மூவர் வாழ்க!

ஏறன் சிவா 

தன்நாட்டின் எல்லைக்குள் தொழில்கள் செய்யத்
தரையிரங்கி வந்தவர்கள்; இங்கி ருக்கும்
பொன்வளத்தைக் கண்டுமனப் பேரா சையால்
போர்செய்து; தந்திரங்கள் பலவுஞ் செய்து;
மண்பிடித்தார்! மக்களினை அடிமை செய்து
மலைவளங்கள் தொடங்கி,கடல் வளத்தை யெல்லாம்
அன்னியர்கள் சுரண்டுகின்ற அவலங் கண்டே
அகங்கொதித்தார் எரிமலைபோல் அங்கே மூவர்!

அயலானை விரட்டுதற்கு அமைதிப் போரா?
ஆகாது அகிம்சையின் பாதை என்று
புயமுயர்த்தி, தோளுயர்த்தி, குரலு யர்த்தி
போர்செய்யப் புறப்பட்டார் அந்த மூவர்!
புயலொன்று குடிசைக்குள் புகுந்தாற் போல
புகுந்தார்கள் அன்னியர்தம் கோட்டைக் குள்ளே!
பயமின்றி, சிறுதுளியும் தயக்க மின்றி
பற்றவைத்தார் விடுதலையின் ஒளியைக் கண்டார்!

சுகதேவும், இராசகுரு, பகத்து சிங்கும்
சுண்டிவிட்ட அந்நெருப்பு சுற்றி யுள்ள
திக்கெல்லாம் பரவியது! அன்னி யர்;அத்
தீயணைக்க மூவருடைத் தலையைக் கேட்டார்!
மக்களுக்கே உழைத்ததனால் மூவ ரையும்
மாட்டினார்கள் தூக்கினிலே! உலகில் என்றும்;
எக்காலும் புரட்சியாளர் சிந்த னைகள்
இறக்காது! இறக்காது! வாழ்க மூவர்!

(மார்ச்சு 23, 1931 அன்று விடுதலைப் போராட்ட வீரர்கள் சுகதேவ், இராஜகுரு, பகத் சிங் மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள்)

About ஏறன் சிவா

கவிஞர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க