நிலவொளியில் ஒரு குளியல் – 13
ஸ்ரீஜா வெங்கடேஷ்
வழக்கமாகப் பொங்கல் முடிந்தவுடன் வேறு எந்தப் பண்டிகையும் வராது என்பது மரபு. ஆனால் எங்கள் ஊரான ஆழ்வார்குறிச்சியில் மார்ச் மாதம் அல்லது தமிழில் மாசி மாதம் ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடுவார்கள். நான் முன்பே கூறியிருந்தபடி எங்கள் ஊரில் ஒரு பெருமாள் கோயில் உண்டு. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்ற திருநாமம் கொண்ட பெருமாள் எழுந்தருளியிருக்கும் கற்கோயில். கோபுரம் இல்லாமல் வெறும் விமானம் மட்டுமே அமைந்த சிறிய திருக்கோயில். தாயாருக்கென்று தனியே சன்னதி கிடையாது. ஒரே ஒரு கருட வாகனமும் பெருமாளுக்கு நேர் எதிரே அமைந்த சக்கரத்தாழ்வார் சன்னதியும் உண்டு. கர்ப்பகிரஹம் தான் சிறியதே தவிர கோயிலின் பிரகாரங்கள் பெரியவை.
உட்பிரகாரம் மேற்கூரையில்லாத திறந்தவெளி. ஆனால் வெளிப் பிரகாரம் நிறையத் தூண்கள் நிறுத்தப்பட்டு, சற்று தாழ்வான மேல்தளமுள்ளது நீண்ட நெடியது. எங்கள் ஊர் அண்ணன்கள் உடற்பயிற்சி செய்யும் இடமாகவும் அவர்களே எங்களுக்குப் பாடம் சொல்லித் தரும் இடமாகவும் சற்று வயதான பாட்டிகள் உட்கார்ந்து, ஆற அமர ஊர்ப் பொரணி பேசுவதற்கும் ஏற்ற இடமாக அது இருந்தது. ஊர்ப் பொது விருந்து பரிமாறும் இடமாகவும் சமயங்களில் அதுவே சமைக்கும் இடமாகக் கூட உருமாறும். எல்லாம் எங்கள் தேவைக்கேற்ப நாங்கள் முடிவு செய்வதுதான்.
பாண்டியர் காலத்துக் கோயிலா? இல்லை நாயக்கர்கள் கட்டியதா? என்றெல்லாம் கேட்டால் இன்றளவும் பதில் தெரியாது. எனக்கு மட்டுமல்ல அந்தப் பதில்கள் எங்கள் ஊர்ப் பெரியவர்களுக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கோயிலின் வெளியில் நேர் எதிரே ஒரு மண்டபம் உண்டு. அந்த மண்டபத்தைப் பற்றி நான் முன்பே சில பத்திகளில் குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த மண்டபம் தான் எங்கள் விளையாட்டு அரங்கு. சுற்றிச் சுற்றி விளையாடுதல், குனிந்து விளையாட்டு, ஏறிக் குதித்தல் எனப் பல வகையான விளையாட்டுகள் அதில் விளையாடி இருக்கிறோம். கோயில் திருவிழா நாட்களில் அதுவே கச்சேரி மேடையாகப் பயன்பட்டது.
மீண்டும் ஸ்ரீராம நவமி உற்சவத்திற்கு வருகிறேன். அந்த உற்சவம், இராமர் பிறந்த தினத்தன்று தொடங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் நடந்து, சீதா கல்யாணத்தோடு நிறைவு பெறும். இந்தப் பத்து நாட்களும் பல விதமான கச்கேரிகள் நடக்கும். காலையில் பூஜை, பஜனை, பிரசாதம் விநியோகித்தல் இருந்தாலும் சாயங்கால பிரசாதம் தான் எங்களுக்குக் கிடைக்கும். ஏனென்றால் பகலில் பள்ளி நடக்குமே. விடுமுறை நாட்களில் போனால் ஏதேதோ பாட்டுகள் பாடி, நேரத்தைக் கடத்துவார்கள். பிரசாதம் தருவதற்குள் எங்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும். அதனால் நாங்கள் பகல் நேரப் பிரசாதத்தை விரும்புவதில்லை.
சாயங்கால வேளைகளில் விக்கிரமசிங்க புரத்திலிருந்தோ, கல்லிடைக் குறிச்சியிலிருந்தோ, அம்பாசமுத்திரத்திலிருந்தோ வந்து பாட்டுப் பாடுவார்கள். எல்லாம் சாமிப் பாட்டுதான். அபூர்வமாக திண்டுக்கல் அங்கிங்கு இசைக் குழுவினர் வந்து கச்சேரி செய்வார்கள். அந்த மாதிரி நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் கச்சேரி முடியும் போது இருப்பவர்கள் காது கேட்காத சுப்புப் பாட்டியும் கோயில் குருக்களும்தான். நாங்கள் எல்லோரும் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டி விடுவோம்.
முதல் ஒன்பது நாட்கள் இப்படிப் போகும் என்றால், பத்தாவது நாள் சீதா கல்யாணம். அன்று ஊர்ப் பொது விருந்து. காலையிலிருந்து எல்லோருக்கும் வேலை சரியாக இருக்கும். பெரியவர்கள் சமையல் மேற்பார்வை, தேவையானவற்றை வாங்கி வருவது, பூஜைக்கு வேண்டியவற்றை ஏற்பாடு செய்வது, என்று பரப்பாக இருப்பார்கள் என்றால் எங்களுக்கும் அதாவது குழந்தைகளுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகள் எக்கச்சக்கமாக இருக்கும்.
இந்த ஊர்ப் பொது விருந்துக்கான செலவு, மக்களிடமிருந்து வசூலித்துப் பெறப்படும். சில குடும்பங்கள் வேண்டுதல் காரணமாக குழம்புச் செலவு அல்லது பொரியல் செலவு என ஏதாவது ஒன்றுக்காகும் செலவை முழுமையாகக் கொடுத்து விடுவார்கள். சில வசதியான குடும்பங்கள் பாயசம், பருப்பு முதலான செலவை ஏற்றுக்கொள்ளும். என்ன செலவை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.
சிறுமிகளுக்குக் கோயில் பிரகாரத்தைப் பெருக்கும் பொறுப்பு என்றால், சிறுவர்களுக்கு அதைக் கழுவி விடும் பொறுப்பு வழங்கப்படும். இப்போது மாதிரி குழாயைத் திருகி தண்ணீர் பிடித்துக் கழுவ முடியாது. குளத்திலிருந்தோ, ஊர்ப் பொதுக் கிணற்றிலிருந்தோதான் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இந்தத் தூய்மைப்படுத்தும் வேலையே கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பிடிக்கும். காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பித்தோமானால், பாதி வேலை முடிவதற்குள் எங்களுக்குப் பசித்துவிடும். மீண்டும் வீட்டிற்குப் போய் ஏதாவது கொறித்து விட்டு வருவோம்.
சில சமயங்களில் ஊர் அத்தை இருந்தால் சுடச்சுட இட்லி, சாம்பார் கிடைக்கும். எங்கள் ஊரில் எல்லோரும் அவரை அத்தை என்று அழைத்ததால் அவருக்கு ஊர் அத்தை என்ற பெயர் நிலைத்துவிட்டது. சிறு வயதிலேயே விதவையானவர் அவர். அவருக்கென்று சொந்த பந்தம், குழந்தை, குட்டி என எதுவும் கிடையாது. எனவே எங்களைப் போன்ற சிறுவர்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். சமையல் வேலைக்காக வெளியூருக்கெல்லாம் போய் வருவார். யார் வீட்டில் விசேஷமென்றாலும் முதல் ஆளாகப் போய் நின்று உதவுவார். கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்வார். அந்த அத்தைதான் நாங்கள் பொது விஷயமாக வேலை செய்யும் போது எங்களுக்கு இட்லி, சாம்பார் விருந்து வைப்பார், அவர் ஊரில் இருந்தால்.
இந்தத் தூய்மைப்படுத்தும் வேலை தவிர, எங்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு ஒன்றும் அளிக்கப்படும். அது என்னவென்றால், கோயிலுக்கு வெளியில் வலது பக்கம் ஒரு பெரிய கல் தொட்டி இருக்கும். அது நிறைய நாங்கள் தண்ணீர் எடுத்து ஊற்ற வேண்டும். சாப்பிட்டவர்கள் கை கழுவ. இத்தகைய வேலைகள் நாங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகவே அன்று எங்களை பள்ளிக்கு விடுப்பு எடுக்க அநுமதிப்பார்கள்.
கல் தொட்டி என்றால் நல்ல கருங்கல்லால் ஆன பெரிய தொட்டி. பெரிய பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருக்குமே குளிக்கும் தொட்டி, அதை விடச் சற்று பெரியதாகவே இருக்கும் (நான் எங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பார்த்திருக்கிறேன்? எல்லாம் சினிமா தந்த ஞானம் தான்). அது நிறையத் தண்ணீர் நிரப்ப வேண்டுமானால் நாங்கள் எத்தனை குடம் சுமக்க வேண்டும்? எத்தனை முறை நடக்க வேண்டும்? என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன ஆறாம் வகுப்புக்குக் கொடுக்கப்படும் கணக்கு மாதிரி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? சும்மா உத்தேசமாக கற்பனை செய்து பார்க்கச் சொன்னேன் அவ்வளவு தான்.
