இரவில் வெளியே…!
தன் நண்பிகள் வாய் பிளக்க, குத்து நீச்சல் போட்டதைப் பார்த்து, ”கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது!’’ என்ற கவியரசர் வார்த்தைகள்தான் ஞாபகம் வந்தது! அஞ்சலையின் அடுத்த வீட்டுக் குட்டிப் பெண்ணான சுந்தரி, குன்று ஒன்றின் மேல் ஏறி, செங்குத்தாக, அம்புபோல் பாய்ந்து அருவிக்குள் குதிப்பதைப் பார்த்து, ’ஒன்ஸ் மோர்’ என்றது நண்பிகள் பட்டாளம்! குட்டிப் பெண் சுந்தரி கருப்பழகி! அவளது உடம்பின் மினுமினுப்பு எல்லார்க்கும் ஒரு அதிசயமாய் இருந்தது!
சோப்பா? அய்யே! இதோ இந்த நார சவுட்டுமண்ணு, களிமண்ணுல முக்கி எடுத்து தேச்சுக் குளிப்பேன். வேப்பங்குச்சில பல்ல வெளக்குவேன். அம்புட்டுதான், என்று முத்துப் பல் தெரிய விளக்கிக் கொண்டிருந்தாள் தன் திடீர் ரசிகர் பட்டாளத்துக்கு…!
அருவியின் சப்தத்தை மீறிய பெண்களின் கூச்சல் கும்மாளம். அஞ்சலைக்குப் பெருமை தலைகால் புரியவில்லை. ’நான் சொன்னேன்ல, கிராமத்துல எஞ்சாய் பண்றதுக்கு நிறைய விஷயமிருக்குன்னு,’ என்றாள்.
நண்பிகள் செருப்பிலாமல் இவளுடன் போட்டி போட்டு நடப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு, திக்கி முக்கி, குதித்துச் சென்றார்கள்.
“இட்ஸ் ஷிட் எவ்ரிவேர் ய…யே,யே!” என்று மூக்கைப் பொத்திthத் தாவிக் குதித்தாள் ஒரு பெண். மற்றவர்களும் உஷாராகிப் பார்த்து நடந்துவரத் தொடங்கினர்!
அஞ்சலைன்னு நல்லா பேரு வெச்சாங்க, அதான் எதுக்கும் அஞ்சாமத்தான் திரியுது பொண்ணு!’ என்று ஒரு கிழவி முணுமுணுத்தாள்.
ஆற்றின் சலசலப்பும், ஆரவாரமும் அடங்கி, நிசப்தமான உச்சிப் பொழுதில், குளிர்ந்த வேப்பமரத்தடியில் இலை போட்டு சாப்பிட்டு, எல்லாரும் கைகழுவி உடனடியாக அடித்துப் போட்டபடி உறங்கிப் போயினர்!
களைச்சு போயிட்டாக! ஏண்டி, அருவியோட இல்லாத மலை உச்சியெல்லாம் ஏறச்சொன்னயா என்ன? பின்ன இப்படி உறங்குதுங்களே?,” என்றாள் ஆத்தா.
இல்லம்மா, அருவில குளிச்செல்லாம் பழக்கம் இல்ல. பக்கெட் தண்ணிய வரிசைல நின்னு, பிடிச்சுக் குளிச்சே ஹாஸ்டல் வாழ்க்கை பழகிடுச்சா, இம்புட்டுத் தண்ணியும் அருவியும் பார்த்து ரொம்ப நேரம் குளிச்சதுங்க! அதான்.”
உச்சிப் பொழுதுக்கு முன் வீட்டுக்கு வந்தார் சோலை, அஞ்சலையின் அப்பா.
கோவணமும் கயிறுமாக வந்த அவரை அம்மா வாசலிலேயே மடக்கி, “அய்யா, எல்லாம் உறங்குதுங்க. மெதுவா சுத்தி வந்து kukuகுளிச்சு, வேட்டி கட்டி உள்ளார வாங்க,” என்று சைகை செய்து பின்னோக்கி அனுப்பிவிட்டாள். அவரோ சிரித்தபடி மேலே நோக்கி கையைக் காட்டினார்!
ஊர் நாட்டாமை, கவுன்சிலர் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோருக்கு மட்டுமே தனியாக கழிப்பறைகள் வீட்டோடு கட்டியிருந்த்தது. செப்டிக் டாங்க் அடைத்துக் கொண்டதால், சுத்தம் செய்ய சோலையைத்தான் கூப்பிடுவார்கள். அப்படியொரு நடைதான் இன்றும் போய் வந்தார் சோலை.
பெண்களெல்லாம் மாலையில் எழுந்ததும் காப்பித்தண்ணி கொடுத்தபின், வாசலில் கட்டம் போட்டு பாண்டி விளையாட சொல்லிக் குடுத்தாள் அஞ்சலை. கம்ப்யூட்டரும் கண்ணாடியுமாய் இருட்டில் கேம்ஸ் விளையாடிய நரகத்து நகரத்து வாழ்க்கையில் வெற்றிடத் திடலும், வெளிச்சமும், துள்ளலுமற்ற விளையாட்டுப் பருவத்தையே பார்த்த பெண்களுக்கு படு குஷி, குதித்துத் தாண்டி, தாண்டிக் குதித்து, அதகளம் பண்ணிவிட்டார்கள் மாலைக்குள்!
ஷில்பா, நீ வரலயா?
இல்லப்பா, வயிறு சரியில்ல!
ஏய்? வாட் ஹாப்பண்ட்? எல்லாரும் அவளிடம் குனிந்து விசாரித்தார்கள். சரியான பதிலில்லை.
ஆட்டம் முடிந்ததும், அஞ்சலை மெதுவாக ஷில்பாவிடம் விசாரித்தாள்.
பீரியட்ஸ் ஐ திங்க்! கொஞ்சம் வெளியே போனால் பரவாயில்லை!
”ஓ, நாட் நவ்! இப்ப போக முடியாது. ஊரடங்கட்டும், போலாம்” – அஞ்சலை.
நோ யார். முடியல. ரொம்ப கஷ்டம்.
இல்லப்பா, இங்க ஓபன்லதான் போணும். நோ டாய்லட்ஸ். ப்ளீஸ் பேர் வித் மீ! ஸாரி..
இரவு..! மெல்ல இருட்டில் ஷில்பா அருகில் வந்த அஞ்சலை, ‘வா, போலாம்,’ என்றாள்.
லாந்தரை பிடித்தபடி கிளம்பியதும் பார்த்தால், உடன் வரத் தயாராய் முக்கால்வாசி பெண்கள் படை!
எல்லாருமா?
யா, ஆல் வாண்ட் டு கெட் ரிலீவ்ட்!
லாந்தரோடு அஞ்சலை. அவள் பின் மெதுவாகப் பெண்கள்…
காலையில் அருவிக்குப் போகும் பெண்களில் பலருக்கு சுரத்தில்லை. மவுனமாகவே வந்தார்கள். சுந்தரிக் குட்டி எவ்வளவு வாய் அடித்தும் நண்பிகள் பட்டாளத்தை பேச வைக்க முடியவில்லை! ‘எக்கா, என்னாதிது, இப்படி சொரத்தே இல்லாத வந்தா எப்படி?’ என்று உசுப்பிப் பார்த்தாள்! ம்ஹும். எந்தப் பலனும் இல்லை. அருவியும் சலசலப்பு குறைந்து மெதுவாக வீழ்வது போல் இருந்தது…
அன்றைய பொழுதோ கொஞ்சம் சுரத்தில்லாமல்தான் இருந்தது. சிவன் கோயில் தூண் சிலைகளை மட்டும் படமெடுத்துத் தள்ளிவிட்டார்கள். மாலையில் பாண்டி, பின்னர் அயர்ந்த தூக்கம்!
விடிகாலையில், அடுத்த வீட்டின் சிகண்டியும் சங்கும் கலந்த ஒப்பாரி நண்பிகளை உலுக்கி எழுப்பியது! “என்ன சத்தம்? என்று கேட்டபடியே பதறியபடி வெளியே வந்தார்கள்.
கருப்பழகி சுந்தரி, கட்டையாய் கிடந்திருந்தாள்! முகத்தில் மஞ்சள் பூசி, பெரிய பொட்டொன்றை வைத்திருந்தாள். இதோ, வாரம் முடிந்தால் பள்ளிக்குப் போகும் உற்சாகத்தில் இருந்த இளங்குறுத்து அறுந்து கிடந்தது! ஷில்பாவால் அழுகையை அடக்க முடியவில்லை! அவளுக்கு நோட்புக்குகள், புது பை, செருப்பு எல்லாம் வாங்கித் தருகிறேன் என்றதும் குதித்து சந்தோஷப்பட்டாள், குழந்தை!
என்னாச்சு? ஐ கான்ட் பிலீவ் திஸ்!!
ராத்திரிப் என் பின்னாலதான் வெளிக்கிப் போணும்னு சொல்லிகிட்டு வந்தா, பிசாசு அடிச்சுப் போட்டிருச்சே!! ஆத்தி எங்குருத்த விட்டு நான் உசுரோடு எப்படி இருப்பேன்? மார்பில் அடித்துக் கொண்டு சுந்தரியின் அம்மாள் கதறிய சத்தம், காதுகளில் உரைந்துவிட்டது!
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நண்பிகள் பட்டணத்துக்குக் கிளம்பிவிட்டார்கள். கிராமம் அவர்களை திருப்பிப் போட்டுவிட்டது!
ஆசையாய் அழைத்து வந்த அஞ்சலைக்கோ துக்கம் அடைத்துக் கொண்டது.
ஓகே! எதேனும் ப்ளேஸ்மண்ட் வந்தால் நான் சொல்றேன். ஆல் த பெஸ்ட்!’ என்று சொல்லி ரயில் நிலையம் சென்று அவர்களை வழி அனுப்பி வந்தாள்.
திரும்பி வரும் வழியில் ‘ஏய்! அஞ்சலை, என்னத் தெரியலை?’ என்று ஒரு குரல் கேட்டது!
சத்தியமாய் அடையாளம் தெரியவில்லை.
அஞ்சாப்பு வரைக்கும் ஒண்ணா படிச்சோமே? நல்லா படிப்பேன்னு உன் பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டிருப்பேனே, வெள்ளையம்மாள்!’ என்றபடி முன்பல் தெரிய சிரித்தாள்!
அதே கல்யாணராமன் சிரிப்பு! இப்போது ஞாபகம் வந்துவிட்டது அஞ்சலைக்கு!
”””’அடி, வெள்ளை, என்னடி இப்படி கருப்பாயிட்ட! உன் பல்லை மாத்திரம் காட்டல, எனக்கு அடையாளமே தெரிஞ்சிருக்காது போ!,’’
பேசியபடியே வீட்டருகே வந்துவிட்டார்கள். அரைமணி நேர நடை அஞ்சலைக்கு அரைநாள் நடந்ததுபோல் பட்டது! அத்தனை விஷயம் வெள்ளையம்மாள் இவள் மனதுள் புகுத்திவிட்டாள்!
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சொல்ப காசுக்கு குடிநீர், கழிவறை வசதிக்காகப் போராடும் போராளி ’`வெள்ளை’ என்று எல்லோரும் அழைக்கும் வெள்ளையம்மாள். பேருக்கேற்றார்போல் வெள்ளை உடை, நெற்றியில் சிரிதாக விபூதி, குங்குமம், வெள்ளை ஜோல்னாப் பை, பளீர் சிரிப்பு – வெள்ளையம்மாள்!
ஊரூராய் அலைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நல்ல நீரும் மறைவாய் கழிப்பறையும் ஏற்படுத்தித் தரும் சுகாதார நலங்களை மக்கள் அறிந்திருந்தாலும், கழிப்பறை கட்டிக் கொள்ள அரசு தரும் சொல்ப ரூபாயில் கொத்தனார் காசு கூட வராது என்பதையும், பெரிதாய் பேசப்படும் மும்பை, தில்லி நகரங்களில் அருகருகே உள்ள அடுக்கு மாடிகள், அருகேயே உள்ள ஜொப்டீ எனும் சேரிகள், அவற்றுள் உள்ள வெளியே கழிக்கும் அவலம், நீர் மாசு படும் அவலம், அதனால் ஏற்படும் அதிநவீன வியாதிகள், செலவுகள்… என்று சொல்லிக் கொண்டே போனாள்.
அஞ்சலையில் அப்பாவைப் போல் அள்ளிச் சுத்தம் செய்யும் பணியாளர்கள் வாழ்கையில் இன்னும் விடியல் இல்லை என்பதையும், வெளிக்குப் போவதால் அருவியை அசுத்தம் செய்து, நீராதாரத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அரைந்தாற்போல் சொல்லியது, அஞ்சலைக்கு ஒரு ஞானஸ்நானம்!
ஆமாம்ல!
வீட்டில் அம்மாள் காத்திருந்தாள். அடியே, ரொம்ப நேரம் தபால்காரர் நின்னுகிட்டிருந்தாரு. ரிஜிஸ்டர் தபாலாம்ல!
அடக் கொண்டா! அவசரமாய் பிரித்துப் பார்த்தாள். ரெக்கை விரிந்து அடித்தது மனசு! அட்றா சக்கை!
அம்மா, அம்மா, பெரிய கம்ப்யூட்டர் கம்பெனில (….) வேலைம்மா! இனி நீ அடுப்புல காய வேணாம், அப்பா அடுத்தவன் வீட்ல அள்ளிக் கொட்ட வேணாம்!’’
படப்படப்பாய் இருந்தாள் அஞ்சலை!
வெள்ளையம்மாள் கிளம்ப எத்தனிக்க, ‘நீ வந்த நேரம் வேலை ஆர்டர் வந்துருக்கு. ரொம்ப சந்தோஷம். எம்புட்டு நாள் கழிச்சு பார்த்திருக்கோம், சாயங்காலம் வா, பேசிகிட்டு இருக்கலாம்.’’
சரி.
அப்பா வந்ததும் கையை விரித்துக் காட்டி, சொர்க்கம் தொட்டு விடும் தூரம் என்பதுபோல் அவருக்கு தனது புதிய வேலைப் பற்றியும், இனி பட்டணத்துக்கு போய் நிம்மதியாய் இருக்காலாம் என்பதையும் பேசிக் கொண்டே இருந்தாள். அவரோ, எப்போதும் போல் அப்போதும், மேலே கையைக் காட்டிச் சிரித்தார்!
மதியம் சோறு போடும்போது, அம்மா வெள்ளையம்மாளைப் பற்றி மிக உயர்வாகப் பேசினாள்.
எந்நேரமும் அடுத்தவன் நல்லதுக்காக உசுரக் கொடுக்குறா. ரேஷன்ல கல்ல கலக்குறானா, இவதான் போயி நிப்பா, கள்ளு குடிச்சு பொம்பளைய அடிக்கிற புருஷங்காறன பார்த்தாளா, அடுத்த நாள் ஸ்டேஷன்ல கம்பிளெயிண்ட் கொடுத்து, அவன பொண்டாட்டிக்காரி கிட்ட மன்னிப்பு கேட்டு, குடிய விடற வரைக்கும் மல்லு கட்டுவா!
விடிகாலைல வெளிக்கிப் போற பயலுகளுங்களை நிறுத்தி, போனதுக்கு மேலே சாmம்பலோ, மண்ணோ, உமியோ, தவுடோ போட்டு வரச்சொல்லுவா!
போட்டா?
போட்டா, எதோ கிருமி அத அரிச்சித்திண்றுமாம்! மக்கிப் போகுமாம், மண்ணு, தண்ணி கெடாதாம்! இப்படி நாப்பொழுதும் ஊர நிமித்துரேன்னு போனா, எவன் இவளக் கட்டுவான்? இதுல வரதச்சிண கேட்டு வந்தான்னு ஒரு பார்ட்டிய ஓட ஓட விரட்டி விட்டா! என்னவோப் போ, ஆனா அவ பேச்சுக்கு நல்லது பல நடக்குது, கலெக்டர் கூட நம்ம கிராமத்த பார்த்துட்டுப் போனார்னா பார்த்துக்கயேன்,” என்று அதிசயப்பட்டாள்!
மாலை, திரும்பி வந்த வெள்ளையம்மாளுடன், வாசல் கட்டிலில் அமர்ந்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்த அஞ்சலையிடம் அம்மா, ‘செல்லம், ரொம்ப கண் விழிக்காதம்மா… வெள்ளையம்மாளைப் பார்த்து, ‘கண்ணு, ஏதும் சாப்பிடறயா, ரொம்ப நேரம் பேசி வாய் வலிக்கப் போகுது; இங்கணயே அஞ்சலியோட படுத்தெந்திருச்சு காலைல போ கண்ணு, ‘’ என்றாள் பரிவாக. இருவரும் அன்றைய இருளில் சிரம பரிகாரம் செய்ய லாந்தருடன் புறப்பட்டனர்.
திரும்பி வரும்போது அஞ்சலை மனதுள் கீரலாய் பல வெளிச்சக் கீற்றுகள்! அவளும் துணைக்கு வந்த வெள்ளையம்மாளும் பேசியது மனதுக்குள் உளம்பிக் கொண்டே இருந்தது!
`அடியே, பார்த்து வா, வழில பாம்பு கீம்பு கிடக்கப் போகுது! இப்படித்தான், ஊரடங்கி வெளிக்கிப் போற பொட்டைங்க செத்தா, வெளிய சொன்னா வெக்கக் கேடுன்னு, காலைல கட்டைல போடறப்ப, ‘பேயடிச்சுச்சு, பிசாசு அடிச்சிச்சீன்னு சொல்வானுங்க! ச்சேய்! ஒரு கக்கூஸு கட்ட வக்கில்ல. என்னத்த ஊரு வளர்ந்து?!
ஊர் சனத்தக் கேளு, `எலேய் கக்கூஸு கட்டணுமா, ஒரு மொபைல் இலவசமாத் தரவான்னு?`, எல்லாம் ஜோரா மொபைலத்தான் கேப்பாங்க. கேடு கெட்டவனுங்க. ஆம்பளைங்க காலைல அருவி, கம்மான்னு பார்த்துப் போவாங்க. பொட்டைங்க? 5 மணிக்கு முன்னே, இல்ல இப்படி ராவுல.
சரி, உன் பிரண்ட்ஸ் அன்னிக்கி ரெண்டு நாள்ல ஓடிப் போனாங்கன்னல்ல? வேற எந்த எழவும் இல்ல. இந்த உபத்திரவம்தான்! அதுலயும் மாசாமாசம் வர்ற கஷ்டம்னா? அட அவசரத்துக்கு போகமுடியாத நரகத்துல பொட்டைங்க எம்புட்டு நேரம் இருப்பாங்க?
கவுன்சிலர், தலைவர், இவனுங்க வீட்டுப் பொம்பளைங்கதான், பெரிய மச்சுவீடு கட்டி, சிட்டியப் போல கக்கூஸு வெச்சு ஆள்றாளுங்க! நமக்கு? முழங்கைதான்…!” பொரிந்து தள்ளிவிட்டாள்!
எத்தனை கேவலமான வாழ்க்கை கிராமத்தில் பெண்களுக்கு?
பாம்பு கடித்து இறந்தால், பேய் அடித்ததாய் சொல்லி புதைத்துவிடுவார்கள். ஆமாமாம், அப்ப அந்த சுந்தரிக் குட்டி???”
வெள்ளை, முத்தாய்ப்பாக வைத்தாள் ஒரு ’கன்னி’ வெடி!
சரி, நீதான் சிவில் இஞ்சினீரிங் படிச்சயே? சடசடன்னு கக்கூஸு கட்றதுக்கு ஒரு வழி கண்டுபிடியேன். இந்த ஊரையே எடுத்துக்க. 200 குடும்பம். நல்ல சித்தாளு கொத்தனாரை வெச்சு வீட்டுக்கு ஒண்ணுன்னு கட்டினாக்கூட ஒரு மாசத்துல அதிகப்படி ரெண்டோ மூணோ கட்டுவானுங்க. அப்படி வருஷம் முழுக்கப் பண்ணாலும் அதிகப்படி இருவத்தஞ்சோ, முப்பதோ கட்டலாம். அப்ப 200? ஆயுசுக்குக் கட்டமுடியாது. ஒரு ஊரே இப்படின்னா, இந்தியால 60 கோடி ஜனங்க, வெளிய வெளிக்கிப் போறாங்க! மளமளன்னு பேஃக்டரில வெச்சு தயார் பண்றாப்ல எதாச்சும் வழி இருக்கா பாரு! இல்ல நீயும், படிச்சது பாகவதம், இடிச்சது பெருமாள் கோயில்னு, போயி I.T. கம்பெனில வேல பாரு! எதுக்கு சிவில் படிச்சயோ?” என்றாள்!!!
பொட்டில் அறைந்தது போல் இருந்தது அஞ்சலைக்கு! இதுக்குப் பதில் சொல்வதை விட பாம்பு கடித்தே செத்திருக்கலாம் போல இருந்தது!
இவள் வீட்டிலேயே படுத்துவிட்ட வெள்ளையம்மாள், திடீர் எனக் கண் விழித்த போது, எதிரில் குளித்துக் குங்குமம் வைத்த அஞ்சலை குனிந்து ‘தேங்க்ஸ்’’ என்றாள்!
எதுக்கு?
Career Counselingக்கு! நல்ல வேலை சொல்லிக் கொடுத்ததுக்கு!
எ..எ….என்ன?
ஆமாம்! நான் டாய்லட்ஸ், ஸாரி நீ சொன்ன கக்கூஸு கட்டப்போறேன். இல்லை இல்லை, மள மளன்னு ப்ரொடக்ஷன் பண்ணப் போறேன்!” இவள் உற்சாகமாய் உச்ச ஸ்தாயியில் அலற, அப்பாவும் அம்மாவும் மிரண்டு போய் வெளியே எட்டிப் பார்த்தனர்.
அப்பா, என் முதல் டாய்லட்டுக்கு நீங்கதான் ரிப்பன் வெட்றீங்க, எந்தத் தலைவரும் இல்லை!” என்றாள்!
அப்பாவோ வழக்கம்போல் சிரித்துக் கொண்டே, மேலே கையைக் காட்டினார்!
எல்லோரும் எழுதத்தயங்கும் ஒரு கதைக்கரு. நளினமாய்க் கையாண்டிருக்கிறீர்கள் திரு மரபூர் சந்திரசேகரன் வாழ்த்துக்கள் இன்னும் மிக உயரிய படைப்புக்கள் படைக்க!
நன்றி அன்பர் இளங்கோ! தயங்கித் தயங்கியே ஊரை நாறடித்துவிட்டோம். இனி இதற்கு ஒரு தீர்வு காணத்தான் செயலிலும் இறங்க வேண்டியதாகி விட்டது! காணுங்கள் :
http://www.toiletforall.org
தங்கள் மறுமொழியே எனக்கு பரிசு கிடைத்த மாதிரி. நன்றி.
சந்திரசேகரன்