நவராத்திரி 07
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்! இந்த
வானும் வெளியும் அதையும் தாண்டி
வளருகின்ற மர்மங்களும்
தேனும் மலரும் தெப்பக் குளமும்
தேனடையும் தெருவின் முனையும்
ஊனும் உயிரும் அதிர அதிர
உரக்க உரக்கக் கூவுகிறேன்
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்!
அமைதி என்பதா? ஆ
னந்த மென்பதா? இந்த
அதிச யங்களின் அதிபதியாய்
ஆசையற்ற அரசனாய்
துதிகள் பாடும் அடியவனாய்
துதிகள் ஏற்கும் தெய்வமாய்
விதியின் வசத்தில் வெறும் சருகாய்
விதிகள் பதியும் திருவடியாய்
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்!
எங்கு நிற்கிறேன்? நான்
எதனைப் பார்க்கிறேன்?
பொங்கும் கடலில் ஒருதிவலை
புளகமுற்றுப் பூத்தெழுந்து
தங்க வானைத் தடவி மயக்கித்
தரை யிறக்கித் தழுவிக் குலவிச்
சிங்க நாதம் செய்து பிடரி
சிலிர்த்துச் சின்னச் சுடரில் ஒடுங்கி
பொங்கும் கடலில் ரகசியத்தைப்
பொத்திச் சிரிக்கும் திவலையாக
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்!
தக்கையாக இருந்து நீலக்
கடலில் மிதக்கிறேன்
தரங்கமாக இருந்து தரையைத்
தாங்கி மகிழ்கிறேன்
சக்கையாகக் கிடந்து பின்னும்
சாற்றைப் பார்க்கிறேன்
சக்தி யாக இருந்து பரா
சக்தி என்கிறேன்!
அதிசயத்தின் உச்சமன்றோ
நானிருப்பது!
ஆனந்த உன்னதமே
அவளைப் பார்ப்பது!
கதிகளிலே அரிது தமிழ்க்
கவிஞனென்பது
களிப்பினிலே லஹரி அதையும்
கவிதை சொல்வது!
அச்சமின்றிச் சொல்லுகிறேன்
அன்னை சக்தி நான்
அப்படியே கூவுகிறேன்
அவளின் பிள்ளை நான்
மிச்சமின்றித் தீர்ந்தபோதும்
மிஞ்சிடுவேன் நான்
மிஞ்சி அணிந்த வஞ்சி பதம்
மேவிடுவேன் நான்!
அவளைப் பாட அவளி லிருந்து
அகிலம் வந்தேன் நான்
ஆனந்தத் தலைநகரம்
அமைதி யாவும் நான்
கவிதையினால் கவலை தீர்க்கும்
காளி காளி நான்
காணவொண்ணாக் காளியவள்
கண்களன்றோ நான்!
நானிருக்கின்றேன்! ஓஹோ!
நானிருக்கின்றேன்!
25.09.2017 / திங்கள் / காலை 7.55
அற்புதமான சொல்லாட்சி! பாடல் அருமையிலும் அருமை!. அன்னை தெய்வத்துக்கும் நமக்குமான தொடர்பை இதைவிட அழகாகக் கூறிவிட முடியுமா?
நவராத்திரி வாழ்த்துக்கள்!