கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….!
போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….கிரேசி மோகன்….!
ராஜ சியாமளா தெண்டகம்….!
———————————————
நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….!
(மாதங்கியில்)
சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….!
மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….!
சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….!
கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….!
ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….!
ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….!
மகரயாழை மடியினில் நீட்டி
அகர உகர மகரம் மீட்டி
சிகரமேரு சிரத்தினில் வீற்ற
சகலகலா வல்லியைப் போற்று….கிரேசி மோகன்….!