அரங்க பவன் – ஷைலஜா
நீண்ட நாளாய் ஓர் ஆசை. சொன்னால் சிரிப்பீர்கள். அதனாலேயே மனைவி, மகனிடமும் ’தெற்கு வாசல்’ வரை போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்து விட்டேன். ஏனென்றால் நீங்களெல்லாம் என் ஆசை என்னவென்று கூறிச் சிரித்துவிட்டுப் போய் விடுவீர்கள். ஆனால், என் மனைவி ஆனந்தியும் மகன் பரத்தும் மானம் போய்விட்ட மாதிரி கூச்சல் போடுவார்கள்.
“உங்கப்பாக்கு ரிடையர் ஆனதும் புத்தி கெட்டுப் போயிடுத்துடா பரத்! ஊர் சுத்திப் பாக்க வந்த இடத்தில் இவர் ஆசையைப் பாரேன். கர்மம், கர்மம்!’’ என்று கண்டிப்பாய் தன் ’டை’ அடித்த தலையில் ஓங்கி கையை வைத்து அடித்துக்கொள்வாள்.
பரத், “டாட்! இட்ஸ் டூ மச். ஒரு ஸாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவியில இருக்கற எனக்கு, அப்பாவா லட்சணமா நடந்துக்குங்க, ப்ளீஸ்’ என்று அதட்டலுடன் கெஞ்சுவான்.
சாதாரணமாய் நான் பொய் சொல்பவனல்லன். இந்த ஐம்பத்து ஒன்பதாவது வயதில் இன்றைக்குத்தான் மனைவி, மகனிடம் ’பொய்’ சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டேன். என்ன செய்வது? சில நேரங்களில் ’உண்மை’யை ஒதுக்கத்தான் வேண்டியிருக்கிறது, சில நன்மைகளின் பொருட்டு.
மாம்பலத்திற்கு ரங்கநாதன் தெரு போல ஸ்ரீரங்கத்திற்கு தெற்கு வாசல், ஏறக்குறைய நூறு கடைகள் இருக்கலாம். நீண்ட தெரு. ராஜ கோபுரத்தின் வாயிலில் ஆரம்பமாகி, இடையில் இரண்டு நான்கு கால்மண்டபங்கள் இரண்டு கோபுரங்கள் என்று பெரிய கோயில் வாசலோடு தெரு முடிவடைந்துவிடும். அரை கிலோ மீட்டர் தான் மொத்தத் தெருவுமே. இதற்குத் ’தெற்கு வாசல்’ என்று பெயர். ஐம்பது வருஷம் முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
சில கடைகள் மட்டுமே காலத்திற்கு ஏற்ற மாதிரி சற்றுக் கோலம் மாறி நாகரிகமாய்க் காட்சியளிக்கின்றன. மொட்டை கோபுரம், ராசக் கோபுரமானதும் ஊருக்கே மவுசு அதிகமாகித்தான்விட்டது. முன்பு ஜனத்திரள் இத்தனை இல்லை. தெற்கு வாசலில் கையை வீசிக்கொண்டு காலாற நடக்கலாம். சைக்கிள் ரிக்ஷாக்கள்தாம் இடித்துக்கொண்டு போகிற மாதிரி வரும். இப்போது நிறைய ஆட்டோக்களும் சொற்பக் கார்களும் வலம் வருகின்றன.
’சுந்தரா லஞ்சு ஹோம்’ என்ற ஹோட்டல் கோபுரத்தடியில் அந்த நாளில் புகழ் பெற்றது. நானும் பட்டாபியும் காலை நேரத்தில் இங்கு வந்து ஒரு காபி குடிக்காமல் போனதில்லை. இப்போதும் ஹோட்டல் அப்படியேதான் இருக்கிறது, பெயர் மட்டும் மாறிவிட்டது. வாசலில் பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள்.
’இட்லி, பொங்கல் – கொத்சு, பூரி – கிழங்கு டிபன் ரெடி!’
கொட்டை கொட்டையாய் சாக்பீஸினால் எழுதப்பட்ட எழுத்துகளே சாப்பிட்டு விட்டுப் போயேன் என்று சொல்கிற மாதிரி இருந்தது. எனக்கும் காலை நேரப் பசி வேளைதான். ஆனால், என் ஆசையை அல்லது பசியைத் தீர்த்துக்கொள்ள நான் சொல்ல வேண்டிய இடம் இதுவல்லவே?
சாலை நடுவே நாலுகால் மண்டபம் வருகிறது. அதன் மேல் சின்னதாய் கோபுரம். ஸ்ரீரங்கத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோபுரம். கால் தடுக்கிற பக்கமெல்லாம் வாய்க்கால்கள். ஆனால், வாய்க்கால்களெல்லாம் வறண்டு கிடப்பது தான் வேதனையாயிருக்கிறது.
காவிரியில் கூட நீரைக் காணோம். டவுனிலிருந்து பேருந்தில் வருகிற போது பாலத்தடியில் நூலாய் ஓடிக் கொண்டிருந்தது நீர். அதிலும் நாலு பேர் குளித்து, துணி துவைத்துக்கொண்டிருந்தார்கள்.
கல்லூரி நாள்களில் ஸ்ரீரங்கத்திலிருந்து டவுனுக்குப் பயணிகள் ரயிலில் வரும்போது ஆடி மாதம் பெருக்கெடுத்தோடும் காவிரியாற்றில், ரயில் பெட்டியிலிருந்து ஒரு முறை தாவிக் குவித்த அனுபவத்தை நினைத்துக்கொள்கிறேன். என் வீர தீர சாகசத்தை பெண்கள் பெட்டி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரசித்ததாய் பின்னர் ஜலஜா சொன்னபோது உச்சி குளிர்ந்து போயிற்று.
ஜலஜா இப்போது எங்கிருக்கிறாளோ? பேரன், பேத்தி எல்லாம் எடுத்திருப்பாள். அந்த நாளில் அவளிடம் ஓர் ஈர்ப்பு இருந்தது வாஸ்தவம். அவளுக்கும் இருந்தது என்பதை அந்த ஓரக்கண் பார்வையும் வெட்கச் சிரிப்பும் தெரிவித்திருக்கின்றன. ஒரே ஊர், ஒரே தெருவாக இருந்தாலும் அந்த நாளில் எல்லாம் வயதுப் பையன்கள், வயசுப் பெண்களிடம் லேசில் பேசி விட முடியாது. கதை கட்டி விடுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி கூட்ட நெரிசலில் கோயிலில் என் அருகிலேயே வந்து நிற்க வேண்டி வந்த போது, ஜலஜா மெல்ல என் கை விரல்களை அழுத்தி, “ரங்காச்சு உனக்கு இந்த ஸ்கை ப்ளூ ஷர்ட் நன்னாருக்குடா’’ என்ற போது அந்தக் கணமே அவளை எங்காவது கடத்திக்கொண்டு போகலாம் போல இருந்தது. இப்போதைய நாள்கள் மாதிரி செல்போனா… ஒன்றா, அப்போதெல்லாம் காதல் நெஞ்சங்கள் மனம் விட்டுப் பேசிக்கொள்ள?
இதுபோல எத்தனையோ காதல் விதைகள் உள்ளே பூமியோடேயே அழுந்திப் போனதுண்டு! விருட்சமானவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால், தெற்கு வாசல் தெருவில் எங்காவது நரைத்த தலையும், தடித்த மூக்குக் கண்ணாடியுமாய் இடுப்பு பெருத்த ஜலஜா சிக்கமாட்டாளா என்று பார்வை அலைவதைத் தடுக்க முடியவில்லை. என்னை மாதிரி அவளும் ஊர் ஞாபகத்தில் இங்கு வரக்கூடாதா என்ன?
முப்பது வருஷமாச்சு, ஊரை விட்டு வெளியே போய், முதலில் டெல்லி, பிறகு மும்பை, கடைசியில் இப்போது பெங்களூர் வாசம். ஆனந்தியின் ஆணைப்படி ரிடையர் ஆன பணத்தில் பெங்களூரு வி.டி.எம். லே-அவுட்டில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் வாங்கி குடி போயாகிவிட்டது.
பரத்திற்கு மகாத்மா காந்தி சாலையில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணி. பெங்களூரு டிராபிக் ஜாமில் தன் கார் அடிக்கடி மாட்டிக்கொள்வதாக பரத் அன்றாடம் வந்து புலம்புவான். இப்போது சேர்ந்தாற்போல் நாலு நாள் லீவு கிடைக்கவும் ஆனந்தியின் அரை மனச் சம்மதத்திற்குப் பிறகு திருச்சி டூர் போடப்பட்டது. இன்று விடியற்காலை டவுனில் இறங்கி, பிரபல ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்தாயிற்று.
ஏழு மணிக்கெல்லாம் நான் டவுனில் ஒன்றாம் எண் பேருந்தைப் பிடித்து ஸ்ரீரங்கத்துக்கு வந்துவிட்டேன்.
இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் ஆசைப்பட்ட இடத்திற்குப் போய்விடலாம். அதற்குள் பழைய நண்பர்கள் கிச்சு, ரங்கமணி, பட்டாபி, வேணு என்று யாராவது ஒருவராவது கிடைக்க மாட்டார்களா என மனம் ஏங்கியது. முப்பது வருஷத்தில் அவர்கள் எத்தனை முறை ஸ்ரீரங்கம் வந்தார்களோ, நான்தான் பல முறைகள் இங்கு வர முயன்றும் தட்டிப் போய்விட்டது.
முதலில் கோயில் போய் ரங்க தரிசனம் முடித்து வரலாமா? அதற்குள் நான் போக வேண்டிய இடத்தில் பூட்டுப் போட்டுவிட்டால்…?
பெருமாள் ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டார். அவரிடம் என் ஆசை நினைவுகளோடு போய் அசிங்கமாய் நிற்பதைவிட, அதைத் தீர்த்துக்கொண்டு செல்வதே உத்தமம்.
பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள், இனிப்புக் கடைகள், ஜவுளிக் கடைகளைக் கடந்து, பாதாள கிருஷ்ணன் கோயிலையும் தாண்டி வலப்புறமாயிருக்கிற அந்த இடத்திற்கு வந்தேன்.
நல்லவேளை அந்த இடம் மாறவில்லை. தெற்கு வாசலின் பரபரப்பான சூழ்நிலையில் அமைதியான அந்த இடம் ரொம்பப் பெரியதில்லை; சிறு வீடு போலத்தான் இருக்கும்.
வாசலில் சோகையாய் ஒரு சோணிப் பலகை. அதில் ’அரங்க பவன்’ என்று எழுதியிருக்கும். உற்றுப் பார்த்தாலே தவிர, அந்தப் பெயர்ப் பலகை பலர் பார்வைக்குத் தெரிய வராது.
இப்போதும் அதே பலகைதான். இன்னமும் மரம் உளுத்துப் போய் எந்நேரமும் உடைந்து விழத் தயாராய் இருக்கிறது. அழுக்குத் தரையில் மிதியடியாக ஒரு கோணிப்பை.
செருப்பைக் கழற்றிவிட்டு பாதம் தட்டி உள்ளே நுழைந்தால் வராண்டாவில் சிறு மேஜையும் நாற்காலியும், மேஜையின் இழுப்பறைதான் கல்லாப்பெட்டி. இப்போதும் அதை மேஜை, அதே நாற்காலி! மேஜை மீது கண்ணாடிச் சட்டத்திற்குள் ரத்ன அங்கியில் ரங்கநாதர். ஊதுபத்திப் புகை, பருவப் பெண்ணாய் நெளிந்து போய்க் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியைத் திறந்தபடி நாற்காலியில்…
நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரைக் கண்டதும் என் விழிகள் திகைப்பில் விரிந்தன.
வாய் குதூகலமாய் கூச்சலிட்டது… “பாண்டு மாமா!’’
நரைத்த தாடியை நீவிவிட்டபடி கண்ணை இடுக்கிக்கொண்டு நிமிர்ந்தார் பாண்டுரங்கன். அந்த அரங்க பவன் ஹோட்டலின் உரிமையாளர். இப்போது பாண்டு மாமாவுக்கு எழுபது வயதிருக்குமா? இருக்கும்… இருக்கும். என்னை நினைவிருக்கிறதோ, இல்லையோ?
“மாமா! நான்தான் ரங்காச்சூ! வடக்குச் சித்திரை வீதி ஆராவமுதன் பையன். சின்ன வயசிலேந்து என் இருபத்தி ஒன்பதாவது வயசு வரை தினம் உங்க ஹோட்டலில்தான் ரவா தோசை சாப்பிட வருவேன். உங்காத்து மாமிகூட என்னை ’ரவா தோசை ரங்காச்சு’ன்னு செல்லமாக் கூப்பிடுவாளே…?’’
“அப்படியா! நேக்கு நெனவில்லை. யாராரோ வரா…. போறா… வயசு வேற ஆறது…. ஒண்ணும் நெனவுல இருக்கறதில்ல…’’
“முப்பது வருஷம் கழிச்சு உங்க ஹோட்டல் ரவா தொசையை சாப்பிட வந்திருக்கேன், மாமா!’’
“ஓஹோ?’’
பாண்டு மாமாவின் சுபாவம் இதுதான். ’வந்தா வா, போனாப் போ’தான். மாமா மாறவே இல்லை.
ஹோட்டலுக்குள் போனேன். ஒரே இருட்டுக் கூடம். அதே இருபத்தி ஐந்து வாட்ஸ் பல்புதான். இன்றைக்கும். ஒரு ட்யூப் லைட் போட மாட்டாரோ? அந்தச் சின்னக் கூடத்தில் முன்பு இருந்த மாதிரி அதே ஆஸ்பத்திரி பெஞ்சும், அதையொட்டிய நீள மர மேஜையும்.
கூடத்தைத் தாண்டினால் சமையற்கட்டு. முன்பு அங்கு ஒரே புகை மண்டலமாய்த் தெரியும். இப்போது அது இல்லை. காஸ் அடுப்பு வைத்துக்கொண்டு விட்டார்கள் போலும்.
நல்ல வேளை, இல்லாவிட்டால் புகையில் மாமிதான் வெந்து நொந்து போயிருப்பாள்.
ஆமாம், எங்கே மாமியைக் காணோம் என நினைக்கும்போதே ’லொக் லொக்’ என்ற இருமல் சப்தம் கேட்டது.
மடிசார் புடவையுடன் மாமி எதிரே வந்துவிட்டாள்.
“மா… மாமீ? நான் ரங்காச்சு வந்திருக்கேன். ரவா தோசை ரங்காச்சுன்னு சொல்வேளே… ஞாயகமிருக்கா?’’ என்றேன் ஆர்வமாய்.
மாமி தனது தேசல் உடம்பை லேசாய் நிமிர்த்தி சின்ன சிரிப்புடன், “வாப்பா… ஊரையே மறந்து போய்ட்டியா, இப்பதான் வரே… நன்னாயிருக்கியா?’’ என்று கேட்டாள்.
“உங்க ஆசீர்வாதம் மாமி ஷேமமா இருக்கேன். நீங்க எப்படி இருக்கேள்? உங்க பொண்ணு செஞ்சி லட்சுமிக்கு கல்யாணம் ஆக அவ இப்ப பாட்டி ஆகியிருப்பாளே? சின்னவ லட்சுமிக்கு கல்யாணம் ஆகி அவ இப்ப பாட்டி ஆகியிருப்பாளே? சின்னவ ஸ்ரீவரமங்கை எங்கே இருக்கா? உங்க கடைசிப் பையன் தேசிகன் எங்கே வேலை பார்க்கறான்?’’
அடுக்கடுக்காய் நான் கேட்ட கேள்விகளுக்கு மௌனமே பதிலாக வந்தது.
“மா… மீ?’’
“ஒண்ணும் சொல்றாப்படி இல்லே ரங்காச்சு. மாமா பிடிவாதம் அப்படியே இருக்கு. அவர் மாறினாத்தான் எங்க வாழ்க்கை மாறும். ஸ்ரீரங்கத்துல இப்போ இந்த இடம் கொள்ளை விலை போகும். இதை வித்திருந்தா செஞ்சிய யாருக்காவது ரெண்டாம் தாரமா கொடுத்திருக்கலாம். ஸ்ரீவரமங்கையை ஒரு டிகிரி படிக்க வச்சு நல்ல உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்லாம். தேசிக்கு என்ஜினீயரிங் படிப்புக்கு உதவியிருக்கலாம். ஒண்ணும் பண்ணல. அதனால எல்லாரும் அப்படியே இருக்கோம்’’ என்று மாமி விரக்தியாய் முடித்த போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“ஸாருக்கு என்ன வேணும்? பொங்கல், இட்லி, ரவா, தோசை?’’ கேட்டபடி மடித்துக் கட்டிய வேட்டியும், மார்பில் காசித் துண்டுமாய் வந்த இளைஞனிடம்…
“தேசீ! ரவா தோசை இரண்டு மொறு மொறுன்னு வார்த்துடுடா… ரங்காச்சு அதுக்குத்தான் நம்ம ஹோட்டலுக்கு வந்திருக்கான்… தப்பு தப்பு…. வந்திருக்கார்… நான் அசடு மாதிரி அன்னித்து ரங்காச்சு மாதிரியே பேசறேன்’’ என்று கைகளைப் பிசைந்தாள் மாமி.
“மாமி! நான் என்னிக்கும் ஒரே ரங்காச்சுதான் மாமி இல்லேன்னா டவுன்லேந்து இங்கே ஓடி வருவேனா, உங்க கையால ரவா தோசை சாப்பிட?’’
வாழை இலை விரித்து; தோசை போடப்பட்டது. தொட்டுக்கொள்ள கெட்டிச் சட்னி. கடப்பா.
இரண்டு தோசை சாப்பிட்டதும் வயிறு நிரம்பிவிட்டது.
“பொங்கல், இட்லி சாப்பிடலயா?’’
“வேண்டாம் மாமி…. ரொம்பிடுத்து வயிறு…’’
“காப்பி?’’
“சரி.. அரை லோட்டா சாப்பிடறேன். இப்பல்லாம் அதிகம் காபி சாப்பிடறதேயில்லை. அதான்…’’
எல்லாம் சேர்த்து பில் ஏழு ரூபாய் வந்தது.
“ஏழு ரூபாயா? ஏழே ரூபாயா மாமி? தப்பா கொடுத்துட்டேளா?’’
“இல்லையே… ஒரு தோசை மூணு ரூபா. காபி ஒரு ரூபா.’’
“இந்தக் காலத்திலும் இப்படியா வியாபாரம் இங்கே? ஸ்டார் ஹோட்டல்ல இது எழுபது ரூபா மாமி!’’
“இது அதே சாதா ஹோட்டல் தானப்பா. நாங்களும் அதே சாதாரண மனுஷாள்..’’
“மாமி சாதாரணமாயிருப்பது சாமான்யக் காரியமில்லை. ஊர் உலகம் மாறினாலும் மாறாத உங்க கொள்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே. என் ஆசையும் பூர்த்தியாச்சு. நான் வரட்டுமா?’’
கையலம்பி விட்டு, பாண்டு மாமாவின் கல்லாப் பெட்டிக்கு வந்து பில்லோடு ஐந்நூறு ரூபாய் நோட்டை வைத்தேன்.
மாமா நோட்டை முகத்துக்கு நேராய் விரலால் தட்டிப் பார்த்துவிட்டு, “ஐந்நூறு ரூபா நோட்டா? சில்லறை இல்லே… சில்லறையா கொடு’’ என்றார்.
“இல்ல மாமா சில்லறை. எல்லாமே ஐந்நூறு ரூபாய் நோட்டா இருக்கே…’’ – பர்ஸைப் பிரித்தபடி சொன்னேன்.
“எனக்குத் தெரியாது. சில்லறையாத் தந்துட்டு வெளில போ…’’ அழுத்தமாய் பாண்டு மாமா சொல்லவும், உள்ளிருந்து மாமி, “ஏழு ரூபா தானே? விடுங்கோ. நம்ம ஊர்ப் பையன்’’ என்றாள், தயங்கிய குரலில்.
“எந்த ஊர்ப் பையனா இருந்தா எனக்கென்னடி? ஏழு ரூபாயை வச்சுட்டு அந்தண்டை போகச் சொல்லு.’’
நான் சட்டென, “மாமா! ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை மீதம் இல்லேன்னா பரவால்ல.. நீங்களே வச்சுக்கோங்க…’’ என்றேன், இந்த சாக்கில் அவர் குடும்பத்திற்கு உதவலாமென நினைத்து.
அவ்வளவுதான் பாண்டு மாமா ஓர் உஷ்ணப் பார்வையுடன் நோட்டை வீசி என் மீது எறிந்துவிட்டு…“உள்ளே மாமி புலம்பினாளாக்கும்? உதவ வந்துட்டியா இப்போ? ஒண்ணும் தேவையில்லே. ஏழு ரூபாயைக் கொண்டு வச்சிட்டுப் போய்ச் சேரு…’’ என்றார் உரத்த குரலில்.
“சரி மாமா… பக்கத்துக் கடைல மாத்திண்டு வந்து தரேன்…’’ என்று வெளியே வருகிறேன்.
’சுள்’ என்று வெயில் முகத்தில் அடிக்கிறது.
நிமிர்த்து வானத்தைப் பார்த்த போது சூரிய திசையில் பாண்டுரங்க மாமா தெரிந்தார்
good story!
அக்கா, ஒவ்வொரு வரியும் அழகு… உண்மையிலேயே கடைசி பத்து வரிகள் கதைக்கு வலிமை மட்டுமல்ல, என் மனதில் வலியையும் தந்து சென்றது.
nice story madam, ungakitta naanga yellam kathukka vendiyathu innum neraiyaa irukku!!! congrats madam.
அக்கா, பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்க வைத்த அருமையான கதை.
நன்றி
நல்ல ஒரு சிறுகதை. கவித்துவமாய் அமைந்திருக்கின்றது இச்சிறுகதை. வாழ்த்துகள் ஷைலஜாக்கா !
super