இ. அண்ணாமலைகேள்வி-பதில்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 4

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

புதுச்சேரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மு.இளங்கோவன் எழுப்பிய கேள்வி:

தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்களை ஏற்பதில்லை; மொழியியல் அறிஞர்கள், தமிழறிஞர்களை ஏற்பதில்லையே? ஏன்?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு முதலானவற்றில் ஆய்வு செய்யும் தமிழறிஞர்களுக்கும் மொழியின் இலக்கணம், சமூகப் பயன்பாடு, மொழி மனத்தில் இயங்கும் விதம் முதலானவற்றில் ஆய்வு செய்யும் மொழியிலாளருக்கும் இலக்கணம் பொதுவான ஆய்வுப் பொருள். ஆயினும் இருவரும் மொழியைப் பார்க்கும் பார்வையில் சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. இது ஒருவர் ஆய்வை மற்றவர் ஏற்பதில் பிரச்சனை ஏற்படுத்துகிறது.

மொழியிலாளர்களுக்கு எல்லா மொழிகளும் சமம். ஒரு மொழியின் எல்லா வகைகளும் சமம். எல்லாமே இலக்கணம் சார்ந்தே பயன்படுத்தப்படுகின்றன. இலக்கணம் சிதைந்த மொழியோ, மொழி வகையோ இல்லை. எழுத்துத் தமிழிற்குப் போலவே பேச்சுத் தமிழுக்கும் இலக்கணம் இருக்கிறது. இரண்டின் இலக்கணத்திலும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் இலக்கண வேறுபாட்டை இலக்கணச் சிதைவு என்று சொல்வது தவறாகும். தமிழ் மொழியிலாளர் பேச்சுத் தமிழுக்கும், தமிழின் கிளை மொழிகளுக்கும் இலக்கணம் எழுதலாம். தமிழறிஞர்களுக்கு இது ஒப்புக்கொள்ள முடியாத செயல். ஏனென்றால் எழுத்துத் தமிழ், படிப்பறிவு உள்ளவர்கள் பயன்படுத்தும் மொழி; அதனால் ஒழுங்குமுறை கொண்டது; உயர்ந்தது. பேச்சுத் தமிழ், பாமரர்கள் பயன்படுத்தும் மொழி; ஒழுங்குமுறை அற்றது; அதனால் இலக்கணம் எழுத அருகதை அற்றது.

இந்த வேறுபாடு இலக்கணம் பற்றிப் புரிதலில் இரு பிரிவினருக்கும் உள்ள வேறுபாட்டிலிருந்தும் பிறக்கிறது. மொழியிலாளர்கள் இலக்கணத்தை ஒரு வரையறுக்கும் வாய்பாடாகப் (formula) பார்க்கிறார்கள், வட்டத்திற்கு ஒரு வாய்பாடு இருப்பதைப் போல. தமிழறிஞர்கள் இலக்கணத்தைச் சரியான – அதாவது சமூகத்தின் மேல்மட்டத்தினர் ஏற்றுக்கொள்ளும் – மொழிப் பயன்பாட்டைச் சொல்லும் – விதியாகப் பார்க்கிறார்கள், உடை அணியப் போடும் விதிகளைப் போல.

இவை இரண்டும் மொழி, இலக்கணம் பற்றிய கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு. இதைத் தவிர, இரு பிரிவினருக்குமிடையே உள்ள நம்பிக்கையின்மைக்குச் சில சமூகக் காரணங்களும் இருக்கின்றன. தமிழுக்கு நீண்ட இலக்கணப் பாரம்பரியம் உண்டு. அந்த மரபிற்கு ஒரு மாற்றை ஏற்றுக்கொள்ள எதிர்ப்பு இருக்கும். மரபு மாற்றம் ஆய்வில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியிலாளரின் தமிழ் இலக்கண ஆய்வில் பெரும் பகுதி ஆங்கிலத்தில் நடக்கிறது. தமிழறிஞர் சிலர் தங்களுக்குத் தெரிந்த இலக்கணத்தை ஆங்கிலத்தில் சொல்லுவதே மொழியியல் என்று நினைத்து அதைப் புறக்கணிக்கிறார்கள். மொழியியலுக்குத் தனித் துறைகள் அறுபதுகளில் தோன்றித் தமிழ்த் துறைகளிடையே ஒரு போட்டி உணர்வைத் தோற்றுவித்தன.

மரபு வழித் தமிழ் இலக்கண ஆய்வுக்கும் புதிய மொழியியல் வழியான தமிழ் இலக்கண ஆய்வுக்கும் கொடுக்கல் வாங்கல் பொதுவாக இல்லையென்றாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று கற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. மரபிலக்கணப் பயிற்சி பெற்ற சில மொழியியல் அறிஞர்கள் மொழியியல் கண்ணோட்டத்தில் மரபிலக்கணத்தை மறுபரிசீலனை செய்வது போல, மரபிலக்கண அறிஞர்கள் அதன் கண்ணோட்டத்தில் மொழியியல் முன்வைக்கும் தமிழ் இலக்கணக் கருத்துகளை அறிவுபூர்வமாக விமரிசிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் ஏற்றுகொள்ளாமல் விலகியிருப்பது தமிழ் இலக்கணத்தின் உண்மைகளைக் கண்டறிவதிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். மரபுக் கவிதையும் புதுக் கவிதையும் ஒன்றையொன்று புறக்கணிக்காமல் ஊடாடினால் தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேரும். அதே போல, மரபு இலக்கணமும் புத்திலக்கணமும் ஊடாடினால் தமிழ் இலக்கணம் பற்றிய நம் அறிவு நுட்பம் பெறும்.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார்.)

மேலும் படியுங்கள்:

பேராசிரியர் இ.அண்ணாமலை உடன் இ-நேர்காணல்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 1

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 2

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 3

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க