குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

-மீனாட்சி பாலகணேஷ்
குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2
(நீராடற்பருவம்)
நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகளுமாகும். இந்த சுண்ணப்பொடிகளை இடிக்கும் நுணுக்கங்களும், முறைமைகளும் எத்தனை நுணுக்கமானவை! அது அத்தனை எளிதான காரியமல்ல!
சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுண்ணப்பொடி என்பது பெண்கள் நீராடும்போது உபயோகிப்பதற்காகவும், நீராடியபின் இக்காலத்து நறுமணப்பொருட்கள் போன்று உடலில் பூசிக்கொள்வதற்காகவும் பெண்களால் மிகுந்த அக்கறையுடன் வீடுகளிலேயே உரலில் இடித்துத் தயாரிக்கப்பட்டது. சந்தனம், அகில், புனுகு, சவ்வாது, இவற்றைப் பலவிகிதங்களில் கலந்து பலவகைகளாகத் தயாரிப்பார்கள். சிலவகைகளில் பொன்துகள்களையும் சேர்ப்பர். வாசமிகு நறுமலர்களை (தாழம்பூவின் உள்ளிருக்கும் மகரந்தப்பொடி, உலர்த்திய சண்பக மலர்கள், மல்லிகை, காய்ந்தபின்பும் மணம்வீசும் மகிழம்பூ, நிறம்கூட்டச் செம்பருத்திப்பூ, மருத்துவ குணம் செறிந்த மருதோன்றிப்பூ ஆகியனவற்றையும்) உலர்த்திச் சேர்ப்பார்கள்.
நீராடும்போது உடலில் தேய்த்துக் கொள்வதற்காக (தற்காலத்து நறுமணக் கட்டியான சோப்பு போல) பத்துவகைத் துவர்ப்புப் பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் பொடியினைத் ‘துவர்’ எனக்கூறுவார்கள்.
‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்திரு வகை ஓமா லிகையினும்
ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிரும் கூந்தல் நலம்பெற ஆட்டி1..’ என
மாதவி தன்னை ஒப்பனை செய்து கொள்ளுமுன் எவ்வாறு எத்தகைய நீரில் நீராடினாள் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கியுள்ளார்.
பத்துத் துவர்களும் நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர் என்றும், விரை ஐந்தும் கொட்டம் (நறுமணப்பொருள்), துருக்கம் (கஸ்தூரி), தகரம் (மயிர்ச்சாந்து), அகில், ஆரம் (சந்தனம்) எனவும் அறிகிறோம். இத்துடன் மேலும் முப்பத்திருவகை நறுமணப்பொருள்களையும் ஊறவைத்து நீராடுவர் எனத் தெரிகின்றது.
மஞ்சளையும் இதில் சேர்ப்பது வழக்கு எனத் ‘திருப்பொற்சுண்ணத்’தில் இருந்து அறியலாம்.
‘மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி2,’ என்பன திருவாசகப் பாடல்வரிகளாகும்.
மகளிர் வைகையில் நீராடுவதற்காக என்னவற்றையெல்லாம் செய்தனர் எனப் பரிபாடல் சுவைபட விளக்குகின்றது.
சில மகளிர் நீராடுவதற்காக வேண்டி, சிவந்த குங்குமக் குழம்பினையும், சேறுபோன்ற அகிற் குழம்பினையும், பலவகையான கர்ப்பூரங்களையும் இதற்காகவே உண்டான சாந்து அம்மியில் இட்டு அவை தீக்கழங்குகள் போன்று சிவந்து சேர்ந்து ஒன்றாய் ஆகும்படி அரைத்தனராம். இவை நதிக்கரையில் செய்யப்படும் செயல்கள்.
‘செங் குங்குமச் செழுஞ்சேறு
பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழலென அரைக்குநர்3′ என்பன
பரிபாடல் வரிகள்.
மேலும் சிலர் கூந்தலில் பத்துவகைத் துவர்களையும் கொண்டு செய்யப்பட்ட பொடிகளைத் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகினர்; நறுமண எண்ணெய் தடவிய கூந்தலில் எண்ணெய் போகுமாறு நுண்ணிய அரப்புத்தூளை இட்டுப் பிசைந்தனர். இன்னும் சிலரோ, மாலை, சாந்து, மது, அணிகலன்கள் ஆகியவற்றையும் அந்த வைகை நீரில் இட்டுக் களித்தனர்.
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
கோலம் கொள நீர்க்குக் கூட்டுவார்.3…. என்பன
பரிபாடல் வரிகள்
இவ்வாறு பலவிதமாக நீராடிக் களிப்பதற்காகவே நதிகளுக்குச் சென்றனர் மகளிர். நறுமணச் சுண்ணங்களும் தேவைக்கேற்பத் தயாரிக்கப்பட்டு பூசிக்கொள்ளப்பட்டன. மகளிர் தமக்குப் பூசிக்கொள்ள மட்டுமன்றி, நெடுநாள் பயணம் சென்ற தலைவன் வீடுதிரும்புவதனை எதிர்பார்த்து, அவனுடைய நீராடலுக்காகவும் வாசனைப்பொடியைத் தயாரிப்பார்கள்.
பொற்சுண்ணம் இடிப்பதற்குப் பலவிதமான வாசனைப்பொருட்களை அதிகமாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு அல்லது நான்குபெண்கள் எதிரெதிராக நின்றுகொண்டு இடிப்பார்கள். உரலில் உள்ள குழியோ சிறியது. ஒரு உலக்கைதான் போகமுடியும்; நான்குபேர் மாற்றிமாற்றி உலக்கைபோட்டு இடிக்க வசதியாக ஒரு தாளகதியை அமைத்துக்கொண்டு, இடிக்கும் சிரமம் தெரியாதிருக்கப் பாடல்களையும் இதற்காக இயற்றிக் கொண்டனர். இதற்குத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வள்ளைப்பாட்டு (உலக்கைப்பாட்டு) என்றே பெயர் இருந்தது. இருபெண்கள் நான்கு கைகளால் மாற்றிமாற்றி உலக்கை போடும்போது வளையல்களும் மூச்சும் இழைந்தொலிக்கப் பண்ணிசை உண்டாகுமே அதற்கு வள்ளைப்பாட்டு எனப்பெயர்.
ஒருவீட்டில் திருமணம் நிச்சயமானவுடன் செய்யும் முதல் மங்கலச்செயல் மஞ்சளை நிறையச்சேர்த்து வாசனைப்பொடி இடிப்பதுதான். தற்காலத்திலும் கூட இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனைக்கண்ணுற்ற மாணிக்கவாசகருக்கு ஈசனுடைய அபிடேகத்திற்கு பொற்சுண்ணம் இடித்துப்பார்க்கும் பேரவா எழுகின்றது. தனது இறையனுபவங்களைச் சுண்ணமிடிக்கும் பாடல்களாக்கி பெண்களுக்காகவே இயற்றுகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிவபிரானுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கின்றனர்.
‘அழகான முத்துமாலைகள், மாவிலைத்தோரணங்களல் வீட்டை அலங்கரித்து, நவதானியங்களைக் கிண்ணங்களில் நிரப்பி முளைப்பாரி வைத்து, அதன் நடுவே, தூபம், தீபம் அனைத்தையும் வையுங்கள் பெண்களே! பல்லாண்டு பாடுங்கள், கவரி வீசுங்கள்; அப்பன் திருவையாறனைப் பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்,’ என்று அனைவரையும் அழைத்துச் சுண்ணமிடிக்கத் தொடங்குகிறார்கள்.
‘முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
………………………………………….
அத்தன் ஐயாறன்அம் மானைப்பாடி
ஆடப்பொன் சுண்ணம் இடித்தும் நாமே4′
இந்தச் சுண்ணப்பொடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுத் திகழும் அருமையும் ஒரு அழகுதான். அக்காட்சியை நாமும் காணவேண்டாமா?
சின்னஞ்சிறுமி. விளையாட்டில் முனைப்பாக இருப்பவளை நீராட வரும்படி ஆசைகாட்டுகிறார்கள் தாதியர். “உன் நீராடலுக்காக எத்தனைவிதமான சுண்ணப்பொடிகள் கொண்டுவந்திருக்கிறோம். தேன்சிந்தும் மலர்களைச் சேர்த்துக்கலந்த ஒரு சுண்ணக்கலவை; களபம் எனும் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் முதலானவை சேர்த்த இன்னொரு சுண்ணம்; பச்சைக் கர்ப்பூரம் சேர்த்த குளிர்ச்சியான ஒரு சுண்ணக்கலவை. தனிச் சந்தனக்கலவை ஒன்று; பலவிதமான சாந்துக்குழம்புகள். வண்டுகள் தேனை அருந்தி ரீங்காரமிடும் மலர்மாலைகள்! வா குழந்தாய்! வந்து பாலாற்றில் துளைந்து நீராடுக!” என ஆதிபுரி (திருவொற்றியூர்) வடிவுடையம்மையை நீராடத் தாயும் சேடியரும் அழைப்பதாகப் புலவரொருவர் பாடியுள்ளார்.
‘கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும்
களபப் பசுஞ்சுண்ணமும்
கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும்
கமழ்கின்ற பலசாந்தமும்.5..’
நாம் உயர்வாக எண்ணும் பலபொருள்களையும் செயல்களையும் இறைவனுக்காகவே அர்ப்பணிப்பதில் உண்டாகும் பேரானந்தத்திற்கு ஈடுஇணையில்லை அன்றோ?
சிறுமியாகிய அன்னை திருநிலைநாயகி நீராடுவதற்காக மேலே நாம் கண்டவாறு தயாரிக்கப்பட்ட சுண்ணப்பொடியை, தூவினால் நிலத்தில் விழுமுன்பே வண்டுகள் சுழன்று விரைந்துண்ணும் தரம் உயர்ந்த சுண்ணப்பொடியை அரம்பையர்களும், மதுநிறைந்த மலர்களை இந்திராணியும், துகில், காம்பு நேத்திரங்கள் ஆகிய பட்டாடை வகைகளைப் பல மகளிரும் ஏந்தி நிற்கின்றனராம். முகவாசம் எனப்படும் வெற்றிலை, மற்றும் தாம்பூலம், சந்தனம், மானின் கத்தூரி ஆகியவற்றைக் கலைமகளும், இரத்தினம், பவளம் ஆகிய நவமணிகளாலான அணிகலன்களை மலர்மகளான இலக்குமியும் ஏந்தியவாறு உனது ஏவலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்…’ என்பது புலவரின் கூற்று.
தூவினில மேல்விழ விடாதுவரி வண்டுகள்
சுழன்று துய்க்குஞ் சுண்ணமொய்
சுரிகுழ லரம்பையர்கள் மதுமலர்க ளிந்த்ராணி
துகில்காம்பு நேத்திரங்கள்
காவிமுக வாசதாம் பூலாதி சந்தனம்
கத்தூரிமா னின்மதம்
கலையின்மக ளரதனம் பவளமுதல் நவமணிக்
கலன்மலரின் மகளேந்தி நின்று
ஆவலின் ஏவல்வழி நிற்கிறார்6……. (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்)
ஈண்டு புலவர், அன்னைக்காகத் தயாரிக்கப்பட்ட சுண்ணத்தின் தரத்தைப் புகழ்ந்து கூறுவது சீவக சிந்தாமணியில் காணும் கருத்தை ஒத்திருப்பது நயக்கத்தக்கது.
சீவக சிந்தாமணியின் குணமாலையார் இலம்பகத்தில், அவளுக்கும் சுரமஞ்சரிக்கும் இடையேயான சுண்ணம் தயாரிக்கும் போட்டியில் எவரின் சுண்ணம் தரத்தில் உயர்ந்ததெனக் காணவேண்டியபொறுப்பு சீவகனிடம் அவன் திறமையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டது. அவன் இருவரின் சுண்ணப்பொடிகளையும் சிறிது அள்ளி விண்ணில் தூவி விடுகிறான். குணமாலையின் சுண்ணப்பொடி நிலத்தில் விழும்முன்பே வண்டுகள் பாய்ந்தோடிவந்து அதனை உண்ணுகின்றதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் கூக்குரலிட்டனர். சுரமஞ்சரியின் பொடிகள் நிலத்தில் விழுந்தன. வண்டுகள் அதன் பக்கமே நெருங்கவில்லை! “வண்டுகள் உண்ட பொடி (குணமாலையுடைய பொடி) நல்ல கோடைக்காலத்தில் இடித்துத் தயாரிக்கப்பட்டது; மற்றது (சுரமஞ்சரியுடையது) குளிர்ச்சியுடைய மழைக்காலத்தில் தயாரிக்கப்பட்டது. அதனால் சிறிது தரம் தாழ்ந்தது,” எனச் சீவகன் விளக்கினான்.
நல்ல சுண்ணம் இவைஇவற் றில்சிறிது
அல்ல சுண்ணம் அதற்கென்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணம்
அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே.7 (சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்)
இதனையே புலவரும் பிள்ளைத்தமிழ் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.
தாயும் தோழியரும் நீராட அழைத்துச் செல்வதென்னவோ சிறு பெண்மகவினைத்தான். ஆனாலும் (இலங்கை) சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் உலகிற்கே அன்னையான பராசக்தியையே அச்சிறுமியிடம் தமது உள்ளுணர்வால் தரிசிக்கிறார்.
புவனேசுவரியன்னையின் நீராடல் விளையாட்டின்போது, நிகழும் விளையாட்டொன்றினை வருணனையாக்கி, தேவர்கள் அதனை தேவிக்குச் செய்யும் கனகாபிஷேகமாக்கிச் சிறப்பித்துக் கூறுகிறது இப்பாடல். சில சேடிப்பெண்டிர் நீரினுள் மூழ்கி ஒளிந்து கொள்கின்றனர். தாமரையின் அடித் தண்டுகளை அறுத்து அவற்றைத் தமது வாயில் வைத்துக் குழல்போல ஊதி விளையாடுகின்றனர். அவர்கள் ஊதுவதனால் உள்ளிருக்கும் காற்று மேலெழுந்து வெளிப்படும்போது, அவற்றினுள்ளிருக்கும் மஞ்சள்நிற மகரந்தத் தாதுகளை நீராடும் அன்னைமீது பொழியச் செய்கின்றதாம். இது அன்னைக்குக் கனகாபிஷேகம் செய்வது போலுள்ளது என்கிறார். கருத்திற்கினிய நீர்விளையாட்டொன்றினை அன்னை தெய்வத்திற்குச் செய்யும் சீராட்டாகவும் அமையுமாறு கற்பனை செய்தது சிறப்பாக அமைந்துள்ளது.
சேறாடு செந்நெலம் கழனிசூழ் சுதுவையில்
சீர்த்தசங் களைப்பதிபெறும்
திரையாடு தீர்த்திகைச் சீராட விளையாடு
சேடியர் குதூகலத்தால்
நீறாடு மகரந்த நிறைகமல நீள்தண்டு
நீரிடைப் புகுந்தறுத்து
நிகரில்வாய் வைத்தூத………
………………………………………
பெருமையொடு பொன்தூவி அன்னையை முழுக்காட்டு
பெரிய கனகாபிஷேக
வீறாடு விளையாட்டின் மகிழ்வாடும்8……………
பின்னும் அன்னையை மோன ஞானவெள்ளம் மூழ்கி இருப்பவள் எனவும் வருணனை செய்கிறார்; அதாவது தேவியின் கருணைவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் யோகியர் தமது மூலாதாரத்தில் மூண்டெழும் குண்டலினியைச் சுழுமுனை நாடி வழி மேலேற்றுகையில் அவர்கள் சிரசினின்றும் ஊற்றெடுக்கும் அமிருதப் பிரவாகம் அமிர்தகங்கை எனப்படும். அது சுழுமுனை வழியே பாய்ந்து ஆறாதாரங்களிலும் தேங்கும். அவையனைத்தும் அடியார் உள்ளத்தே உள்ள தீர்த்தங்களாகும்.
