Category: சமயம்

  • மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

    மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    மன்னவன் பாண்டியன் மாபெரும் மண்டபம்
    விண்ணவர் வியக்கவே மண்ணகம் மிளிர்ந்தது

    பாண்டியன் அவையினைப் பார்ப்பவர் வியந்தனர்
    பசுந்தமிழ் புலவர்கள் பாங்குடன் நின்றனர்
    ஆக்கிய பாடலை அவையேந்தி வந்தனர்
    அதற்குரை பகர்ந்தனர் அனைவரும் மகிழ்ந்தனர்

    பண்ணொடு பாடினார் பலவுரை பகர்ந்தனர்
    மன்னவன் வதனமோ மலர்ந்துமே நின்றது
    எண்ணிலா பொருள்களை மன்னவன் ஈந்தனன்
    பாடிய புலவர்கள் பரவசம் எய்தினார்

    கற்றவர் பலரையும் பாண்டியன் அணைத்தான்
    கடவுளை நம்பினான் கண்ணியங் காத்தான்
    மற்றவர் துயருறா வழியிலே நடந்தான்
    வாழ்விலே அறத்தை மாண்புடன் காத்தான்

    நல்லமைச்சர் நாளும் நற்றுணையே என்று
    வல்லவரை நாடி நல்லசபை அமைத்தான்
    முதலமைச்சர் நாட்டின் முதுகெலும்பாய் அமைய
    வாதவூர் வந்தாரை மனங்கொண்டான் மன்னன்

    வாதவூர் பிறந்தாரை மன்னவன் மதித்து
    தென்னவன் பிரம்மராயன் பட்டத்தைக் கொடுத்தான்
    பற்றற்ற மனத்துடனே பதவியிலே அமர்ந்தார்
    பாண்டிய நாட்டின் கண்ணியம் காத்தார்

    பாண்டிய மன்னன் குதிரைப் படையினை
    பெருக்கிட மனத்திலே விருப்பங் கொண்டான்
    திருப் பெருந்துறையிலே சிறந்த குதிரைகள்
    இருப்பதாய் அறிந்தான் வாங்கிட விரும்பினான்

    அமைச்சர்க்கு அமைச்சரை அழைத்தான் அரசன்
    அள்ளிக் கொடுத்தான் பொன்னும் பொருளும்
    குதிரை வாங்கிடப் பணித்தான் பாண்டியன்
    மதுரையை விட்டு மந்திரி அகன்றார்

    திருப் பெருந்துறையில் தெரிசனம் கண்டார்
    பொன்னை மறந்தார் தன்னை மறந்தார்
    குருவடி வீழ்ந்தார் குதிரையை மறந்தார்
    பவவினை அகலப் பற்றினார் குருவடி

    பொன்னைப் பொருளைத் தானம் செய்தார்
    புனிதமாம் கோவில் பணிகளைச் செய்தார்
    அல்லும் பகலும் குருவை நினைந்தார்
    அனைத்தும் துறந்தார் அமர்ந்தார் குருநிழல்

    குதிரை வாரா கவலை கொண்டான்
    சேதியை அறிந்து சினமதில் ஏறினான்
    அழைத்தான் அமைச்சரை வினவினான் பாண்டியன்
    அமைச்சர் பகர்ந்தார் வந்திடுங்குதிரை ஆவணிமூலம்

    பார்த்தான் பார்த்தான் பாண்டியன் பார்த்தான்
    ஏய்த்தார் அமைச்சர் என்றுமே எண்ணினான்
    குதிரைகள் எதனையும் காணா வரசன்
    கொண்டான் கோபம் கொடுஞ்சிறை அடைத்தான்

    அடியார் உள்ளம் அறிந்தவன் ஆண்டவன்
    குதிரைப் பாகனாய் கொணர்ந்தார் குதிரையை
    அரசன் மகிழ்ந்தான் அமைச்சரை மீட்டான்
    அன்றிர வதிர்ச்சி அங்கே நடந்தது

    பரிகள் அனைத்தும் நரியாய் மாறின
    கடித்தன குதறின கலக்கமே எழுந்தது
    மன்னன் கோவம் எல்லையைக் கடந்தது
    வாதவூர் பிறந்தார் வதையினில் சுருண்டார்

    அடியார் துயரைக் கண்டான் ஆண்டவன்
    ஆறாம் வைகையைப் பெருகிடச் செய்தான்
    பாண்டியன் பதறினான் வெள்ளம் பரந்தது
    பாண்டிய மக்களை படர்ந்தது துயருமே

    வெள்ளம் பரவா தடுத்திட அனைவரும்
    அவரவர் பகுதியை அடைத்திடப் பணித்தான்
    செம்மனச் செல்வி திகைத்தாள் அடைத்திட
    இரங்கிய எம்பிரான் உதவிட வந்தனர்

    பிட்டை விற்றுப் பிழைக்கும் கிழவி
    பிட்டைக் கூலியாய் தருவேன் என்றாள்
    பிட்டைச் சுவைத்தார் வேலையை மறந்தார்
    கிழவியின் வேலை கிடப்பிலே கிடந்தது

    அதிகாரி வந்தார் கிழவியை மிரட்டினார்
    உறங்கிடும் வேலை யாளினைக்  காட்டினாள்
    எடுத்தார் பிரம்பை அடித்தார் முதுகினில்
    விண்ணும் அதிர்ந்தது மண்ணும் அதிர்ந்தது

    அண்ட சராசரம் அனைத்திலும் விழுந்தது
    அரசன் பயந்தான் அனைவரும் வெருண்டனர்
    வாதவூர் பிறந்தாரை நாடினான் மன்னவன்
    மன்னிக்க மன்னிக்க என்றுமே வேண்டினான்

    வாதவூர் பிறந்தார் மதுரைவிட் டேகினார்
    மணி மணியாகப் பாடினார் இறையினை
    திருவினைப் பற்றியே மலர்ந்திட்ட யாவுமே
    தேனாய் தித்திக்கும் திருவாசக மானது

    மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்
    வாழ்வெலாம் சிவனை வாழ்த்திய மாமணி
    தேசுடைத் தமிழினைச் சிந்தையில் ஏற்றி
    வாசகம் கோவையை வழங்கிய வள்ளல்

     

    Share
  • மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    போரொழிய வேண்டும் பேரமைதி வேண்டும்
    தீராத பேயாசை தீவிழுங்க வேண்டும்
    யாவருமே உறவென்னும் நல்லுணர்வு மலர
    நல்லுரான் கந்தா நீயருள வேண்டும்

    நல்லாட்சி வேண்டும் நற்றலைமை வேண்டும்
    பொல்லாத சிந்தனைகள் பொசுங்கவே வேண்டும்
    நல்வழியில் நாளும் எல்லாரும் நடக்க
    நல்லை நகர்கந்தா நீயருள வேண்டும்

