பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் ?
சக்தி சக்திதாசன்
லண்டன்
ஐக்கிய இராச்சியம், வரும் ஐந்து வருட காலத்துக்கு தனது பயணத்தின் பாதையை நிர்ணயித்து விட்டது .
ஆமாம் வருகிறது! வருகிறது! என்று பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு வந்து எம்மைக் கடந்து சென்ற பின்பு அது போன பாதையைப் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்களத்தை ஆட்டிக்கொண்டிருந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்தேறி பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் கட்சி அமோகமான வெற்றியை ஈட்டியுள்ளது. 1986ம் ஆண்டுக்குப் பின்னால் கன்சர்வேடிவ் கட்சி பெற்ற அதி பெரும்பான்மை வாக்குகள் இதுவென்று சரித்திர ஏடுகள் கூறுகின்றன.
ஐக்கிய இராச்சிய அரசியல் சரித்திரத்தில் அழியாப் பெயர் பெற்ற “இரும்புப் பெண்மணி” எனும் பெயரெடுத்த மார்க்கிரட் தாட்சர் அவர்களின் வழியில் அடுத்தவோர் சரித்திரம் ஏற்படுத்தியவராகிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.
ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சியான லேபர் கட்சி 1930களின் பின்னால் கண்ட மாபெரும் தோல்வி இதுவாகிறது. ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இதுவரை கனவில் கூட வெற்றிபெறுவோம் என்று எண்ணாத லேபர் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட பல வட இங்கிலாந்துத் தொகுதிகளில் கன்சர்வேடிவ் கட்சி முதற்தடவையாக வெற்றியீட்டியுள்ளது. இத்தொகுதி மக்கள் தமது ஆதரவை எமக்கு இரவலாகவே தந்துள்ளனர். அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயல்களை நமது அரசு ஆற்ற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
லேபர் கட்சியின் இந்த படுதோல்விக்கு ப்ரெக்ஸிட் சம்பந்தமான அவர்களது தெளிவற்ற நிலை மட்டுமல்ல அவர்களது தலைவரான ஜெர்மி கோர்பனின் தீவிர சோஷலிச நிலைப்பாட்டையும், அடுக்கடுக்காக அவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின்மையும் காரணம் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
பொரிஸ் ஜான்சன் அவர்கள் அடுத்த பிரதமாராகும் வகையில் ஆட்சியமைக்கும் தகுதியை அவருக்கு அளிக்கும் வகையில் அவரது கட்சி வெற்றியடையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய போதிலும் இத்தகைய ஒரு அமோக வெற்றியை அடைவார்கள் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று.
கன்சர்வேடிவ் கட்சிக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி அவர்களால் ஈட்டப்பட்டதா? இல்லை எதிர்க்கட்சியான லேபர் கட்சியினால் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கொடையா? என்பதன் விடை இன்னும் அரசியல் அவதானிகளால் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஐக்கிய இராச்சியத்தை பிளவுபடுத்திக் கொண்டிருந்த ப்ரெக்ஸிட் எனும் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி இந்தத்தேர்தலினால் கிடைக்கப்போகிறதா? என்பதும் அதனால் நாட்டில் ஏற்பட்ட பிளவு நீங்கப் போகிறதா இல்லையா? என்பதும் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஒன்றுமட்டும் உறுதியாகி விட்டது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு நிச்சயம் நடைபெறத்தான் போகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்தல் வெற்றியை அடுத்து ப்ரெக்ஸிட் அடுத்த கட்ட நகர்வை நோக்கி ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றினார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். இவ்வுடன்படிக்கையின்படி வரும் ஜனவரி 31ம் திகதி ஐக்கிய இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகி விட்டது. அதைத் தொடர்ந்து 2020 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இந்த காலத்தினுள் வர்த்தக உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் ஐக்கிய இராச்சியம் எதுவித வர்த்தக உடன்படிக்கையுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலையேற்படும். இது ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வேன் என்று பொரிஸ் ஜான்சன் உறுதியுடன் கூறியிருக்கிறார்.
இதுவரை எந்த ஒரு நாடும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருவருட கால அவகாசத்தில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதாக வரலாறு இல்லை, உதாரணமாக கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்படிக்கையை எட்ட சுமார் ஏழு வருட காலம் எடுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பிரதமர் ஒருவருட காலத்தில் ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சியினரும் , ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களும் அடித்துக் கூறுகிறார்கள். 2020 வருட இறுதியில் ஐக்கிய இராச்சியம் உடன்படிக்கையின்றி வெளியேறப் போகிறது, பொருளாதாரச் சரிவைச் சந்திக்கப் போகிறது எனும் எச்சரிக்கையை இவர்கள் விடுக்கிறார்கள்.
பிரதமர் பொரிஸ் ஜான்சனின் இந்த மாபெரும் வெற்றி அவர் தன்னிச்சையாக நடக்க ஏதுவாகப் போகிறது என்பதும் அவருக்கு எதிரானவர்களின் கருத்தாக இருக்கிறது. முதலாளித்துவம் , வலதுசாரக் கொள்கைகள் எனபவற்றின் அதிதீவிரப் போக்கினை இவரது அரசு கடைப்பிடிக்கப் போகிறது என்பதும் சிலரது கருத்தாக இருக்கிறது. இன்றைய ஐக்கிய இராச்சியத்தில் இனப்பிரிவினை தலைதூக்கியுள்ளது போன்ற ஒரு தன்மையைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை முக்கிய காரணியாக எடுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இத்தகைய ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது. இனப்பிரிவினை, இனப்பாகுபாடு என்பன பற்றிய கருத்துக்களை வெளிப்படையாக விவாதிப்பது தம்மை ஒரு இனத்துவேஷியாகக் காண்பித்து விடும் எனும் காரணத்தினால் இவ்விவாதங்கள் பொதுத்தளங்களில் விவாதிக்கப்படாமலிருந்தது. பல முன்னனித் தலைவர்கள் இன்றைய ஐக்கிய இராச்சிய பிரதமர் உட்பட இப்பிரச்சனைகள், மற்றும் வெளிநாட்டவர் பற்றிய குறிப்புகளை வெளிப்படையாக தெரிவித்தது இத்தகைய விவாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே எனும் ஒரு நிலையை நாட்டில் ஏற்படுத்தியது. விளைவாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை விவாதிக்கிறோம் எனும் போர்வையில் இனத்துவேஷத்தை வளர்ப்பதைக் ,குறியாகக் கொண்ட இனத்துவேஷிகளுக்கு வெளிநாட்டவரைத் தாக்குவதற்கு அனுமதி அளித்தது என்பதும் ஓரளவுக்கு உண்மையே !
ஐக்கிய இராச்சியத்தின் அரச அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டுள்ள பொரிஸ் ஜான்சன் அவர்களின் முன்னால் இருக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமானவைகளாகும்.
- ப்ரெக்ஸிட் முதல் கட்ட நகர்வையடுத்து அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய தேவை
- ப்ரெக்ஸிட் நிகழ்வினால் பிளவுபட்டிருக்கும் நாட்டினை ஒன்றுபடுத்துவது
- என்றுமே எண்ணிப்பார்க்க முடியாத தொகுதிகளில் முதற் தடவையாக வெற்றியீட்டியதன் மூலம் தமது ஆதரவையும் நம்பிக்கையையும் நல்கிய எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் ஆதரவை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவது.
ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வு டிசம்பர் 25 வரும் கிறீஸ்துமஸ் பண்டிகையும், அதைத் தொடர்ந்து வரும் புதுவருடக் கொண்டாட்டமுமே . இம்முறை மக்களுக்கு கிறீஸ்துமஸ் பரிசாகவும், புதுவருடப் பரிசாகவும் ப்ரெக்ஸிட்டை அளிக்கிறார் நம்ப பிரதமர். அவரது இந்த அமோகமான பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றம் என்ன வழியில் நாட்டை கொண்டு செல்லப் போகிறது என்பதையும், பிரதமர் பொரிஸ் ஜான்சனின் உண்மையான அரசியல் அடையாளத்தையும் இனிவரும் காலங்களில் காணப்போகிறோம் என்பதுவே உண்மை.
இது ஒரு பரிசா? இல்லை தண்டனையா ? என்பதை அடுத்த கிறீஸ்துமஸ் காட்டி விடுமா?