக்காலம் முடியும் முன்பே ஓய்வெடுக்க விண்ணப்பித்துள்ளார்கள். இதைவிட ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், டேராடூனில் உள்ள இராணுவத்தின், இந்திய தேசிய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு வெளியில் வரும் ஒரு இளைஞருக்கும், மற்ற இளைஞருக்கும் உள்ள வேறுபாடு கண்கூடு. இராணுவத்தில் பணியாற்றிவிட்டு வரும் ஒரு இளைஞர் தன் கண் முன் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டார். அது மட்டுமல்லாமல், தானும் ஒரு கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார். அதிக அளவில் தீய செயல்களில் ஈடுபட தயக்கமும் காட்டுவார். இந்தக் கட்டுப்பாடு தங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து க்டைபிடிப்பதில் ஆர்வமும் காட்டுவார். இது அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை  மட்டுமே மேம்படுத்துவதைவிட, சமுதாயத்திற்கும் பெரும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதும் வெளிப்படை. நாட்டில் ராணுவப் பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கை கனிசமாக கூடும் போது, நம் நாட்டில் ஊழலை எதிர்த்துப் போராட இன்னொரு அண்ணா ஹசாரேவின் அவசியமே இராது. அத்தோடு நம் நாடு கூடிய விரைவில் வல்லரசாக ஆகவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆக நம் நாட்டின் ஒவ்வொரு இளைஞரும், ஏதேனும் ஒரு ராணுவ சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போது அவர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நல்லதொரு குடிமகனாக வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.

சிங்கப்பூர், பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் 17 முதல் 18 வயதிற்குள் இளைஞர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாவது கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும். பல நாடுகளில் அடிப்படை ராணுவப் பயிற்சி இளைஞர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், நாட்டிற்கு ஒரு தேவை ஏற்படும் போது அவர்கள் சேவையை வ்ழங்க வேண்டும் என்பதும் கட்டாயமாக உள்ளது. நம் நாட்டில் மட்டுமே இது போன்ற எந்த கட்டுப்பாடுமே இல்லாதது கூட மலிந்து கிடக்கும் ஊழலுக்கு காரணமாகிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. நம் ராணுவ தளபதி தீபக் கபூர் அவர்கள்  ஒரு அறிக்கையில், இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் நம் நாட்டிலும் கட்டாய ராணுவ சேவை அமல்படுத்த வேண்டிய சூழல் உறுவாகும் என்று அறிவித்திருந்ததும்  குறிப்பிடத்தக்கது.

கியூபா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். நம் இந்திய அரசாங்கமும் இது பற்றி சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது. குறைந்த பட்சம் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, ஊர்க்காவல் படை போன்றவற்றிலாவது இளைஞர்கள் கட்டாய சேவை புரிய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 

 

2 thoughts on “வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

 1. ‘இலவசங்களால் விலை போகும் போக்கு நாட்டிற்குக் கேடு’ என்பதில்
  சிறிதளவும் ஐயமில்லை. கொடுப்பது மற்றும் கொள்வது என்பது நம்
  வாழ்வில் நடைமுறையில் இருந்தாலும் அதை மாற்ற வேண்டிய
  கட்டாயத்தில் இருக்கிறோம். வள்ளுவர் இரவச்சம் என்ற அதிகாரத்தில்
  “இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
  காலும் இரவொல்லாச் சால்பு” என்ற திருக்குறளில், ‘வாழ்வதற்கு
  வழி எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவரிடம் யாசகம்
  பெற மாட்டோம் என்ற பண்புக்கு இந்த உலகமே ஈடாகாது’ என்கிறார்.
  அப்பேர்ப்பட்ட பண்பட்ட பூமியை நம் அரசியல்வாதிகள் புண்பட்ட
  பூமியாக மாற்றிவிட்டனரே என்பதில் மிகுந்த வருத்தம் தான்.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. கடந்த பல ஆண்டுகளாகவே நமது இராணுவத்தில் ஆள்பற்றாக்குறை இருந்துவந்துள்ளது. ஆனால் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அல்லது இராணுவத்தில் கட்டாயப் பணி என்பது போன்ற கருத்துக்களை செயலாக்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக நாம் இன்னமும் முழுமையான கல்வியறிவு பெற்ற நாடாகவில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்களின் மனநிலை மிகவும் குறுகிய மனப்பாங்கு கொண்டது. அவர்களில் பலர் தங்களின் பிள்ளைகள் தங்களைப் பிரிந்து செல்வதை பெரும்பாலும் விரும்புவது இல்லை.

  பெண்களுக்கான இராணுவப் பயிற்சியும் வரவேற்கவேண்டிய ஒரு கருத்து தான். ஆனால் இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் பணி செய்வதற்கான சமூக மனநிலை இன்னமும் நமது மக்களிடையே வரவில்லை! இது குறித்து நான் உங்களிடம் விரிவாக மின்னஞலில் விவாதிக்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published.