படக்கவிதைப் போட்டி – 219

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
நீரின் மொழி…
நீரின் மொழியைத் தெரிந்திடுவாய்
நிலைக்கா தெதுவும் அறிந்திடுவாய்,
பாரிதை விழும்துளி கலந்துவிடும்
பெற்ற வடிவை யிழந்துவிடும்,
சேரும் ஒன்றாய் நீராக
சுழலும் வட்டம் நீர்மேலே,
பாரினில் வாழ்வின் தத்துவமாய்ப்
பார்த்திடு நீர்த்துளி கதையிதையே…!
செண்பக ஜெகதீசன்…
வான் நோக்கி..
இமைகள் கனமுற
விழிச்சொருகி
கன்னங்கள் கருகருக்க
உடல் தளர
நாவைப் பரத்தி
சகாப்தங்களாய் காத்திருக்கிறேன்
பச்சைகளற்று
வெளிறிக்கிடக்கும்
வெளிகளுக்கு
உன்றன்
துளிக்கருணையை
தானமிட்டுச்செல்
துக்கங்கள்
மழையெனப்
பொழிய
நூறாண்டுகளின்
சூல் நிரம்பட்டும்..
#பவித்ரா
நீர்த்துளி நமதுலகின் உயிர்த்துளி..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
-ஆ. செந்தில் குமார்.
நாம் மழலையாய் இருந்தபோது
நிலாவைக் காண்பித்து
நல்லமுதூட்டினாள் அன்னை..!!
நீல் ஆம்ஸ்ட்ராங்
நிலாவில் கால்பதித்ததைப் படித்தது
நன்றாய் நினைவிருக்கிறது..!!
நிலாவில் நீரிருக்கிறதா..?
நல்ல காற்றிருக்கிறதா..?
நாள்தோறும் நடக்கும் ஆராய்ச்சிகள்..!!
நிலவுலகில் பிறந்த நாள் முதலாய்..
நிலாவுலகில் சஞ்சரிக்கிறது மனம்..
நாம் வாழுமிந்த நீலக்கோளத்தில் வறட்சி..!!??
நீரின்றி அமையாது உலகென்று
நன்மொழி பகன்றான் வள்ளுவன்..
நாமனைவரும் அதனை மறந்துவிட்டோம்..!!
நீலவானத்தினின்று பொழியும் மழைத்துளியை
நமக்குதவும்படி செய்யாது வீணில்
நீலக்கடலில் கலக்கச் செய்துவிடுகின்றோம்..!!
நிலாவுலக ஆராய்ச்சி ஒருபுறமிருப்பினும்
நமக்குதவும் மழைநீரையும் சேகரித்து
நிலவுலகையும் காக்க உறுதியேற்போம்..!!
நீர்த்துளிதான் நமதுலகின் உயிர்த்துளி
நல்லபடியிதைக் காப்பதே நம்கடமை
நினைவிற்கொள்வோம் இதை என்றும்..!!
படக்கவிதைப் போட்டி – 219
சித்தி கருணானந்தராஜா
1. நீரே!
2. முகிழ்த்த பேரண்டத்தில் முதன்முதலாய்த் தோன்றினாய்
3. உயிர்ப்பை விளைவிக்கும் ஊடகமாய் ஆனாய்
4. கங்கையாய் காவிரியாய் கடலாய்ப் பல் ஏரிகளாய்
5. எங்கும் பரந்தோடி இவ்வுலகை நிரப்பினாய்
6. அன்பைக் கலந்து அகிலத்தில் பல்லுயிர்கள்
7. தோன்றிச் சிறக்கத் துணையாக நிற்கின்றாய்
8. ஆனாலும்,
9. உன்றன் மகிமையுணராது மானிடரோ
10. வீணாக்கி விட்டுன்னை விழிபிதுங்கி நிற்கின்றார்.
11. காற்றைத் தடுத்துக் கழனிகளை நீ நிரப்ப
12. ஏற்ற மழைக்காடுகளை எந்தப் பொறுப்புமின்றி
13. வெட்டியழித்து விட்டு வீணாயுனையிழந்து
14. ஊரூராய் மாந்தர் உனக்காய் அழுகின்றார்.
15. ஓடுமுனைக் கடலின் உப்பிற் கலக்க விட்டு
16. வாடும் பயிர்களுக்கு வழியேதும் காணாது
17. ஏங்கும் மனிதர்களை என்னென்று சொல்லுவது?
18. அளவாய் அகிலம் பயனடைய ஆழத்தில்
19. உன்னை நீ காக்க ஓடி ஓழித்தாலும்
20. ஆழத்துளையிட்டுறிஞ்சி வெளியெடுத்து
21. அளவுக்கதிமாய் உனை விரயமாக்கிவிட்டு
22. பாலையாய் மண்ணைப் பாழாக்கும் மாந்தர்களின்
23. பாவச் செயலுக்குப் பழிகாணாதன்னவரின்
24. தேவைகளைத் தீர்ப்பாய் தெரிந்து.