கவிஞர் காவிரி மைந்தன்

ஒரு தரம்.. ஒரே தரம்..

ஒரு தரம் ஒரே தரம் .. என்று தொடங்குகிறது.. பல்லவி.. சுமதி என் சுந்தரிக்காக.. காதல் சுகம் என்னவென்று அறியவிரும்புவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்! ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறார்கள்.. அது சரி .. காதல் என்பது எந்தக் கலை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்குத் தெரியாத பந்தம் வளர்த்து.. கணநேரப் பிரிவைக்கூடத் தாங்கமுடியாமல் வலிக்கிறதே.. அது எப்படி? இருவேறு உடல்களுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இதயங்கள் இடம்மாறித் துடிக்கிறதே அது எப்படி? சுகமான வேதனை இது என்றுகூட துணிவோடுக் கூறிவிடலாம்! மனதுக்குள் தென்றல் வீசுகிறதா? புயல்வீசுகிறதா? கேட்டுச்சொல்லுங்கள் சிலநேரம்!!

எத்தனை எத்தனையோ காதல்பாடல்கள் கணக்கின்றி வந்து கொண்டுதானிருக்கின்றன! கவிஞர்கள் எழுதிக்கொண்டு தானிருக்கிறார்கள்! காலங்களைக் கடந்து சிலபாடல்கள் மட்டும்தானே முணுமுணுக்கப்படுகின்றன. அந்த ரகம்.. ஒரு தரம்.. ஒரே தரம்.. மெல்லிசை மன்னர் இசையின் அணுக்களை சுகம்பிரித்து நம் இதயங்களுக்கு ஏற்றுமதி செய்துவைத்த பாடல்! டி.எம்.எஸ். பி.சுசீலா கூட்டணியில் கொள்ளையின்பம் கொண்டுவரும் பாடல்!

இந்தத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் கவியரசு கண்ணதாசன்.. இந்த ஒரு பாடல் மட்டும் கவிஞர் வாலி!!
காதல் சுகத்திற்கும் மயக்கத்திற்கும் தகுந்த பாடலிது!!
முதல் முறை மட்டுமே முன் அனுமதி வேண்டும்
பின் உன் முனகல்கூட முழுஅர்த்தம் தந்திடும் என்று நான் எழுதிய கவிதை நினைவில்..

அன்பின் ஆலாபனையா இது? காதலின் உச்சக்கட்டமா? காமதேவன் வாசல் திறப்பு விழாவா? கற்பனைக் கொடிகட்ட.. கவிஞரின் எண்ண ரதத்தில் எழுத்துப் படையல்! பெண்மை லாவகம் காட்ட.. ஆண்மை அதை ஆமோதிக்க.. வண்ணக் கவிதை வந்துவிழுகிறது!

ஒருதரம்.. ஒரே தரம்..
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
காதலில் வேறென்ன லாபம்? (2)
ஒருதரம்.. ஒரே தரம்..
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண்மறைவாய்
மூடிவைத்தால் சுவை இருக்கும்
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
உள்ளதெல்லாம் அள்ளித்தந்தால்
காலமெல்லாம் சுவையிருக்கும்!

ஒருதரம்.. ஒரே தரம்..
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையின் என்னென்ன பாவம்
உதவி செய்தால் என்ன பாவம்

வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டுக் கொள்ள தடை செய்வாளோ
தத்தித் தத்தி மெல்ல செல்வாளோ..
தங்க வளைத் தளிர் கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்துப் பந்தல் நகை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு..

சித்திரத்தின் முகம் கண்டேனே..
செம்பவளம் நிறம் என்றேனே..
உண்ண உண்ண இதழ் செந்தேனே..
உன்னிடத்தில் என்னைத் தந்தேனே..
இல்லை எனும் இடை தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்லச் சொல்ல தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ

ஒருதரம்.. ஒரே தரம்..
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
காதலில் வேறென்ன லாபம்?

http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ
http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ

திரைப்படம் – சுமதி என் சுந்தரி (1971)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
இயக்கம் – சி.வி. இராஜேந்திரன்
நடிப்பு – சிவாஜி, ஜெயலலிதா
பாடல் – கவிஞர் வாலி

ஒரு தரம் ஒரே தரம் – Oru tharam ore tharam

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.