Tag: மு.இளங்கோவன்

  • கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கவிழா!

     

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, ஜப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரத்தில் நாளை (ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது.

     

    கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்குச் செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி தலைமை தாங்குகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.

     

    இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), பேராசிரியர் இரா. ச. குழந்தை வேலனார் (நிறுவுநர், கடலூர்த் தமிழ்ச்சங்கம்)  அழைக்கப்பட்டுள்ளனர்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றுவார்.

     

    பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர் கூத்தங்குடி அரங்கராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் பல்லடம் மாணிக்கம், பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளார்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

     

    பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் அரங்க. பாரி, முனைவர் க. திலகவதி, முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

     

    பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தியாக. மோகன், கி. முல்லைநாதன், ந. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு.இளவரசன், ஸ்ரீ.ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், நா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம்:  http://www.tholkappiyam.org/

     

    Share
  • பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன்

    -மு.இளங்கோவன்

         திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவனாக நான் இருந்தபொழுது சென்னை எனக்கு அறிமுகமானது. எங்கள் அண்ணனுடன் சென்னையை வலம்வரும்பொழுதுதான் நண்பர் அ. தேவநேயன் தொடர்பு கிடைத்தது. அவர்தான் “அடவி வரைகலை” வே. இளங்கோவை அறிமுகம் செய்துவைத்தார். அந்த வரிசையில் இன்னொரு நண்பரும் அறிமுகம் ஆனார். அவர் பொம்மலாட்டக்கலைஞர் மு. கலைவாணன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா.அருணாசலம் கண்டெடுத்த அறிவுக்கலைஞர்களுள் மு. கலைவாணன் குறிப்பிடத்தகுந்தவர்.

         மாணவர் நகலகத் தந்தை நா. அருணாசலம் ஐயா
    செய்த தமிழ்ப்பணிகளுக்குத் துணையாக அழைப்பிதழ்kalai copy உருவாக்குவது, அச்சிடுவது, ஒட்டுவது, நிகழ்ச்சி வடிவமைப்பது, பதாகை கட்டுவது, படம் வரைவது என்று அனைத்துப் பணிகளையும் சலிக்காமல் செய்த பெருமை மு. கலைவாணனுக்கு உண்டு. தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், நந்தன் இதழ்வெளியீடு என்று மு. கலைவாணனின் பணிகள் மாணவர் நகலகத்தில் நீண்டவாறு இருக்கும்.

         சென்னை, தியாகராயர் நகரில் அமைந்துள்ள மாணவர் நகலகத்திற்குச் செல்லும்பொழுதெல்லாம் மு.கலைவாணனின் அறிவுத்துறையின் புதிய படைப்புகளைக் கண்டு கண்டு வியப்புறுவேன். அவருடன் உரையாடித் திரும்பும்பொழுது உலக அதிசயத்தைக் கண்டு வியந்த சிறுவனாக மகிழ்ச்சியுடன் வெளிவருவேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் குழு ஒளிப்படம் ஒன்றைக் கொடுத்து, இதிலிருந்து இக்குழந்தை வடிவத்தை மட்டும் தனிப்படமாக்கித் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டேன். அவரும் அறுவைப் பண்டுவத்தில் வல்ல மருத்துவர் ஒருவர், உடலோடும் உணர்வோடும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தையைப் பிரித்தெடுப்பதுபோல் கவனமாக என் குழந்தைப் பருவப் படத்தைப் பிரித்தெடுத்து, உயிர்கொடுத்து வழங்கினார். அதனை இன்றும் என் கண்ணெனக் காத்துவருகின்றேன்.

         மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடியபொழுதுதான் கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்கள் இவரின் அன்புத் தந்தையார் என்று அறிந்து என் வியப்புக்கு வரம்புகட்டத் தெரியாமல் அப்பொழுது தவித்தேன். பல இலக்கிய நிகழ்வுகளில் முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு, வணங்கியமையும் உரையாடியமையும் இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை
    ஆணைகள் இட்டே  யார் தடுத்தாலும்
    அலைகடல் ஓய்வதில்லை”

    என்ற அரசகட்டளை திரைப்படத்தின் பாடலை இயற்றியும், “நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!” என்ற பாடலை இயற்றியும் பெருமைக்குரிய கவிஞராக அனைவராலும் அறியப்பட்டவர் ந. மா. முத்துக்கூத்தன் ஐயா என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன். புகழ்பெற்ற திரைக்கலைஞர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி, “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன், எம்.ஆர் இராதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், எஸ்.எஸ்.இராசேந்திரன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர் இவர். அரசகட்டளை, நாடோடிமன்னன், இராஜராஜன் (எம்.ஜி.ஆர்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய “கலைமாமணி” ந. மா. முத்துக்கூத்தன் ஐயா அவர்களைத் தனித்துக்கண்டு அவர்தம் சீரிய பணிகளை எழுத முன்பே நினைத்திருந்தேன். என் விருப்பம் நிறைவேறுவதற்குள் ந.மா. முத்துக்கூத்தனார் 2005 மே 1இல் இயற்கை எய்தினார். இது நிற்க.

         கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்களின் அருமைப் புதல்வராக மு. கலைவாணன் பிறந்து வளர்ந்ததால் தந்தையாரின் கலையுணர்வு, கவிதையுணர்வு இவருக்கும் மரபுக்கொடையாகக் கிடைத்தது. எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், ஓவியர், சிறந்த கையுறைப் பொம்மலாட்டக்கலைஞர், வில்லுப்பாட்டுக் கலைஞர் என்ற பன்முகம் கொண்டவர் மு. கலைவாணன்.

         மு.கலைவாணன் மிகச் சிறந்த ஓவியர் என்பதை அறிந்து பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா அவர்களின் எங்கள் வீட்டுச் சேய்கள் நூலுக்கு உரிய அட்டைப்படம், உள்படம் வரைவதற்கு, வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டுக்குப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் அழைத்துச்சென்று பயன்கொண்டேன். புதுச்சேரிக்கு வந்தபிறகு மு. கலைவாணனுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அருகியே இருந்தது. அண்மையில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலொன்றை எழுதியபொழுது மு. கலைவாணன் நினைவு நெஞ்சில் வந்து தொற்றிக்கொண்டது. அவர்தம் திறமையை நீள நினைந்து, அவர்தம் ஆற்றலை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து எழுதுவதில் மகிழ்கின்றேன்.

         கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன், மு. மரகதம் ஆகியோரின் அருமைப் புதல்வராக மு.கலைவாணன் 20.11.1957 இல் பிறந்தவர். “கலைவாணர்” என்.எசு. கிருட்டினன் அவர்களின் மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் நம் முத்துக்கூத்தனார்.

         மு.கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் – தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

         மு.கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலைநிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக்கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

         சென்னை, பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், “கலை மாமா” என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54 ஐயும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

         மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளார். இலங்கைக்கு 2008ஆம் ஆண்டு சென்று, அங்குள்ள தேயிலைத் தோட்டப்பகுதியில் கலைநிகழ்வுகளை நடத்தி வந்துள்ளார். கலை அறப்பேரவை, கலைவாணன் பொம்மலாட்டக் கலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நிறுவித் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். பல இடங்களில் வில்லுப்பாட்டுப் பயிற்சி முகாம், பொம்மலாட்டப் பயிற்சி முகாம்களை நடத்தி இக்கலைகள் வளர்வதற்கு அருந்தொண்டாற்றியுள்ளார்.

         ஆழிப்பேரலையால் தமிழகத்துக் கரையோர மக்கள் கவலையில் மூழ்கி, கண்ணீருடன் வாழ்ந்தபொழுது, இவரின் பொம்மலாட்ட நிகழ்வுகள் கன்னியாகுமரி முதல், சென்னைவரை நிகழ்ந்து, அவர்களுக்கு மன ஆறுதலையும், துன்ப மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    மு.கலைவாணன் பெற்ற விருதுகள்:
         இலக்கிய வீதி அமைப்பு இவரின் பணியைப் பாராட்டி, சிறந்த பொம்மலாட்டக் கலைஞருக்கான விருதினை 1998இல் வழங்கியது. தாராபாரதி அறக்கட்டளை 2002இல் ’பல்கலை வித்தகர்’ விருதினை வழங்கியது. குரோம்பேட்டை திருக்குறள் பேரவை 2010இல் ’கலைஞாயிறு’ என்ற விருதினை வழங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ’கலைஞர் பொற்கிழி விருதினை’, 2004ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் உரூபாயுடன் வழங்கிப் பாராட்டியுள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 2015இல் ’பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டியுள்ளது.

    மு.கலைவாணன் நூல்கள்:

    1. கதை கேளு
    2. பாடலாம் வாங்க
    3. அன்புள்ள குழந்தைகளுக்கு (மரம் வளர்ப்பு)
    4. முகமூடி
    5. நீர் இன்றி (நீர் மேலாண்மை)
    6. யார் வந்தது? (சுற்றுச்சூழல்)
    7. சின்னச் சின்ன கதைகள் (உருவகக் கதைகள்)

         தமிழர் மரபு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழிச் சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்க்கலை வளர்ச்சி, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை குறித்துப் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைவடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் மு. கலைவாணன் அவர்களை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் பிள்ளைகளுக்கு இவர் வழியாக, இக் கலைவடிவங்களைக் கற்றுத் தருவதற்குரிய வாய்ப்புகளையும் சூழல்களையும் அமைத்து, வாழும் காலத்தில் இவரைப் போற்றுவது நம் கடமை.

    *****

    மு. கலைவாணன் தொடர்புக்கு:

    மு.கலைவாணன்,
    கூத்தர் குடில்,
    58/89 செல்லியம்மன்கோவில் தெரு,
    காட்டாங்குளத்தூர்,
    காஞ்சிபுரம் மாவட்டம் – 603 203
    பேசி: 9444147373

    Share
  • இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

    ????????????????????????????????????

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட்டது.

         மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    Blog 7

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை,     மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் மு.இளங்கோவனுடன் பகிர்ந்துகொண்டனர். விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் மு.இளங்கோவன் ஏற்றுக்கொண்டார்.

    Blog 10

         07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

         இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

         யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

         சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    Blog 9

         இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

         கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    Share
  • விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீடு!

    amu

    amu1

    இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் துறவறப் பயிற்சி பெற்ற, தமிழ் மாமுனிவர், பேராசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி இன்று (09.05.2017) மாலை புதுச்சேரியில் அமைந்துள்ள திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் சுவரொட்டியை வெளியிட, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன் பெற்றுக்கொண்டார். புரவலர் தூ. சடகோபன், பாவலர் சீனு. தமிழ்மணி, பாவலர் சீனு. தமிழ்நெஞ்சன், திரு. திருவாசகம், ஓவியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் சுவரொட்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

    பணிவுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    Share
  • திருப்பூரில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு!

    ama

    தமிழிசைக்குத் தம் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலண்டன், குவைத்து, இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் திரையிடப்பட்டதுடன் புதுச்சேரி, சென்னை, பாளையங்கோட்டை, திருவண்ணாமலை, கோபி, குடந்தை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருவையாறு, கடலூர் உள்ளிட்ட தமிழகத்துப் பேரூர்களில் திரையிடப்பட்டு, தமிழிசை ஆர்வலர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் அண்மையில் திருப்பூரில் திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்களின் பெருமுயற்சியால் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூரிலும் அருகில் உள்ள ஊர்களிலும் வாழும் தமிழார்வலர்கள் ஐம்பதின்மர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையிடலுக்குப் பெருமை சேர்த்தனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில் மாலை 7 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் உரையாற்றினார். ஆவணப்படத்தை உருவாக்கிய முனைவர் மு.இளங்கோவன், ஆவணப்படம் உருவான வரலாற்றையும் தமிழ் இலக்கிய உலகிற்கு இப்படத்தின் தேவையையும் நினைவுகூர்ந்தார். திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தொழிலதிபரும், தமிழ் வள்ளலுமான திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்கள் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. இராஜா. எம். சண்முகம் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. விஜயகுமார், முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு திரையிடல் தொடங்கியது.

