இலக்கியம்கவிதைகள்

அறுமுகநூறு (16)

 

சச்சிதானந்தம்

நாநில மெங்கும் பேதங்கள் இன்றி,
அறுபடை வீடுகள் அமைத்து நின்று,
நாவள மிக்க சான்றோர் சொல்லைக்
காவல னாகக் காத்திடு வான்!                                                76

அகவல்கள் படைத்து அறுமுகனைப் பணிந்து,
அகவை மாறா அவனெழிலில் திளைந்து,
அகவும்மயில் வாகனன் அருளை அடைந்தால்,
அகமும்மயில் தோகையென அழகாய் விரியும்!        77

அருகில் வரவர ஆற்றல் பெருகி,
அலையென அரகர ஓசை பரவி,
அறுமுகத் தருதரு அருளைப் பருகி,
அன்பர்கள் சிரமிரு தாளைப் பணியும்!                               78

கோடிட்ட இதழ்களும், மேடிட்ட கன்னங்களும்,
நீறிட்ட நெற்றியும், வேலுற்ற கரமும்,
நாவுற்ற தமிழும், நிறைவுறக் கண்டு,
நீருற்றுக் கண்களில் நாதனைத் தொழுவோம்!             79

வெஞ்சினம் கொண்டு, வெண்டெனத் தனக்குள்,
வெற்றிடம் கண்டு வீழ்ந்திடும் நெஞ்சின்
வன்மமும், வாட்டிடும் துன்பமும் நீங்கும்,
வெண்முகில் வேலனின் இன்னடி பணிந்தால்!             80

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க