குறளின் கதிர்களாய்…(303)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(303)
தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாள்தந்த
துண்ணலி னூங்கிய தில்.
– திருக்குறள் – 1065 (இரவச்சம்)
புதுக் கவிதையில்...
இரக்காமல்
முயற்சியுடன் உழைத்து
அதன் மூலம்
உண்ணக் கிடைத்தது,
தெளிந்த நீர்போல் சமைத்த
கூழே ஆனாலும்,
அதனை
மகிழ்வுடன் உண்பதைவிட
இனிமையானது
வேறெதுவுமில்லை…!
குறும்பாவில்...
முயற்சியுடன் உழைப்பின் மூலம்
உண்ணக் கிடைத்த எளிய நீராகாரத்தை
உண்பதைவிட இனியது வேறில்லை…!
மரபுக் கவிதையில்...
பிறரிடம் கையது ஏந்திடாமல்
பிழைத்திட உழைப்பதன் மூலமாகச்
சிறிதள வாகக் கிடைத்ததிலே
சிறப்பாய்ச் சமைத்த நீர்க்கஞ்சி
குறைவாய் உண்ணக் கிடைத்தாலும்
குடிக்கு மந்தக் கூழதிலே
நிறைவாக் கிடைக்கும் இன்பமதன்
நிகராய் நிலமதில் வேறிலையே…!
லிமரைக்கூ..
முயன்றே யுழைத்துமுன் னேறு,
அவ்வழி உண்ணக்கிடைத்த நீர்க்கஞ்சிக்கு
நிகராய் இனியதானதில்லை வேறு…!
கிராமிய பாணியில்...
பயம்வேணும் பயம்வேணும்
எரந்து உண்ணப் பயம்வேணும்,
இருக்கத உண்ணப் பழகோணும்..
அடுத்தவங்கிட்டக் கையேந்தாம
மொயற்சிசெய்து ஒழச்சி
அது மூலமா
சாப்புடக் கெடச்ச
தெளிஞ்ச நீர்போலச் சமச்ச
கூழப்போல இனிப்பானது
ஓலகத்தில
வேற எதுவுமில்ல..
அதால
பயம்வேணும் பயம்வேணும்
எரந்து உண்ணப் பயம்வேணும்,
இருக்கத உண்ணப் பழகோணும்…!