வருவாளோ? – நவராத்திரிப்பாடல்கள் (1)
கங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு
காலை புலரும் நேரத்தில்
கன்னங் கரிய சின்னஞ் சிறுமி
காலை இணைத்தென் முன்நின்றாள்
சிங்கம் பிடரி சிலிர்த்ததுபோல்
செங்கதிர் எதிரே பளபளக்க
சேவடி ஈரம் என்விழி ஈரம்
சேர்ந்த கணத்தினை அவளேற்றாள்
சிட்டுக் குருவிச் சிறகு விரலால்
செம்மைத் திலகம் ஏற்றினளே!
மல்லாந் திருந்த இரவொன்றில்
மறந்த கனவின் நினைவொன்றில்
மாடிப் படியில் திமுதிமு திமுதிமுவென
மணிச்ச தங்கை கலகலக்க
நில்லா தெங்கோ நின்றாளே
நினைவைக் கனவைக் கொன்றாளே
நீலப் பட்டுப் பாவடையை
நித்திலம் பதறும் மின்விரலால்
நேர்த்தியின் உன்னத மாய்வந்தாள்
நேரே உயிரை மலர்கொய்தாள்!
இமயப் படுகையின் குளிரினிலே
இரவா பகலா புரியாத
இறைநட மாடிடும் விந்தைப் பொழுதினில்
மின்நரை மலிந்த கிழவியென
இமையுள் சிரித்து நின்றாளே
என்னை எழுப்பிச் சென்றாளே
ஈனம் மலிந்த மனத்தினிலே
ஈசன் வாசனை சேர்த்தாளே
இதுவரை நேராச் சொல்லெல்லாம்
இடுப்பில் உடுத்தி நொடித்தாளே!
காரிருள் அஞ்சும் காரிருளில்
கட்டி நிலவைக் காணாமல்
கடல்தடு மாறிக் குமுறும் கருப்பில்
கருமை அறியாக் கருப்பியென
நேரில் விண்ணில் எழுந்தாளே
நெஞ்சம் பதறப் புடைத்தாளே
நிலையில் லாத மணல்வெளியில்
வெருட்டித் துரத்திச் சிரித்தாளே
நெஞ்சம் விடாமல் ஏங்குவதாய்
எங்கோ உயிரைத் தொட்டாளே!
எத்தனை எத்தனைக் கோலங்கள்
ஏட்டில் வராத ஜாலங்கள்
ஏதிதன் பொருளென எவரே அறிவார்
எதைநிஜ மெனநான் கொள்ளுவதோ
முத்த மிட்டதும் மிகவுண்மை
முனைப்பே அற்றதும் மிகவுண்மை
மூர்க்கி யினைநான் மோகித்தே
முழுதாய் இழந்ததும் மிகவுண்மை
மொட்டுள் மெளனச் சுடர்போல
மோதும் தென்றலுக் கேங்குகிறேன்!
கரைவதில் எனக்கு மனமில்லை
கண்கள் சற்றும் இமைக்காமல்
கண்ணீர்த் துளிகள் கால்களை நனைக்கக்
கவிதை முனையில் உயிர்பதற
விரைவின் அறியா உயரங்களும்
அமைதியின் புரியா ஆழங்களும்
விந்தைக் கலவி புரிகையிலே
விழிக்கும் பிள்ளையாய் நிற்கின்றேன்
விண்ணை யாளும் பேரழகி
வீதி முனைக்கு வருவாளோ?