சேக்கிழார் பாடல் நயம் – 98 (மங்கலம்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்றது என்கொலோ? என்று கூற
‘’உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகமநூல் மண்மேல்
எங்கும் இல்லாத தொன்று கொடுவந்தே னியம்ப ‘’ என்றான்.
பொருள்
“மங்கலம்பெருக மற்றும் எனது வாழ்வேவந்து அணைந்தது என்னும்படி இங்குத் தேவரீர் எழுந்தருளும் பேறு வாய்க்கப்பெற்ற தென்கொல்?“ என்று சொல்ல, “உங்கள் நாயகராகிய இறைவனார் முன் சொல்லிய ஆகமநூல் இம்மண்ணுலகத்தின் மேலே எங்கும் இல்லாததாகிய ஒன்று உமக்கு இயம்புதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன்“ என்று (முத்தநாதன்) சொன்னான்.
விளக்கம்
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது – மங்கலம் பெருக – இஃது மங்கல வழக்காகப் பின்நிகழ்ச்சிக் குறிப்பாய்ப் பிறிதொரு அமங்கலப் பொருள் தொனிப்பது காண்க. வாழ்வு வந்து – வாழ்வே ஓர் உருப்பெற்று என் முயற்சியின்றித் தானே வந்தது, வாழ்வுக்கு இறுதி எல்லையாகவந்து என்ற குறிப்புமாம்.
அருளப் பெற்றதென் கொலோ? – தேவரீர் இதுபோழ்திலே இங்கு வந்த காரியம் யாது? என்ற சொன்னயமும், அடியார்பால் வணங்கி வினாவும் மரபும் காண்க.
உங்கள் நாயகனார் – இங்கு உங்கள் என்பது மிக்க உரிமைப்பாடு குறிப்பதோர் வழக்கு. “இசையாழ் உங்க ளிறைவருக்கிங் கியற்றும்“ (திருஞான – புரா – 134); “அப்பர்! உங்கள் தம்பிரானாரைநீர் பாடீரென்ன“ (திருநா – புரா – 186)
என்றஇடங்களில் தமக்கு உரிமையுள்ள தோணியப்பரை, ஆளுடைய பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும், திருநாவுக்கரசு நாயனா ருக்கும் தம்மிலும் உரிமையுடையராக்கி உரைத்த சொல்லாட்சிகள் காண்க. உலக வழக்கிலேயும் பெண்கள் தமக்குரிய நாயகனைப்பற்றிப் பேசும்போது முன்னிற்பாருக்கு அவனது மிக்க உரிமை புலப்படுமாறு உங்கள் அண்ணன்; மைத்துனர்; என்று குறிக்கும் வழக்கும் காண்க. ஆயின் இங்கு முத்தநாதன் அந்நாயகனார்க்குத் தொடர்பில்லாமற் புறம்பாயினவன் என்று குறிப்புத் தருதலுங் காண்க.
முன்னம் – சிருட்டியாரம்பத்திலே, ஆகம நூல் – ஆகமம். (1)உயிர்களின் பாசம் போக்கி வீடு தருவது, (2) பதிபசுபாச இயல் தெரித்து உண்மை உணர்த்துவது என இருவகையிலும் இதற்குப் பொருள் கூறுவர்.
மண்மேல் எங்குமில்லாதது – இவன் ஏந்திய படையாகிய நூல் உண்மையில் மண்மேலன்றி, விண், பாதலங்களிலும் எங்கும் இல்லாததொன்றேயாம். அப்படையினை ஆக்கிய இரும்பு என்னும் உலோகமும் மண்ணினுள் இருப்பதன்றி மண்மேல் உள்ள தன்று என்பதுமாம். மண்மேல் ஒருவரும் இதுவரை அறியாதது என்றலுமாம்.
இயம்பக் கொடுவந்தேன் – என்று மாற்றுக. இவ்வாறன்றிச் சொன்மாறிக் கூறுதல் அவனது உள்ளக்கரவினால் உளதாகிய தடுமாற்றங் குறித்தது. இதனால் உறுதி பயக்கும் ஞானங்கள் காலமிடம் கருதாது எக்காலத்தும் எவ்விடத்தும் கேட்கத்தக்கன என்ற விதியினை அவன் குறித்து உரைத்தான் என்பர்.