கள்ளத்த மாயவியல் கைகழுவி நின்னருட்
கருணைக்கை ஏறுமுரவோர்
காண்பினிய சுழுனைவழி மேலேறு கடவுண்மாக்
கங்கைபுகு சுனைகளாக
உள்ளத்தி னுள்ளபல தீர்த்தங்க ளுறமூழ்கி
உலவாவின் புறுதம்சரதம்.9.’ (புவனேசுவரி பிள்ளைத்தமிழ்)
திருமூலரும் இவற்றில் மூழ்குவோர் புண்ணியராவர் என்கின்றார்.
‘மறியார் வளைக்கை வருபுனற் கங்கை
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியமாமே10′ (திருமந்திரம்).
புவனேசுவரி அன்னையை அவள் வைதிகத்தின் வேர் எனப் பெருமைப்படுத்துகிறார். இவள் நாம் வழிபடும் பராசக்தியே என உணர்ந்த அடியாரின் நிலையில் நின்றும் இப்புலவர் பரவசமடைகிறார்.
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழானது இராமேச்சுவரத்தில் உறையும் அம்பிகைமீது பாடப்பட்டது. பிள்ளைவரம் வேண்டுவோர் இராமேச்சுவரம் சென்று வேண்டிக்கொள்வது மரபு. இப்பிள்ளைத்தமிழ் தேவிகோட்டை ஜமீந்தாரும் பெரும்புகழ் வள்ளலுமாகிய அருணாசலஞ் செட்டியாரவர்களுக்கு ஒரு குழந்தை உதிக்கவேண்டி, மற்றவர்கள் அருணாசலக் கவிராயரை வேண்டிக்கொள்ள, அவரால் இயற்றப்பெற்றது. புலவரின் வாக்கு விசேடத்தாலும், அம்மையின் அருளும் கூடிட, ஜமீந்தருக்கு, அழகான ஆண்மகவு பிறந்தது என அறிகிறோம்.
இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளன.
சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!
பறந்து சென்று ஊறு விளைவிக்கும் மலைகளின் இறகுகளை அரிந்தவனின் பிரமகத்திப்பாவம் தொலையுமாறு செய்வது சீதைகுண்டமாகும். கோடி வேதப் பிராமணர்களைக் கொலைசெய்த பாவத்தைக் குறைப்பது பிரமகுண்டம் எனும் தீர்த்தமாகும்; இராமன் பிரதிட்டை செய்த மணல் இலிங்கத்தை வாலினால் ஈர்த்து, முடியாது வாலிற்றுப்போய் அநுமன் வீழ்ந்த இடத்தில் ஊற்றெடுத்தது அநுமகுண்டம் எனும் தீர்த்தமாகும். இதில் ஊற்றெடுக்கும் நீரை எடுத்து அதில் நீராடுவோருக்கு மகப்பேற்றினை அடைவிக்கும் அநுமகுண்டமிதுவாகும். இத்தகைய தீர்த்தங்களிலாடுவோர் எண்ணிய நற்பயன்களைப் பெறுவர் என்று இயம்பும் இராமேச்சுவரத்தில் இராமநாதசுவாமியாகிய ஈசனின் பக்கம் இருக்கும் இளமயில் என அன்னை பர்வதவர்த்தினியை ஏற்றுகிறார். “நீ தமிழ்முனிவனாம் அகத்தியனின் மலையான மலயம் எனப்படும் பொதியமலையில் இருந்து உற்பத்தியாகும் பொருநைவெள்ளத்தில் நீராடியருளுக! உண்மையன்பர் தொழும் பர்வதவர்த்தனியே நீராடுக!” என வேண்டுவதாக அமைந்துள்ள பாடலிது.
‘குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவம்
குறைசெய்த சீதைகுண்டம்
………………………………………………
வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ளநீ ராடியருளே.11′
காஞ்சி காமாட்சியம்மை பிள்ளத்தமிழில் நீராடல் பருவத்தில் புலவரின் கற்பனை அற்புதமாக விரிகின்றது. ‘ஆகாயமே அழகான பட்டுக் கருநீலச் சேலையாகி இருக்கின்றது. அதில் பதித்த நல்வைரங்களாகத் தாரகைகள் மின்னுகின்றன. இந்தச்சேலைக்கு விலைகூறவும் இயலுமோ? இத்தகைய விலைமதிப்பற்ற சேலையினை நீ விரும்பி அணிய வேண்டுமென எட்டு மகளிர்களாகிய அட்ட இலக்குமிகள் ஏந்தி நிற்கின்றனர்.
‘ஈரம் நிரம்பிய கடல் நீரை முகந்து கொண்டெழும் கருமுகிலின் கரையாக வானவில் ஒளிர்கின்றது. மழைக்கு இறைவனாகிய இந்திரன், கடற்கடவுள் வருணன், தண்மையான காற்றின் இறைவனெனப்படும் மாருதக்கடவுள் ஆகியோரின் அருமைப் பத்தினிகள் தங்கள் தலைவியாகிய நீ அணிந்துகொள்ள அத்தகைய வானவில் கரையிட்ட மேகமாகிய கருநீலச் சேலையைக் கையில் ஏந்திக்கொண்டு, கச்சி எனும் காஞ்சிமாநகரின் தடாகக் கரையில், நீ நீராடி வருவதற்காகவும் உனது கண்ணசைவின் ஏவலுக்காகவும் காத்திருக்கின்றனர். நீயும் நீராடி அருளுக! முக்கண்ணனின் இடப்பாகத்தைப் பகிர்ந்து கொண்டவளே! நீராடியருளுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல் மிகுந்த நயம் வாய்ந்தது.
இயற்கையின் எழிலார்ந்த அமைப்பான கருமுகிலிலும், நீலக்கடலிலும், வானவில், சந்திரன், தாரகைகள் இவற்றிலும் இறைமையைக்கண்டு, அவை இறைமையின் அமைப்புகள், அணிகலன்கள் எனக்கொண்டு இரசனையுடன் வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். கருமுகிலைக் காமாட்சி அம்மைக்கான அழகானதொரு சேலையாகக் கண்டு களிப்பெய்தும் அடியாரின் கருத்தில் பூத்தவொரு மலர் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல். இயற்கையை இறைவடிவாகக் கண்டு போற்றிப்பரவும் வழக்கு இன்றுமே தொடர்கின்றது.
விண்பட் டாடை யதனுடலில்
மின்னும் பொறிகளு டுவமைத்த (பொறி- பொட்டு)
விலையில் தானை உகந்தருள (தானை- சேலை)
வேண்டு மெனுமெண் மலர்மகளிர்
ஒண்பா வாடை எடுத்தெழவும்
ஓதக் கலிங்கக் கருமுகிலின்
ஒருபால் வானச் சிலையருகிட்
டும்பர் கோன்மா மழைக்கிறைவன்
தண்ணென் மாரு தக்கடவுள்
தங்கள் அருமைப் பத்தினியர்
தலைவிக் கெனவத் துகில்விரித்துத்
தழையும் கச்சித் தடக்கரையில்
கண்ணே வற்குக் கருத்திருத்தக்
கடிநீர் ஆடி யருளுகவே!
கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
கடிநீர் ஆடி யருளுகவே!12
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதத் தலங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது காஞ்சி. இங்குறையும் காமாட்சியம்மை மீது இப்பிள்ளைத்தமிழ் நூலானது காஞ்சி இரா. குப்புஸ்வாமி அவர்களால் 1959-ல் இயற்றப்பெற்றது.
இதுபோன்ற பல பிள்ளைத்தமிழ் நூல்களும், குழந்தைப் பருவத்தைப் போற்றிக் கொண்டாடும் முறைமையில் தமது விருப்பமான தெய்வங்களைக் குழந்தையாகக் கொண்டும், அவர்கள் தெய்வத்தன்மையை மறவாது போற்றியும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்கதாம்.
பார்வை நூல்கள்:
1. சிலப்பதிகாரம்
2. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
3. பரிபாடல்- பாடல் 10-
4. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
5. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
6. திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
7. சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்
8. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
9. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
10. திருமந்திரம்
11. சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
12. காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்