ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

0

கவிஞர் காவிரி மைந்தன்

கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும். 

 

ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ஒரே படம்.. எம்.ஜி.ஆர். நடிப்பில் சண்டைக்காட்சிகளே இல்லாத படம் என்று பல தனித்துவங்களை உள்ளடக்கிய படம் அன்பே வா..  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்கள் முழுவதுமாக இடம்பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி பதிவான பின்னணி சுவையானது.  

 

ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி!!

 

முழுக்க முழுக்க காதலர்கள் இடையே உருவாகும் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்! கண்ணுக்கு குளிர்ச்சியாக சிம்லாவில் அன்றைய நாளில் படப்பிடிப்பு!  நாகேஷ் – மனோரமா நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்!  இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் கூட ஆர்.பி.எம். ரெக்கார்டு போன்று வட்டவடிவில் வந்தது இன்றும் நினைவில் உண்டு.  

 

எம்.ஜி.ஆர். ரசிகர்களால் எண்ணிக்கை பாராமல் பார்க்கப்பட்ட பட வரிசையில் அன்பே வாவிற்கு தனி இடம் உண்டு!  புதிய வானம் புதிய பூமிலவ் பேர்ட்ஸ்நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. ஏ.. நாடோடி.. போக வேண்டும் ஓடோடி.. அன்பே வா.. அன்பே வா.. என்னும் பாடல்களுடன்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!!

 

இந்தத் திரைப்பாடலுக்கு கவிஞர் வாலி எடுத்துக்கொண்ட நேரம்  சற்றே வித்தியாசமானது.  இசையமைப்பு (Tune)கொடுக்கப்பட்டு எழுத முயன்றும் ஏனோ வார்த்தைகள் சரியாக பிடிபடாமல்நேரம் கடந்து கொண்டே சென்றது. பாடல் கிடைத்துவிட்டால்,பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியை படம்பிடித்துவிடாலாம் என்று படக்குழுவினர் காத்திருக்க.. அமைக்கப்பட்ட இசையோ.. அருமை என அனைவராலும் ஏற்கப்பட்.. அந்த முழுநாளும் பாடல் பிறக்காமல் முடிந்துவிடுகிறது.  வீட்டிற்குச்சென்ற கவிஞர் சற்றே வருத்தமுடன் காணப்பட்டார்.  இரவு உணவு கூட வேண்டாம்.  பால் மட்டும் போதும் என்று கூற அவரின் மனைவி.. அவ்வாறே பால் எடுத்துச்செல்கிறார் அந்த அறைக்குள்.. கவிஞரின் கற்பனையில் வரி ஒன்று  தோன்றுகிறது..

 

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று..

தலைவனை அழைத்தேன்.. தழுவிட துடித்தேன்..

பாடலின் பல்லவி பின் வருகிறது.. தான் எழுத மறந்த பாடலிது என்பதையே வரியாக்கி அந்த இசைக்கட்டுக்குள் கெட்டிக்காரத்தனமாக வைத்த வாலியைப் பாராட்டலாமே!

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. கண்மூடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. 

எம்.ஜி,ஆர். சரோஜாதேவி.. இணைந்து குதிரை சாளர வண்டியிலே அந்தக் குளம்படிச்சத்தமே பின்னணி இசையாய் தொடரசெந்தூர வண்ணங்கள் வானம் முழுவதும் சிதறிவிழ.. மனக்கண்களில் இன்றும் தெரியும் இனிய பாடலாய்..

 

http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

 

 

ராஜாவின் பார்வை ராணியின் – Rajavin paarvai

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.