பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 33

1

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

ஒன்று என்ற சொல்லைக் கொச்சை வழக்கில் எழுதும்போது, ஒன்னு / ஒண்ணு என இரு வகையாக எழுதுகிறார்கள். இது போன்றே மூன்று என்பதை மூனு / மூணு என்றும் தோன்றுகிறது என்பதை தோனுது / தோணுது என்றும் எழுதுகிறார்கள். இவற்றில் எது சரி?

அண்ணாகண்ணன்

பதில்: பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்னும்போது அது தரமற்றது என்னும் பொருள் தொனிக்கிறது. கொச்சை வழக்கு என்னும் சொல்லைத் தரமற்ற பேச்சைக் குறிக்கப் பயன்படுத்தலாம். பேச்சே தரமற்றது என்னும் கருத்து மொழி பற்றிய தன்வயமான கொள்கையின் (ideology) அடிப்படையில் வருவது. பள்ளியில் படிக்கும் எழுத்து உயர்ந்தது, வீட்டில் படிக்கும் பேச்சு தாழ்ந்தது என்பது பரவலாக உள்ள மொழி பற்றிய ஒரு நம்பிக்கை. பரவலாக இருப்பதால் ஒரு நம்பிக்கை அறிவாதாரமானது என்று சொல்ல முடியாது.

மொழி வடிவங்களில் உயர்வு, தாழ்வு இல்லை. அவற்றின் உயர்வு, தாழ்வு மொழியைப் பயன்படுத்துபவர்களின் சமூக அந்தஸ்தைப் பொறுத்து அமைகிறது. பாமரரின் மொழி தாழ்ந்தது; கற்றோரின் மொழி உயர்ந்தது என்னும் கருத்து உருவாகிறது. வாழ்க்கையில் உயர்வடையக் கற்றோரின் மொழி தேவை என்னும்படி சமூக அமைப்பு இருப்பதால், அவர்கள் மொழிக்கு அந்தஸ்து கிடைக்கிறது. இது தனி மொழிகளுக்கும் பொருந்தும்; ஒரு மொழியின் வகைகளுக்கும் பொருந்தும். தரமான மொழி வகை என்று சொல்லும்போது சமூக அந்தஸ்து உள்ள மொழி வகை என்றே பொருள். மொழியின் வடிவத்துக்கும் தரத்துக்கும் தொடர்பில்லை. எழுத்துத் தமிழ் தரமானது என்னும் கருத்து அதற்குச் சமூகம் தரும் அந்தஸ்திலிருந்தே பிறக்கிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணர்களின் பேச்சு வழக்கு தரமானது என்னும் கருத்தில் சமூக உயர்வை நாடிய உயர் சாதியினர் அந்தப் பேச்சு வழக்கைத் தங்கள் பேச்சில் பிரதிபலித்தார்கள். பிராமணர்களின் சமூக உயர் நிலை மாறியபின் அவர்கள் பேச்சின் அந்தஸ்தும் குறைந்தது. இன்று தரமான பேச்சுத் தமிழ் பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் பேச்சை ஒட்டியே இருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் படித்தவர்கள் தங்களுக்கிடையே பேசும் பொதுப் பேச்சுத் தமிழ் உருவாகியது. இது வட்டாரம் சார்ந்த, சாதி சார்ந்த, தொழில் சார்ந்த வழக்குகளிலிருந்து தனிப்பட்டு நிற்பது. இதுவே தரமான பேச்சுத் தமிழ். இந்தப் பேச்சுத் தமிழுக்குச் சமூக அங்கீகாரம் கூடிவருகிறது. பொதுச் சமூகக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் இந்தத் தமிழ் பயன்படுகிறது. இது எழுத்து வடிவமும் பெறுகிறது. கதைகளில் வட்டாரம், சாதி சாராத பொதுநிலைக் கதை மாந்தர்களின் பேச்சு அவர்களுடைய உரையாடல்களில் எழுதப்படுகிறது. வார இதழ்களில் வம்புச் செய்திகளிலும் சிரிப்புத் துணுக்குகளிலும் பேச்சுத் தமிழை எழுதுவது பெருகிவருகிறது. திரைப்படங்களின் பெயரும், தினமலர் போன்ற சில நாளிதழ்களில் செய்தித் தலைப்புகளும் சில சமயம் பொதுப் பேச்சுத் தமிழில் இருக்கின்றன. கற்றுக்கொடுத்தலில் பேச்சுத் தமிழுக்கு இடம் சிங்கப்பூர் பள்ளிகளில் துவங்கியிருக்கிறது.

பேச்சு வழக்குச் சொற்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது முற்றிலும் புதிய வழக்கு அல்ல. இந்த வழக்கிற்கு அங்கீகாரம் அவ்வப்போது கிடைத்திருப்பதைத் தமிழ் மொழி வரலாற்றில் காணலாம். சில எடுத்துக்காட்டுகள்: குத்து (குற்று). கழிசல் (கழிதல்), இளிச்சவாயன் (இளித்தவாயன்), புடவை (புடைவை), பிஞ்சி (பிஞ்சு), இயக்குனர் (இயக்குநர்), பதிமூன்று (பதின்மூன்று), இருபத்திஒன்று (இருபத்தொன்று), முன்னூறு (முந்நூறு)

பொதுப் பேச்சுத்தமிழுக்குச் சமூக அங்கீகாரம் கிடைத்து, அதை எழுதும் தேவைகள் பெருகிவரும் வேளையில், இந்தத் தமிழுக்குத் தரமான எழுத்துக் கூட்டல் (spelling) உள்ள சொல்வடிவத்தை உருவாக்கிச் சமூகம் ஏற்றுக்கொளவது இன்றைய தேவை. இந்த நோக்கத்தில் மேலே உள்ள கேள்வியைப் பார்க்கலாம். எழுத்துத் தமிழ் பேச்சில் எப்படி மாறுகிறது என்பதில் நின்றுவிடாமல், பேச்சை எப்படி எழுதுவது என்று பார்க்கலாம்.

ஆனால், கேள்வி முதல் நோக்கத்தைக் கொண்டது. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் முறைப்பாடானவை; விதிகளுக்குள் அடங்குபவை. எழுத்தில் ன்ற் என்னும் ஒலித்தொடர் பேச்சில் மெல்லொலியாக இருப்பது ஒரு சமன்பாடு. இந்த ஒலித்தொடரின் முன்னுள்ள உயிர் நெடிலாக இருந்தால் மெல்லொலி தனித்தும் (மூன்று, தோன்று), குறிலாக இருந்தால் (ஒன்று, கொன்று, என்று) இரட்டித்தும் இருக்கும். இந்த மெல்லொலியின் ஒலித்தன்மை என்ன என்பதே கேள்வி. உச்சரிப்பைப் பொறுத்தவரை இந்த ஒலி னகரத்திற்கும் ணகரத்திற்கும் இடைப்பட்டது. இந்த ஒலிக்குத் தமிழ் எழுத்து இல்லை. இருக்கும் இரண்டு எழுத்துகளில் ணகரம் ஏற்புடையதாகக் கருதப்பட்டுப் பெருவழக்கில் இருக்கிறது (மூணு, தோணு, ஒண்ணு). சொல் வினையாக இருந்து குறில் இருந்தால் னகரம் பெருவழக்கில் இருக்கிறது (கொன்னு, ன்னு). சில கிளைமொழிகளில் (சேலம் வட்டாரப் பேச்சு இவற்றில் ஒன்று) னகர, ணகரம், லகர, ளகரம் இவற்றுக்கிடையே ஒலிப்பில் வேறுப்பாடு இல்லை. இந்தக் கிளை வழக்குகளை எழுதும்போது முதலில் உள்ள சொற்களை மூனு, தோனு, ஒன்னு என்று எழுதலாம்.

முன்னால் சொன்ன எழுதும் வழக்கையே பேச்சுத் தமிழின் தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவமாக ஏற்றுக்கொள்ளலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 33

  1. பே.அண்ணாமலை “தரமான மொழி வகை என்று சொல்லும்போது சமூக அந்தஸ்து உள்ள மொழி வகை என்றே பொருள்..” என்கிறார்.

    தற்காலத் தமிழில் பலர் உச்சரிப்பில் ழ இல்லை. அதற்கு பதில் ள/ல வருகின்றது. மேலும் ல , ள, ந, ண மாற்றுகள் பலர் பிரயோகத்தில் உள்ளன.

    இன்றைய இரண்டு உதாரணங்கள்:

    ஒரு டெலிவிஷன் செய்தி

    http://www.youtube.com/watch?v=vWf-tAjevQU&list=PLFC55914CEDCC2978&index=2&feature=plpp_video

    இரண்டாவது முல்லைப் பெரியாறு சம்பந்தமாக தமிழக இஞ்சினியர்கள் செய்த விடியோ டாகுமெண்டரி. http://player.vimeo.com/video/18283950?autoplay=1)%E0%AE 95 இவைகளும் தரமான பேச்சுத்தமிழில் சாருமா? இல்லையெனில் ஏன்.

    வ.கொ.விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *