கல்வி என்பது வியாபாரமா அன்றி வளர்ச்சியா?

2

பவள சங்கரி

தலையங்கம்

இன்று காலை வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி 89% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 9 பேர் முதலிடம் பெற்றனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 500க்கு 498. ஒன்பது பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேறியிருக்கிறார்கள்.

மனதை நெகிழ வைத்த மற்றொரு விசயம், ராஜாராம் என்ற மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததுதான். ஆம், பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான ராஜாராமனால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இயற்கையாகவே எலும்பு அடிக்கடி உடையும் தன்மையுடைய. 16 வயதாகும் ராஜாராமனுக்கு இதுவரை 150 முறை எலும்பு உடைந்திருக்கிறதாம். சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையிலும், விடாது முயன்று படித்து 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள இவரின் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. என்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். காலை எழுந்தவுடன் வானொலியைத் திருப்பினாலோ, தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலோ கல்வி எனும் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிற காலமாக இருக்கிறது. அறிவுக் கண்களை திறக்கக்கூடிய கல்வியை வியாபாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிற சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர்களைப் பார்த்து வேதனைப்படுவதா அல்லது இதற்கு துணை போகின்ற ஆட்சியாளர்களைப் பார்த்து வெட்கப்படுவதா என்று தெரியவில்லை. வியாபாரத் தளங்களில் தங்கள் பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு கூவிக்கூவி விற்பனை செய்வதைப்போல கல்வித் தளங்களை நடத்தக்கூடிய வியாபாரிகள், மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட உழைப்பினால் எட்டிப்பறித்த வெற்றிக் கனியைக்கூட தங்கள் வியாபாரத்திற்கு சாதகமாக்கிக் கொள்ளும் காட்சியைக் காணமுடிகிறது. முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அதனால் எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்துங்கள் என்று விளம்பரப்படுத்தி ஒரு மாணவருக்கு இத்தனை ஆயிரம் ரூபாய் என்று நன்கொடை வசூலிப்பது சர்வ சாதாரணமாகியுள்ளது. இவ்வாறு விளம்பரப்படுத்தக்கூடிய நிர்வாகத்தினர், புதிதாகச் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் அதே வெற்றியைத் தேடித்தர முடியும் என்பதற்கு உத்திரவாதம் தர முடியுமா. கற்பிக்கும் முறையாலும், சில ஆசிரியர்களின் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் ஒரு சில பள்ளிகளில், ஒரு சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறக்கூடும். அனைத்து மாணவர்களும் இதே போல உயர்வான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற முடிவது சாத்தியமாகுமா? தேவையற்ற இது போன்ற விளம்பரங்களைத் தவிர்த்து கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . அரசு பள்ளிகள் அனைத்தும் இந்த ஜூன் மாதம் 10 ம்தேதி திறக்கிறது. ஆனால் பல தனியார் பள்ளிகளில் அந்த 10ம் தேதிக்குள்ளாகவே, அந்த ஆண்டின் பாடத்திட்டத்தில் பெரும் பகுதியை நடத்தி முடித்து விடுகின்றனர். சிறுவர்களுக்கு பொறுமையாக கற்பிக்க வேண்டிய காலங்களில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இளம் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவது உறுதி. முந்தைய கல்வியாளர்கள் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்று வைத்ததன் காரணம் பற்றியும் யோசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த விடுமுறை காலங்களில் ஓய்வெடுத்து, புத்துணர்வுடன் திரும்பி வந்து மனத் தெளிவுடன் படிப்பதற்காகத்தானே. ஆனால் அதை விட்டுவிட்டு துரித உணவுகளையும், உணவகங்களையும் நாடுவது போல இந்த துரித கல்விச்சாலைகளையும் மட்டுமே நம்பி இருக்க வேண்டுமா. ஆக்கப்பூர்வமான அறிவு வளர்ச்சியை சிந்திப்பவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது துரித உணவைப்போலவே இந்த துரிதக் கல்வி அமைப்பும் உள்ளத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது என்பதில் ஐயமில்லை

தற்போதைய கல்வி அமைப்பானது அறிவு வளர்ச்சியை ஊக்குவிப்பதைக்காட்டிலும் மனப்பாடம் செய்து எழுதுவதற்கேற்றவாரு இருப்பது, மாணவர்களின் சுயசிந்தனை மற்றும் சுய அறிவு வளர்ச்சியை தடை செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வழிவகுத்தால் மட்டுமே அவர்களால் தங்களுக்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடமுடியும். வியாபாரத்திற்கான தளங்கள் எத்தனையோ ஆயிரங்கள் இருக்கும் போது , மழலைச் செல்வங்கள் மற்றும் வருங்கால இந்தியத் தூண்களின் அடிப்படை ஆதாரத்தை வியாபாரத் தளமாக்க வேண்டாமே .. மனிதம் காப்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கல்வி என்பது வியாபாரமா அன்றி வளர்ச்சியா?

  1. கூவிக்கூவிக் கல்வியை விற்று,

    கூலிக்காக அல்லலை விற்று,

    கூனிக்குறுகும் சிறுமதி கொண்ட,

    கலியுகக் கொடுமை நீங்கிடும் விரைவில்!

  2. உலக அளவில் நடக்கும் கல்வி, இலக்கியம், அறிவியல் போட்டிகளில் நம் மாணவர்கள் சாதனை புரியாதவரை அது வியாபாரமாகத்தான் வளர்க்கப்படுகிறது எனக்  கருத வேண்டியிருக்கிறது.

    மனனம் செய்து சொல்லும் ஸ்பெல்லிங் பீ, ஜியாகரஃபி பீ போன்ற போட்டிகள்தான் அயல்நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களின் ஆர்வத்தையும்  தூண்டுகிறது.  சுய சிந்தனையை, கற்பனையை வளர்ப்பதற்கு உதவும் கல்விக்கும் வாழ்வாதரத்திற்கு உதவும் கல்விக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

    …… தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *