தூரத்து வெளிச்சம்..!
பெருவை பார்த்தசாரதி
ஆரம்பமாதிமூலம் ரிஷிமூலநதிமூலம் உண்டென்பர் ஞானியர்..
……….அதையறிய முனைந்தால் உலகிலெதுவுமிலை என்பதேயுண்மை.!
ஈரடிப்புலவன் அய்யன்வள்ளுவனும் இதைத்தான் இயம்பினான்..
……….அகிலத்தையு மோர்வரியில் “ஆதிபகவன் முதற்றேயுலகென்றான்”
தூரத்தில் நின்றுநிலையாய் வெளிச்சம்தருமந்த வெண்ணிலவும்..
……….துருவநட்சத்திரமும் விரிகதிரும்…நிலையாயது தோன்றாவிடின்.?
பாரஞ்சுமக்கும் புவியில்தான் நுண்ணுயிர்கள் பிறக்கவழியுண்டா..
……….பார்புகழும் விஞ்ஞானியிடம் இதற்கொருபதிலும் உண்டாசொல்.?
வருடத்திற் கொருமுறைதான் தோன்றுமாமந்த வானவேடிக்கை..
……….வருடமோராயிரம் கடந்தாலுமின்றுமது புரியாததொரு புதிராகும்.!
பெருமக்கள் பெருந்திரளாயொருங்கே ஓரிடத்தில் கூடியிருப்பர்..
……….பேருலகத்தாரும் காலம்கருதாதங்கே வெகுநேரம் காத்திருப்பர்.!
ஒருநொடியில் தோன்றுமதைக் கண்டுலகமனைத்துமே வியக்கும்..
……….ஓரொளியாய்ப் மகரஜோதியாய்த் தோன்றிமறையும் அதிசயமாம்.!
அருகிலிருக்கும் ஒளியானது புறக்கண்ணுக்குத்தான் வழிகாட்டும்..
……….ஆங்கேதூரத்து வெளிச்சமோ நம்மகக்கண்ணுக்கே அறிவூட்டும்.!
குருவென்பவன் மிகஅவசியம் கலையொன்றைக் கசடறப்பயில..
……….குருசீடன் உறவுக்குள்ளே ஒருமித்தகருத்தும் இருக்கவேணும்.!
இருளைவிலக்கும் தன்மைகொண்ட ஒளிபோல உத்தமர்பலரும்..
……….இரும்பு மனமுடனேநம் மனயிருளையகற்றவும் முனைந்தனராம்.!
பெருநிலத்தவதரித்த யோகியும் முனிவனுமிதை அறியுவண்ணம்..
……….பெருங்காப்பியமாய் வடித்துவைத்துநாம் வாழவழி வகுத்தனராம்.!
கருத்துமிகு இதிகாசமும்காப்பியமும் கன்னல்தமிழை வளர்க்கும்..
……….காரிருளகற்றும் தூரத்துநிலா வெளிச்சம்போல் வாழவழிகாட்டும்.!