நேர விரயத்தையும் உழைப்பு விரயத்தையும் தடுக்க சம்பத் ஒரு யுக்தி சொன்னான். அது என்னவென்றால் நாங்கள் (சிறுவர், சிறுமியர் இரு பாலரும்) வரிசையாகத் தொட்டியிலிருந்து குளம் வரை ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு நின்றுகொள்ள வேண்டியது. முதலில் இருப்பவன் அல்லது இருப்பவள், குளத்தில் தண்ணீர் மொண்டு அடுத்தவனிடம் கொடுக்க, அவன் அதற்கு அடுத்தவனிடம் கொடுக்க, இப்படி நீண்டு, தொட்டி பக்கத்தில் நிற்பவனிடம் கொடுக்க, அவன் தொட்டி வரை சென்று ஊற்ற வேண்டும். இது தான் ஏற்பாடு. சுருக்கமாக சொல்வதென்றால் விளையாட்டுப் போட்டிகளில் ரிலே என்ற ஒன்று உண்டல்லவா அதுபோலத்தான்.
அந்த ஏற்பாடு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, வசதியாகவும் இருந்தது. வேலை செய்த களைப்பே தெரியாது. எப்படி தெரியும்? பேச்சும் கேலியும் சிரிப்பும் பாட்டுமாக நண்பர்களோடு இணைந்து பணி செய்யும் இன்பம் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும். காலையிலிருந்து விடாமல் வேலை செய்தும் எங்களுக்கு கை வலியோ, கால் வலியோ வந்ததில்லை. கொடுத்த பொறுப்புகளையெல்லாம் முடித்து விட்டு, வீட்டுக் கிணற்றில் தண்ணீர் சேந்தியோ, இல்லை குளத்திலேயோ ஒரு முழுக்குப் போட்டு விட்டு வந்தால், சுடச்சுட இலை போட்டு எங்களுக்கு முதல் பந்தியில் பரிமாறுவார்கள். சுவையான அந்தச் சாப்பாட்டை நன்றாக ஒரு பிடி பிடிப்போம். அதன் பிறகும் ஓய்வாகத் தூங்காமல் பெரியவர்களுக்குப் பரிமார உதவுவோம்.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காது எங்கள் பெற்றோர்களும் எங்களை உதவ அநுமதிப்பார்கள். இன்றைய குழந்தைகளுக்கு அவரவர் புத்தகப் பையை எடுத்து வைத்துக்கொள்வதற்கும் உடைகளை அணிவதற்குமே பெற்றோர்களின் உதவி வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் நம் குழந்தைகள் ஊருக்காக வேலை செய்தால் தலையில் உள்ள கிரீடம் இறங்கி விடும் என நம்மில் பலர் நினைக்கிறோம். பிறகு எப்படி குழுவாகப் பணியாற்றும் தன்மையும் தலைமைப் பண்பும் வளரும்? இந்த மனப் போக்கிற்குக் காரணம் நம்மிடம் வளர்ந்து விட்ட வறட்டு கௌரவமா? இல்லை நம் பிள்ளைகளின் இயல்பான சோம்பறித்தனமா? என்று ஒரு பட்டிமன்றம் வைக்கலாம். தீர்ப்பு என்ன வருகிறதோ, அதற்குத் தகுந்த பரிகாரம் தேடலாம்.
இன்றும் எங்கள் கிராமத்தில் இவையெல்லாம் நடை பெறுகின்றனவா? இல்லை நகர நாகரீகம் அங்கேயும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டதா என அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன். தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து எழுதுங்களேன்.
நண்பர்களோடு கூடி வேலை செய்து, பாட்டுப் பாடி, உண்டு களித்து மகிழ்ந்த அந்த நாட்களை நினைத்துக்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்.
(மேலும் நனைவோம்…
=================================
படங்களுக்கு நன்றி – Rajan Vijayaraghavan
Very nice description about the temple and the festival. Very funny too. Good work madam.
ராம நவமி பற்றி அருமையாகச் சொன்னதற்கு நன்றி.
கிராமப்புறங்களில் ஏழை – பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் பொது நிகழ்ச்சிகளைக் கொண்டாடியது ஒரு காலம். அவையும் இப்பொழுது நகரங்கள் போல ஆகிவிட்டன. அங்கும் ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசங்கள் வந்துவிட்டன. இதனைக் காலத்தின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லிவிட முடியாது. இவை எல்லாவற்றுக்கும் இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளே காரணம். தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மொழிப் பிரச்சனை, ஜாதிப் பிரச்சனை, பணக்காரன் – ஏழை ஆகிய அஸ்திரங்களைக் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் தான் ஊரு இரண்டு படுகிறது. மக்கள் முழித்துகொள்ள வேண்டும்.
ஊருடன் சேருந்து வாழ் என்பதற்கு மிக நல்ல சம்பவம். பாராட்டுகள்.
Now village is also learning the city culture.They
lik the city trend and slowly opening the door for that..You have given a nice reminder to villagers.