    அறமோங்க வேண்டும் மறமழிய வேண்டும்
    புறங்கூறும் எண்ணம் புதையுண்ண வேண்டும்
    நலமான எண்ணம் உளமமர வேண்டும்
    நல்லையின் கந்தா வழிகாட்டு நாளும்

    அருளுடை ஆறுமுகம் அமைந்த பெருமாளே
    அபயகரம் பன்னிரண்டு கொண்ட பெருமாளே
    வள்ளி தேவயானையுடன் மயிலேறி வந்து
    மாவருளைத் தந்தெம்மைக் காத்திடுவாய் கந்தா

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீகந்தா
    கருணையே உருவான கடவுளே கந்தா
    வைதாரை மனமேற்கும் மால்மருகா கந்தா
    மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா

    ஆறுபடை வீடமர்ந்த அரனாரின் மைந்தா
    அரக்க மனமகற்றி ஆட்கொள்வாய் ஐயா
    காதலுடன் மனமுருகி வேண்டுகிறோம் கந்தா
    கையணைத்து இவ்வுலகில் காத்துவிடு ஐயா

    Share
  • மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்

    மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும். வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும்.துன்பமில்லா மல் வாழ வேண்டும். குறை வில்லாது வாழ வேண்டும். வாழும் வாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கில்தான் சமயங்களும் அதன் வழி முறைகளும் காலத்துக் காலம் வந்தபடி இருந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம்.இப்படி வருகின்ற சமயங்களில் எது உயர்ந்தது எது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது எது மிகவும் தீவிரமாக வந்திருக்கிறது நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை எது தாங்கி வந்திருக்கிறது என்னும் நிலை மண்ணிலே பூதாகரமாகவே வியாபித்து நிற்பதையும் காணமுடிகிறது.

    வேதங்களை முதன்மைப் படுத்திய சமயநெறிகள். சித்தாந்தத்தை முதன்மை படுத்திய சமய நெறிகள். கடவுளைப் பற்றியே எண்ணாத சமய நெறிகள். அறத்தினையே முழுமையாய் வலியுறுத்தும் சமய நெறிகள். புராண இதிகாசங்களை நம்பும் சமய நெறிகள். திருமுறைகளைஆகமத்தைஆலயத்தை மையமாகக் கொண்ட சமய நெறிகள். உருவ வழிபாட்டை முதன்மைப்படுத்தாத சமயநெறிகள். வேள்வி யினை விரும்பி நிற்கும் சமய நெறிகள். இல்லறத்தை ஒதுக்கித் துறவறத்தையே முதனிலைப்படுத்தும் சமய நெறிகள். உருவ வழி பாட்டினை உரித்தாக்கிக் கொண்ட சமய நெறிகள். இப்படிப் பல சமய நெறிகள் சமுதாயத்தை சூழ்ந்து இருந்தன என்பதைக் கட்டாயம் கருத்திருத்தல் வேண்டும்.

    சமய நெறிகள் பல தோன்றி சமுதாயத்தை பல கோணங்கள் ஆக்கி விட்டிருக்கின்றன என்பதையும் மறுத்துரைத்துவிட முடியாது. சமணம் வந்தது. பெளத்தம்வந்தது. இஸ்லாம் வந்தது. கிறித்தவம் வந்தது. இந்தியாவில் வைதீக நெறியே மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கு புதிதாக வந்த சமய நெறிகளாலும். இந்தியாவில் முகிழ்த் தெழுத்த சமய நெறிகளாலும் – வைதீக சமய நெறிகள் சற்று தடுமாற்றமுறகின்ற நிலை ஏற்பட்டது. ஆனால் வைதீகம் என்பது தன்னிலையில் இறுக்கமாகவே இருந்தது . இருந்தும் வருகிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.

    இந்தியாவுக்குள் நுழைந்த சமய நெறிகள் பால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அந்த சமய நெறிகளின் வழியில் நடந்திடவும் விரும்பிச் சென்றார்கள். வைதீக நெறியில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று உணரும் ஒரு நிலையும் அப்பொழுது அவசியமாகக் காணப்பட்டது. அந்தவகையில் கெளதம புத்தர் வருகிறார். மகாவீரார் வருகிறார். தயானந்த சரஸ்வதி வருகிறார். ராஜாராம் மோகன்ராய் வருகிறார். இராம கிருஷ்ண பரமஹம்சரும் வருகிறார். இவர்களின் சிந்தனைகள் ஒவ்வொன்றுமே வேறுபட்டனவாக இருந்தாலும், சீர்திருத்தம் என்னும் கருமட்டும் அனைவரது சிந்தனைகளிலும் அமைந்தே இருந்தது என்பதுதான் முக்கியமாகும்.

    வந்த சமய நெறிகளில் காணப்பட்ட நல்ல சிந்தனைகள் வைதீக சமய நெறியிலே சீராக்கம் செய்திட வேண்டும் என்னும் நிலைக்கு உந்தித்தள்ளுகிறது. கல்வி அறிவின் பெருக்கமும் சிந்தனைகளில் புத்தூக் கத்துக்கு உந்து சக்தியாகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் இறைவனது பெருங்கருணையினால் மண்ணில் வந்து பிறக்கிறார் வள்ளலார் பெருமான்.

    வைதீக சமய நெறியினை மனதில் இருத்திய குடும்பத்தில்த்தான் வள்ளலார் வந்து பிறக்கின்றார். அவரின் உள்ளத்தில் முருகப்பெருமானே நிறைந்து இருக்கிறார். ஞானப்பாலை முன்று வயதில் அம்மையின் அரவணைப்பில் உண்ட  சீர்காழி தந்த ஞானக் குழந்தை சம்பந்தப் பெருமானைப் போற்றுபவராக வள்ளலார் விளங்கினார். மணி வாசகத்தை மனமுருகப் பாடினார். உருகாதார் மனத்தினையே உருக்கும் திருவாசகத்தைத் தேனாகக் கருதியே சுவைத்து தன்னையே அதன் வசமாக்கி நின்றார்.

    சிறிய வயதில் அன்னையையும் தந்தையும் இழந்து நின்றார். அண்ணனின் அரவணைப்பில் அவர் வாழும் நிலை ஏற்படுகிறது. அண்ணன் வீட்டிலிருந்து பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கிறார். பள்ளிப் படிப்பில் செல்லும் கவனம் கலைந்து அவரின் கவனம் – தியானம்யோகம் பக்கமாய் திரும்புகிறது. கல்வியினைக் கற்காமலேயே அவருக்குக் கலைமகள் கருணையினைத் தாராளமாகவே கொடுத்து விடுகிறாள். வள்ளலார் மனத்திலிருந்து கருத்துக்கள் மழையாகக் கொட்டி சிந்தனை வெள்ளமாய் பெருக்கெடுத்தது.

    உருவ வழிபாட்டை ஏற்று நின்றவர் மனத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பரம்பொருளானவன் அரு வாய், உருவாய், அருவுருவாய் இருக்கிறான் என்றுதான் சமய நெறிகள் சாற்றுகின்றன. வள்ளலார் உள்ளம் மற்றவர்கள் உள்ளத்தைவிட வித்தியாசமாய் சிந்திக்கத்  தொடங்குகிறது. எல்லாச் சமயங்களையும் பார்க்கிறார். பார்த்தோடு அமையாமல் அவற்றின் உட்கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளுகின்றார். அவர் மனதில் ஒரு புது மாற்றம், புதுத்தெளிவு உதய மாகிறது. அந்தத் தெளிவினால் அளப்பருங்கருணையுடைய அந்தப் பரம் பொருளை அவர் அளப் பெருஞ் ஜோதியாகவே அகமிருத்தியும் கொள்ளுகிறார். நிறைவில் “ஜோதி தரிசனமே” அவரின் நிலையாக மாறுகிறது. “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே”, “ஒளி வளர் விளக்கே”. “தீபமங்கள ஜோதி நமோ நம” என்றெல்லாம் அடியார்கள் அந்தப் பரம்பொருளை விழித்ததைப், ஏற்றிப் போற்றியதயெல்லாம் வள்ளலார் மனம் உள்வாங்கிக் கொண்டது. அவர்களே அந்தப் பரம் பொருளினை ஜோதி வடிவில் உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்னும் பொழுது நானும் அவர் வழியில் ஜோதி தரிசனத்தைச் சொல்லுவதில் ஏதும் மாற்றுக்கருத்துகள் கொள்ள வேண்டாம் என்று அவர் மக்களைப் பார்த்து புகன்று நிற்கிறார். ஆனாலும் அவரின் இந்த கருத்தினுக்கு எதிர்ப்பாளர்களும் நிறையவே இருந்தார்கள்.

    வைதீக சமயம் மேன்மை மிக்கதான கருக்களைக் கொண்டிருந்த பொழுதிலும், அதனை வழி நடத்த வந்தவர்களின் மனங்களால் விளைந்தவை சமூக நலன்களைப் பாதித்து நின்றதை வள்ளலார் மனம் ஏற்க மறுத்தது. வள்ளலாருக்கு முன்னர் வந்த பலரின் சீர் திருத்தக் கருக்கள் – வள்ளலாரிடம் பதிந்தே இருந்தது. சமத்துவம் இல்லாமை என்பதுதான் வள்ளலார் உள்ளத்தைக் குத்திக் காயப்படுத்திய பெரிய கூரான முள்ளாகவே இருந்தது. அந்தச் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும் என்னும் அவா அவரிடம் பேரலையாகவே எழுந்தது. சமரசம் நிலவுவதே சமய நெறிகளின் உயிர் நாடியாக இருக்கவேண்டும் என்ப துதான் வள்ளலாரின் ஆணித்தரமான கொள்கையாகவே அமைந்தது.

    பெளத்தத்தின் அட்டசீலம், பஞ்சசீலம், சமணத்தின் அறக்கருத்துகள், இஸ்லாத்தின் சகோதரத்துவம், கிறித்தவத்தின் தொண்டு மனப்பாங்கு யாவற்றையும் வள்ளலார் அகத்திருத்தி தன்னுடைய சமரச சன்மார்க்கப் பாதையினை ஆக்கி நின்றார். வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினை உற்று நோக்கினால் அங்கே வள்ளுவமே கைகொடுத்து நிற்பதையே பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கும். கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பொய் கூறாமை, துறவு, விருந்தோம்பல், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் உண்மை, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்னும் கரு, நன்னயம் செய்தல் என்னும் பெருநோக்கு, பழித்தது ஒழித்து விடும் கரு, உற்ற நோய் நோற்றல் உயிக்கு உறுகண் செய்யாமை என்னும் எண்ணம், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் உயிர் செகுத்து உண்ணாமை என்னும் உயரிய நோக்கு, அத்தனையும் வள்ளலாரின் புது நெறியாக முகிழ்த்து வந்தது எனலாம். வள்ளலார் சமூகத்தில் மிகவும் சிறப்பான ஒருமைப் பாட்டினை நிலை நிறுத்திடவே தன் வாழ்வெல்லாம் எண்ணியே செயற்பட்டார் என்பதை கருத்திருத்துதல் அவசியமாகும்.

    பசிப்பிணி மருத்துவராய் வள்ளலார் விளங்கினார். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பதை வள்ளலார் மிகவும் தீவிர மாகவே மனமிருத்திச் செயற்படுத்தி நின்றார். பசித்தவர்களுக்கு முன்னால் தத்துவங்கள் பயனற்றவை என்பதில் வள்ளலார் பெருதும் உறுதியாகவே இருந்தார். அதனால் பசிப்பிணியினைப் பெரும் பிணியாக எடுத்து அதனைப் போக்குவதையே தம்முழைய சுத்த சமரசசன் மார்க்க சபையின் முக்கிய குறிக்கோளாக்கி நின்றார் வள்ளலார் எனலாம். அவரால் தொடங்கப்பட்ட இப்பாரிய பணி இன்றும் அவரின் சபையினால் அவரின் அன்பர்களினால் தொடர்கிறது என்பது மனங் கொள்ளத்தக்கதேயாகும்.

    துறவியாக விளங்கினார். இயற்கை மருத்துவரானார். ஞானியாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார். துறவியாக தூய்மையினைக் காட்டி நின்றார். திருமூலரின் பல சிந்தனைகளை வள்ளலாரும் உள்வாங்கி நின்றார். திருமூலரைப் போலவே கருத்துக்களை நுட்பமாகச், செப்பமாக நல்ல தமிழில் அருமையான பாடல்களாக ஆயிரம் ஆயிரமாய் ஆக்கி அளித்தார். அவை அத்தனையும் பல திருமுறைகளாக வகுக்கப்பட்டு “திரு வருட் பாக்களாக” சமூகத்துக்கு பெரு வெளிச்சத்தைக் காட்டியபடியே இருக்கின்றன என்பதை மறுத்து ரைத்து விடல் இயலாது.    

    ருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
      உறவு கலவாமை வேண்டும்
    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
       பொய்மை பேசாது இருக்க வேண்டும்
    பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
        மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
        உனை மறவாதிருக்க வேண்டும்
    மதி வேண்டும்நின் கருணை நிதி வேண்டும்
       நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
    தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
      தலமோங்கு கந்த வேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
      சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

    சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
    கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!

    இப்பாடல்கள் வாயிலாக வள்ளலாரின் ஆரம்ப நிலையினக் கண்டு கொள்ள க்கூடியதாக இருக்கிறதல்லவா !

    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
    அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
    என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
    யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
    ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

    ஏகன் அநேகன் என்னும் கருத்த்தில் , ஏகன் என்பதையே வள்ளலார் அகதில் உறுதியாக்கிக் கொண்டிரு ந்தார். அவரின் மனதில் பல சிந்தனை கள் மலர மலர கடவுள் பற்றிய கொள்கைகளையும் மாற்றியவ ராகவே வள்ளலார் வந்து நிற்கிறார் என்று அவரின் பாதையினைப் பார்க்கும் பொழுது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

          சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதியில் ஆச்சிர நீட்டென்றும் – ஓதுகின்ற
    பேயாட்டம் எல்லாம் பிதிர்த்தொழத்தலேபிறர்தம்
    வாயாட்டம் தீர்த்தன்வே மற்று

                  வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
    சொன்ன வலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இலை.

    வள்ளலாரின் கருத்தோட்டங்கள் எவ்வாறு பரிணமிக்கின்றன என்ப தற்கு அவரே தன்னுடைய பாடல் களை எமக்கு வழங்கி நிற்கிறார். சாதியினைச் சாடுகிறார். வேதாகமங்களை மிகவும் கடுமையாக எதி ர்க்கும் நிலை வள்ளலாரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு – அவரின் சீர்திருத்த மனப்பாங்குதான் என்றே கருதைட வைக்கிறதல்லவா !

                  பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
    முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
    உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்
    உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்
    ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்
    ஆடலே யன்றி ஓர்விடயக்
    காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
    கருத் தெனக் கில்லை

    வீடும் வேண்டா விறலினராகவும் வள்ளலார் தன்னை இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றார். முத்தியே வேண்டா நிலை என்பதே மிகவும் உன்னதமான நிலை என்று சேக்கிழார் பெருமானே சுட்டிக் காட்டி நிற்பது இங்கு நோக்கத்தக்கதேயாகும்.

              மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையோ பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்
    இயற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடுஞ் சேர்ந்திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே

    தன்னால் உருவாக்கப்பட்ட மார்க்கத்தை எந்த அளவுக்கு உறுதியானது, பயனானது, புதிய சிந்தனை களைக் கொண்டது என்பதை தனது பாடல் வாயிலாகவே எவ்வித அச்சமுமின்றி துணிவாய் வெளிப்படுத்தி நிற்பதைக் கருத்திருத்த வேண்டியது முக்கிய மாகும். மரணமிலாம் பெருவாழ்வு என்பதைச் சொல்வதற்கு எவ்வளவு மனவுறுதியும், தெளிவும் வேண்டும். அந்தத் தெளிவும் உறுதியும் மிக்கவராய் வள்ளலார் விளங்கி இருந்திருக்கிறார்.

    செத்தாரை எழுப்புவேன் என்றார். சித்துக்கள் செய்யும் சித்தராயும் விளங்கினார். செத்தாரை எழுப்பு வேன் என்பதைப் பலருமே தவறாக விளங்கிக் கொண்டு – அவரையே பல வேளைகளில் வருந்திடும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. உயிரோடு வாழ்கின்ற பலர் நல்ல சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு, தனக்கும் பயனில்லாமல், மற்றவர்களுக்கும் பயனில்லாமல், ஏன் சமுதாயத்துக்கே பயனில்லாமல் வாழுவதைக் காண்கின்றோம். அப்படியானவர் உயிருடன் வாழ்ந்தாலும் அவர்களைச் செத்தார் என்றுதான் கணக்கில் எடுத்திட வேண்டும். அப்படியானவர்களுக்கு நல்ல உபதே சங்களைச் செய்தால் அவர்களை நல்லுணர்வுள்ளவர்களாக எழுச்சி பெறச் செய்துவிடலாம் என்னும் கருத்தில்த்தான் வள்ளலார் “செத்தாரை எழுப்பலாம்” என்று சொன்னார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

    வள்ளலாரின் கொள்ளகைகளை நிறையவே பலரும் விமர்சித்தார்கள். அவரின் கொள்கைகள் ஏற்பதற்குக் கஷ்டமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் தான் கொண்ட கருத்தைமட்டும் எதற்காகவும், யாருக்காகவும் மாற்றிவிட நினைக்கவே இல்லை. தன்மனத்துதித்த சீர் திருத்தங்களை உள்ளடக்கி தன்னுடைய “சுத்த சமரச சன்மார்க்க நெறியினை” முன்வைத்தார். அதனை நடைமுறைப்படுத்தவும் தன் காலத்தில் அவர் செயற்பட்டு நின்றார். அவருக்கென்றே ஒரு அடியார் திருக்கூட்டமும் திரண்டது. அவரின் ஜோதி வழிபாட்டினையும் ஆதரித்தும் நின்றது. இன்றும் அந்த ஜோதி தரிசன வழிபாடு நிற்காமலே நடந்த படியேதான் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

    சைவத்திருமுறைகளை நாமனைவரும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளலாரின் அருட்பாடல்களும் திருமுறைகளாகப் பலராலும் போற்றப்பட்டு வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அன்னைத் தமிழை நேசித்தார். அந்த தமிழில் அரிய தத்துவக் கருத்துக்களை எமக்கெல்லாம் அள்ளியும் வழங்கினார். தமிழால் தன்கருத்துக்களைக் கூறுவதையே அவர் பெருமையாகவும் பெரும் பேறாகவுமே எண்ணினார். விமர்சனங்கள் பல – அவரின் கொள்கைகளுக்கும், அவரின் அருட்பாடல்களுக்கும் முன்வைக்கப்பட்டாலும் அவர்; ஞானியாக, யோகியாக, சீர்திருத்தச் செம்மலாக, சமூகத்தின் அழுக்குகளை அகற்ற வந்த சமூக மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாநிலம் பயனுற வந்த “பெரு வெளிச்சம்” ஆகவே ஆகியிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும்.

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    1. பழனி மலையண்ணல் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழினின்றும் முழுமையாகப் பதிப்பிடப் பெறாத ஒரேயொரு பாடலே கிடைத்துள்ளது. அதுவும் என்ன பருவம் என்றும் உய்த்துணர வழியில்லை. விரைவில் முழு பிள்ளைத்தமிழும் கிடைக்க முருகனையே வேண்டுவோம்.

    1. பள்ளம்புலம் குமரகோட்டம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

              இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணையூரில் குடிகொண்டுள்ள குமரப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழாகும் இது. தீவகம் வே. இராசலிங்கம் என்பவர் இயற்றியது. 2013aஇல் தான் பாரதி பதிப்பகம், கனடா-வினால் வெளியிடப்பட்டுள்ளது.

              வழக்கம்போன்று பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது இப்பிள்ளைத்தமிழ். காப்புப்பருவ முதற்பாடல் திருமால் மீதன்றி விநாயகர் மீது அமைந்துள்ளது.

              சிற்றில் பருவத்துப் பாடலொன்று பிற புலவர்கள் முருகனைப் போற்றிப் பாடிய நயத்தை அழகுறக் கவிதையில் பொருத்திக் காட்டுகின்ற அழகைக் காண்போமா?

              முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து அருணகிரியார் புகழ்ப்பாடல்களாகத் திருப்புகழ் பாடினார். இதனால் முருகனும் பெருமை (கனம்) பெற்றான். பொய்மை பேசாத வள்ளற்பெருமான் பாடிடும் பேசும் தெய்வமாக முருகன் நின்றான். குமர குருபரரும்  புள்ளிருக்குவேளூர் முருகன்மீது பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பாடினார். இதனைக் ‘கொஞ்சும் முருகுப்பா’ என்றார் நம் புலவர். தமிழுக்கு ஆசான் முருகன் என்கிறார். இது தொடர்பான கதையைப் பற்றிய ஓர் செய்தியையும் தந்துள்ளார்.

              இதுதான் கதை: இறையனார் களவியலுக்குப் பாண்டிய மன்னர் ஆணைப்படி, புலவர்கள் பலர் உரை கண்டனர்.  உப்பூரி குடிகிழார் என்பவரின் மகனான உருத்திர சன்மன் எனும் ஐந்து வயதேயான ஊமைப்பிள்ளையிடம் ஒவ்வொருவராகத் தம் உரையைப் படித்துக் காண்பிக்க, அவன் சலனமின்றி இருந்து, நக்கீரரின் உரையைக் கேட்டபோது மட்டும் மெய்சிலிர்த்து வியந்தானாம். ஆக நக்கீரர் உரையே சிறந்தது எனக் கொள்ளப்பட்டது. (இவ்வுருத்திரசன்மன் முருகப்பிரானின் திருவடிவமே! இவன் ஊமையாகப் பிறந்தது சிவபிரானுடைய சாபத்தால் விளைந்தது; அது வேறொரு கதை).

              இத்தகைய பெருமை வாய்ந்த முருகன் இட்டும் தொட்டும், மணலினாற் சிற்றில் அமைத்தும் விளையாடும் சிறுமியர்கள் மனத்தில் உறைபவன். சிறுவர்கள் மனம் பெருமையில் ஓங்கி விளங்க, நீ சிற்றிலைச் சிதைக்காதே அப்பா என முருகவேளை வேண்டுவதாக இப்பாடல் அமைந்தது.

              புகழ்ப்பா தந்த அருணகிரிப்

                     பொய்கைத் தமிழிற் கனம்பெற்றாய்!

             பொய்யா வள்ளற் பெருமானார்ப்

                     பேசும் தெய்வம் எனநின்றாய்!

             குகப்பா குமரக் குருபரரும்

                     கொஞ்சும் முருகுப் பாதந்தார்!

             குழந்தை நீயே என்பதுவும்

                     கொஞ்சும் தமிழுக் காசானாய்

             அகப்பா கண்ட உன்றனுயர்

                     அழகே குழந்தை வடிவன்றோ! 

             இட்டும் தொட்டும் அழைந்தாடி

                     இல்லம் அமைத்து விளையாடும்

             மகப்பா மடவார் மனத்துறையும்

                     மயிலோய் சிற்றில் சிதையேலே!

             வண்ணச் சிறுவர் மனமோங்க

                     வரையும் சிற்றில் சிதையேலே!

                                            — என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

              சைவமாமணி விஸ்வலிங்கம் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் 1988ஆம் வருடம் பதிப்பிடப்பட்டுள்ளது.

              கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப்பேரியின் மேற்கரையை அடுத்துத் தென்திசையில் அமைந்து விளங்கும் பழந்தமிழ் ஊரே மண்டூர் ஆகும். சிவமணம் கமழும் இவ்வூர், மருதநிலத்தின் பாற்பட்டதாம். ஒரு தில்லை மரத்தினில் பாய்ந்த வேல் வேடவர்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு, பிற்காலத்தில் இதனை மூலத்தானமாகக் கொண்டே ஆலயம் எழுப்பப்பட்டதனால் இவ்வூர் தில்லை மண்டூரென அழைக்கப்படுகிறது.

              காப்புப் பருவத்து முதற்பாடல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப, திருமாலை வேண்டிக் குழந்தையைக் காக்க வேண்டுகின்றது.

              செங்கீரைப் பருவத்து முதற்பாடல் புதிய கருத்துகளையும் புதுக் காட்சிகளையும் கண்முன் வைக்கிறது. சிறப்பான கருத்துகளுடன் அமைந்த இப்பாடலைக் காண்போமா?

              உனது மந்தரமலை போன்ற புயத்தின்கண் புனையப்பட்டு மார்பில் தவழும் மாலையில் வண்டுகள் மொய்த்து ஆடுகின்றன; மல்லிகை, முல்லை இவற்றின் நறுமணம் கமழவும் மந்தார மலர்கள் அணியப்பட்டும் உன் அழகான முகத்தில் பட்டும் சுருள்சுருளான தலைமயிர் ஆடுகின்றது. தனது கடைசி நாட்கள் வந்துவிட்டதென சூரபத்மன் சிந்தை தளர்ந்து பயந்து தினமும் வருத்தம் கொள்ளவும், உனது நிலவினை ஒத்த முக மண்டலமனைத்திலும் சிறுமியர் முத்தமிட, செந்தமிழானது ஓங்கி வளரும் வண்ணம் வரம் தந்திடும் செல்வக்குமரா, நீ செங்கீரையாடிடுக! சிவந்த நெற்கதிர்களால் வளம்பெறும் மண்டூரின் தெய்வமே, செங்கீரை ஆடியருளுக.

              மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை

                              வண்டார் நின்றாட

                     மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு

                              மந்தாரஞ் சாரத்

             சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு

                              ருண்டுசு ருண்டாடத்

                     தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்

                              துற்றதே னச்சூ ரன்

             சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தே

                              ரிந்துநி தம்வா டத்

                     திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்

                              சிறுவியர் முத்தா ரச்

             செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா

                              செங்கோ செங்கீ ரை

                     செந்நெல்வ ளம்பெறு மண்டூ ரையா

                              செங்கோ செங்கீ ரை.

              இதுபோன்ற இனிய பல பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மாவைப் பிள்ளைத்தமிழ்

              இந்நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பட்டது. 1962இல் இயற்றப்பட்ட இந்நூல், 1967ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

              மாவை முருகன் கோவிலானது ஈழத்தின் சரித்திரத்துடன் தொடர்புடையது. ‘வையாபாடல்’ எனும் ஈழ வரலாற்றைக் கூறும் நூலினின்றும் பெயர்க்காரணத்தைச் சுட்டி, இக்கோவிலுடன் தொடர்புடைய ஒரு கதையைக் காணலாம்.

             ‘கீரிமா மலையிலாடினள் தீர்த்தம், அம்முகமகன்றது, அன்னதால் மாவிட்டபுரம்’ எனும் வையாபாடல் ஆகிய நூலில் காணப்படும் பாடலின்கண் இக்கதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

              மாருதப்புரவீகவல்லி என்பவள், சோழ இளவரசி ஆவாள். இவள் பெயரில் குமாரத்தி பள்ளம் எனும் பெயரில் ஒரு இடம் இன்னும் இந்த மாவைக் கோவிலருகே உள்ளது.

              மாருதப்புரவல்லி எனும் பெண் திசை உக்கிரசோழன் மகள். அவளுடைய தாய் ஒரு கின்னரப்பெண் அளித்த சாபத்தால் குதிரைமுகத்துடன் கூடிய ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். எண்ணற்ற நீர்நிலைகளில் நீராடி வழிபட்டும் குணமடையாத அப்பெண் இங்கு வந்து பாதாள கங்கைத் தீர்த்தத்திலாடி குதிரைமுகம் மாறப்பெற்றாள். பின் மாவிட்டபுரக் கோவிலைத் தன் தந்தையின் பொருளுதவியால் அமைத்தாள். கதிரைமலையினின்று அரசாண்ட உக்கிரசிங்கசேனன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். கோவிலுக்கான சுப்பிரமணியர் விக்கிரகமும் சோழநாட்டிலிருந்து ஒரு குருக்களும் கப்பலில் வந்து சேர்ந்தனர். இக்கப்பல் வந்து சேர்ந்த துறை காங்கேயன் துறை எனப்பட்டது.

              பிள்ளைத்தமிழ் பாடிய புலவனார் இப்பதிவை ஒரு பாடலிலும் வைத்துள்ளார். இலங்கைத்தீவின் வடதிசையில் கீரிமலை எனும் தலம் உள்ளது. அங்கு கீரிமலை என வழங்கும் நகுலேசுவரம் எனும் கோவில் உள்ளது. அதனருகேயுள்ள மலைப்பாறைக்குகையினின்றும் ஊற்றாகப் பாதாள கங்கைத் தீர்த்தம் பாய்கின்றது.

              கீரி மாமலை வாரிதி யாடியே

                     கிரீச னாநகு லேசனை நாடியே

             சேரு மன்பொடு சிந்தனை செய்துமேற்

                     றிசைகோ ளுக்கிர சோழரா சன்மகள்

             மாரு தப்பிர வல்லியென் பேரினாள்

                     வாவு வெம்பரி மாமுக மோடிநோய்

             தீர நீங்கின ளித்தலத் தேயெனிற்

                     செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.

              இக்கருத்தைக் கொண்ட ஒரு வாரானைப் பருவப் பாடலைக் காண்போம். குமரகுருபரனாரின் ‘பெருந்தேனிறைக்கு நறைக்கூந்தற் பிடியே’ என்பதற்கிணையான சொற்களுடன் தொடங்கும் இப்பாடல், அருமையான கருத்துகளைப் பேசுகிறது.

              மிகுதியான தேனைச் சொரிகின்ற கொன்றைமலரைச் சூடிய சிவபிரானின் காதுகளுக்கே பிரணவத்துப் பொருளை உரைத்த குழந்தையான பெருமானே வருக! இங்கு சிவபிரானுக்கே என்றது அனைத்திற்கும் உயர்வான இறைவனான அவனுக்கே முருகன் பிரணவத்துப் பொருளை விளக்கினான் என்னும் வியப்புத் தோன்ற அமைந்த பாடற் கருத்தாகும். பெரும் தவம் இயற்றியவர்கள் அடையும் பெரிய விருந்து எனும் தவப்பயன் முருகன் நீ வருக!

              மேற்கண்ட ஈழத்துச் சரித்திரத் தொடர்பு அடுத்த வரியில் அறியக் கிட்டுகிறது. நகுலமுனிவர் என்பவர் கீரிமலையில் தவம் செய்து,  தீர்த்தத்திலாடி  கீரி முகமாய் விகாரப்பட்டிருந்த விரூபமுகம் நல்லமுகமாக மாறிய முனிவர் ஒருவர்; திசையுக்கிர சோழன் எனும்சோழமன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி ஒரு சாபத்தால் குதிரைமுகம் பெற்றாள். அவள் குன்மநோயும் உடையவளாயிருந்தாள். அவள் இந்த கீரிமலைத் தீர்த்தத்திலே வழிபட்டுத் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் பெற்றாள். அவளுடைய பெருநோயும் குணமாயிற்று.

              மலைமடந்தையான பார்வதி அன்னையின் மனைமாண்புக்குச் சான்றாய், ஒரு நன்மகனாய் உதித்து வையகத்தை வாழவைத்தவொரு பெருவாழ்வே வருக! நன்கு வாழத் தெரியாதவர்களும், திருந்தாத குணமுடையவர்களுமான அசுரர்கள் செருக்கினை அழித்து ஒழித்த தேவனே! வருக, வருகவே!

    சிவமே விளைவாக விளங்கும் திறன்படைத்த மாவைப்பதியின் திருவாக இருப்பவனே! வருவாயாக என விளிக்கும் வாரானைப் பருவப்பாடல்.

              பெருந்தே னிறைக்கு நறுங்கொன்றைப்

                              பிரானார் செவிக்கே பிரணவத்துப்

                     பேசாப் பொருள்பே சியகுழவிப்

                              பெருமான் வருக! பெருந்தவத்தோர்

             விருந்தே வருக! நகுலமுனி

                              விரூப முகமும் மாருதப்ர

                     வீக வல்லி மாமுகமும்

                              விலகாப் பெருநோய் விலக்குமலை

             மருந்தே வருக! மலைமடந்தை

                              மனைமாண் பினுக்கு நன்கலமாய்

                     வையம் வாழ வாழ்ந்தபெரு

                              வாழ்வே வருக! வாழ்வறியாத்

             திருந்தா வசுரர் செருக்கொழித்த

                              தேவே வருக! வருகவே!!

                     சிவமே விளைக்குந் திறன்மாவைத்

                              திருவே வருக! வருகவே!!

              என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்

              பண்டிதர் அ. ஆறுமுகம் என்பவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் 1982ஆம் ஆண்டில் விசவத்தனை முருகன் கோவில் கும்பாபிடேகத்தின்போது முதல் பதிப்புக் கண்டுள்ளது.

              விசவத்தனை முருகன் கோயில், இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வம் இந்த முருகன். 200- 250 ஆண்டுகள் பழமையான கோவில் இது.

              இப்பிள்ளைத்தமிழ் நூல் சொல்நயம், பொருள்நயம், பக்திச்சுவை, கற்பனைவளம், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்சிறப்பு ஆகியனவற்றைத் தன்பாற் கொண்டது. பருவத்திற்கு ஏழு பாடல்களைக் கொண்டமைந்தது. நக்கீரர், ஔவையார், பொய்யாமொழியார் ஆகிய புலவர்களுக்கு முருகன் அருள்பாலித்த பெருமை பாடல்களில் ஆங்காங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

              அனைத்துப் பாடல்களுமே மிக அருமையாய் விளங்கிடும் இந்த நூலில் சிறுபறைப் பருவத்துப் பாடல்கள் சில மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பாடப்பட்டுள்ளன; எனினும் உட்கருத்து ஆழமானது. ஓரு பாடலைக் காண்போம்.

              ‘தந்தையானவர் திருக்கயிலாய மலையில் உறைபவர் (மலையாள தேசத்தவன் எனவும் பொருள்கொள்ளலாம்). பித்தன்- பைத்தியக்காரன் அல்லது மிக்க அன்புடையவன் என இரு பொருள்படும். நள்ளிருளில் சடைவிரித்துக்கொண்டு நடனமாடுபவன் (நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே எனும் வரிகளை நினைவு கூரலாம்). நாற்றம்பிடித்த கபாலத்தை (தான் கொய்த பிரம்ம கபாலத்தை) ஏந்தி, அதில் பிச்சை எடுத்துண்பவன். நரைத்த கிழட்டு எருதின் மீதேறுபவன்.

              ‘தாயானவளோ (உமையம்மை) பெரும் நீலநிற (கறுத்த) மேனியினள்; உனது அண்ணனோ பெருத்த பானைவயிறு உடையவன்; யானைமுகம் கொண்டவன். கும்பமதம், கன்னமதம், கோசமதம் எனும் மூன்று மதங்களையுடையவன். உனது தாய்மாமனான திருமாலோவெனில் மாடு மேய்க்கும் இடையன்; பேய்ச்சியின் முலைப்பாலினை உண்டு அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியவன். உனக்கு வாய்த்த மைத்துனனான பிரம்மனோ (திருமாலின் மகனாகக் கருதப்படுவதனால் அவர் மகளான தெய்வயானையின் சகோதரன்; அதனால் முருகனின் மைத்துனன்) எண்ணெய் விற்பவன் (வெண்மை நிறமான வாணியை, சரசுவதியைக் கொண்டவன்,’ என இவ்வாறு உனது வழி, கோத்திரங்கள் இவற்றையெல்லாம் பலவிதமான கதைகளாகக் கூறி (புகழ்ந்து) உன்னை வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தையும் விலகி ஓடுமாறு துரத்திடும் உயர் சேவகனே! (அடியவர்களுக்காக அனைத்தையும் செய்வதனால் முருகனை ‘சேவகா’ என அன்புமேலிட அழைக்கிறார்) சிறுபறை முழக்கி அருளுவாயாக! விசவத்தனைத் தேவதேவா, சிறுபறை முழக்கியருளுக என வேண்டிடும் பாடல்.

             தந்தையோ மலையாளி பித்தன்நள் ளிருளிலே

                              சடைவிரித் தாடி நாற்றத்

                     தலையோடு கொண்டிரந் துண்ணிநரை யெருதேறி

                              தாயோ பெருத்த நீலி

             முந்தியநின் அண்ணனோ பேழ்வயிறு யானைமுகம்

                              மூன்றுமத வடுவு டையவன்

                     முதியதாய் மாமனோ மாட்டிடையன் பேய்ச்சியின்

                              முலையுண்டு உயிரு முண்டோன்.

             வந்தமைத் துனன்வெள்ளை வாணியன் எனநினது

                              வழிகோத் திரங்க ளெல்லாம்

                     வாயார வண்ணவண் ணக்கதைக ளாற்சொல்லி

                              வந்திக்கும் அன்பர் வினைகள்

             சிந்திட முழங்கித் துரத்துமுயர் சேவகா

                              சிறுபறை முழக்கி யருளே

                     திருமேவு விசவத் தனைத்தேவ தேவனே

                              சிறுபறை முழக்கி யருளே.       

    என்பது பாடல்.

              இதுபோலும் பலப்பல பாடல்கள். படித்து மகிழ வேண்டிய பக்திக் கருவூலங்கள்.

     

     (வளரும்)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     பார்வை நூல்கள்:

    1. வையா பாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு- 1980

    Share
  • ஜெய மங்களா! சுப மங்களா!

    ஜெய மங்களா! சுப மங்களா!

    வரலட்சுமி பூஜையான இன்று திருமகளை வரவேற்றுக் கொண்டாடுங்கள். ‘ஜெய மங்களா சுப மங்களா’ என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • ஆடிப்பூரம்

    ஆடிப்பூரம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திருவாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின்றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய்சமய விழாவாய் “மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும்” அமைகிறது அல்லவா! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய் ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும்  – மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல – ஆடியிலும் சங்கமிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும். வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய்சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது. ஆடிப்பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும்உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப்பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம் சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது. இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான்சித்தர்களும், யோகிகளும்தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    உலகத்தின் நன்மைக்காகவே அவதாரங்கள் நிகழ்கின்றன. இராமராய்கிருஷ்ணராய்பகவான் விஷ்ணு அவதாரம் செய்தார் என்பதைப் புராணங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன. அந்த அவதாரங்களுக்குத் துணையாக லக்ஷ்சுமி தேவி – சீதையாய்ருக்மணியாய் பூமியில் அவதாரம் செய்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் இம்மண்ணில் நிகழ்ந்த வேளை அவளுக்குதுணையாகஇணையாக பகவான் விஷ்ணு எந்தவித அவதாரமும் மேற் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகவும் முக்கியமாகும். ஆனால் சிலையாய் இருந்த கண்ணனையே மனத்தில் உறுதியாய் இருத்தி அவனையே மணப்பேன் என்னும் வைராக்கியத்தை உலகுக்கே காட்டிய பெண்ணாய் வைணவத்தின் மாமலர் ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அப்படியான அந்த ஆண்டாள் நாச்சியாரைக் கொண்டாடும் அற்புத நாளாகவும் ஆடிப்பூரம் அமைகிறது என்பதும் சிறப்பல்லவா! பெரியாழ்வார் என்பவர் வைணவத்தில் மதிப்பக்கப்படுகின்ற மிகச்சிறந்த அடியார் ஆவார். அவரின் வளர்ப்பு மகளாய் ஆண்டாள் நாச்சியார் ஆவது ஆண்டவனின் திருவருளே.

    சைவமும்வைணமும்பெயரளவில் இரண்டாக இருந்தாலும் – இறைவனை உறவாய் ஆக்கிக் கொள்ளுவதில் ஒன்றுபட்டே நிற்கின்றன. தாயாய்தந்தையாய்சகதோழனாய்காதலனாய்காதலியாய்என்றெல்லாம் எண்ணி கசிந்து உருகிப் பின்னிப் பிணைந்து நிற்பதை யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் உலகினைக் காத்து நிற்கும் பெருஞ்சக்கியான அம்பாளை பல நிலைகளில் கண்டும்அந்தச் சக்திக்கு தங்களின் விருப்பங்கள் எது எது இருக்கிறதோ அத்தனையையும் நிறைவேற்றிப் பார்ப்பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்படிப் பேரானந்தம் அடையும் பாங்கினை ஆடிப் பூரம்காட்டி நிற்கிறது என்பதே முக்கிய நிலையாகும். இங்கே செய்யப்படும் செயல்களுக்கு முக்கிய காரணம் – பக்தியின் பரவசம் என்றுதான் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

    ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே கணவனாக்குவேன் என்று ஒரே பிடிவாதமாய் இருக்கிறார். கடவுளை மானிட உருவில் இருக்கும் ஒரு பெண் கணவனாய் கொள்ளுதல் பொருந்துமா என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றதாகும். இங்கு பக்தியின் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. மணிவாசகப் பெருமான் எந்தளவுக்கு சைவத்தில் முக்கியத்துவத்துவப்படுத்தப் படுகிறாரோ அவ்வாறே ஆண்டாளும் அமைகிறார். ஆண்டாள் தன்னுடைய பதினைந்தாம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததாய் சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே திருப்பாவையையும்நாச்சியார் திருமொழியையும்தந்திருக்கிறார். ஆண்டாளின் இவ்விரு படைப்புக்களுமேதத்துவத்தையும்பக்தியையும்தேனாய் இனிக்கச் செழுந்தமிழில் பொக்கிஷமாய் அமைந்திருகிறது. இப்படிப் பெருமைக்குரிய ஆண்டாள் நாச்சியாரை அகத்தினில் அமர்த்திட ஆடிப்பூரம் அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கது. வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் மிகவும் பக்திபூர்வமாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சைவ ஆலயங்களில் அம்பாளை முன்னிறுத்தி ஆடிப்பூரம் பெருவிழாவாய் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு பத்து நாட்கள் திருவிழாவாய் ஆடிப்பூரம் அமைவதையும் காணலாம். உலகத்தின் இயக்கத்துக்குக் காரணமான சக்தியே அம்பாளாய் இருப்பதாய் எண்ணும் அடியார்கள் தங்கள் விருப்பத்துக்கு அமைய – அம்பாளுக்குப் பலவித அலங்காரங்களைச் செய்து தங்கள் ஆராத பக்தியைக் காட்டி நிற்பதைக் காணக்கூடியதாக ஆடிப்பூரம் காணப்படும். அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்வதுஅம்பாள் பூப்படைந்து விட்டாள் என்று பலவித சடங்குகளை ஆற்றுவதுஎன்று ஆடிப்பூரத்தை ஆனந்த விழாவாக ஆக்கியேவிடுவார்கள்.

    அம்பாளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறவாகவே எண்ணி – தங்கள் குடும்பப் பெண்கள் எப்படி யெல்லாம் அலங்கரிப்பார்களோ அப்படியே அலங்கரித்து பேருவகையும்பேரானந்தமும் பெறுவதை ஆடிப்பூரத்தில் கண்டிடலாம். மஞ்சள் காப்புசந்தனக்காப்புகுங்குமக் காப்பு என்றெல்லாம் நடத்திவளைகாப்பும் நடத்துவார்கள்.

    அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும் வளையல்கள் பலவகையாய் அமையும். அந்த வளையல்கள் நிறைவில் அனைவருக்கும் அருட் பிரசாதமாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருமணம் ஆகாதவர்க்குத் திருமணம் விரைவாய் திருமணம் ஆவதற்கும்மனக்கசப்பினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும்ஆடிப்பூரத்தின் வழிபாட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்னும் நம்பிக்கை யாவரிடமும் நிறைந்தே இருக்கிறது. தோஷங்கள் கொண்ட தம்பதியர்களுக்குத் தோஷங்கள் நீங்கிவிடும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.

    சைவமும்.  வைணவமும் சங்கமிக்கும் சயயப் பெருவிழா ஆலயங்கள் தோறும் நடக்கும்  ஆடிப்பூரம் அமைந்த ஆடி மாதத்தை எப்படி ஒதுக்கிட முடியும்ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய பக்குவமான நாளாகும். பக்தர்கள் மனக்குறைகளைக் களையும் பாங்கான நாளாகும். அமங்கலமே ஆடியென எண்ணும் எண்ணத்தை அகத்தைவிட்டே அகற்றிடுவோம். ஆடியும் ஆடியில் வருகின்ற அத்தனை நாட்களுமே அம்மனுக்குரிய மங்கல நாட்களேயாகும். ஆடிப்பூரம் வாழ்வில் மனமகிழ்ச்சியையும்மனவமைதியையும்மன எண்ணங்களையும் நிறைவேற்றித் தரும் உன்னத நாளாகும். அது மட்டுமல்ல சைவமும் வைணவமும் சக்தியை முன்னிறுத்திச் சங்கமித்து ஒரே நிலையில் பயணப்படும் பக்தி நிறை நாளுமாகும் என்பதை மனமிருத்துதல் வேண்டும்

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெலாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
    காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்புமங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைய  தொழுவார்க்கு    ஒருதீங்கில்லையே

    இன்றே திருவாடிப்பூரம் எமக்காக
    அன்றே ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
    வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
    ஆழ்வார் திருமகளாராய்

    திருவாடிப்பூரத்துச்  செகத்துதித்தாள் வாழியயே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியவே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியவே

    பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
    வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
    வையம் சுமம்பதும் வம்பு .

    Share
  • சின்ன சின்னக் கால்களால் – பாடல்

    சின்ன சின்னக் கால்களால் – பாடல்

    சின்ன சின்னக் கால்களால், சிங்காரக் கால்களால், வான்வண்ணக் கண்ணன் இங்கு வருகின்றான். சுந்தரம் பாகவதர் இயற்றி, நீலமேகம் குழுவினர் பாடிய அழகிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • சென்னியோங்கு 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஏழாம், எட்டாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள். இந்த நாள் இனிய நாள். இக்கணம் பொற்கணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குரு பிரம்மா குரு விஷ்ணு

    குரு பிரம்மா குரு விஷ்ணு

    இந்தக் குரு பூர்ணிமா நன்னாளில், ‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்ற குருவந்தனப் பாடலை வைஜெயந்தி குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஐந்தாம், ஆறாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மொரீசியஸ் நாட்டில் ஒரு கைலாசம்

    லண்டன்வாழ் தமிழ்க் கவிஞர் சக்தி சக்திதாசன், அண்மையில் மொரீசியஸ் நாட்டுக்குச் சென்று வந்தார். இதன் தலைநகரான போர்ட் லூயிஸ் பெருநகரில் கயிலாயம் (கைலாசம்) என்ற பெயரில் சிவன் கோவில் உள்ளது. சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோவில் என்றும் இதனை அழைப்பர். இந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கிய சக்திதாசன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் நாமும் இதைக் காண, பதிவு செய்து அனுப்பியுள்ளார். இந்த அழகிய கோவிலுக்குள் இதோ ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் மூன்றாம், நான்காம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 1 & 2 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 1 & 2 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் என்றெல்லாம் பாடிப் பரவுகிறார். இதன் முதல் இரண்டு பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்ன கவி பாடினாலும்

    என்ன கவி பாடினாலும்

    மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதிய நாடாளுமன்றத்தில் கோளறு பதிகம்

    புதிய நாடாளுமன்றத்தில் கோளறு பதிகம்

    செங்கோலுடன் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இதில் திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நிறைவுப் பாடலின் ஈற்றடி,

    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே!!

    என அமைந்துள்ளது அழகிய பொருத்தம். ‘கோளறு பதிகம்’, மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share