    நிகழ்ச்சியின் நிறைவில் திரு. இராஜா. எம். சண்முகம் அவர்கள் ஆவணப்படத்தைப் பார்த்துத் தாம் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆவணப்படத்தின் சிறப்பினை எடுத்துக்கூறி, ஆவணப்படம் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.  திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி. கே. செல்வராஜ் அவர்கள் அமெரிக்காவின் பெட்னா விழாவில் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியதை நினைவூட்டித் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டுவதற்குரிய வழிமுறைகளை விளக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த திரு. ஈஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்தில் வெளிப்பட்டு நிற்கும் கலைநுட்பத்தையும், தமிழிசைச் சிறப்பையும் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியின் நிறைவாகப் பெரும்புலவரும், குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகியவரும், சைவ இலக்கியச் செம்மலுமாகிய சொக்கலிங்கனார் அவர்கள் ஆவணப்படத்தில் மூழ்கித் திளைத்த தம் தமிழ் இசை ஈடுபாட்டை விளக்கி, குடந்தை ப.சுந்தரேசனாருடன் தாம் பழகிய நாளினை நினைவூட்டி அரியதோர் உரை நிகழ்த்தினார். தமிழறிஞர்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் ஊக்க மொழிகளும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூரில் மீண்டும் திரையிடலுக்கு வழி செய்துள்ளது.

    Share
  • கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த சிறப்புரை

    மு.இளங்கோவன்

    ஈரோடு  மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள  பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 03.01.2017 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையும், செய்முறைப் பயிற்சியும் நடைபெற உள்ளன. புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையாற்றுகின்றார். அருகில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொள்ள இயலும்.

    கோபிசெட்டிப்பாளையத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் புலவர் மா. அரசு நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

    பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப. சுந்தரேசனாரை ஆதரித்த பெருமக்கள் கொங்கு மண்டலப் பகுதியில் மிகுதியாகும். புன்செய்ப் புளியம்பட்டியைச் சேர்ந்த தமிழன்பர்கள் குடந்தை ப. சுந்தரேசனாரை அழைத்து அவர்தம் தமிழ்ப்பணிக்கு உதவியுள்ளனர். பஞ்சமரபு நூல் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த வேலம்பாளையம் வித்துவான் வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஓலையிலிருந்து பெற்றே பதிப்பிக்கப்பட்டது. இத்தகு பெருமைக்குரிய கொங்கு மண்ணில் ப.சு. ஆவணப்படம் திரையிடப்பட உள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

    கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தமிழன்பர்கள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

    தொடர்புக்கு: திரு. அரசு தாமசு ஆசிரியர் அவர்கள் 9842097878

    Share
  • தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு!

    மு.இளங்கோவன்

    தஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம் மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    a2

    நிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட, பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

         நூலாசிரியர்கள் இரவிச்சந்திரன், கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர். சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.     எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    a1

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:

    இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.

    Share
  • தனித்தமிழ் இயக்கம் குறித்து அறிஞர்கள் உரைகள்

    வணக்கம்
    தனித்தமிழ் இயக்கம் குறித்து அறிஞர்கள் தங்கப்பா, இரா. இளங்குமரனார் ஆற்றிய உரைகளைக் காணொளியாக இணைத்துள்ளேன்.

    அன்புகூர்ந்து காணவும்.
    தங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுகின்றேன்.

    ம.இலெனின் தங்கப்பா
    https://www.youtube.com/watch?v=YqgRtO7MSL4&feature=youtu.be

     

    இரா. இளங்குமரனார்
    https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg&feature=youtu.be

     

     

     

    பணிவுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    முனைவர் மு.இளங்கோவன்
    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    K. M. Centre for Postgraduate Studies,
    Government of Puducherry,
    Puducherry-605 008, India

    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com
    cell: +91 9442029053

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு

    அன்புடையீர் வணக்கம்

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு நேற்று நடைபெற்றது.
    அறிஞர் தெ.முருகசாமியின் உரையைத் தாங்களும் கேட்டு மகிழலாம்.

     

    தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

    பணிவுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா
    0091 9442029053

    Share
  • புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு

    a1

    புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு :
    பன்னாட்டுக் கணினி, இணைய அறிஞர்கள் வருகை

    புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வரும் செப்டம்பர் 19, 20, 21(வெள்ளி,சனி,ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகத்தில் (Cultural Complex) இந்த மாநாடு நடைபெற உள்ளதாக மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் மு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஆராய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) என்ற அமைப்பு உள்ளது. இது அமெரிக்காவில் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பு ஆகும். இதில் உலகம் முழுவதும் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்கலைக்கழகங்களுடனும், தமிழக அரசுடனும் இணைந்து இதுவரை உலகின் பல பாகங்களில் 12 மாநாடுகளை நடத்தியுள்ளது. பதின்மூன்றாவது மாநாடு புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகின்றது.

    இதன் தொடக்க விழா 19-09-2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் ந. ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். உத்தமம் அமைப்பின் தலைவரும் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வாசு. அரங்கநாதன் அனைவரையும் வரவேற்க உள்ளார். சுவிசர்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நோக்கவுரையாற்ற உள்ளார்.

    புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருட்டிணமூர்த்தியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் உத்தமம் ஆலோசகரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் சிறப்புரையாற்ற உள்ளார். புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருட்டிணன், காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பேராசிரியர் முனைவர் எல். இராமமூர்த்தி வாழ்த்துரை வழங்க உள்ளனர். உலகத் தமிழ் இணைய மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவரும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்ப் பேராசிரியருமான மு.இளங்கோவன் நன்றியுரை ஆற்ற உள்ளார்.

    புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்சு, செர்மனி, ஹாங்காங்கு, செகோஸ்லேவியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தர உள்ளனர். ஆய்வறிஞர்கள் 100 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்க உள்ளனர். ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டை ஒட்டிச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

    உலகத் தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றது. ஆய்வரங்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் நடைபெறுகின்றது. இந்த ஆய்வரங்கில் ஆய்வாளர்கள் 100 பேர் ஆய்வுக் கட்டுரை படைக்க உள்ளனர். பேராசிரியர் ந. தெய்வசுந்தரம், பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டினன், அ.இளங்கோவன், பேராசிரியர் செல்வகுமார்(கனடா) ஆகியோர் சிறப்பு உரையரங்குகளில் பேச உள்ளனர். அதே நாள்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தித்திடல் அருகில் உள்ள கைவினைப் பொருள் கண்காட்சிக்கூடத்தில் கணினித்திருவிழா என்ற பெயரில் மென்பொருள், கணினிக் கண்காட்சியும் மக்கள் அரங்கமும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் முன்னணிக் கணினி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை மக்களுக்குப் பார்வைக்கு வைக்க உள்ளன.

    மக்கள் அரங்கில் கணினி, இணையத் தன்னார்வலர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கணினி, இணையம் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள். தமிழ்த்தட்டச்சு செய்வது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, வலைப்பதிவு(பிளாக்) உருவாக்குவது குறித்து, இணையத்தில் உள்ள இலவச மென்பொருள்களை அறிமுகம் செய்வது என்று மக்கள் அரங்கத்தின் பணிகள் இருக்கும்.

    மாநாட்டின் சார்பில் நடைபெறும் வலைப்பதிவு உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டும் நடைபெறுகின்றது. தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சிக்குப் பாடுபட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளனர். மாநாடு குறித்த செய்திகள் www.infitt.org என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு உலகத் தமிழ் இணைய மாநாட்டு உள்நாட்டுக்குழுத் தலைவர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    Share