பெருவை பார்த்தசாரதி

 

 

ஆடிப்பெருக்கு

 

 

 

 

 

 

 

 

 

 

ஆற்றுப் பெருக்கினால் குளம் வாய்க்கால்..

……அனைத்தும் நீர்நிரப்பி வளமாக்கும் வேணியே.!

சேற்றுடன் கதிரும் தலைசாய்க்கு முனைக்கண்டு.!

……செங்கதிரோன் முகம்பார்க்கவுன் நீர்நாடி வருவான்.!

காற்றோடு வந்தசெய்தி காதிற்படா கலைந்ததுபோல்..

……காலத்தே வருமழையும் வாராது பொய்த்ததின்று,!

ஊற்றாக எழுமுன் கருணையை எதிர்பார்த்து..

……ஊருணியும் வயலும் வாய்பிளந்து எதிர்நோக்கும்  .!

ஆற்றுமணல் திருட்டால் அழிந்தது வயல்வளமே.!

……ஆறறிவால் வந்ததெலாம் நமக்கென்றும் வினையே.!

 

ஆடித்திங்கள் ஈராறில் பொங்குமுன் புனலில்..

……அமிழ்ந்து நீராடிக்களித்த ஆனந்தம் எங்கே.?

ஓடிவயல் நிறைக்குமுன் வள்ளல் நீரெல்லாம்..

……ஒளிந்து கொண்ட இடத்தைத்தான் யாரறிவர்.?

வாடிய முகத்துடன் வறண்ட காவிரிதனை..

……வாட்டமுடன் காண கல்நெஞ்சம் வேணுமம்மா.!

நாடியுனை ஆராதித்து நாங்களிட்ட உணவை..

……உன்னருளால் பெற்றுனை மகிழ்விக்க வந்தோம்.!

பாடியுனை ஆராதிக்க பகல்பொழுது கழிந்தபின்..

……அருஞ்சுவை உணவைப் புனலுக்கு அளிப்போம்.!

 

வற்றியகாவிரி வளமாக மாமழையை அழைப்போம்..

……வருணனை வேண்டியே இன்று தவம்செய்வோம்.!

நாற்றுக் கன்றுகளெலாம்  பயிராய்த் தழைத்துவளர..

……நலமுடன் மிதமாய் பொழியுமுன் அருள்வேண்டும்.!

பற்றியுனை நினைத்து தினமுனைத் தொழுவோம்.!

……பண்டங்கள் பலபடைத்துன் மனங்குளிரச் செய்தால்..

ஆற்றுப்படுகைச் சோலையில் குயில்களும் கூவுமா.?

……ஆடிப்பெருக்கின்று காவிரியில் கயல்கள் உகளுமா.?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *