க. பாலசுப்பிரமணியன்

 

திரிபுரசுந்தரி

thiripuuu

திக்கெட்டும் உருவாக்கித் திருபுரமும் தனதாக்கித்

தித்திக்கும் வடிவாகித் திருவருளைத் தருபவளே

தீதில்லா மனங்களிலே திருவீதி வலம்வந்து

தீவினைகள் சுட்டெரிக்கும் திரிபுர சுந்தரியே !

 

நீரோடு நெருப்பினிலே நடமாடும் காற்றினையும்

நிலத்தோடு வானத்தின் வளமான வளியினையும்

நிலையில்லா உடலுக்குள் நிழலாக உருவகித்து

நினைவாகத் தானமர்ந்து நல்லருள் தருபவளே !

 

சங்கரி சாம்பவி சடையனின் உறுதுணையே

கயல்விழி காமினி கருணையின் உட்பொருளே

பார்கவி பார்வதி பாகனை அழித்தவளே

பாட்டினில் பைரவி பார்வையில் சுந்தரியே!

 

சொல்லுக்குள் அடங்காமல் சிந்தைக்குள் சிதறாமல்

மௌனத்தில் மறையாமல் மனதினில் நிறைந்தவளே

எண்ணத்தில் எளிதாக சொந்தத்தை உருவாக்கி

வானத்து வில்லாக வையகத்தை வார்த்தவளே !

 

கோடிட்ட புருவங்களும் குலுங்கிட்ட காதணியும்

குவிந்திட்ட கன்னத்தில் கோலமிடும் மின்மினியும்

குளிர்ந்திட்ட பார்வையும் குறைவில்லா உடலழகும்

நலுங்கிட்ட பாதங்களும் நெஞ்சத்தில் நிலைத்திடுமே!

 

அன்றலர்ந்த மலராலே அர்ச்சனைகள் செய்தாலும்

கண்ணமர்ந்து காட்சிதர கற்பகமே ! மறந்தாயோ?

மண்ணிருந்து அழைக்கின்றேன் மாமணியே! மங்கலமே !

விண்ணிருந்து வருவாயே விளக்கொளியில் வீற்றிடவே!

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க