(Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்

0

முனைவர் ஆ.ராஜா,
அருங்காட்சியகத் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 10

இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை கடல்சார் வணிகமும் உள்நாட்டு வணிகமும் சிறந்து விளங்கின. இவ்வணிகம் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியின் காரணமாகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.  இக்காலக் கட்டத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் அயல்நாட்டு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, நிலவியல் அடிப்படையில் அதிகமான ஆற்று முகத்துவாரங்களைக் கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கடல்சார் வணிகச் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை புரிந்தன. அந்த வகையில் இராமநாதபுரம் வட்டாரத்தில் இடைக்காலத்தில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயும் இக்கட்டுரை, கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

வணிக நகரம்

இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ள தேவிப்பட்டினம் மற்றும் தீத்தாண்டதானபுரம் ஊர்களிலுள்ள கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும், கீழக்கரையிலுள்ள கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் செயல்பட்ட வணிகக் குழுக்கள், வணிகர்கள், பட்டினங்கள், வணிக நகரங்கள், அங்காடிகள், பெருந்தெருக்கள், வணிகப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.

வணிகக் குழுக்கள்

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்திலுள்ள தீத்தாண்டதானபுரம் இடைக்கால பாண்டியர்கள் காலத்தில் பல்வேறு வணிகக் குழுக்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்த சிறந்த வணிக நகரமாக விளங்கியுள்ளது. இவ்வூரை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு, ‘முத்தூற்றுக் கூற்றத்திலிருந்த தீத்தானம்’ என்று குறிப்பிடுகிறது1. இவ்வூரில், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1253-1283) காலத்தில் பதினெண்விசயத்தார், அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், பிரான்மலை வணிகர்கள், சாமந்த பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள் போன்ற வணிகக் குழுக்களும் வணிகர்களும் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்2. இவர்கள் தீத்தாண்டதானபுரத்திலுள்ள சர்வதீர்த்த உடைய நாயனார் கோயிலின் இடிந்த மண்டபத்தை மீண்டும் கட்டுவதற்கான செலவுகளுக்காக இவ்வூரில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீது ஒரு பகுதியை வரியாகச் சேகரித்து தானமாக வழங்கியுள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட ஊரிலுள்ள பாண்டிய மன்னர்களான மாறவர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள்  வணிகர்களான கைக்கோளர்களும் செட்டிகளும் இவ்வூரிலுள்ள கோயிலுக்குச் சில தானங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன3.

            இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தேவிப்பட்டினம், பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கடல்சார் வணிகத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்துள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கல்வெட்டானது இவ்வூரை செவ்விருக்கை நாட்டிலிருந்த சீறிளங்கோமங்கலமான உலகமாதேவிபட்டினம் என்றும், கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றது4. இவ்வூரில் கி.பி.13ஆம் நூற்றாண்டின்போது நகரத்தார்கள், நானாதேசிகள் ஆகிய வணிகக் குழுக்கள் தங்கியிருந்து வணிகம் செய்து வந்தனர்5. இவர்களில் நானாதேசிகள், பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் பல இடங்களிலிருந்து வந்த சரக்குகளைக் கடல் வழியாகத் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

            பிற்காலப் பாண்டிய மன்னனான இரண்டாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.14ஆம் நூற்றாண்டு) தேவிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கு வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே போன்று பல பகுதிகளிலிருந்து வந்த வணிகப் பொருட்கள் இத்துறைமுகத்தில் இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன6. வணிகத்திற்காகத் தேவிப்பட்டினத்தில் தங்கியிருந்த நானாதேசிகள், அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கள் வணிகக் குழுவின் பெயரில் கட்டவிருந்த வாசலுக்கான  செலவிற்காகத் தேவிப்பட்டினம் மற்றும் செவ்விருக்கை நாட்டிலிருந்த பிற துறைமுகங்களுக்கும் வந்து செல்லும் வணிகப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளனர்7.

            இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கீழக்கரை, கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கிய வணிகத் துறைமுகப் பட்டினமாகும். கி.பி.16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூர் ‘செம்பிநாட்டிலுள்ள அனுத்தொகைமங்கலம்’ என்றும் ‘கீழக்கரையான நினைத்தது முடித்தான் பட்டினம்’ என்றும் குறிப்பிடுகின்றது8. இக்காலக் கட்டத்தில் இவ்வூரிலும், இவ்வூருக்கு அருகிலிருந்த மூன்று துறைமுகப் பட்டினங்களிலிருந்தும் பதினெண் விசையத்தார், முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். செம்பி நாட்டு அனுத்தொகைமங்கலத்திலிருந்த நினைத்தது முடித்தான் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் இவர்கள் விற்கும் நூறு முத்துகளுக்கு அரைப்பணம் வீதம் தானம் கொடுத்துள்ளனர்9.

            மேற்குறிப்பிட்ட வட்டத்திலுள்ள இராதானூரில் நெசவுத் தொழிலிலும், துணி வணிகத்திலும் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த கைக்கோளர்கள், அப்பகுதியில் தங்கியிருந்து வணிகம் மேற்கொண்டிருந்தனர்10.

வணிகம் செய்தவர்கள்

            இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியிலுள்ள இடைக்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள், இப்பகுதியிலிருந்த தனி வணிகர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. திருவாடானை வட்டம், இராதானூரிலுள்ள கல்வெட்டு செம்பொன்மாரியைச் சேர்ந்த அவ்வைப் பெருந்தெரு வணிகன் சம்பந்தன் பள்ளியாழ்வான் என்ற மிதிக்குணநாயகன், அவ்வூரிலிருந்த சிவன் கோயிலுக்குத் தூண் ஒன்றைத் தானமாக வழங்கிய செய்தியைக் காட்டுகிறது11.

பட்டினம்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரானது, இடைக்காலப் பாண்டியர் காலத்தில் எறிவீரர்களால் பாதுகாக்கப்பட்ட வணிக நகராக இருந்துள்ளது. கல்வெட்டில் திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரை இடைவழியாகிய எறிவீரப்பட்டினம் என குறிப்பிடுவதை அறிய முடிகிறது12. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகியவை முக்கிய துறைமுகப் பட்டினங்களாக இருந்து வந்துள்ளன13. இப்பகுதியில் தங்கியிருந்த பல வணிகக் குழுக்கள் இத்துறைமுகங்களை மையமாகக் கொண்டு வணிகம் செய்து வந்துள்ளன. இவற்றைத் தவிர உட்பகுதிகளில் உள்ள திருமாலுங்கண்டார்கோட்டை, இராதானூர் மற்றும் தீத்தாண்டதானபுரத்தில் முகமழகியான் பெருந்தெரு என்ற வணிகர்களின் குடியிருப்பும் இருந்துள்ளதை இவ்வூர்களிலுள்ள கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன14.

பொருட்கள்

இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள இடைக்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர்க் காலக் கல்வெட்டுகள் இப்பகுதியில் வணிகம் செய்யப்பட்ட பொருட்களைப் பற்றிய குறிப்புகளைக் காட்டுகின்றது. தேவிப்பட்டினத்தில் மிளகு, பாக்கு, கருஞ்சரக்கு, புடவை போன்றவை, கி.பி.13ஆம் நூற்றாண்டு வாக்கில் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன15. இத்துறைமுகப் பட்டினத்திற்குப் பல பகுதிகளிலிருந்து சரக்குகள் வந்து பின்னர் அவை பல இடங்களுக்குச் சென்றுள்ளன. மேலும், இங்கு ஏறுவன, இறக்குவன, எடுப்பன, நிறுப்பன, விரிப்பன, பிடிப்பன, அளப்பன, முகப்பன ஆகிய தன்மைகளையுடைய பலதரப்பட்ட வணிகப் பொருட்கள் வணிகம் செய்யப்பட்டதை கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது16. முக்கிய வணிகப் பொருளாகக் கீழக்கரையில் கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து இருந்திருக்கிறது17.

போக்குவரத்துச் சாதனங்கள்

            இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் கடல்சார் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட சில போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. தேவிப்பட்டினம் துறைமுகத்தில் சிற்றுரு, தோணி போன்ற கலங்கள், கடல்சார் வணிகத்தில் சரக்குப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன18. மேலும், பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல, ஆட்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

அயல்நாட்டு வணிகம்

            இராமநாதபுரம் வட்டாரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டினங்களுக்கும் இலங்கை, அரேபிய நாடுகளுக்கிடையேயும் மிக நெருக்கமான கடல்சார் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. இவ்வணிகத் தொடர்பில் தென்னிலங்கையைச் சார்ந்த வளஞ்சியரும் இசுலாம் சமயத்தைச் சார்ந்த அரேபிய வணிகர்களான அஞ்சு வண்ணத்தாரும் ஈடுபட்டிருந்தனர்.

உள் வணிகம்

            கி.பி.13-14ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் வட்டாரப் பகுதியில் அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், நகரத்தார், நானாதேசிகள், பதினெண்விசயத்தார், கைக்கோளர்கள்  ஆகிய வணிகக் குழுக்கள், தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகிய கடற்கரை துறைமுகப் பட்டினங்களையும் தீத்தாண்டதானபுரம், இராதானூர், திருமாலுங்கண்டார்கோட்டை முதலிய கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளையும் மையமாகக் கொண்டு கடல்சார் வணிக நடவடிக்கைகளைச் செய்து வந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் இராமநாதபுரம் வட்டாரத்திற்கு அருகே இருக்கும் சிவகங்கை வட்டாரத்தில் பெரும்பாலும் நகரத்தார்கள் நாட்டின் உட்பகுதியில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் விற்ற பொருட்களைப் பற்றி, பிரான்மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது19. அதாவது உப்பு, நெல், அரசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், கடுகு, சுக்கு, சீரகம், நெல்லி, வெங்காயம், இரும்பு, பருத்தி, நூல், புடவை, எள் தைலம், குதிரை, யானை முதலியவற்றைப் பதினெண்விசையத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், நகரத்தார் ஆகிய வணிகக் குழுக்கள் வணிகம் செய்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

            இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை, முதுகுளத்தூர் பகுதிகள் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களையும், சிவகங்கை வட்டார உட்பகுதி வணிக நகரங்களையும் இணைக்கும் பகுதிகளாக இருந்துள்ளன. கடற்கரைப் பகுதிகள் மற்றும் உட்பகுதிகளிலிருந்த பல்வேறு வணிகக் குழுக்கள் குழு அமைப்பில் இயங்கியதால் இவர்கள் வணிகம் செய்த பகுதிகளிலிருந்த திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும் பராமரிப்பிற்கும் கொடைகள் வழங்கும்போது வணிகம் தொடர்பான தீர்மானங்களை இணைந்து எடுத்துள்ளனர்.

சான்றெண் விளக்கம்

  1. Annual report of indian epigraphy for 1926 – 27, Archaeological survey of India, New Delhi, No.599.
  2. Noboru Karashima (ed), Ancient and Medieval Commercial Activities in the Indian Ocean: Testimony of Inscription and Ceramic Sherds, Taisho University, Tokyo, 2002.P.269.
  3. Annual report of Indian epigraphy for 1926 – 27, Archaeological survey of india, New Delhi, 599, 601.
  4. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
  5. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
  6. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.403, 1937, pp.213 – 214.
  7. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.405, 1937, p.215.
  8. V.Srinivasa Rao, South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, Nos.396, 398, 1979, pp.296 – 298
  9. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.396, 1937, p.209.
  10. V.Mahalingam, A Topographical list of Inscription in the Tamil Nadu and Kerala states, Vol.VI, Indian Council of Historical Research, New Delhi, 1978, P.410.
  11. மேலது, ப.411.
  12. மேலது, ப.224.
  13. பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், 2001, பக்.83 – 107.
  14. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
  15. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
  16. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
  17. South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, No.396, 1979, pp.296 – 297.
  18. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
  19. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.442, 1937.

=================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

ஆசிரியர் கூற்றுப்படியே இராமநாதபுரம் அதிகமான ஆற்று வடிநிலம் கொண்ட பகுதிதான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இராமநாதபுரம் 13 -16 நூற்றாண்டுகளில், சிறப்பாக, பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் வணிக மையமாய்ச் செழித்திருந்ததைத் தகுந்த சான்றுகளை வைத்துக் காட்டியுள்ளார். ஆசிரியர் தமது கடின உழைப்பை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுகாறும் அறியப்படாத அரிய வணிகச் செய்திகளை நூல் ஆதாரங்கள் மூலம் எடுத்துத் தந்துள்ளார். இதில் தரப்பட்டுள்ள தரவுகள், எதிர்கால இளம் ஆய்வாளர்களுக்குத் தக்க முறையில் திசை காட்டுவதாக அமைந்துள்ளன.

=================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *