Advertisements
வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்! (240)

செல்வன்

இவ்வார வல்லமையாளராக திலகவதி மதனகோபால் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

திலகவதி மதனகோபால் அவர்களின் சொந்த ஊர் கோவை. உணவியல் துறையில் பட்டம் பெற்றவர் உணவியல் நிபுணர் ஆவார். முகநூலில் பல சமூக முன்னேற்ற கருத்துக்களை பகிர்ந்து வரும் திலகவதி அவர்கள் சமீபத்தில் பெண் முன்னேற்றம், பெண்விடுதலை குறித்த மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை பதிப்பித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

#திருமணம்_மற்றும்_தாய்மை_அழகாக_இருக்கும்_என்று_என்_மகளிடம்_ஏன்_சொல்லுவேன்…..

திருமணம் மற்றும் தாய்மை பெண்களின் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று அல்ல என்றாலும், அவற்றில் உள்ள நன்மைகளைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க நாம் முயற்சி செய்யவேண்டாமா?

நான் ஒரு பெண்ணியவாதி தான், ஆனால் அதைப் பிரச்சாரம் செய்யும் ரகம் அல்ல. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலே ஆண்களை வெறுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறது.

தன்னை மேம்படுத்திக்கொள்ள எல்லா வழிகளையும் நான் என் மகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். அவள் ஆசைப்படும், விருப்பப்படும் எதை வேண்டுமானாலும் அவள் செய்யலாம். இறுதி முடிவு அவளுடையதாகவே இருப்பினும், திருமணம் மற்றும் தாய்மை முக்கியம் இல்லை என்று நான் ஒரு போதும் அவளிடம் சொல்ல மாட்டேன்.

தாய்மார்கள் திருமணம் முக்கியம் அல்ல என்று தங்கள் மகள்களுக்கு அறிவுரை கூறும் கட்டுரைகளைப் படிக்கும் போது எரிச்சலடைய செய்கிறது. நம்மைப் பாதுகாக்கவோ, பார்த்துக்கொள்ளவோ நம் வாழ்க்கையில் ஆண்கள் தேவையில்லை தான். நிதி ரீதியாகச் சுயாதீனமாக(financially independent) இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதைத் திருமணத்துடன் தொடர்புப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பழங்காலத்தில் திருமணம் ஒரு பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவே இருந்திருக்கலாம், ஆனால் அதுவே திருமணத்திற்கான அடித்தளமாக இருப்பதாக நாம் இன்னும் நம்புகிறோம் என்று அர்த்தமா?

1திருமணம் என்பது இரு மனங்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, ஒருவருக்கொருவர் தோழமை, ஆதரவு உணர்வோடு இருந்து மற்றவர்களுடைய தனிப்பான்மையைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, விசித்திரமான அணுகுமுறை மற்றும் எரிச்சலூட்டும் பழக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து ஒன்றாகப் பயணிப்பது. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒரு விதப் அழகான பிணைப்பு ஆகும்.

வேறு எந்த உறவுமுறை இவை அனைத்தையும் வழங்க முடியும்? எப்படி நாம் நம் மகளிடம் திருமணம் அவசியம் இல்லை என்று சொல்ல யோசிக்க முடியும்? திருமணத்தால் ஏற்படும் சந்தோஷத்தையும், தாய்மை வழங்கக்கூடிய இணையற்ற உணர்வையும் அவர்கள் அனுபவிக்க நாம் விரும்பவில்லையா? ஆம், எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக அமைவதில்லை என்பது உண்மைதான் பலர் பல இன்னல்களுக்கும், இறுக்கமான வாழ்க்கைக்கும் தள்ள படிக்கிறார்கள், ஆனால் இந்தக் காரணங்களினால் திருமணத்தை விட்டுக்கொடுப்பது/தவிர்ப்பது என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது.

பெண்ணியம் அர்த்தம் என்ன? பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுடனான எல்லாப் பழமையான பழக்கவழக்கங்களையும் தடுப்பதா? அல்லது முன்னர்ச் செய்த எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாகச் எதிர்ப்பதா?

நன்றாகப் படித்த ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதிலும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலும் என்ன தவறுள்ளது? எப்போதில் இருந்து இந்தப் பிற்போக்கு எண்ணம் உண்டானது புரியவில்லை?”

இவரது சமூகநல கருத்துகளுக்காக இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அடுத்த தலைமுறை பெண்கள் இவரைபோன்ற ஆளுமைகளால் வழிநடத்தபட இவ்விருது ஊக்கம் அளிக்கும் என வல்லமை ஆசிரியர் குழு நம்புகிறது

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

  1. Avatar

    இந்த வார வல்லமையாளராக சகோதரி திலகவதி அவர்களைத் தேர்ந்தெடுத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இல்லறமே நல்லறம் என்றார் வள்ளுவர். அத்தகைய இல்லறத்தை நடத்திகாகொண்டு பெண்ணியம் காக்கும், பெண்ணியத்துக்காகப் போராடும் பெண்களை நான் எனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். பெண்கள் உரிமைக்காகப் போராடும் பெண்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றும் பெண் தோழர்களையும் கண்டிருக்கிறேன். இவர்களனைவருமே போற்றுதலுக்குரியவர்களே. திலகவதி அவர்களை வாழ்த்துவதில் பங்கு கொள்கிறேன்.

  2. Avatar

    வல்லமையாளர் திலகவதி மதனகோபால் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது வளமான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமானவை. நவீன பெண்களுக்கு வழிகாட்டக் கூடியவை. ஆக்கங்கள் தொடர்க.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க