காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது – கவிஞர் வாலி
1975ல் வெளிவந்த மன்னவன் வந்தானடி திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலியின் கைவண்ணம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மஞ்சுளா நாயகியாக திரையில் எழுதப்பட்ட இனிய காதல் கவிதையிது! கொஞ்சும் தமிழெடுத்து காதலியைக் கொஞ்சும் வண்ணங்கள்.. குளிர்நீரில் நீந்தும் பனிக்காற்றில் பொங்கும் எண்ணங்கள்! தமிழின் இனிமை என்னவென்று தாராளம் காட்டும் பாடலில் ஏற்ற இசை கொடுத்து இனிய குரல்களின் சங்கமம் இதோ டி எம். சௌந்தரராஜன் மற்றும் பி.சுசீலா..
காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது
கண்ணான கண்மணி வனப்பு கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு
காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு என் மார்பில் நீ வந்து உலவு
ராஜராணியின் காதல் உலா இது. கற்பனைகள் வரிசையாய் உற்சவம் நடத்தும் உன்னதம் இங்கே.. காதலர் இருவருக்காக.
திங்கள் ஒரு கண்ணில் குளிர் தென்றல் மறு கண்ணில் தாலாட்டும் பெண்மை இது
வைகை மலர்ப்பொய்கை என மங்கை மணிச் செங்கை நீராட்டும் நேரம் இது
தென்பாண்டித் தேவனின் அணைப்பு குற்றாலத் தென்றலின் நினைப்பு
ராஜ லீலைகள் இதுதானோ உள்ளம் பொல்லாத ஆனந்தத் தவிப்பு
(காதல்)
வாலி எந்த நூற்றாண்டுக்குள் நுழைந்து தந்த தமிழோ? உற்சாகம் ஊற்றெடுக்க.. உள்ளம் குதூகலிக்க எண்ணம் சிறகு விரித்து எங்கோ பறப்பது போல்.. இந்த இன்பத் தமிழ் காண இதயம் என்றும் விரும்புமே!
கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் சந்தம் அதில் தோன்றும் தானாகப் பாடல் வரும்
தத்தும் கிளி நித்தம் மணி முத்தம் இடும் சத்தம் தேனாகக் காதில் விழும்
சிங்காரப் பொன்மகள் சிரிப்பு சங்கீத வீணையின் படைப்பு
அழகு தேவதை அலங்காரம் கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு
(காதல்)
அன்பின் சந்தம் அள்ளி எடுத்து அதையே பாடல் வரிகளாக்கிக் கொடுக்கும் திறம் அன்னவருடையது என்பதை பறைசாற்றுகிறார்.
பொங்கி வரும் சந்தம் முத்தமிடும் இசை.. இரண்டையும் சிந்தாமல் சிதறாமல் ஏந்திவந்து நம் இதயம் நிறைக்கும் குரல்கள்.
வாழ்க்கையில் அவ்வப்போது இனிமை சேர்க்க இதுபோன்ற பாடல்களில் சரணடைவோமே!

