மீ.விசுவநாதன்
பகுதி: 23

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

திரிசங்கு மன்னன்

சூர்யகுலத் தோன்றலான “திரிசங்கு” மன்னன்

கொண்டிருக்கும் உடலோடு சொர்க்கத்தைச் சேர

பாரினிலே ஒருவருமே செய்திடாத வேள்வி

பண்ணிடவே எண்ணினான்; வசிட்டரிடம் சென்று

நேர்மைமிகு குருநீங்கள் எனக்குதவ வேண்டும்

நிலத்தினிலே உமக்கீடு யாருமில்லை என்றான்

ஊரினிலே இல்லாத பழக்கமெனச் சொல்லி

உடனேயே அனுப்பிவிட்டார் வசிட்டரெனும் ஞானி.

வசிட்டரின் பிள்ளைகளைத் “திரிசங்கு” வேண்ட,

“மகத்தான குருவினது வார்த்தையினைக் கேளா

விசித்திரனே சண்டாள வேடம்நீ கொள்வாய்

விரைந்துடனே சென்றிடுவீர்” என்றுரைத்தார்; மன்னன்

நசித்திருக்கும் மனத்தோடு கௌசிகரைப் பார்த்தான்

நடந்ததெலாம் சொன்னவுடன், “நானுன்னைக் காப்பேன்

பசியறியா விண்ணுலக விருப்பமதைத் தீர்ப்பேன்

பதறாமல் இருங்களென” வேள்விதனைச் செய்தார் !

திரிசங்கு சொர்க்கம்

வேள்வித்தீக் குள்ளிருந்து தேவர்கள் வந்து

விரும்பியதைப் பெற்றனர் ; திரிசங்கு மன்னன்

கேள்விக்கு விடையாக தேவலோகம் சென்றார் !

கீழுலகம் செல்லேன்றே தேவர்கள் தள்ள

தாள்மேலும் தலைகீழு மாகவே வீழ

தாங்கினார் கௌசிமுனி, தனியாக சொர்க்கம்

ஆளென்று திரிசங்கு சொர்கத்தைச் செய்தார்

அதற்கும்தான் தேவர்கள் ஆசிகளும் தந்தார்.

(தர்ம சரிதம் வளரும்)

(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 57,58,59,60ம் பகுதி நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *