அதிசயிக்கத் தக்க ஜப்பான்

2

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiஉலக சரித்திரத்திலேயே அணுகுண்டின் கதிர் வீச்சிற்குப் பலியான நாடு, ஜப்பான் ஒன்றுதான். இங்குதான் அமெரிக்கா இரண்டாவது உலக யுத்தத்தின்போது இரண்டு முறை அணுகுண்டை வீசியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒரு பிரிவாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் இன்னொரு பிரிவாகவும் இருந்து இரண்டாவது உலகப் போர் நடந்தது. முதல் பிரிவு நாடுகளை நேச நாடுகள் என்றும் இன்னொரு பிரிவு நாடுகளை அச்சு நாடுகள் என்றும் குறிப்பிடுவார்கள்.

அச்சு நாடுகளில் ஜெர்மனிதான் பிரதான நாடாக இருந்த போதிலும், ஜெர்மனியின் ஹிட்லரால்தான் இரண்டாவது உலக யுத்தம் மூண்ட போதிலும் ஜெர்மன் நாட்டு மக்களின் இனமும் மற்ற நேச நாடுகளின் இனமும் ஒன்றாதலால் ஜெர்மனியின் மீது குண்டு வீசுவதை நேச நாட்டுத் தலைவர்கள் விரும்பவில்லை; அதனால் வேறு இனத்தைச் சேர்ந்த ஜப்பானிய மக்கள் மீது அணுகுண்டை முதல் முதலாகப் பரீட்சை செய்து பார்க்க விரும்பி, ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசினர் என்பது சிலரின் வாதம்.

அப்போதே ஜப்பான் சரணடைந்திருக்கும் என்ற போதிலும் அந்த அணுகுண்டு விளைவித்த சேதத்தைப் பார்த்த பிறகும் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பவும் நாகசாகி என்னும் இன்னொரு ஜப்பானிய நகரின் மீது குண்டு எறிந்து ஏகப்பட்ட சேதத்தை விளைவித்தனர்.  யுத்தத்திற்குத் தலைவர்கள்தான் காரணம் என்ற போதிலும் அப்பாவி மக்கள்தான் கதிர்வீச்சின் தாக்குதலுக்கு உள்ளாயினர். அதன் விளைவு ஜப்பானிய மக்களை பல தசாப்தங்களாகப் பாதித்து வந்தது.

இப்படி நியாயத்திற்குப் புறம்பாக நேச நாடுகள், ஜப்பானின் மீது குண்டு வீசியதையும் ஜப்பானிய மக்கள் தண்டிக்கப்பட்டதையும் நினைத்துப் பல முறைகள் மனம் புழுங்கியிருக்கிறேன். ஆனால் இப்போது இயற்கையே அல்லவா ஜப்பான் மக்களை இன்னொரு முறை தீவிரக் கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. செண்டாய் நகரத்திற்குப் பக்கத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால் கடல் கொந்தளித்து, சுனாமி எழும்பி, அதனால் அணுசக்தி நிலையங்கள் சேதத்திற்கு உள்ளாகி, அணுக்கதிர்கள் பல மைல்கள் தூரத்திற்குக் காற்றையும் நீரையும் மனிதனின் உபயோகத்திற்குத் தகுதியற்றதாக ஆக்கியிருக்கின்றன. இந்தக் கதிர்வீச்சு, தலைநகரமான டோக்கியோ வரை பரவியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு ஜப்பானிய மக்களுக்கு அரசின் மேல் கோபம் இருந்ததாம். தங்கள் நாட்டைப் பற்றிய பெருமையும் ஓரளவு மங்கிப் போயிருந்ததாம். ஆனால் இப்போது நாம் எல்லாம் ஒரே சமூகம் என்ற எண்ணம் மிகவும் வலுவாகத் தோன்றியிருக்கிறதாம். ‘இந்த ஆபத்திலிருந்து மீள்வோம். நாட்டை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம்’ என்ற எண்ணம் ஜப்பானிய மக்கள் மத்தியிலும் தலைவர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறதாம். நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, அணுக்கதிர் தாக்கம் ஆகிய மூன்று அபாயங்கள் நேர்ந்திருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் ஜப்பானிய மக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த ஒற்றுமை உலகையே வியப்படையச் செய்திருக்கிறது.

Japanese queue

பொதுநல விதிகளைத் தவறாமல் நடைமுறைப்படுத்தும் ஜப்பானியரின் கட்டுப்பாடும் அதிசயத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கட்டடங்கள் எளிதில் சேதமடையாமல் இருக்க, அரசு ஏற்படுத்தியிருக்கும் விதிகளை மீறாமல் பல மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதால்தான் சேதம் இந்த அளவோடாவது இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அது மட்டுமல்ல, எப்போதுமே நேர்மை, ஒழுங்கு, நியாயம் போன்ற குணங்களைத் தங்களிடத்தே கொண்டுள்ள ஜப்பானிய மக்கள், இப்போது பிறரை வாழவைக்க தங்கள் நலனையே தியாகம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். உருகிக்கொண்டிருக்கும் அணு ஆலைகளால் கதிர்வீச்சு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கச் சிலர் அவற்றைச் செப்பனிடும் வேலையில் ஈடுபடத் தாங்களாக முன்வந்திருக்கிறார்கள். தங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் மிக அதிகமாக இருந்தும் இவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அணு ஆலைகளால் ஏற்படும் அபாயத்தை நீக்கி, நாட்டு மக்களைக் காப்பாற்றுவதில் குறியாக இருக்கிறார்கள்.

மற்ற நாட்டு மக்களால் விசேஷமாகக் கூறப்படும் இன்னொரு செய்தி யாதெனில், இத்தனை அமளியிலும் ஒரு குற்றம் கூட நடக்கவில்லை. 1995இல் ஜப்பானிலுள்ள கோபேயில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அப்போது அங்கிருந்த அமெரிக்கப் பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் தன்னுடைய அனுபவம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

நிலநடுக்கம் ஏற்பட்டதால் சில கடைகளின் ஜன்னல்கள் உடைபட்டு எளிதாக யாரும் உள்ளே சென்று கடைச் சாமான்களைத் திருடியிருக்க வாய்ப்பு இருந்த போதிலும் ஒருவரும் அப்படிச் செய்யவில்லை. இன்னொரு இடத்தில் இரண்டு பேர் ஒரு கடையில் நுழைந்து சாப்பாட்டுச் சாமான்களைத் திருடியதைப் பார்த்த நிருபர், பக்கத்துக் கடைக்காரரிடம் ‘இதென்ன உங்கள் நாட்டுக்காரர்கள் இப்படிச் செய்கிறார்களே?’ என்று கேட்டதற்கு அவர் ‘நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள்’ என்றாராம்.

இப்போதும் இதே நிலைதான். ஒருவர் கூட ஒரு குற்றமும் புரியத் துணியவில்லை. இயற்கையின் முத்தாக்குதலால் உணவுப் பற்றாக்குறை இருக்கிறது. ஜப்பானியர்கள் பொறுமையாக வரிசையில் கிடைப்பதை வாங்கக் காத்து நிற்கிறார்கள். அமெரிக்காவில் கட்றீனா (Katrina) சூறாவளிச் சமயத்தில் அத்தனை கொள்ளைகள் நடந்தன. அமெரிக்கா, ஈராக்கின் மீது படையெடுத்த போதும் முதல் சில நாட்களில் அமைதி, ஒழுங்கு இல்லாத சமயத்தில் சமூக விரோதிகள், இம்மாதிரி சூறையாடலில் ஈடுபட்டார்கள்.

தங்கள் உரிமைகளைவிட பிறர் உரிமைகளை மதிப்பது, ஜப்பானியர்களிடம் ஊறிப் போன ஒன்றாகத் தெரிகிறது. நாங்கள் ஜப்பானில் ஒரு வருடம் தங்கியிருந்தபோது அவர்கள் எங்களிடம் காட்டிய மரியாதையையும் பிரியத்தையும் பார்த்தபோது ‘இவர்களா இரண்டாவது யுத்தத்தின் போது சீனர்களையும் கொரியர்களையும் போர்க் கைதிகளாக வைத்துக்கொண்டு அத்தனை பாடுபடுத்தினார்கள்’ என்று வியந்திருக்கிறேன். பாதாள ரயில்கள் ஓடும் இடத்திற்குச் செல்லும் நுழைவாயிகள் எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டால் அது இரண்டு பர்லாங் தூரம் என்றாலும் எங்களுடன் வந்து, அந்த இடத்தில் எங்களை விட்டுவிட்டுச் செல்வார்கள். ஒரு முறை ட்ராமுக்காகக் காத்திருந்தபோது, காத்திருப்பவர்கள் வரிசையில் நிற்காமல் ட்ராம் வரும் வரை சாலையோர பெஞ்சுகளில் களைப்பைப் போக்கிக்கொள்ள சிறிது நேரம் உட்கார்ந்தோம். எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் வரிசையில் எங்களுக்கான இடங்களை விட்டுவிட்டு அதன் பிறகு வரிசையைத் தொடர்ந்தார்கள்.

அமெரிக்க நிருபர், ஜப்பானில் ஐந்து வருடங்கள் தங்கியிருந்த போது, தன் மகனின் பிறந்த நாளுக்குத் அவனுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்தபோது மியூசிகல் சேர் (musical chair) என்னும் விளையாட்டை அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க மிகவும் பாடுபட்டாராம்.  கடைசி வரை அவர்களால் அதைக் கற்றுக்கொள்ள முடியவில்லையாம். பிறரிடம் போட்டி போட்டு அவர்களிடம் வலுக்கட்டயமாக எதையும் பறித்துக்கொள்வது ஜப்பானியர்களுக்குத் தெரியாத கலை என்கிறார். அமெரிக்காவில் இருப்பது போல் மிகப் பெரிய பணக்காரர், வறிய ஏழை என்ற நிலைமை ஜப்பானில் இல்லை என்கிறார். ஜப்பானியர்களிடமிருந்து அமெரிக்கர்கள் படித்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார். அப்படியென்றால் இந்தியர்கள்?

தொடர்புள்ள இடுகைகள்:

======================================

படத்திற்கு நன்றி: http://mangans.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அதிசயிக்கத் தக்க ஜப்பான்

  1. முனைவர் நா.அ. “அதனால் வேறு இனத்தைச் சேர்ந்த ஜப்பானிய மக்கள் மீது அணுகுண்டை முதல் முதலாகப் பரீட்சை செய்து பார்க்க விரும்பி, ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசினர் என்பது சிலரின் வாதம்” என்கிறார். யார் அந்த பேரில்லாத சிலர்? சில சரித்திர ஆய்வாளர்களை நா.அ. குறிப்பிடமுடியுமா?

    இதே எண்ணங்களையும் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதினார். (

    http://www.jeyamohan.in/?p=3488

    அவருக்கும் நான் பதில்களைக் கொடுத்தேன்

    http://www.jeyamohan.in/?p=3547

    “ஜப்பானிய மக்கள் அவர்கள் ராணுவம் பின்னால் திண்ணமாக நின்றனர். 1943 முதல் அமெரிக்கா ஜப்பானியரை பல பசிபிக் தீவுகளிடமிருந்து விரட்டி அடித்தது. ஆனால் ஜப்பானியர் மிக்க ஆக்ரோஷத்துடன் சண்டை இட்டனர். ஜப்பானிய துருப்புகள் சரணடைய மறுத்து, கடைசி மூச்சு வரை போரிட்டனர், அல்லது தற்கொலை செய்துகொண்டனர். ஜப்பான் அருகில் வர வர, ஒவ்வொரு தீவைப் பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிரக்கணக்கில், லக்ஷக்கணக்கில் துருப்புகளை இழந்தது. மேலும் ஜப்பானையே பாதுகாப்பதற்கு, எல்லா ஜப்பானிய குடிமகன்களும் மடியத் தயாராக அரசாங்கம் திட்டமிட்டது. ஐரோப்பாவில் போர் மே, 45இல் முடிந்து விட்டது. பழைய முறைகள்படி போரை நடத்தினால், ஜப்பானியரை முழுவதும் தோல்வியுறச் செய்ய 2-3 வருடங்கள் ஆகும், 5 லக்ஷம் அமெரிக்க துருப்புகள் மடியலாம் என்று அமெரிக்க அரசாங்கம் கணக்கிட்டது. மே 45 போது, நேச நாடுகள் ஜப்பானை நிபந்தனை இன்றிச் சரண் அடையக் கோரின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. போரை சீக்கிரமே, `குறைந்த பட்ச’ இழப்புகளுடன் முடிப்பதற்கு, அமெரிக்கா , புதிதாக செய்யப்பட்ட, அணுகுண்டை உபயோகிக்க முடிவெடுத்தது. ஜப்பானியருக்கு போரை முடிக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நம் காலத்துத் தமிழீழப் புலிகள் போல, அவர்கள் போரை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை. புலிகள் போல அவர்களும் தற்கொலை செய்யத் தயாராக இருந்தனர்.

    ஹோலோகாஸ்டில் 60 லக்ஷம் யூதர்கள் கொல்லப்பட்டனர். ஹிரோஷிமா-நாகசாகியில் 2 லக்ஷம் மக்கள் கொல்லப்பட்டனர். (http://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki). 2ஆம் உலகப் போரில், ஆகாய விமான தாக்குதல்களால் லக்சக்கணக்கான மக்கள் பல நாடுகளில் கொல்லப்பட்டனர். 1943 முதல் அமெரிக்க விமானங்கள் ஜப்பானை ஒரு நாள் விடாமல் தாக்கின. 1945 முதல் , ஜப்பானின் ஆகாய பாதுகாப்பு முறைகள் (Air defense systems) அமெரிக்காவால் முழுமையாக அழிக்கப்பட்டிருந்தன,. அதனால் அமெரிக்க விமானங்கள் தங்கு தடையின்றி குண்டு போட்டு, ஜப்பானை அழித்துக்கொண்டிருந்தன. அதேபோல நேச நாடுகள் ஆகாய குண்டு தாக்குதலால் ஜெர்மனியும் பெரிய அழிவிற்கு உள்ளாகியது. உதாரணமாக டிரெஸ்டன் என்ற ஜெர்மானிய நகரத்தை, நேச நாடுகளின் ஆகாய விமனங்கள் 2 நாட்கள் தாக்கியதில், 50,000 ஜெர்மானியர் மாண்டனர். ஒவ்வொரு ஜெர்மன், ஜப்பானிய நகரமும் அணுகுண்டு தாக்குதலுக்கு முன்னாடியே விமானங்களால் தாக்கப்பட்டு, லட்சக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர்.

    அணுகுண்டு தாக்குதல், பெரிய shock value. அதன் பிறகு 2 நாட்களில் ஜப்பான் சரணடைந்தது.

    அதனால் அப்பாவிகளான யூதர்களின் பேரழிப்பையும், போர்க்கோல ஜப்பானின் அழிப்பையும் சமதளத்தில் வைப்பது உசிதம் அல்ல. நாடுகள் உயிரா-சாவா என யுத்தம் செய்யும் போது, அணுகுண்டு மற்றொரு ஆயுதம் , அவ்வளவுதான்.”

    ஜெயமோகனின் பதிலிலிருந்து இன்னும் சில பாயிண்டுகளை விமர்சனம் செய்ய வேண்டி இருந்தது

    பாயிண்ட் 1 “அணுகுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை”

    ஜெர்மனி மே 45 முதல் வாரத்தில் சரண் அடைந்துவிட்டது, ஹிட்லர் ஏப்ரல் கடைசியில் தற்கொலை செய்துகொண்டான். அப்பொழுது, அமெரிக்க அணுகுண்டு ஆக்கம் முழுமை ஆகவில்லை. ஜூலை 16, 1945 அன்றுதான், முதல் பரிசோதனை அணுகுண்டு, அமெரிக்க மாகாணமான நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வெடிக்கப்பட்டது. அதனால் ஜெர்மனி மீது அணுகுண்டு வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

    பாயிண்ட் 2 “இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குண்டிலும் இருந்தது”

    அமெரிக்க ராணுவ, அரசியல் தலைமையில் ஜப்பானியருக்கு எதிரான இனத் துவேஷம் இருந்ததாகவும், அது அவர்கள் ராணுவ தீர்மானங்களைப் பாதித்தது என்பதற்கும் ஒரு ஆதாரமும் இல்லை. ஜப்பானியர் மேல் சாதாரண அமெரிக்க துருப்புகள் ஓரளவு இனத் துவேஷத்தை வைத்திருந்தனர், அதனால் ஜப்பானியர் நோஞ்சான், எளிதாக அவர்களைத் தோற்கடிக்கலாம் என நினைத்தனர், ஆனால் ஜப்பானியரின் கட்டுப்பாட்டையும், வீரத்தையும், விடாப்பிடி மனப்பான்மையையும் நேரடியாகப் பார்த்து, அந்த மனப்பான்மையை மாற்றிக்கொண்டனர். அமெரிக்கா போரில் இழுக்கப்பட்டவுடன் (பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகு), பல ஆயிரம் ஜப்பானிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். அதை ஓரளவு இனத் துவேஷம் எனக் கூறலாம், ஆனால் அதே கதி, ஜெர்மனிய – இத்தாலிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கும் ஏற்பட்டது.

    http://en.wikipedia.org/wiki/Internment_of_Italian_Americans
    http://en.wikipedia.org/wiki/German_American_internment
    http://en.wikipedia.org/wiki/Japanese_American_internment

    ஜப்பான் மீதான குண்டு தீர்மானம், ராணுவ நடவடிக்கை அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது, இன அடிப்படையில் அல்ல என்றுதான் பரவலாக நம்பப்படுகிறது. இனத் துவேஷம் இருந்தது என்றால், அது அரசியல் மேடைகளிலும், அதிகாரிகள் ஆவணங்களிலும், அரசியல் கருத்தாக்கங்களிலும் இருந்தாக வேண்டும்.

    ஒரு சரித்திர ஆதாரமும் வெளியே வராமல் இருக்கும் போது, ஹிரோஷிமா/நாகசாகி அணுகுண்டுகள் இனத் துவேஷத்தினால் ஏற்பட்டவை எனக் கூறுவது உசிதமில்லை.

    விஜயராகவன்

  2. அமெரிக்கா ஜப்பானின் இரண்டு நகரங்களின்மீது அணுகுண்டு வீசியபோது ஐரோப்பாவில் யுத்தம் முடிந்துவிட்டது என்பது வரலாற்று உண்மை. அணுகுண்டின் கண்டுபிடிப்பு முன்னால் நடந்திருந்தால் ஜெர்மனியின்மீது அணுகுண்டை வீசி அங்கு யுத்தத்தை நேச நாடுகள் முடித்திருக்குமா என்பது ஒரு கற்பனையான (hypothetical) கேள்வி. இந்தக் கேள்வியை வரலாற்று ஆசிரியர்கள் எழுப்பி விவாதித்திருக்கிறார்கள். வீசியிருக்காது என்று சொல்பவர்கள் யுத்தத்தின்போது ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமக்கள், ஜெர்மானிய, இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்களை விட பல மடங்கு விரோதத்துடன் நடத்தப்பட்ட வரலாற்று உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்குக் காரணம் ஜப்பான் பெர்ள்ஹார்பரைத் தாக்கியது ஒரு காரணம் என்றாலும், ஜப்பானியர்களின் இன வேறுபாடும் ஒரு காரணம் என்று நம்புகிறார்கள். ஜப்பானியர்களிடம் அங்கு இருந்தபோது பேசியதில் இந்த நம்பிக்கை உள்ளோட்டமாக இருப்பதைக் காணமுடிந்தது.
    ஜப்பான்மீது அணுகுண்டு வீசி யுத்தத்தை முடித்ததற்கு அமெரிக்க வீரர்களின் உயிர்ச்சேதத்தைக் குறைப்பது முக்கியமான காரணமாக இருந்தாலும், சில அரசியல் காரணங்களும் இருந்தன. ரஷ்ய ராணுவம் கிழக்கு ஆசியாவில் வென்ற பகுதிகளிலிருந்து ஜப்பான் வரை வந்துவிடும் என்ற பயம் இருந்தது. யுத்தத்திற்குப் பிறகு ஜப்பான் தன்வசம் இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. விரைவில் தேர்தலை எதிர்நோக்க வேண்டியிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், அணுகுண்டை உருவாக்கச் செலவழித்த கோடிக்கணக்கான வரிப் பணத்திற்கு நியாயம் கற்பிக்கவும், ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கியதால் அதைப் பழி வாங்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த பிரிவினரைத் திருப்திப்படுத்தவும் அணுகுண்டு வீச்சு உதவியது.
    நாகேஸ்வரி அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *