-கி. ரேவதி                                                              

முன்னுரை

 தமிழில் இலக்கண இலக்கியப் படைப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத பிணைப்புகளாய் மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன. இலக்கணங்களுக்குச் சான்றுகளாய் இலக்கியங்களும், இலக்கியங்களின் இலக்கணங்களை கூறுபவையாக இலக்கணங்களும் அமைந்துள்ளன. இவ்வகையில் தொல்காப்பியம் என்பது இலக்கணம். ஆற்றுப்படை என்பது ஓர் இலக்கிய வகை. தொல்காப்பியத்தில் கூறப்படும் இலக்கணங்களில் ஒன்றான மெய்ப்பாடுகள் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படும். இவ்வகையில் பத்துப்பாட்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் பொருநராற்றுப்படையில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளைக் கோட்பாடாகக் கொண்டு அவற்றில் பொருத்தி பார்ப்பதே நோக்கமாகும்.

தறுகண்ணால் ஏற்படும் பெருமிதம்:

தறுகண் என்பது ஒருவர் வளர்த்துக் கொண்ட தனித் தகுதி (அல்லது) திறமையைக் குறிக்கும். ஒருவரின் தனித்திறனை, சிறப்பை எடுத்துக் கூறும்போது கூறுபவருக்கும், கேட்பவருக்கும் பெருமிதம் உண்டாகும். பொருநர் ஆற்றுப்படையில்,

கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறிதிரிந்து ஓராஅது
ஆற்றுஎதிர் படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந!1     (பொருந.57-60)

என்ற வரிகளில் கூத்தர்களுக்குத் தலைவனே! நீ மிடற்றுப் பாடலைப் பாடுதலில் வல்லமை உடையாய்! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய்! பாட்டிசையும், யாழிசையும், கூத்தாட்டமும் தம்முள் ஒத்து இருக்கும் காட்சி மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது.

பிறர் தம் மனத்தில் கொண்ட கருத்தினைக் குறிப்பால் அறிய வல்லவனே! நீ வழி அறியாமையால் வேறு வழி போகாமல் இவ்வழியே வந்து என்னை இவ்வழியிடத்தே காண்பதும் நீ முற்பிறவியில் செய்த நலிவினையின் பயனே காண்பாயாக! புகழால் மேம்பட்டவனே! பிறர் புகழை அரசவையில் மேம்படுத்துபவனே! என்று பாணனின் தறுகண்ணைக் குறிப்பிட்டு நான் கூறுவதைக் கேட்பாயாக என்று பெருமித்தோடு உரைக்கிறான் பரிசில் பெற்ற பாணன்.

புதுமையில் தோன்றும் மருட்கை

கட்புலனாகும் எந்தப் பொருளுக்கும் கவர்ந்திழுக்கும் புதுமைப் பொலிவு உண்டு. ஆனால் அதன் நிலைப்புத் தன்மை நீடித்திருப்பது அரிது. எனவே புதுமைக்குத்தான் இளமைப் பொலிவு இருக்க முடியும். புதுமை பற்றி அறியும்போது அதன் விரிவு மேலும் பெரியதாய் விரிய விரிய அதுவே புதிதுபுதிதாய்ப் பொலிவதை அறிகின்ற பொழுது வியப்பு எழுகிறது; இதுவே புதுமையாகும்.

இக்காலத்தில் கடவுளைக் காண்பதும், கொடை செய்வாரைக் (அரசன்) காண்பதும் புதுமையாகும். கொடையால் உயர்ந்த நிலையை அடைவதும் புதுமையாகும். இதுவரை அனுபவிக்காத செல்வ நுகர்ச்சியை அணுபவிக்கும்போது மனத்தில் நடப்பதெல்லாம் கனவோ என மருட்கையாகிய வியப்புத் தோன்றும். கரிகாலனின் உபசரிப்பால் பெரும் செல்வ நுகர்ச்சியை பெற்ற பொருநன்,

”………………………………………………………………காலைக்
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவுஎன மருண்டஎன் நெஞ்சு ஏமாப்ப
வல்அஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட”2 (பொருந.96-100)

என்ற பாடல் வரிகளில் கரிகாலனைக் கண்ட அன்றைய காலை என்னைக் கண்டவர் நேற்று வந்தவன் இவன் அல்லன் என்று மருண்டு கூறுதற்குக் காரணமான என் தோற்றப்பொலிவான நிலையினையும் கண்டேன். அன்று விடியலில் நிரம்ப உண்ட கள்ளின் மணம் என்னை விட்டு நீங்காதிருந்தமையால் வண்டுகள் இடையறாது என்னை மொய்த்து கொண்டிருந்தன.

இப்பொலிவு கனவிற்கண்ட காட்சிதானோ என்று என் மனம் மருண்டது. என் பக்கத்தில் அரசனுடைய ஏவல் இளைஞர்கள் நின்றுகொண்டிந்தனர். அவர்கள் இது கனவு இல்லாமைக்குரிய காரணங்களை எடுத்துக்காட்டினர் என்று பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெறாப் பொருநனிடம் தாம்பெற்ற விருந்தின் நுகர்ச்சியைக் கனவோ என்று வியப்பை அடைந்த நிலையை கூறுகின்றான்.

உவகை மெய்ப்பாடு

உவகையானது மனமகிழ்ச்சியை குறிக்கும். மனமகிழ்ச்சியே ஒருவனின் மன அழுத்தத்தைக் குறைத்து தன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாகும். இம்மகிழ்ச்சி ஒருவனின் வாழ்வில் இல்லையெனில் அவன் தன் வாழ்வின் பிடிமானத்தைவிட்டு மனத் தளர்ச்சி அடைவான். எனவே மகிழ்ச்சியே மனிதனை வாழ வைக்கும் ஆயுதமாகும். இவ்வுவகை செல்வ நுகர்ச்சி, ஐம்புல நுகர்ச்சி, காம நுகர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கு சூழலில் தோன்றும்.

செல்வ நுகர்ச்சியால் ஏற்படும் உவகை

செல்வம் என்பது மனித வாழ்வின் தேவைகளில் ஒன்றாய் உள்ளது. செல்வத்தை நோக்கியே மக்கள் பயணிக்கின்றனர். செல்வம் அளவோடு இருந்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பர். இப்பழமொழி செல்வத்திற்கும் பொருந்தும். இதனைக் கருதியே அரசர்களும் செல்வத்தைக் கொடையாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அவற்றைப் பெறும் கலைஞர்களும் பகிர்ந்துண்டு வஞ்சகம், குரோதம் முதலியவை இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

செல்வத்தை கொடுப்பதால் ஏற்படும் உவகை எனில் பெறுபவரும் எய்தும் பேரின்பத்தை திருவள்ளுவர்,

“இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து”3       (திருக்.1051)

என்கிறார். இவ்வாறான மகிழ்ச்சியை ஆற்றுப்படைப் பாடல்வரிகளிலும் காணலாம். பொருநராற்றுப்படையில் பொருநனை உபசரிக்கும் கரிகால் பெருவளத்தான் கன்னிப் பெண்களிடம் கள்ளினைக் கொடுத்து அருந்தும்படிச் செய்தான். அப்பெண்களின் தோற்றத்தை காட்சிப்படுத்த வந்த பொருநன் அம்மகளிர் தங்கியுள்ள செல்வத்தால் நிறைந்த மாளிகையினை,

“மழையென மருளும் மகிழ்செய்மாடத்து”4 (பொருந.84)

என்று உரைக்கிறார். இதன் வழி மகிழ்ச்சி தரும் மேனிலை மாடத்தே உறைவார் என மகளிர் தங்கியுள்ள இடத்தின் தன்மையை அறியலாம். மகிழ்செய் பதம் என்பது மகிழ்ச்சி செய்விக்கும் இடம் என்று பொருள் மேலும் கரிகாலனின் உபசரிப்பை சிறப்பித்துக் கூற வந்த பொருநன் அவர்களின் ஒருத்தியாகிய விறலியர் மன்னனைக் களிப்பூட்டினர் என்றும் கள்ளின் நுகர்ச்சியில் பல நாள் கழித்த பின் கரிச்சோறு உண்டதாக உரைகிறான் இதனை,

மண்அமை முழவின் பண்அமை சீறியாழ்
ஒண்நுதல் விறலியர் பாணி தூங்க
மகிழ்பதம் பல்நாள் கழிப்பி ஒருநாள்
அவிழ்ப்பதம் கொள்க என்று இரப்ப5 (பொருந.109-112)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மகிழ் பதம் என்பதற்கு மகிழ்தற்கு உரிய மகிழ்ச்சியை உடைய கள் என்று பொருள்படும் செல்வத்து பயன் ஈதல் அதனால் கொள்வோரும் கொடுப்போரும் எய்தும் இன்பம். இது செல்வத்தால் ஏற்படும் இன்ப நுகர்ச்சியாகும்.

புலன்களால் ஏற்படும் உவகை

உவப்பாவது கல்விப் பயனாகிய அறிவுடைமையில் கனிந்து தோன்றுவது. புலமையால் ஏற்படும் அறிவுமுதிர்ச்சியால் புலப்படுவது ஆகும். புலன் என்பது ஐம்புலன்களையும் குறிக்கும். ஒருவன் தன் ஐம்புலன்களைக் கொண்டும். இன்ப நுகர்ச்சியை பெறுவான்.

அறிவுடையார் கூறும் சொற்களை செவிகளின் வழி கேட்கும்போது மட்டுமின்றி கலைஞரின் கலை நுட்பங்களால் உருவான கலைச்சிற்பங்களை கண்களின் வழி காணும் போதும் உள்ளம் ஓர்வித பரவசம் (அ) மகிழ்ச்சி அடைகிறது.

பரிசில் பெற்ற பொருநன் விறலியின் கேசாதி பாத வருணனையைக் கூறுமிடத்து விறலியின் பேச்சும் வாயும் பற்றிக் கூறுகிறான். விறலியின் பேச்சும் ஓசையானும் பொருளாலும் கேட்போர்க்கு இன்பம் தரும் சொல் என்று உரைக்கிறான் இதனை,

அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்6    (பொருந.25-27) என்ற பாடல் வழி அறியலாம். ஐம்புலன்களில் ஒன்றாகிய செவிகளின் வழிப் பெரும் இன்ப நுகர்ச்சியை குறிக்கும் சொல்லாக இன்மொழி என்ற சொல் அமைந்துள்ளது.

முடிவுரை:

பாணர்களின் வாழ்வானது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை பிரதிபலிப்பவையாக இவை அமைந்துள்ளன. பாணர்களின் வாழ்வில் ஒருவரின் நிலைகண்டு எள்ளி நகையாடல் என்பது கிடையாது. என்பதால் நகை தோன்றுவது அரிதாகும். ஒவ்வொரு மனிதரிடமும் நகை முதலா உவகை ஈராக உள்ள எண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றுதல் இயல்பாகும்.

அடிக்குறிப்புகள்

  1. மாணிக்கவாசகன்.ஞ (உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ.56-60-ப.58
  2. மேலது – பா.அ. 109-112 – ப.64
  3. மேலது – பா.அ. 25-27 ப.54
  4. மேலது – பொருந> பா.அ. 54-56 – ப.59
  5. கோ.சேதுபதி – திருக். 1050
  6. மேலது – பொருந – பா.அ. 48-50 – ப.57

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) விழுப்புரம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.