ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 5)

0

வெங்கட் நாகராஜ்

சௌசட் யோகினி மந்திர்

“[B]பேடா [G]காட்” –லிருந்து நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு குன்றின் மேலுள்ளது “சௌசட் யோகினி மந்திர்”. பாறையில் அமைத்திருக்கும் படிகள் வழியே சென்றால் நமக்குக் காணக் கிடைப்பது பத்தாம் நூற்றாண்டில் துர்கா தேவிக்கென அமைக்கப்பட்ட ஒரு அழகிய கோவில்.

கோவிலின் மேலே செல்ல கல்லாலான படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையிலிருந்து கீழே நோக்கினால் பாறைகளுக்கு நடுவே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை ”என்னையும் கொஞ்சம் பாரேன்” எனக் காதலோடு நம்மை அழைக்கிறாள்.

ஹிந்தியில் ”சௌசட்” என்றால் அறுபத்தி நான்கு. அறுபத்தி நான்கு யோகினிகள் பற்றி நிறையக் கதைகள் சொல்கிறார்கள். அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு இன்று நமக்கு விடையில்லை. அங்கிருக்கும் பல சிலைகளின் கீழே பெயர்கள் இருந்தாலும் சிலவற்றில் இல்லை. நிறைய சிலைகள் ஏதாவது ஓரிடத்தில் சிதிலம் அடைந்திருக்கிறது.

கல்சூரி ராஜாக்களால் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பல அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. பல சிதிலப்பட்டுப் போனாலும் இருக்கும் சில சிற்பங்களின் அழகைப் பார்க்கும்போது சிதிலப்பட்டவை எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என நம்மை கற்பனை செய்யத் தூண்டுகிறது.

அறுபத்தி நான்கு யோகினிகள், துர்க்கா தேவியின் உடனிருப்பவர்கள் எனச் சொல்லப்பட்டாலும், இந்தக் கோவில் அவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டாலும், இங்கே நடுநாயகமாக சிவனுக்கெனத் தனிச் சன்னிதியும் இருக்கிறது. வட்ட வடிவமான வெளியிடத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இளைப்பாற மேடைகள் இருக்கின்றன.

கோவில் இருக்கும் சிறிய மலையிலிருந்து நாம் காணும் ஜபல்பூர் நகரக் காட்சி ஆஹா எத்தனை அழகு. பறவைகள் எல்லாம் உயரத்தில் பறக்கும்போது பூமியைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது…

ஒவ்வொரு யோகினியின் பெயரும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்ரீ நந்தினி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ மண்டோதரி, ஸ்ரீ கேமுகி, ஸ்ரீ ஜாம்பவி, ஸ்ரீ யமுனா, ஸ்ரீ ஷண்டினி, ஸ்ரீ பிங்களா, ஸ்ரீ ஐங்கிணி, ஸ்ரீ ப்ரம்ஹணி, ஸ்ரீ தபனி, ஸ்ரீ ஹன்சினி எனப் பல்வேறு யோஹினிகளின் பெயர்கள் கீழே எழுதப்பட்டு இருக்கிறது.

ஒரு நாள் முழுதும் பயணத்தில் வீணாகிப் போனதால் இன்னும் அதிக நேரம் இருந்து குறிப்புகள் எடுக்க முடியவில்லை. முழுக் கோவிலையும் ஆற அமர இருந்து பார்க்க வேண்டுமெனில் நிறைய நேரம் தேவை. இல்லாததால் மனசில்லாமலே கீழே இறங்கி வந்தேன். தனியாக இன்னுமொரு முறை சென்று பார்க்க எப்பொழுது நேரம் வாய்க்குமோ? அந்த யோகினிகளுக்கே வெளிச்சம்…

அடுத்து நாங்கள் சென்ற இடம் எதுவாக இருக்கும்? யோசித்துக் கொண்டிருங்கள்… அதற்குள் நான் அங்கு சென்று விடுகிறேன். அப்போது தானே அதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல முடியும்?

என்ன கற்பனைக் குதிரையின் மேலே ஏறி உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சீட்டிங்களா? நல்லது… ரொம்ப தூரம் போயிடாதீங்க… சீக்கிரமே வந்துடறேன்… சரியா?…

மீண்டும் சந்திப்போம்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *