கணம்தோறும் வியப்புகள்
விப்ரநாராயணன்
தென்னங் கீற்றிடைத் தோன்றும் ஒளியும்
விண்ணில் தோன்றும் வான வில்லும்
கண்ணில் கசியும் காமத் துளிகளும்
எண்ணி நொடியில் மறந்த சொற்களும்
மின்மினிப் பூச்சியின் மின்னல் வாழ்வும்
நுண்ணிய அணுவில் நுண்துகள் ஓட்டமும்
மண்ணில் காணும் கரோனா ஆட்டமும்
மழையில் தோன்றும் காளான் கூட்டமும்
அழைப்பை விடுக்கும் அணங்கின் சேட்டையும்
வழவழா தரையில் வழுக்கி வீழ்தலும்
எழுந்தான் மறைந்தான் என்று கேட்டலும்
தொழுதான் தரையில் கிடந்தான் என்றலும்
மதுவில் மயங்கி மக்கள் வீழ்தலும்
இதயத் துடிப்பும் இதயம் நிற்பதும்
உதய சூரியன் உதிக்கும் அழகும்
புதிய திருப்பம் புத்துயிர் கொடுத்தலும்
விதியை மாற்றும் அதிரடி நிகழ்வும்
கதவின் பின்னே காணும் முகமும்
பதவி மோகத்தில் பதறி வீழ்தலும்
கண்டதும் காதலும் கொண்டதும் மறுத்தலும்
அண்டத்தில் நிகழும் இயற்கையின் சீற்றமும்
பிண்டத்தில் நிகழும் உயிர்த் தோற்றமும்
பணத்தைக் கண்டால் பறிபோகும் கற்பும்
மணத்தைக் கண்டால் மயங்கும் மனிதனும்
கண்ணன் பார்வையில் உதித்த கீதையும்
கனவில் தோன்றும் காதல் காட்சியும்
உலையில் புரளும் உலைக்குமிழ் காட்சியும்
மலையில் தவழும் மேகக் கூட்டமும்
கறவை மாடுகளின் கத்தும் ஒலியும்
பிறந்த குழவியின் முதலழு குரலும்
பறவைகள் விண்ணீல் பறந்து மறைதலும்
பரவையில் மீன்கள் பரப்பில் தோன்றலும்
பிரசவ வலியில் பிறக்கும் உறுதியும்
மரண நிகழ்வில் மயான உறுதியும்
குடும்பத் தொல்லையில் குதிக்கும் உறுதியும்
திடுமெனத் தோன்றும் தற்கொலை நிகழ்வும்
மூச்சு இழுத்தலும் மூச்சு விடுதலும்
பேச்சு வருதலும் பேச்சு நிற்றலும்
நங்கையின் நாணமும் மங்கையின் மயக்கமும்
தங்கையின் பரிவும் சிங்கத்தின் சீற்றமும்
பள்ளியில் மாணவன் பயிற்சியில் உறக்கமும்
பள்ளி விட்டபின் மாணவன் மறைதலும்
விந்தைப் பூச்சியின் விதவித நிறமும்
அந்தி வானத்தின் அழகிய நிறமும்
புந்தியில் தோன்றும் புதிய கவிதையும்
கடலில் அலைகள் குதிப்பதும் போவதும்
உடலில் நீர்கள் உறுப்பில் சுரத்தலும்
கருத்து உதிப்பதும் கதைகள் பிறப்பதும்
விருத்தப் பாக்கள் தோற்றமும்என்
கருத்தில் உதித்த கணத்தின் வியப்பே
(வானவில் பண்பாட்டு அமைப்பு நடத்திய உலகக் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை)