தொலைக்காட்சியில் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் – ஒரு பார்வை

0

 

மோகன் குமார்

முன்பெல்லாம் டிவியில் தீபாவளிக்கு தான் சிறப்பு நிகழ்சிகள் இருக்கும். இப்போது எந்த விடுமுறை தினம் என்றாலும், மனிதர்களை கட்டிப்போடும் விதமாய் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. மே தின டிவி நிகழ்ச்சிகள் பற்றி ஒரு விமர்சனம் இதோ:

சன் டிவியில் சிரிப்பு கொண்டாட்டம் என ஒரு நிகழ்ச்சி. சின்னி ஜெயந்த் மற்றும் சொர்ணமால்யா இணைந்து வழங்கினர். பெரும்பாலும் மொக்கையாக இருந்தாலும், விஜயகாந்த் மாதிரி பேசியவர் சொன்ன காமெடி நல்லா இருந்தது ” என் துண்டை தோள் மேலே போட்டிருந்தேன்னா, பாக்கெட்டில் பத்து காசு இல்லை; அதை மறைக்க போட்டிருக்கேன்னு அர்த்தம். தலையை சுத்தி கட்டியிருந்தா குடை எடுத்துட்டுவர மறந்துட்டேன்னு அர்த்தம். இடுப்பில சுத்தி கட்டியிருந்தா வேட்டி லூசா இருக்கு கழண்டு விழுந்துடும்னு அர்த்தம்”

வடிவேலு, மக்களுடன் மண் பாண்டம் செய்யும் அனைத்து ஸ்டெப்களும் ஒவ்வொன்றாய் பார்ப்பதை சன் டிவியில் காண்பித்தது நன்றாய் இருந்தது. நடு நடுவே வடிவேலு ” என் காமெடி எது பிடிக்கும்? ” என அனைவரிடமும் கேட்டு ” தினம் சாயந்திரம் ஆனா என் காமெடி தான் பாப்பீங்க இல்லே?” என சுயமகிழ்ச்சி அடைந்து கொண்டது ஒரு புறம் இருந்தாலும், பானை செய்யும் விதத்தையும் அந்த தொழிலாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் காட்டியது அருமை.

விஜய் டிவியில் நண்பன் நூறாம் நாள் நிகழ்ச்சி பார்க்க சுவாரஸ்யம். விஜய்யின் படத்தை ஒருவர் இரு கைகளாலும் வரைய, நிகழ்ச்சியில் ஆடிய டீமும் செமையாக ஆடினர். சிவ கார்த்திகேயன் மற்றும் நீயா நானா கோபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சிவா செம அட்டகாசம் செய்து சிரிக்க வைத்தார். இவர் தொல்லை தாங்க முடியாமல் விஜய்” நீ தான் ஹீரோ ஆகிட்டேல்ல?அப்புறம் ஏன் இந்த வேலை எல்லாம் பாக்குறே?” என்று கேட்க ஏக சிரிப்பு! நடிகர் சத்யன் நண்பன் பட ஷூட்டிங்கின் போது தன தந்தை இறந்து விட, அதன் பின் சத்யராஜ் தான் தனக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும், தந்தை ஸ்தானத்திலும் இருப்பதாகவும் சொன்னது நெகிழ்வாய் இருந்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எடுக்கத் தவறிய காட்சிகள் சன் டிவியில் காட்டினர். மிக எதிர்பார்ப்புடன் பார்த்தாலும் அந்த காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யம் ஆக இல்லை. உண்மையில் சிரிப்பு வராத காட்சிகள் மேல் தான் கை வைத்து எடிட் செய்துள்ளனர். சந்தானத்தின் ஒரு டயலாக் மட்டும் தேறியது: ” என முன்னாடி உட்கார்ந்து குடிக்காதே நீ! பாட்டிலை முகர்ந்து பாத்துட்டு குடிக்கிறேன்னு சொல்றவன் என் முன்னாடி உட்கார்ந்து குடிச்சா, குடிச்சே மஞ்சா காமாலை வந்து செத்து போன என தாத்தா பெருமை என்னா ஆவறது?”

கலைஞர் டிவியில் எடிசன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி தரத்திலும் சரி எடுத்த விதத்திலும் சரி ரொம்ப சுமார். அதே கலைஞரில் எல்லா சீரியல் குடும்பத்திற்கும் மியூசிகல் சேர் நிகழ்ச்சி வைத்தனர். மற்றவர்களை ஏமாற்றி, தனக்கு முன் ஓடுபவரை விட சற்று தூரம் விட்டு (அப்போது தானே ஏதாவது ஒரு நாற்காலியில் உட்கார முடியும்?) ஓடுபவர் கடைசி ரவுண்ட் வரை வந்து சில நேரம் வெற்றியும் பெற்றனர்.

எடிட்டர் மோகனின் எழுபதாவது பிறந்த நாளை அவர் மகன்கள் ராஜா மற்றும் ஜெயம் ரவி திரை உலக பிரபலங்களை அழைத்து கொண்டாடியதை காட்டினர். இயக்குனர் ராஜா தன் தந்தை பிறந்த நாள் அழைப்பிதழை ஒரு பிலிம் துண்டில் அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பி, வியக்க வைத்து விட்டாராம்!

ஜெயா டிவியில் ” மின்சார சிக்கனம் அதிகம் செய்வது ஆண்களா? பெண்களா?” என்கிற தலைப்பில் ஒரு பட்டி மன்றம்! மின் சிக்கனம் பற்றிய இந்த பட்டி மன்றத்தை ஏற்பாடு செய்தது யார் தெரியுமா? தமிழ் நாடு மின்சார வாழிய ஊழியர்கள் ! தமிழ் நாட்டில் மின்சாரத்தை சரியான முறையில் அம்மா விநியோகிப்பதாகவும், மின் வாரியத்தின் பங்கு பாராட்டும் விதத்தில் இருப்பதாகவும் எல்லாரும் பேசினார். நோ கமண்ட்ஸ்!!

விஜய்யில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளி வர இருக்கும் ” வழக்கு எண் 18 /9 ” படம் குறித்து மிஷ்கின், வெற்றி மாறன், சமுத்திர கனி, பிரபு சாலமன், சசி உள்ளிட்ட பல இயக்குனர்கள் வந்து வாழ்த்து மழை பொழிந்தனர். அனைவரும் படம் பிரிவியூ ஷோ பார்த்து விட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். நாமும் பாராட்டும் படி உள்ளதா என்பது இன்னும் சில நாளில் ( மே 4 அன்று) தெரிந்துவிடும்.

காமிராமேன் ரவிவர்மன் ஜெயாவில் தன் அனுபவம் பகிர்ந்தது நன்றாய் இருந்தது. ஷங்கர், கமல், கெளதம் மேனன் போன்ற பிரபல இயக்குனர்/ நடிகர்களுடன் பணியாற்றிய வித்தியாசமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பெண் எந்த லைப் லைனும் எடுக்காமல் மூணு லட்சத்து இருபதாயிரம் ஜெயித்தார். பின் ஒரு கேள்விக்கு தவறாக பதில் தந்து அவுட் ஆகி விட்டார். லைப்லைனாவது பயன் படுத்தியிருக்கலாம்! இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சென்னை போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வந்திருந்தனர்.

சன் டிவி மதியம் ராஜ பாட்டை என்கிற மகா தோல்வி படம் போட்டது. அன்று மாலை முதலில் “போக்கிரி ” என அறிவித்திருந்தது சன் டிவி. பின்னர் விஜய்யில் நண்பன் வருவதால், அதற்கு சமமான புது படம் போட்டால் தான் எடுபடுமென சன்னில் காவலன் என மாற்றி விட்டார்கள்! (இந்த படம் வெளி வந்த போது தியேட்டர் கிடைக்காமல் செய்தவர்கள் இன்று தங்கள் சேனலில் அந்தப் படத்தை போடுகிறார்கள்! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !!)

ஒரே நேரத்தில் நண்பன், காவலன், விண்ணைத் தாண்டி வருவாயா மூன்றும் ஒளிபரப்பாக, முக்கியமாக நண்பனும் அதன் விளம்பர இடைவேளையில் பிற படங்களும் பார்க்கிற மாதிரி ஆயிற்று. நண்பனும் சரி, அதன் ஒரிஜினலான த்ரீ இடியட்சும் சரி எப்போது பார்த்தாலும் சில இடங்களிலாவது கண்ணீர் வராமல் போகாது. பத்து நிமிடத்துக்கொரு முறை ஐந்து நிமிட விளம்பரங்கள் வந்த போதும் கூட நண்பன் நெகிழ்த்தவே செய்தான்!

ஜெயா டிவியில் நடன இயக்குனர் ரகுவின் ஐம்பதாவது வருட திரை உலக வாழ்வுக்கு பாராட்டு விழா காட்டி விட்டு இரவு ஏழு மணி முதல் வழக்கமான சீரியல்களுக்கு போய் விட்டார்கள். ராஜ் டிவியும் கூட மாலை வழக்கமான சீரியல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது. சீரியல்கள் வந்ததும் பெண்கள் கைக்கு ரிமோட் போக ஆண்கள் வழமை போல் கணினிக்கு வந்து சேர்ந்தனர்.

இவ்வாறாக கழிந்தது தமிழர்களின் மே தினம்!

படத்திற்கு நன்றி :

http://www.tamilstar.net/news-id-raj-tv-sun-tv-21-09-113621.htm

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *