கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா – கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

0

கவிஞர் காவிரி மைந்தன்

கலைகள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது சிலைகள்! சிலைகள் என்றதும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவ ராஜ்ஜியமம் நெஞ்சில் நிழலாடுகிறது! காஞ்சியைத் தலைநகரமாய்க் கொண்ட பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் மகன் நரசிம்மராஜ பல்லவன் சிற்பக்கலை ஆர்வத்திற்கு தக்கதொரு எடுத்துக்காட்டு! மாமல்லன் என்னும் அவன் நினைவால் உருவான மாமல்லபுரம்!

காலவெள்ளத்தால் சிதைந்துவந்த சிற்பங்களை மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்டெடுத்து காத்து வருதல் பழமையைப் போற்றிப்பாதுகாத்திடவும், வருகின்ற தலைமுறையினர் நம் முன்னோர் பற்றி அறிந்திடவும் கலை, பண்பாடு இவற்றில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கினர் என்பதற்கு சரித்திர சான்றுகாட்ட ஏதுவாக இருக்கும்!

பள்ளிகளில் நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கு புரியும்வகையில், மிக மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்காகவே பாடல்கள் இயற்றித் தருவதில் பெயர்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் வா ராஜா வா திரைப்படத்திற்காக வடித்துத் தந்த பாடல்!

கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக்

கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா..

ஒட்டுக்கல்லை சேர்க்காம..

ஒரே கல்லை குடைஞ்செடுத்து

கட்டி வச்சா மண்டபத்தை பல்லவராஜா

அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

சொல்லு ராஜா சொல்லு..

பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மகாபலிபுரத்தின் சிறப்புகளை எவரும் உணரும் வண்ணம் பட்டியலிடுகிறது இப்பாடல்!

கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா..

அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

ஆமா ராஜா ஆமா…

சிற்பியரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி

கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா

அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

வா.ராஜா வா..

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தை அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய இப்பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருக்கிறார் பிள்ளைத்தமிழாய்!

ஒரு வரலாற்றைக்கூட நான்கே சரணங்களில் வார்த்தளித்துக் கொடுத்திட இயலும் என்று எடுத்துக்காட்டும் வல்லுனராய் கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *