அன்றிலிருந்து டயரி எழுதுவதை விட்டுவிட்டேன்

0

வெங்கட் சாமிநாதன்

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி  16)

Venkat Swaminathanஹிராகுட்டிலிருந்து ஒரு நாள் ராஜா வந்திருந்தார். எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், “நான் ஒருத்தரை அனுப்பறேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கற வரைக்கும். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. இங்கேயிருந்து ஹிராகுட்டுக்கு பஸ்ஸில் போய்ட்டு வரலாம். அங்கே வீடு கிடைக்கலாம். இல்லையானால், அவர் இங்கே எந்த டிவிஷனுக்காவது மாத்திக்கலாம். என்ன சொல்றே?” என்று கேட்டார்.

அவர் என்னைக் கேட்பானேன்? நான் இங்கே ஊர் பேர் தெரியாத போது என்னை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு மாதம் எனனை அவர் வீட்டிலேயே சப்பாடும் போட்டு ஆதரித்தவர்.

“நீங்க எப்ப வேணும்னாலும் யாரை வேணும்னாலும் அனுப்பலாம். எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்கட்டும். என்னைக் கேட்கவே வேண்டாம். இவருக்கு இடம் கொடுன்னு ஒரு சீட்டு எழுதி, அனுப்புகிறவர் கையில் கொடுத்தால் போதும்” என்றேன்.

“இல்லடா சாமா, உன்னோட இன்னும் நாலு பேர் இருக்காளே” என்றார்.

“அது பரவாயில்லே பாத்துக்கலாம்” என்றேன்.

அவருக்கு மெனக்கெட்டு இதுக்காக ஹிராகுட்டிலிருந்து வந்த காரியம் நடந்தது. இதுக்காக அவர் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கிறார் என்றால், நிஜமாகவே சிரமத்திலிருக்கும் மனிதராகத்தான் வருகிறவர் இருப்பார் என்பது நிச்சயம்.

என்னுடன் இருந்த தேவசகாயத்திடம் பேசினேன். அவருக்குக் கொஞ்ச தூரத்தில், கொஞ்ச தூரம் என்றால் சுமார் 100 அடி தள்ளி இன்னொரு பிளாக்கில் ஒரு வீடு கிடைத்திருந்தது. அவர் அதை சும்மா பூட்டியே வைத்திருந்தார். காரணம் எங்களோடேயே இருக்கவேண்டும் என்ற எண்ணம்.
“கவலையே படவேண்டாம். சாமிநாதன். நான் இன்னும் ரண்டு பேரை என்னோடே கூட்டிட்டு போரேன். நீங்க ஒரு ரூமில் இருந்துகொண்டு பாக்கி வீட்டை அவங்களுக்குக் கொடுத்துடுங்க. குழந்தை குட்டியோட வராங்க. நீங்களும் என் ரூமிலே பாதி நேரம் கழிக்கலாம். அதுவும் உங்க இடம் தான். இந்த இடத்திலே நீங்க ஒரு கால் வச்சிருக்கணும்கிறதுக்குத்தான் ஒரு ரூமிலே நீங்க இருக்கணும்னு சொன்னது. இல்லேன்னா நீங்களும் அங்கேயே வந்துடலாம்” என்றார்.

அந்தக் குடும்பமும் வந்தது. இரண்டு குழந்தைகள். அவர் பேர் என். கிருஷ்ணமூர்த்தி. திருச்சி பக்கத்தில் ராமச்சந்திரபுரம் என்று ஒரு ஊர் இருக்காமே. அந்த ஊர் திருமதி கிருஷ்ணமூர்த்திக்கு. நான் அடிக்கடி தேவசகாயம் ரூமுக்குப் போய்விடுவேன். அது எஙகளிடையே கெஸ்ட் ஹவுஸ் என்ற பெயர் பெற்றது. கிருஷ்ணமூர்த்தியும் சுமுகமாகப் பழகுகிறவராக இருந்தார். அவர் மனைவியும் குழந்தைகளும். குழந்தைகளும் கொஞ்சம் பழகிய பிறகு மிகவும் பாசத்துடன் என்னிடம் ஒட்டிக்கொண்டன. குழந்தைகளுடன் பொழுது போவது இனிமையாக இருந்தது.

கோடை காலம். காலை ஏழு மணிக்கே அலுவலகம் திறந்துவிடும். பின் மதியம் 1.30 மணி வரை. அவ்வளவு தான். 10.00 11.00 மணிக்கெல்லாம் வெயில் தகிக்க ஆரம்பித்து விடும். அலுவலகத்தில் கஸ்கஸ் தட்டிகள் ஜன்னலிலும் கதவு நிலைகளிலும் தொங்கும். அவ்வப்போது அதற்கு தண்ணீர் ஊற்றி ஈரம் சொட்டச் சொட்ட வைத்திருப்பார்கள். ஏஸி என்பதெல்லாம் அன்று நாங்கள் கேள்விப்படாத விஷயங்கள். எனவே பிற்பகல் அலுவலக வேலை முடிந்ததும், பக்கத்திலேயே இருக்கும் கடைத் தெரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கே திரும்பி வந்து விடுவது மிகச் சிலர் வழக்கம். அந்த மிகச் சிலரில் நானும் ஒருவன்.

காலையில் கஸ்கஸ் தட்டி தண்ணீர் ஊற்றி ஊற்றி, ஈரமாகவே இருக்கும். திரும்பி இரண்டு மணிக்கு அலுவலகம் வந்தால் 5.00 மணி வரை அலுவலக மேஜை மேல் படுத்து தூங்குவோம். இல்லை ஏதாவது படிப்போம். எல்லோரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு செக்‌ஷனிலும் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இப்படி இருப்பார்கள். இது ஒன்றும் நாள் தவறாத பழக்கம் இல்லை.

சில சமயங்களில் ஏதோ காரணத்திற்காக வீட்டிற்கும் திரும்புவது உண்டு. வீட்டில் உஷ்ணம் வறுத்தெடுக்கும். வீட்டில் படுப்பதென்றால் கயிற்றுக் கட்டிலின் மேல் ஈர வேட்டியைப் பரப்பி  மின் விசிறியின் வேகமாக வைத்து கட்டிலின் அடியில் படுப்பேன். இல்லையெனில் அறையில் தண்ணீரைக் கொட்டி கட்டில் மேல் படுத்துக்கொள்வேன். கட்டில் மேல் ஈர வேட்டியைப் பரப்பி கீழே படுப்பது தான் கொஞ்சம் சூட்டைத் தணிக்கும். ஆனால் வேட்டி வெகு சீக்கிரம் உலர்ந்து விடும். மறுபடியும் அதை நனைத்துக்கொண்டு வந்து பரப்ப வேண்டியிருக்கும். இதில் எது தேவலை?

diary

குழந்தைகள் என்னிடம் ரொம்ப பாசத்துடன் இருந்ததால், நான் அலுவலகத்திலிருந்து வந்ததும். சட்டையைக் கழற்றி உடம்பை வியர்வை போக, தண்ணீர் விட்டுக் குளிர்வித்துக்கொள்ளக் கூட விடாது. உடனே என்னிடம் ஓடி வந்து கட்டிக்கொள்ளும். அவற்றை விலக்கிகொண்டு குளியலறைக்குப் போவது பெரும் பாடாக இருக்கும். திருமதி கிருஷ்ணமூர்த்தி, குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவார். எனக்குப் பாவமாக இருக்கும்.

கிருஷ்ணமூர்த்தியைக் கடைத்தெருவில் எனக்குத் தெரிந்த பலசரக்குக் கடை, ஹோட்டல், துணிக்கடைக்கு எல்லாம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தேன், அவ்வப்போது கடனில் ஏதும் வாங்கிக்கொள்ள சௌகரியமாக. வீடு இன்னொரு விதத்தில் கலகலப்பாக மாறியது.

அவ்வப்போது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரமல்ல, மற்ற நாட்களில் கூட சம்பல்பூர் போவது, எனக்குக் கிடைத்த மாற்றமாக இருந்தது. சம்பல்பூர் போவது அலுவலக நாட்களில் கூட ஒன்றும் பெரிய சிரம சாத்தியமான காரியம் இல்லை. பஸ் கிடைத்தால் 10 மைல் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்து சம்பல்பூர் சேர்ந்து விடலாம். ஆறு மணிக்குத்தான் படம் ஆரம்பிக்கும். மிக நல்ல படங்கள் பார்க்க முடிந்தது. ஷிகஸ்த் என்று ஒரு படம். அசோக் குமாரும் மீனா குமாரியோ அல்லது நூதனோ நடித்தது. மிகவும் மனத்தைக் கலக்கிய படம். இப்போது கதையெல்லாம் நினைவில் இல்லை. இப்போது எல்லோர் மனத்திலும் பதிந்துள்ள பர்சாத், ராஜ் கபூரை பெரிய ஸ்டாராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் ஒரு சினிமா பெருந்தலையாக்கிய படம். உத்தம் குமார் என்னும் அக்கால வங்காளத் திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார், பின் சுசித்ரா சென் படங்கள் நிறைய பார்க்க முடிந்தது.

பெரும்பாலான ஹிந்தி, தமிழ்ப் படங்களின் தரத்துக்கு மேலான படங்களாகவே வங்காளி மொழியில் வருவன இருந்தன. ஆனால் ஹிந்திப் படங்கள், வங்காளப் படங்களின் சராசரித் தரத்திற்கு வெகு கீழே இருந்த போதிலும், ஜோகன், மஹல், ஷிகஸ்த் போன்றவை இப்போதும் ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பின்னும் அவற்றை நினைக்கும் போது மனத்தில் ஒரு வேதனைக் கீற்று கீறிச் செல்வது போல ஓர் உணர்வு. அவ்வளவு தூரம் ஆழமாக அந்தப் படங்களின் பாதிப்பு அந்த வயதில் இருந்திருக்கிறது.

நாம் அறியாதே பல விஷயங்கள் நடந்துவிடுகின்றன. நாம் அதற்குப் பொறுப்பாளியாகிவிடுகிறோம். இத்தகைய ஒரு காயம் நாம் ஏற்படுத்தினோமா, அந்த எண்ணத்தில்தான் அந்தச் செயல்கள் இருந்தனவா என்று யோசிக்கும் போது ஏன் இப்படியெல்லாம் என்றும் மனத்தில் ஒரு கலவரம்.

கிருஷ்ணமூர்த்தி குடும்பம் குழந்தைகள் எனக்கும் சரி, அவ்வப்போது என் வீட்டுக்கு வந்து போகும் கெஸ்ட் ஹவுஸ் நண்பர்களுக்கும் சரி, மிக அன்பான, மனத்துக்கு இதமான நேரங்கள் அவை. இருப்பினும் அது வெகு சீக்கிரம் எப்படியோ முனை திரும்பி எதிர்பாராத பாதைக்குள் நிகழ்வுகள் சென்றுவிட்டன.

சுமார் ஆறு, ஏழு மாத காலம் கடந்திருக்கும். ராஜாவும் அவ்வப்போது ஹிராகுட்டிலுருந்து வந்து போய்க்கொண்டிருப்பார். ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்தை ராமச்சந்திரபுரத்துக்கு கொண்டுவிட்டு வரப் போவதாகவும் திரும்பி வந்து, ஹிராகுட்டில் எங்காவது தங்குவது சௌகரியமாக இருக்கும் என்று சொன்னார். குழந்தைகளைப் பிரிவது மனத்துக்கு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் எல்லாப் பிரிவுகளும் இருக்கும். என்றும் யாரும் எப்போதும் உடன் இருந்துவிடப் போவதில்லை. நானே கூட பிரிய நேரிடலாம். அப்போதும் அது நானே வர வழைத்துக்கொண்ட வேதனையான பிரிவாகத்தானே இருக்கும்? நான் என் தங்கை, தம்பிகளைப் பிரியவில்லையா என்ன? என் பெற்றோர்கள், பாட்டி எல்லாரும் என்னைப் பிரிந்து வாழ வில்லையா என்ன? அவர்களை சம்பல்பூர் வரை சென்று ரயில் ஏற்றிவிட்டு வந்தேன்.

