பத்திகள்

சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3

-நிர்மலா ராகவன் 

UBUD

பாலியில் UBUD என்று ஒரு மலைப்பாங்கான இடம். கலைகளுக்கும், சத்துடன் சுவையும் நிறைந்த உணவு வகைகளுக்கும் பெயர்போனது. குறுகிய தெருக்களின் இருபுறமும் அடர்ந்த மரங்கள். வளைந்து செல்லும் மலைப்பாதைக்கு மேல் தனித்த குடில்கள். அமைதியை நாடுபவர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்த தங்குகிறார்கள். ஓர் இரவு தங்க சுமார் 2,000 ரூபாய்.

ஒவ்வொரு சிறு வீட்டைச் சுற்றிலும் அடர்ந்த செடிகொடிகள். ஒரு பக்கத்தில் குளம் வேறு! ஆனால், நிறைய கொசுக்கள் கிடையாது –பூச்சிகளை விரட்டியடிக்கும் மரங்கள் இருப்பதால்.

பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் மிகக் குறைந்த ஆடையணிந்து, அதனருகே போடப்பட்டிருந்த நீண்ட நாற்காலியில் மடித்த காலைப் பரத்திப் படுத்தபடி புத்தகம் படிக்கிறார்கள்.

நாம் fair and lovely-யை நாட, அவர்கள் நமது பழுப்பு நிறத்தை அடைய படாதபாடு படுகிறார்கள்! நம் தன்னம்பிக்கை வளர இவர்களைப் பார்த்தால் போதும். 

நிசப்தமான, குறுகலான தெருக்கள்

உள்நாட்டவர்களின் ஸ்கூட்டர் மற்றும் வாடகைக்கார்கள் விரையும் குறுகிய தெருக்களில் ஒருவர்கூட ஹார்னை ஒலித்து அமைதியைக் கெடுப்பதில்லை என்பது என்னை மிக ஆச்சரியப்படுத்திய சமாசாரம்.

எந்த நிலையிலும், பொறுமையைக் கைவிடாது நடந்துகொள்ள இவர்களால் எப்படி முடிகிறது?

“எல்லாரும் இவ்வளவு சாத்வீகமாக இருக்கிறீர்களே! கணவன் மனைவிக்குள் சண்டையே வராதா?” என்று தேவாவைக் கேட்டேவிட்டேன்.

அவர் சிரித்தார். “வராமல் என்ன!”

“விவாகரத்து வரை போகுமா?”

“அவ்வளவாகக் கிடையாது! அப்படிச் செய்தால், அவர்களுடைய இரு குடும்பத்தினருக்கும் தீராத அவமானம்”.

விவாகரத்து செய்துகொண்டால், குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்பதும் காரணமாக இருக்கலாம்.

 

வியாபார நோக்கு கிடையாது

UBUD-இல் பெரிய கட்டடங்கள் கட்ட அனுமதி கிடையாது. அது கிராமம் அல்ல. இயற்கை எழிலுக்கும் கலை, கலாசாரத்திற்கும் பெயர்போனது. அதைப்போய் நாகரீகமாக மாற்றிக் கெடுப்பானேன்!

பயணிகளின் வருகை அதிகமாகிவிட்டபோதும், அங்கு வாழ்பவர்கள் போலி மரியாதை காட்டாது, பண்புடன் நடந்துகொள்கிறார்கள்.

முதல்நாள், செங்குத்தான படிகளில் ஏற முடியாது நான் திணற, என் கையைப் பிடித்து மேலே அழைத்துப் போனாள் ஒரு பெண். அதன்பின், என்னால் குனிய முடியுமோ, முடியாதோ என்று `செருப்பைக் கழற்றுகிறேன்,’ என்று குனிய, `வேண்டாம், வேண்டாம்!’ என்று பதறிப் போனேன்.

பாலிவாழ் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு கிடையாது. மேலும், எல்லா வேலைகளும் கௌரவமானவையே என்று எண்ணி நடப்பதால், புன்சிரிப்புடன் நம்மை நடத்துகிறார்கள். அவர்களது சிரிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

`மனிதன்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

“சொர்க்கம்” என்று பாலியைக் குறிப்பிடுவது சரிதான்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க