குறளின் கதிர்களாய்…(352)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(352)

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.

– திருக்குறள் – 271 (கூடாவொழுக்கம்)

புதுக் கவிதையில்...

வஞ்சக மனங்கொண்ட
ஒருவனின்
பொய்யொழுக்கத்தைப்
பார்த்து,
அவனது
உடம்போடு கலந்திருக்கும்
ஐம்பூதங்களும் தம்முள்
ஏள்ளி நகைக்கும்…!

குறும்பாவில்...

வஞ்சக மனம் கொண்டவனின்
பொய்நடத்தை கண்டு அவன் உடலிலுள்ள
ஐம்பூதங்களும் தமக்குள் சிரிக்கும்…!

மரபுக் கவிதையில்...

உள்ள மதிலே வஞ்சத்துடன்
ஊரார் முன்னே நல்லவனாய்
கள்ளத் தனமாய் மறைத்தொழுகும்
கயவ னவனின் உடலதனின்
உள்ளே யொன்றாய்க் கலந்திருக்கும்
உயர்ந்த ஐந்து பூதங்களும்
எள்ளி நகைக்கும் தம்முள்ளே
இவனது பொய்ச்செயல் தனைப்பார்த்தே…!

லிமரைக்கூ...

வஞ்சம் மறைத்து பொய்யாய்
ஒழுகும் ஒருவனை அவனுடலின் ஐம்பூதங்களும்
தம்முள் நகைக்கும் மெய்யாய்…!

கிராமிய பாணியில்..

வேணும் வேணும் நல்லொழுக்கம்
வாழ்க்கயில வேணும் நல்லொழுக்கம்,
வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்..

வஞ்சக மனத்த மறச்சி
வெளிய நல்லவன் போல நடிச்சி
பொய்வாழ்க்க வாழுறவனப் பாத்து
அவனோட ஒடம்புல இருக்கிற
பஞ்சபூதங்களும் தமக்குள்ள
கேலிபண்ணிச் சிரிக்குமே..

அதால
வேணும் வேணும் நல்லொழுக்கம்
வாழ்க்கயில வேணும் நல்லொழுக்கம்,
வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்…!

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க