பின் ஒரு நாள் புர்லா வந்த ராஜா, திடுக்கிட வைக்கும் கேள்வி ஒன்றைக் கேட்டார்.

”ஏன்டா சாமா, கிருஷ்ணமூர்த்தி சாமான் வாங்கின கடை பாக்கியை நீ கட்டினாயாமே? எதற்கு?” என்று கேட்டார்.

“ஆமாம். நான்தான் அவரை அந்தக் கடைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என்னை நம்பித்தான் அந்தக் கடைக்காரன் கடனுக்குச் சாமான் கொடுத்தான். பாக்கி வைத்திருக்கிறார் உங்க தோஸ்த். பணம் வருமா? என்று கேட்டான். வரும். என்னை நம்பு வரவில்லையென்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அடுத்த மாதம் நானே கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு என்ன கஷ்டமோ, என்னவோ? பிறகு சாவகாசமாக நான் அவர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் கடைக்காரனுக்கு காத்திருக்க வேண்டுமென்று என்ன முடை? ஏன் என்ன ஆச்சு?” என்றேன்
.
“என்னமோடா, எனக்கு ஒண்ணும் சொல்லத் தோணலை. ‘அவர் என்னத்துக்குக் கொடுக்கணும். இனிமே நாம் இங்கே இருக்கறது சரியில்லை’ என்று அவர்களுக்குப் பட்டிருக்கிறது. அதனால்தான் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவர் மாத்திரம் ஹிராகுட்டுக்கு வருவதாக முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கடைக்காரன் ஒன்றும் சொல்லவில்லை. நீ இதை டயரியில் எழுதி வச்சிருக்கே. அதைப் படிச்சிருக்கா” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இன்னொருவர் டயரியை யாராவது படிப்பார்களா? அதுவும் படித்தது கிருஷ்ணமூர்த்தியா? அவர் மனைவியா? ரொம்ப பண்புள்ளவர்களாகத் தெரிந்தார்களே. ஒரு வேளை இது தப்பு என்று தெரியவில்லையோ என்னவோ? குடும்பத்தில் யாருக்கும் வரும் கடிதத்தை எல்லோருமே படிக்கிறதில்லையா? என்னவோ மனம் சமாதானம் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எல்லாம் நொண்டிச் சமாதானமாக எனக்கே பட்டது.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் என்னிடம் எந்தவித அன்னிய பாவனையோ, வெறுப்போ காட்டியவர்கள் இல்லை. சம்பல்பூர் ரோட் ஸ்டேஷனில் விட்டு வரும் வரை குழந்தைகள் அவர்கள் எல்லோருமே மிகவும் அன்போடுதான் இருந்தார்கள். ஊருக்குப் போய் ராமசந்திரபுரத்திலிருந்து கிருஷ்ண மூர்த்தி எனக்குக் கடிதமும் எழுதினார்.

ஆனால், அன்றிலிருந்து நான் டயரி எழுதுவது என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன். அந்த வருஷம்தான் யாரோ டயரி ஒன்றைப் பரிசளிக்கப் போக, அந்த வயதில் எனக்கு இதெல்லாம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்க, எழுதத் தொடங்கினேன். அதன் விளைவு இப்படி இருக்குமென்றால்… விட்டு விட்டேன். 1952ஆம் வருடம். இது 2011ஆம் வருடம். டயரி என்ற நினைப்பே எழுந்ததில்லை. எதெது நினைவில் தங்குகிறதோ தங்கட்டும்.

அப்படி நினைவில் தங்கியவைதான் நினைவுகளின் சுவட்டில் என இங்கு பதிவாகின்றன.

(நினைவுகள் தொடரும்….

=============================

படத்திற்கு நன்றி: http://t2.gstatic.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *