முனைவா் சித்தரா.எஸ்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
அரசு விக்டோரியா கலை அறிவியல் கல்லூரி,
பாலக்காடு, கேரளா.

ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்


நாவலிலும், சிறுகதையிலும் பின்புலம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு கதையின் அடிப்படைப் பண்புகளான கதைக்கரு. கதைப்பின்னல், கதைமாந்தர்கள், மொழிநடை, சமூகச் சிந்தனைகள் ஆகியவற்றின் முழுமையான இயக்கநிலைக்கு அடிப்படைக் காரணியாக பின்புலம் விளங்குவதோடு, அவற்றை நெறிப்படுத்தும் சக்தியாகவும் அது விளங்குகிறது. அவ்வகையில் ஆ.மாதவன், தம் கதைகளில் பயன்படுத்தும் பின்புலத்தைப் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

ஆ.மாதவன் – அறிமுகம்

ஆ.மாதவன். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளா். இவர் தற்போது திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘சாலை’ எனும் வணிகத் தெருவில் வாணிகம் செய்து வருகிறார். அன்றாட வணிக வாழ்வில் தாம் சந்தித்த அனுபவங்களையும், பாத்திரங்களையும் கருவாகக் கொண்டு, மலையாளம் கலந்த தமிழ் நடையில் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. இவர் இதுவரையில் 3 நாவல்களையும், 4 குறுநாவல்களையும், 61 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’, 2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

நாவல்கள்: புனலும் மணலும் (1974), கிருஷ்ணப்பருந்து (1980), தூவானம் (1987)

குறுநாவல்கள் : எட்டாவது நாள், காளை, பாவத்தின் சம்பளம், ஆனைச்சந்தம்

சிறுகதைத் தொகுப்புகள்: கடைத்தெருக் கதைகள் (1975), மோகபல்லவி(1975), காமினி மூலம் (1978), ஆனைச்சந்தம், மாதவன் கதைகள், அரேபியக் குதிரை.

பின்புலம்

மனிதன் வாழ்க்கை நடத்தும் இடம், அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, அரசியல், பொருளாதார நிலை ஆகிய யாவும் அவனது நடத்தையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவையாகும். சிறுகதை, நாவல் போன்றவற்றில் மனிதர்களை மையமாக வைத்துக் கதை பின்னப்படுவதால் அவர்களும் சூழ்நிலையின் தாக்கத்திற்கு உட்பட்டே செயல்பட இயலும். எனவே கதையைப் புரிந்துகொள்வதற்கு சூழ்நிலை அடிப்படையாக விளங்குகிறது. இந்தச் சூழ்நிலைதான் ‘பின்புலம்’ என்று அழைக்கப்படுகிறது. கதையின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியோடும் ஒன்றியைந்து செயல்படும் பின்புலமானது, பின்னணி, காட்சியமைப்பு, சூழ்நிலை, சூழலமைவு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பின்புலத்திற்கு Background, Setting போன்ற சொற்கள் வழங்கப்படுகின்றன. அதன் நோ்மொழிபெயர்ப்பாக ‘பின்புலம்’, ‘பின்னணி’ போன்ற சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. பின்புலம் சிறப்புற அமையப் பெற்றால்தான் அக்கதை, கலைத்தன்மையுடன் விளங்கும். பின்புலம் அல்லது சூழல் சிறப்புற அமைய வேண்டுமானால் அங்கே பின்புலமாகக் கொள்ளப்பட்டிருக்கும் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களுக்கேற்ற செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வண்ணம் பாத்திரப் படைப்பு அமைந்திருக்க வேண்டும். “சூழல் நடப்பியலாகச் சிறப்பாக அமைய வேண்டுமானால் காலம், இடம், பாத்திரம் ஆகிய மூன்று கூறுகளும் ஏற்ற முறையில் இயைந்திருக்க வேண்டும் என்கிறார் சுப. சேதுப்பிள்ளை”. சூழல் என்று இங்கு கூறப்படுவது பின்புலமேயாகும்.

தொல்காப்பியர் கூறும் முதற்பொருளும், கருப்பொருளும் ஐவகை நிலங்களின் பின்புல அமைப்பைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. “உரிப்பொருளாகிய ஒழுக்கம் நிகழ்வதற்கு முதல்பொருள் நிலைக்களமாகவும், கருப்பொருள்கள் அதற்கு உதவுமாறும் அகப்பாடல்களில் செய்யுட்கள் செய்யப்பட்டன” எனும் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இங்கே கூறப்படும் முதற்பொருளும், கருப்பொருளும் பின்புலங்களாகவே செயல்படுகின்றன. பின்புலம் என்பது, இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இயற்கைப் பின்புலத்தில் நிலம், காலம் என இருவகைக் கூறுகள் உண்டு. சமுதாயப் பின்புலத்தில், மக்களின் வாழ்வியல் கூறுகள் வெளிக்காட்டப்படுகின்றன.

ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

மாதவன் தம் கதைகளில் பின்புலத்தை எவ்வாறு பயன்படுத்திக் கதை படைத்துள்ளார் என்பதை இங்கு காண்போம். இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் ஆகிய இரண்டுக்கும் தம் கதைகளில் முக்கியத்துவம் கொடுத்தே அவர் படைத்துள்ளார். அந்த வகையில் அவருடைய கதைகளின் பின்புலமானது, இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் என இருவகையாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.

1. இயற்கைப் பின்புலம்

“ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற காலம், இடம் என்பனவற்றைப் பின்புலம் எனலாம். இதனுள் ஒரு கதையின் முழுச் சூழலுமே அடங்கி விடும். ஒரு சமூகத்தின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகிய யாவும் இதனுள் அடங்கும். எனவே பின்புலத்தைச் சமுதாயப் பின்புலம், காட்சிப் பின்புலம் என இருவகையாகப் பிரிக்கலாம் என்கிறார் ஹட்சன்”. இவர் காட்சிப் பின்புலம் என்று கூறுவது இயற்கைப் பின்புலத்தையாகும். மாதவன் இங்கு இயற்கைப் பின்புலமாகக் கொண்டிருப்பது, கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாவட்டம் ஆகும்.

1.1. இடப்பின்புலம்

கதை நிகழும் இடத்தின் இயற்கை அமைப்பு, அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த செய்திகளை விளக்குவதே இடப்பின்புலமாகும். கதையில் வரும் கதைமாந்தர்களின் எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் அவா்கள் சார்ந்து நிற்கும் இடத்துடன் தொடர்பு கொண்டதாக அமைவதால் கதையில் இடப்பின்புலத்திற்கு முக்கிய இடம் உண்டு. ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில், “கேரள மண்ணின் ரம்யமான இயற்கை மனோகரம் அம்பலவாசலும், தென்னந்தோப்பும், பறங்கிமா மரங்களும், கமுகின் கூட்டமும், ஒற்றைநாழிக் கிணறும், தண்ணீர் இறைக்கும் பாளையும், செம்பருத்திப் பூச்செடிகளும், நெற்றிப் பூக்களும் குளிர்ந்த சாயங்காலப் பொழுதின் அணைப்பில் துல்லியமாக இருந்தன” என்று வரும் வரிகளில் கேரள மண்ணின் தோற்றத்தை ஆசிரியர் கூற்றாக வெளிப்படுத்துகிறார். ‘மலையாளத்து மழை’ கதையில், “இந்தக் கிழக்குக் கோட்டையின் பஸ் டெர்மினல்ஸூம் சுற்றுப்புறமும் ரம்மியமானவை. பழைய ராஜரீக ஆட்சியின் மிச்ச அழகுபோல வெளேரென்று உயரமாக மெயின் ரோட்டிற்கு வரம்பு கட்டிய கோட்டைச் சுவர், ‘RV’ என்ற ஆங்கில எழுத்தை (ராமவா்மாவின் சுருக்கம்) துதிக்கை உயர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் யானை முத்திரைகள். கோட்டையுள்ளிருந்து சிட்டி பஸ்கள் வந்த வண்ணமாகவும், போன துரிசமாகவும் இருக்கும். பஸ்களிலெல்லாம் – பிற மொழிக்காரர்களுக்குப் புரியக் கூடாது என்பதற்காகவோ என்னமோ- மலையாளத்தில் மட்டும் ஊர்ப்பெயர்களைப் பொறித்திருப்பார்கள். வௌ்ளையம்பலம், தைக்காடு, பேரூர்க்கடை, ஊளன்பாறை, கவடியார், ஜகதி ………” என்று வரும் வரிகளில் திருவனந்தபுரம் பேருந்து நிலையம் குறித்தும், அங்குள்ள ஊர்கள் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன.

கதைமாந்தரின் கூற்றாக இடப்பின்புலம் வெளிப்படுவதை ‘அனந்தபாஸ்கர் என் நண்பர்’ கதையில் காணலாம். “அடடா, பேசிக்கொண்டே எங்கே போயிட்டிருக்கோம் பாத்தீங்களா? ஸ்டேட்ச்யு ஜங்ஷனுக்கில்லா வந்துட்டோம். சிலையா நிக்கிற திவான் மாதவராயர் நம்மளெப் பாத்துச் சிரிக்கிறாற்போல இருக்க.. மெடிக்கல் காலேஜ் வரையிலும் போகணும்னா, வஞ்சியுர் வழியா கலெக்ட்ரேட் பாதையோட போயிருக்கணுமில்லையா…. இப்பொ பரவாயில்லெ… பி.எம்.ஜி வழியா முளவனமுக்குப் போய் அப்படியே நடப்போம்….” எனும் பாத்திரக் கூற்று திருவனந்தபுரத்து இடங்களைப் பற்றிய அறிமுகமாக அமைந்துள்ளது. பதினாலுமுறி கதையில், “கிழக்கேக் கோட்டையிலிருந்து பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணும். பதினைஞ்சு பைசா பஸ்ஸூக்குக் கொடுத்தால் மாதவராயர் சிலைக்குப் பக்கத்தில் கொண்டு போய் இறக்கி விடுவான். ……………….” என்று பாத்திரச் சிந்தனையாக அமையும் வரிகளில் இடப்பின்புலம் வெளிப்படுத்தப்படுகிறது.

பதினாலுமுறி கதையில், “பஸ் ஸ்டாண்டில் இன்னும் சலசலப்பு ஆரம்பமாகவில்லை. டுட்டோரியல் காலேஜூக்குப் போகும் அஞ்சாறு சிறுசுகள், கரகுளத்துக்கும், மெடிக்கல் காலேஜூக்கும் போகும் நாலைந்து போ்கள், கப்பலண்டி தட்டுக்காரன் மட்டும்தான். மண்ணில் அங்கிங்காக மொய்த்து மேய்கிறது. ராத்திரி தெரு மாடுகள் வந்து படுத்து கிடக்கிற இடம். நீலச் சேலை அணிந்த கார்ப்பரேஷன்காரா் ஆங்கிலத்தில் ‘ஒய்’ எழுத்து மாதிரியான ஆள் உயர நீண்ட துடைப்பத்தைவைத்துக் கூட்டிக்கொண்டு வருகிறாள். அபேதானந்தாஸ்ரமத்திலிருந்து ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ மந்திரம் மெதுவாகக் கேட்கிறது” எனும் வரிகள் பேருந்து நிலையத்துப் பின்னணியை மக்கள் வாழ்வியலுடன் எடுத்துக் காட்டுகிறது.

1.2. காலப் பின்புலம்

கதை நிகழும் காலம் குறித்த அறிமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமையும் பின்புலமே காலப் பின்புலமாகும். அரேபியக் குதிரை கதையில், “நாலாவது வருஷம் பாஸ்கரனின் ஒரே பந்தமான அம்மாவிக்காரிக்கு அவனிடமிருந்து பணம் வந்தது. நூற்றி அம்பது ரூபா. அஞ்சு ரூபா நோட்டுத் தாளை திருப்தியாக நிமிரக் கண்டிராத கிழவிக்கு நூற்றி அம்பது ரூபா ஊருக்குக் கொடை நடத்தியது போல கொண்டாட்டமாக இருந்தது” என்று வரும் வரிகள் ரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தை காட்டுகிறது.

‘விசுவரூபம்’ கதையில், “ஏக்கியம்மா பரம சாது. வேலையே கண்ணாகச் சமஞ்சு அமா்ந்திருந்து, மத்தியானக் கருக்கலுக்கு முன் நாலு மூடைத் தான்யமாவது மண், கல், தூசு போகப் புடைத்துத் துப்புரவு பண்ணிக் கொடுப்பாள். முக்கால் ரூபா, ஒரு ரூபா வரைக்கும் அன்றாடம் கிடைக்கும். …………… பத்துப் பைசா வெத்தலை பாக்கு, குழந்தைக்குப் பத்துப் பைசாவுக்குத் தின்னத் தீனி – வாங்கிக் கொள்வாள்” என்று கூறப்படும் வரிகள் பத்து பைசா, 75 பைசா போன்ற காசுகள் வழக்கத்திலிருந்த காலக்கட்டத்தைக் காட்டுகின்றன. பறிமுதல் கதையில், “பிளஷா் கார் போகிறது. டிரான்ஸ்போர்ட் பஸ் ஒன்றையும் காணவில்லை. சக்கரத்திற்கு டயா் போட்ட கட்டை வண்டிகள், அங்கிங்காக வெறுமனேக் கிடக்கின்றன” என்று வரும் வரிகளில் பிளஷர் கார், டயா் போட்ட கட்டை வண்டிகள் போன்றவை புழக்கத்திலிருந்த காலகட்டம் காட்டப்படுகிறது.

2. சமுதாயப் பின்புலம்

சமுதாயப் பின்புலத்தில் குறிப்பிட்ட நிலவியல் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைநிலை, கலை, பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், சாதி வகைகள், அரசியல், உறவுமுறைகள் போன்ற செய்திகள் வெளிக்காட்டப்படுகின்றன. மாதவன் கதைகளின் பின்புலம் மலையாள நாடு ஆனதால் மலையாள மக்களின் வாழ்க்கை நிலை குறித்த செய்திகளைச் சமுதாயப் பின்புலத்தில் வெளிக்காட்டியுள்ளார்.

2.1. தோற்றம்

“தமிழகத்தின் சொந்தக் கிராமத்து வெறுமையை விட்டு இங்கே வந்தபோது – புதிய உலகம், புதிய பாஷை, குளித்துக் கரையேறி வரும் கோபியர்கள் போலத் துல்ய அழகுடன் பெண்கள், சுத்தமான உடைகளுடன் கட்டைக் கர்வமான மீசையுடன் ஆண்கள்” – ‘மலையாளத்து மழை’ கதையில் வரும் இவ்வருணனையில் நாகரீகமான கேரள மக்களின் தோற்ற அமைப்பு வெளிக்காட்டப்படுகிறது. “ஒற்றை வெண்புடவை அணிந்துகொண்டு, புளியிலைக் கரை ஜரிகை நேரியலை இடைசுற்றி மார்மேல் எறிந்து, வாழைப்பூக் கையுறையில், பட்டு ரவிக்கையில் ஜதைமுலைக்கு முடிச்சிட்டு, நெற்றியில் சந்தனக் கீற்றணிந்து, நுனி முடிச்சிட்ட கூந்தலில் நீர்சொட்ட, குவித்த கரங்களால் அல்லி முத்திரை காட்டி ஸ்ரீமந் நாராயணனை வணங்கி நிற்கிறாள்” ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் வரும் இவ்வருணனை கேரள நங்கையரின் ஆடை அலங்காரம் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.

2.2. உணவுமுறை

“பூஜையும், நமஸ்காரமும், நெற்றிச் சார்த்தும் முடிந்து வந்தபோது, உப்பும், தேங்காய்ப்பூவும் இட்டு – தாளிக்காத சிறுபயிர் அவித்ததும், காபியும் – தாலத்தில் கொண்டு வைத்து, பலகையிட்டாள் சுமங்கலாம்பிகை” (கொச்சு சுந்தரி ). “விடிந்தபோதே விருந்தாளியின் பிரயாணத்திற்கான ஆயத்தங்கள் கலகலத்தன. துல்லிதமான சம்பா அரிசி குழாய்ப்புட்டும், பப்படம் பொரித்து, துணைக்கு வாழைப்பழங்களையும் வைத்து காலை டிபனை மணக்கச் செய்திருந்தாள் பார்வதி” (விருந்து). “அங்கே மலையாளத்தான் ஓட்டல்லே சோறு எப்படியிருக்கும் தெரியுமா? ஒரு பருக்கையை எடுத்து உன்னை விட்டெறிஞ்சா நீ அய்யோ அம்மாதான்” (பூமழை). “மலையாளத்து விருந்து, இலை நிறைய தொடுகறிகள். இஞ்சி, நார்த்தங்காய், தயிர் கிச்சடி, அன்னாசிப் பழப்பச்சடி, வாழைக்காய் துவட்டல், முட்டைக்கோஸ் துவரன், உருளைக்கிழங்கு வடை கூட்டுக்கறி, அவியல், உப்பேரி, நேந்திரங்காய் வறுவல், படற்றிப்பழம், ……….ஆவிபறக்கும் சம்பா அரிசிச் சோற்றை ஒவ்வொரு இலையாகப் போட்டுக்கொண்டே வருகிறார்கள்” (வேஷம்) போன்ற வசனங்கள் மலையாள மக்களின் உணவுப் பழக்கத்தை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

2.3. நம்பிக்கைகள்

“மோட்டு வளையில் காகம் ஒன்று கர்ண கடூரமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. காகம் கரைந்தால் விருந்து வரும் என்பார்கள்” (விருந்து). ‘மலையாளத்துப் பெண்பிள்ளை மனசும் மழையும் ஒரே மாதிரிதான். வெயில் சிரித்துக் கொண்டேயிருக்கும். சட்டென்று ஒரு பக்கம் மேகம் கறுப்புக் கட்டி மழையைப் பொழியத் துவங்கிவிடும். திடீர் திடீர் மாற்றம்….” (மலையாளத்து மழை) போன்ற கூற்றுகள் மக்களின் நம்பிக்கைகள் பற்றிக் கூறுகின்றன.

2.4. சாதி

மலையாள இனத்தார் வேற்று இன மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வதை மீசைப் பூனை, மிருதசஞ்சீவினி ஆகிய கதைகளில் காண்கிறோம். நாயர் இனத்து ஆண்கள் பிராமணப் பெண்களை மணமுடிப்பதாக இக்கதைகளில் காட்டப்படுகின்றன. ‘போற்றி’ எனப்படும் கோயில் பூஜை செய்யும் இனத்தார்; தனி மரியாதையுடன் நடத்தப்படுவதை ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் காட்டப்பட்டுள்ளது. தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களும், உயர்குலத்தைச் சார்ந்தவர்களும் உறவு கொள்வது விலக்கப்பட்டதை ‘நாலுபேர்’ கதை எடுத்துக் கூறுகிறது.

2.5. அரசியல்

கேரளாவில் நிலவும் அரசியல் நிகழ்வுகளின் சாயலையும் தம் கதைகளில் ஆசிரியர் காட்டுகிறார். பறிமுதல் கதையில், “விடிந்தபோது மாபெரும் இரைச்சலோடு ஒரு ஹர்த்தால் தலைவிரி கோலமாக வந்து நிற்கிறது. யாரோ கட்சித்தலைவன் ஒருவனை நடுரோட்டில குத்திக் கொலை செய்து விட்டார்களாம். யுனியன் சகாக்கள் கறுப்புக் கொடிகளும் கூச்சலுமாக வந்து விடியற்காலையில் திறந்த கடைகளை மூடச் சொல்லிவிட்டார்கள். ஏதோ டீக்கடைக்காரன், தயாரித்த பலகாரங்களை எல்லாம் என்ன செய்வது என்று கடை அடைக்க எதிரிப்புச் சொல்லியிருக்கிறான். வந்ததே வினை. அவனும், அவன் வண்டிப் பொட்டியும், மேஜை, நாற்காலிகளும் எல்லாம் தவிடுபொடி. கல்லை விட்டெறிதல், மோதல், கலாட்டா…… பயன் என்ன? இமை மூடும் நேரத்தில் நெடுக கடைத்தெரு பூராவும் பந்த்” (பறிமுதல்)

“தேர்தல் காலத்தில் புத்தரிக்கண்டம் மைதானத்தில் தினம் தவறாமல் கட்சிக்காரர்களின் பொதுக்கூட்டம் திமிலோகப்படும். வடக்கே இருந்து பெருந்தலைவர்களெல்லாம் வந்து சொற்பொழிவாற்றுவார்கள்” (கோமதி). “ஸ்டேஷனுக்குத் திரும்புற இடத்தில், சட்டசபைக் கட்டடத்துக்கு முன்னாலே நிறைய கூட்டம். ஏதோ வேலை நிறுத்தமும், சத்தியாக்கிரகமும் நடக்கிறாப்பலே. விடிஞ்சதுதான் உண்டும். ‘வேலை கொடு, அல்லது சோறு கொடு’, ‘மானம் விற்றுச் சோறு வேண்டாம்…..’, ‘வேலைக்குக் கூலி கொடு’ என்றெல்லாம் மலையாளத்தில் எழுதிய அட்டைகளைத் தாங்கிய கூட்டம். ஆபீஸ் நேரம் துவங்கியதும், கூட்டத்தில் கோஷம் முழங்கும்” (பதினாலுமுறி)-போன்ற கூற்றுகள் அரசியல் நிலவரங்களை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.

2.6. கலைகள்

இலக்கியம், சினிமா, நாட்டியம் போன்ற கலைகளைக் குறித்த செய்திகளையும் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். “மலையாளப் படமாம், பேரென்ன தெரியுமா? ‘காட்ஃபாதர்’. முன்னால நாடகங்கள்ல எல்லாம் நடிச்சு போடு போடுன்னு போட்டுட்டு இருந்தாரே என்.என். பிள்ளைன்னு. அவர்தான் காட்ஃபாதரா நடிச்சிருக்கார். இப்போ 120 நாள் தாண்டியும் கூட்டம் தேரோட்டம் பார்க்க வந்தாப்பிலெ நெரிபடுது பாத்தியா….” (அரேபியக் குதிரை). “மறுநாள் அந்த ரசிகர்கள் வந்தபோது முற்றிலும் புதிய தோற்றத்தில் தெரிந்தான். மலையாள சினிமா நடிகன் மோகன்லால் மாதிரி வௌ்ளைநிற சில்க் ஜிப்பா, இழைய இழைய ஜரிகைப் பட்டு வேஷ்டி…..” (இலக்கியம் பேசி)
“ரயில் வேகமாகப் போக ஆரம்பித்தபோது – கதகளியில் சபா பிரவேசம் போல டிக்கெட் பரிசோதகர் வந்தார்” (இந்திய குணம்). “படியேறியபோது மேஜை அழிக்கவுண்டார் உள்ளே, கல்லா நாற்காலியில் உட்கார்ந்திருந்தது, அசல் திருவாதிரை ஆட்டக்காரியின் நேரியல் முண்டு, இறுக்க ஜாக்கெட் எழிலே போல நடுவயசுக்காரி நாரி சிரோன்மணி ஒருத்தி….” (சாத்தான் திருவசனம்) போன்ற கூற்றுகளில் மலையாள சினிமா பெயர்கள், நடிகர்கள், கதகளி, திருவாதிரை போன்ற நடனக் கலைகள் போன்றவை குறித்துக் கூறப்பட்டுள்ளன.

2.7. சடங்குகள்

‘வேஷம்’ கதையில் மலையாள முறைத் திருமணம் நடப்பது குறித்து எடுத்துக் கூறப்படுகிறது. “மணமேடையில் பெரிய கதகளி குத்து விளக்கு இரண்டு தேங்காய் எண்ணெய் துல்யத்தில், ஜாஜ்வல்யமாக ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அம்பாரமாக செந்நெல் நிறைந்த ‘பறையும்’, பட்டு சுற்றிய நீள ஆசனப் பலகையும் தயாராக இருந்தன. பிரமுகர்களாக நாலைந்து பேர் வந்து மணமேடைக்கு அருகில் நின்றனா். பட்டு வேஷ்டி, வௌ்ளை கப்கை சட்டை அலங்காரத்துடனிருந்த ‘வரனை’ மைத்துனன் கைப்பிடித்து அழைத்துவர வந்து நின்றான். மறுபக்கத்திலிருந்து ஜரிகை முண்டு, ஜாக்கட்டு அலங்காரத்துடன் ‘வது’வும் அழைத்து வரப்பட்டாள். இருவரும் அந்தப் பிரமுகா்கள் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு மணமேடையில் ஏறினார்கள். எடுத்துக் கொடுத்த பெரிய ரோஜாப்பூ மாலைகளை ஒருவருக்கொருவா் மாற்றிக் கொண்டார்கள். மாலைமாற்றிக் கொண்டதும் சபையோரைப் பார்த்து வோட்டுக் கேட்க வந்த வேட்பாளா்களைப் போல கும்பிட்டார்கள். உடனேயே ஒரு பெரிய மனிதா், பெண்ணிற்கான புடவையையும், ஜாக்கெட்டையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்ததை, ‘மணவாளன்’ கையேந்தி வாங்கி ‘மணவாட்டி’ கையில் தருகிறான். புடவைத் தாம்பாளம் ஏந்திய அவளை மற்ற பெண்கள் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். இனி அவள் மணமகன் கொடுத்த புடவையை அணிந்துகொண்டு மணமேடைக்கு வருவாள். பிரமுகா்கள் வாழ்த்துவார்கள். முடிந்தது கல்யாணம்” என்று வரும் வருணனை திருமண நிகழ்வைக் குறித்துக் கூறுகிறது.

‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் நாகா்பிரதிஷ்டை எனும் சடங்கு நிகழ்வு பற்றிக் கூறப்படுகிறது. “அது மேடமாசத்தின் விஷூக்காலம். ஆலயத்தின் கோட்டை வட்டத்திற்கு வெளியே, கிராமங்களின் நாகா் பிரதிஷ்டை எனும் உற்சவம் கொடியேறியிருக்கிறது. நாகதேவதைகளின் கீர்த்தியினைப் பாடும் புள்ளுவர்கள், மெல்லிய கம்பி நரம்புகள் இழுத்துக் கட்டிய கை வீணைகளை இசைத்தவாறு காவுநடைகளில் கூடியிருக்கிறார்கள். மெல்லிய கொசு ரீங்காரம் போன்ற நரம்பிசை, காற்றில் மிதந்து சலன மனங்களில் ‘கிறுக்கு’ மூட்டுகிறது. சண்டை மேள ஓசைப் பிரளயத்தினிடையே, ஓங்கி வளா்ந்த பாலை மரத்தடியின் நாகா் பிரதிஷ்டை முற்றத்தில் – ரத்தினக் கம்பளங்கள் போல, கரித்தூளும், மஞ்சள்பொடியும் கலந்து எழுதிய கோலங்கள். அதன் நடுவில் கூந்தல் கலைய ஆராசனியல் ஆடும் கன்னிப் பெண்களிடையே கார்த்தியாயினியும் இருக்கிறாள்………… வெயிலின் உக்ரம் ஏற ஏற செண்டை வாத்யத்தின் பிரளய ஓசை திமிலோகப்படுகிறது. பத்மாசனத்தில் நட்டு வைத்த பதுமைகளைப் போன்ற பெண்கள், பிணைந்தாடும் உக்ர நாகங்களாக ஆடி மறிக்கின்றனா். கூந்தலும், மாரிக்கச்சைகளும் கலைகின்றன. கண்களில் சீறும் விஷநாகத்தின் ஆக்ரோஷம். முகத்தில், அநீதியை அறுத்தெறியச் சிவக்கும் உக்ரம். நாகா் மகிமையின் ஆக்ரோஷத்தை நேரில் காணும் பயபக்தியுடன் கிராம ஜனங்களின் கூட்டம் அசையாது நிற்கிறது” எனும் வருணனை நாகா் பிரதிஷ்டை எனும் மலையாளச் சடங்கு பற்றிக் கூறுகிறது.

முடிவுரை

ஒரு கதையின் முழு அமைப்பையும், அதன் ஏனைய சிறப்புகளையும் வாசகா்கள் முழுமையாக உணா்ந்துகொள்ள உதவும் கூறு பின்புலமாகும். ஆ.மாதவன் தம் கதைகளில் திருவனந்தபுர மாவட்டப் பின்புலத்தைச் சிறப்பாகப் படைத்துள்ளார்.

பயன்பட்ட நூல்கள்

1. நாவல் இலக்கியம், மா.இராமலிங்கம்.
2. இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் – பி.வல்சலாவின் நெல் ஓர் ஒப்பீடு, ஜீவலதா
3. புதிய விழிப்பு, அகிலன்.
4. மாதவன் கதைகள், ஆ.மாதவன்.
5. வட்டாரத் தமிழ் நாவல்களில் பின்புலம், முனைவா் பட்ட ஆய்வேடு, ஜோசப் சொர்ணராஜ்
6. தொல். பொருள், இளம்பூரணம்.
7. தமிழ் இலக்கியத்தின் காலமும், கருத்தும், ஆ.வேலுப்பிள்ளை.

====================================================================
ஆய்வறிஞர் கருத்துரை(Peer Review):

நவீன இலக்கியவாதிகளில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள சிறந்த படைப்பாளி ஆ.மாதவன். அவரது கதைகள் எல்லோராலும் பாராட்டப் படக் காரணமாக அமைவது அவரது கதைப் பின்புலம் தான். இதனை ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்வாளர் அருமையாகக் கட்டுரையை ஆக்கியுள்ளார். சங்க இலக்கியங்களின் பின்புலத்தை இங்கு நினைவுபடுத்தியது கூடுதல் சிறப்பு. இயற்கைப் பின்புலத்தையும் சமூகப் பின்புலத்தையும் படைப்பின் வழி ஆய்ந்தது பொறுப்புணர்வோடு வெளிப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் என்றால் ஆ.மாதவன் என்கிற அளவிற்குத் தனது படைப்புப் பின்புலத்தை உருவாக்கியிருப்பார். அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறிய ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

====================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.