ஒரு போஸ்ட் பொக்ரான் ஷெனோரியா (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

0

முனைவர் நா.தீபாசரவணன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி: மலையாளம்
தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

என்னுடைய பேரு தயாவந்தி”, தொலைக்காட்சி கேமராவுக்கு நேராகப் பார்த்துக்கொண்டு அவள் தடுமாறாமல் கூறினாள்,” எனக்கு மூணு புள்ளைகள். மல்லிகா, மதுரிகா, பிரவீன், அவுங்க அப்பா ஆதித்யா ஆப்தெ.

சென்ற மார்ச் மாதம் எங்களைப் பொறுத்தவரை துன்பங்கள் நிறைந்த மாதம். மார்ச்சில் தான் நான் விதவையானேன். என் கணவரை யார் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. நான் என் புள்ளகளயும் அழச்சிட்டு பல முறை போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்கிட்டேன். சந்திரகாந்த் ஷெட்டி, ஏகநாத் சவான். இவங்க ரெண்டு பேரும்தான் கொன்னாங்கன்னு சப் இன்ஸ்பெக்டர் கிருபாஷங்கர் மைத்ரனிடம் பலமுறை கூறினேன். அவங்கதா குற்றம் செய்தாங்கனு சொல்றதுக்கு ஆதாரம் இல்லை என்பது தான் இன்ஸ்பெக்டரோட கருத்து. இது அநியாயமில்லையா? நான் அவருக்குப் புரிய வைக்க பலமுறை முயற்சி செய்து பார்த்திட்டேன். நேத்து கூட நான் அவரைப் பார்க்கப் போனேன். அவருக்கு ஒரு மாற்றமுமில்லை. அவருடைய நெற்றியில் குங்குமப் பொட்டைப் பார்த்ததுமே நான் எல்லாக் கடவுளையும் வெறுத்துவிட்டேன்.

நீங்க சொன்னது சரிதான். இதெல்லாம் எனது தனிப்பட்ட சமாச்சாரங்கள். ஆனா, நீங்க முதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி இந்த விஷயங்கள விமர்சிக்காமல் இருக்க முடியாது. கணவன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் நான். எனக்கு மூணு புள்ளகளையும் கவனிக்கணும். கூடவே கொலை செய்யப்பட்ட என் கணவருக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடவும் வேண்டும். அவர் கொல்லப்படுவதற்கான சந்தர்ப்பத்தை விளக்க நீங்க எனக்கு அனுமதி தரணும்.

நாங்கள் பேள் மான்ஷன் என்ற பெயருள்ள கட்டடத்தில் வசித்து வந்தோம். இரண்டாவுது மாடியில், ஒன்பதாம் எண்ணிட்ட வீடுதான் எங்களுடையது. அதில் ஒரு ஜன்னலுக்குக் கீழாக ஒரே ஒரு கொய்யாமரம் வளர்வதை மல்லிகாதான் பார்த்தாள். அது வளர்ந்து எங்களது ஜன்னல்வரை வந்தது. ஒரு நாள் மல்லிகா ஜன்னல் வழியாக கைவிட்டு ஒரு கொய்யாவைப் பிடுங்கினாள். அன்றைக்கு அப்படியொரு மகிழ்ச்சி. எங்களுக்கு இத்தகைய சின்னச் சின்ன சம்பவங்களே எங்க வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தும். அதனால்தான் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளுக்குக்கூட நாங்க ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தோம்.

பேள் மான்ஷன் மிகப் பழைமையான கட்டடம். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு பேய்வீடு போலத் தோன்றும். சிலர் அதை ‘கோஸ்ட் மான்ஷன்’ என அழைப்பர். கட்டட உரிமையாளர் சமீர் இராணி,  கட்டடத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட சிறு பழுது வேலைகளைக் கூட செய்யவில்லை. தண்ணீர் சப்ளை கூட அடிக்கடி தடைபடும். யாரவது புகார் சொன்னா இராணி காலி பண்ணச் சொல்லீருவாங்க. அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் பல வருடங்களாக அங்கேயே தங்கியிருப்பவர்கள். வேறொரு புகலிடம் அவர்களுக்குத் தெரியாது.

அதற்கிடையில் சமீர் இராணி, இங்கிலாந்திற்கு சென்று அங்கேயே வசிக்கப் போகிறார் என்ற செய்தி பரவியது. பேள் மான்ஷனில் வசிப்பவர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு அதப்பத்தி விவாதித்தாங்க. கட்டடத்தின் அதிகார உரிமையைக் கை மாற்றுவது குறித்து சமீர் இராணியுடன் பேசுவதற்காக விநாயக் மாத்ரெ, சுயோக் சாவந்த் என்ற இருவரை அனைவரும் சேர்த்து நியமித்தனர். விநாயக் மாத்ரெவும் சுயோக் சாவந்தும் அந்தேரியில் ஒன்றாக பிசினஸ் செய்கிறவர்கள். அவர்கள் மிக்க சந்தோசத்துடன் அவ்வேலையை ஏற்றுக்கொண்டனர்.

”நிம்மதி! , இனி இருக்கறத அவங்க பார்த்துப்பாங்க” என் கணவர் கூறினார்.

வசிப்பிடத்தின் அதிகார உரிமை கிடைக்க வேண்டுமெனில் கையில் பணம் வேண்டுமே? நாங்க பணம் சேர்ப்பதற்கான முயற்சில இறங்கினோம். எங்க அப்பா கடைசி நாட்கள்ல கொஞ்சம் பணத்தைப் பேரன் பேத்திகளின் பேரில் போட்டு வைத்திருந்தார். அதை எடுத்தோம். எங்கிட்ட இருக்கற கொஞ்சம் நகைகளையும் விக்கறதுக்கு அவருக்கு விருப்பமில்லை. ஆனால் நான் கட்டாயப்படுத்தினதும் கேட்டுட்டாரு. சில நண்பர்களும் சரியான நேரத்துக்கு உதவனது ரொம்ப சந்தோஷம். மொத்தத்தில் குழம்பத் தேவையில்லை என்று எங்களுக்குத் தோன்றிற்று. எங்களைப் போலவே மற்றக் குடியிருப்போரும் தேடல் தொடங்கினர். சிலர் தொலைவில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றனர். சிலர் கடனளிக்கக்கூடிய தனியார் நிறுவனங்களை அணுகினர். கம்பெனி, போன்ற இடங்களில் வேலை செய்கிறவர்கள் கடனுக்காக அப்ளிகேஷன் போட்டுவிட்டுக் காத்திருந்தனர். வசந்த் குல்கர்னியும், தீனநாத் மெஹ்தாவும் வர்லியிக்குப் போய் குதிரைப் பந்தயத்தில் தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதித்தனர். கேரளாவிலிருந்து வந்த ஒரு மேனோன் குடும்பம் ஊரில் உள்ள தனது பரம்பரை சொத்துக்களை விற்றுவிட்டு, காசுடன் நம்பிக்கையுடன் வந்தனர்.

பேள் மான்ஷனில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை மிக்க உற்சாகமான காலமாக இருந்தது. பனிக் காலத்திற்காக உணவு சேகரித்து வைக்கும் எறும்புகளைப் போல அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். எல்லோருடைய முகத்திலும் பிரகாசம் தெரிந்தது. நாங்க மதிப்பற்ற எதையோ அடையப் போகிறோம் என்று ஒவ்வொருவரும் நினைத்திருந்தோம்.

வசந்த் குல்கர்னியையும், தீனநாத் மெஹ்த்தாவையும் பந்தயக் குதிரைகள் ஏமாற்றவில்லை. சில போட்டிகள் அவர்களுக்கு நன்மை செய்தன.

சமீர் இராணி குடும்பத்துடன் இங்கிலாந்திற்குப் போயிட்டார் என்கிற செய்தியுடன் புள்ளகளோட அப்பா ஒரு மாலை நேரம் வந்தார்.

“ஒரு முடிவு எடுக்காமலா?” நான் ஆவேசத்தோடு கேட்டேன்.

விநாயக் மாத்தெரவும், சுயோக் சாவந்தும் சமீர் இராணியுடன் நடத்தின பேச்சுவார்த்தைகள் எதுவரை நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இராணியின் பயணம் எதிர்பார்த்ததுக்கும் முன்னாடியே அமைஞ்சதால பேள் மான்ஷனின் அதிகார உரிமை கை மாறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவாகவில்லை என்றும், உடன்படிக்கைகள் குறித்த விரிவான பேச்சுவார்த்தை இனியும் நடக்கவேண்டும் என்றும், அதற்காக ஆறு மாசத்திற்குள் இராணி மும்பைக்குத் திரும்பி வருவார் என்றும் அவர்கள் புரியவைத்தனர்.

”உங்களுக்கு அவசர வேலை இருக்கு இல்லையா? ஆனா நான் சொல்லி முடிக்கலையே!”

சமீர் இராணி, இங்கிலாந்திற்குச் சென்ற அடுத்த மாச வாடகையை யாருக்குக் கொடுக்கணும்னுங்கற குழப்பம் எங்களுக்குள் உருவாச்சு. அவர் வாடகை வசூலிக்கிற பொறுப்பை யாருக்கும் கொடுக்கல.

”என்ன ஆனாலும் நமக்கே உரிமையைத் தரப்போறாரு அதுவரை வாடகையும் வாங்க வேண்டாம்ன்னு நினைச்சிருப்பாரு”

கோபால் சித்ரை கூறினான்.

அவர் மூன்றாவது மாடியில் வசிப்பவர். மாட்டுங்காவில் ஒரு பேக்கரி நடத்துகிறார். இரண்டு நாள் கழித்து விநாயக் மாத்ரேவும், சுயோக் சாவந்தும் வசிப்பிடத்தை மாத்தினாங்க. தாதரில எங்கேயோ புதிய ஒரு கம்பெனி தொடங்கறதுக்குன்னு கேள்விப்பட்டோம் பேள் மான்ஷனில் அவங்க ரெண்டு பேரோட வீடும் சாத்தியிருந்துச்சு.

பிப்ரவரி முதல் வாரத்தில் ‘மாத்ரெ அண்ட் சாவந்த்’ என்ற நிறுவனத்தின் விளம்பர அறிவிப்பு ஆதித்யா ஆப்தேவின் பேருக்கு வந்தது. அதில் பேள் மான்ஷனின் உரிமையாளர்கள் விநாயக் மாத்ரேவும் சுயோக் சாவந்தும் சேர்ந்து உருவாக்கின நிறுவனம் என்று தெளிவாக இருந்தது. நாங்க கொஞ்ச நேரம் இருட்டுல அகப்பட்டது போலானோம்.

“இது ஏமாற்று வேலை, கொடூரமான ஏமாற்று?” என் கணவர் சத்தமிட்டுக் கூறினார்.

தாமதிக்காம வேறொரு நோட்டீஸ் வந்தது. பேள் மான்ஷனின் வசிப்பிடங்களின் வாடகை நான்கு மடங்கு அதிகரித்ததற்கான அறிவிப்பு.

“அவங்க நம்மள ஏமாத்தறாங்க. நாம இதுக்கு ஒத்துக்கக் கூடாது”.

கோபால் சித்ரெ, ஆஸ்துமாவின் இழுப்போடு கூறினார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மார்ச் முதல் வாரத்தில காலி செய்வதற்கான நோட்டீசும் வந்துச்சு. கட்டடத்தில நிறைய இடிச்சு  புதுமையா மாத்தணும் என்றும், வசிக்கறவங்க ஏழு நாள்ல காலி பண்ணணும் என்றும் நோட்டீஸ்ல இருந்துச்சு. அன்னைக்கே சந்திரகாந்த் ஷெட்டியும், ஏகநாத் ஷவானும் ஒரு பைக்கில பேள் மான்ஷனுக்கு வந்தாங்க. ஒரு பெரிய கூட்டத்தில சிக்கின அவங்கள நாங்க கேவலமாவும் பயத்தோடயும் பார்த்தோம்.

கீழ்த் தளத்தில படிக்கெட்டுக்குப் பக்கத்தில இருக்கற பெயர்ப் பலகையை அகற்றத்தான் வந்தாங்க. எந்தக் காரணத்துக்காகவும் அதை அனுமதிக்க மாட்டேனு என் கணவர் கூறினார். கோபால் சித்ரெவும், கமலெஷ் தேஷாயியும், தலால் பாபுவும் அவரோடு சேர்ந்து சத்தம் போட்டாங்க. எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் சத்தமிட்டதும் சந்திரகாந்த் ஷெட்டியும், ஏகாநாத் ஷவானும் வண்டில ஏறிக் கிளம்பிட்டாங்க. அதுக்கப்புறம் என் கணவர் எப்பவும் போல வேலைக்குப் போயிட்டாரு.

சாயங்காலம் நா பாத்தது வெடிகுண்டுகள் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிற, உயிர் போன என் கணவர் உடம்பை. நான் அதைக் கட்டிப் பிடிச்சு மறுபடியும் மறுபடியும் அலறினேன். மும்பை முழுசா என்னோட அலறல் கேட்டிருக்கும். அந்த நிமிஷத்தில எனக்கு நினைவு போயிடுச்சு. எனக்குச் சுற்றிலும் இருட்டா இருந்துச்சு. எனக்கு ஒண்ணுமே ஞாபகமில்லை.

கேட்கட்டுமா? பேள் மான்ஷன் என்கிற கட்டடத்தை நீங்க யாராவது பார்த்திருக்கீங்களா? இனி அத எப்பவுமே பார்க்க முடியாது. விநாயக் மாத்ரேவனுடையவும், சுயோக் சாவந்தியோடவும் ஆளுங்க அத மீதமில்லாம தகர்த்து ஒடச்சிட்டாங்க. அந்த இடத்தில் புதிய வசிப்பிடங்கள் கட்டற வேல துரிதமா நடந்திட்டிருக்கு. கட்டடம் கட்டும் வேலையோட சத்தம் சுற்றுவட்டாரமே முழங்குது. கான்க்ரீட் பொருட்கள் அங்க மலை போல கொட்டிக் கெடக்குது. எந்திரங்கள் முழங்குது.

என் கணவர் ‘பேள் மான்ஷன்’ இருந்த இடத்துக்குத் தட்டுத் தடுமாறி வந்து கம்பிகளுக்கும் கருங்கற்களுக்கும் சிமெண்ட் மூட்டைகளுக்குமிடையே நின்று பயத்தோட நான்கு பக்கமும் பார்த்து இரத்தத்தில் மூழ்கின இனிப்புப் பலகாரங்களையும் கையிலேந்தி புள்ளகள பேரு சொல்லி கூப்பிடற சத்தம் பல இரவிலயும் புள்ளகளோடு சேர்ந்து தூக்கம் வராமல் இருக்கும்போது நான் கேட்டிருக்கேன்.

இது  ஒரு சேரிப் பகுதி. நான் சோனாலி என்ற ஒரு பெண். ஆமாம் உங்களுக்குத் தெரிய வேண்டியது இதில்லை. பொக்ரைனில் நடந்த வெடி வெடித்த சம்பவத்தைக் குறித்த என்னோட கருத்தை.

புள்ளகளக் காப்பாற்ற நான் எப்போதிருந்து ஆண்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டுமென்று சோனாலி பொறுமையற்றுக் கேட்கிறாள்.

நீங்களோ? நீங்க எங்கிட்ட பொக்ரனைப் பற்றிக் கேட்கறீங்க………………………..”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.