கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

kamaladevi_Aravindhanஆவி பறக்கும் மணிப்பிட்டில், நெய் பெய்து, சர்க்கரையும் கனிந்த கதலிப் பழமும் பிசைந்து, ரசித்து ருசித்து, கணவர் பசியாறிக்கொண்டிருக்க, கணவருக்காக ”சூடுசாய”யை ஆற்றிக்கொண்டிருந்தபோதுதான் வாசல் மணி அடித்தது.

திறந்தால் ஜோசப் நின்றுகொண்டிருந்தான். அட, மூன்று வருடங்களாவது இருக்காது இவனைப் பார்த்து!!

மேடை நாடக எழுத்து, இயக்கம், எனப் பொறி பறக்க எழுதிக்கொண்டிருந்தபோது, டெக்னிஷியனாக வந்து சேர்ந்தவன் ஜோசப். ஆனால் ஸ்டேஜ் மேனேஜ்மெண்டிலிருந்து, ஏன் அவசரத்துக்கு, ப்ரொப்ம்டிங் வரை, எல்லா நிலைகளிலும் உதவி செய்யும் ஆற்றல் ஜோசப்புக்கு இருந்தது. பொறியியலாரான கணவரிடம் அவ்வளவு பவ்யமாக நடந்து கொண்டதில், கணவருக்கே கூட பிடித்துப்போய்விட்டது.

நாடக அரங்கேற்றத்துக்கு இரண்டு வாரமிருக்கும்போது, இப்படித்தான், ஒருநாள் காலையில் இதேபோல், கணவர் காலையாகாரம் பசியாறிக்கொண்டிருக்கும்போதுதான், ஜோசப் வீடு தேடி வந்திருந்தான். ஆனால் தனியாக அல்ல.. நாடகத்தில் ஒப்பனைக்கும், ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்துக்கொண்டுமிருந்த மல்லிகாவோடு, வீட்டு வாசலில் வந்து நின்றான்.

எட்டும் பொட்டும் திரியாத பெண்குட்டியோடு இவனுக்கென்ன வேலை? என்று திகைத்துப்போய் நிற்க, ‘வாழ்நாள் வேலையே இனி மல்லிகாவோடுதான்’ எனும் உறுதியோடு வந்திருந்தான் ஜோசப். அதைவிட வேடிக்கை, ‘மணந்தால் ஜோசப், இல்லையேல் மரணம்தான்’ எனும் வீர வசனம் உதிர்த்தாள் மல்லிகா.

இவர்களிருவருக்கும் காதலா? எப்பொழுது, எப்படி? என்டெ நாடக இயக்கத்தில் வைத்து, எனக்கே கூடத் தெரியாமல், காதல், கத்தரிக்காய் என்று, எப்பொழுது இவர்கள் மெய்ம்மறந்தார்கள்?

கோபம் கோபமாய் வந்தது. சரி, அதற்கு ஏன் என் வீடு தேடி வரவேண்டும்?

மல்லிகா முகத்தைப் பொத்திக்கொண்டு மூசு மூசு என்று அழுதாள்.

”போட்டு அடித்திருக்கிறார்கள் மேடம்? பெல்ட்டால் வீறு வீறென்று வீறியிருக்கிறார்கள். ரூமுக்குள் கூட்டிப்போய் பாருங்கள். உடம்பெல்லாம் அப்படி தழும்பு. என்னைக் காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?” என்று கொதித்துப்போய் கேட்டான் ஜோசப்.

மல்லிகா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவி, ஜோசப் உயர்நிலைப் படிப்புகூட முடிக்காதவன். உருப்படியாக சொல்லிக்கொள்ள ஒரு வேலை கூட இல்லை. படிப்பு, வேலை மட்டுமல்ல. பெற்றோரின் எதிர்ப்புக்குக் காரணம் என்பதைச் சுலபமாக ஊகிக்க முடிந்தது.

இப்பவே, இப்படியே எங்க வீட்டுக்கு கூட்டிப் போயிடுவேன் மேடம், ஆனால் அங்கேயும் வந்து இவ அப்பா அம்மா பிரச்சினை பண்ணுவாங்களேன்னுதான், இங்கே வந்தோம். நீங்கதான் எப்படியாவது மல்லிகாவுக்குக் கொஞ்ச காலத்துக்கு அடைக்கலம் கொடுக்கணும் மேடம்.“

எரிச்சல், கோபம், எல்லாமே பதறிக்கொண்டு வந்தது. அதைவிட பயம் கணவரை நினைத்தபோது. அதற்குள் கணவரே அழைத்துவிட்டார்.

”இதோ பார், அவனை அறைந்துவிடுவேன், படிக்கிற பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான், நாலு திட்டுகூட திட்டாமல், கதை கேட்டுக்கொண்டு நிற்கிறாயா? முதலில் அவர்களை வெளியேற்று, இனி அவர்களை இந்தப் பக்கமே பார்க்கக் கூடாது“ என்று சீறிவிட்டு கணவர் அலுவலகம் போய் விட்டார்.

மல்லிகா பிழியப் பிழிய அழுதாள். ஜோசப் குமுறினான்.

”மேடம், சாருக்கு எங்கள் காதலைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நீங்கள் எழுத்தாளராயிற்றே? உங்களால் கூடவா எங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை? மல்லிகா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது மேடம்.”

திடீரென்று சிலிர்த்துக்கொண்டு எழுந்த மல்லிகா, ”வாழ்க்கையில் இணைய முடியாத நாங்கள், மரணத்தில் இணைந்துகொள்கிறோம். அப்பொழுது எங்களை யாரால் பிரிக்க முடியும்?” என்று சொல்ல, அடுத்த கணம் அது நிகழ்ந்தது.

அப்படியே மல்லிகாவை மார்போடணைத்து, ஆரத் தழுவிய ஜோசப், ‘பச்’ சென்று ஒரு முத்தம் கொடுத்தான் மல்லிகாவுக்கு.

”யெஸ் மேடம், எம் மல்லிகா சொன்னதுதான் சரி, நாங்க வரோம் மேடம், எங்க வாழ்க்கையை முடிவெடுக்க, இனி யார் தயவும் எங்களுக்குத் தேவையில்லை.”

அவர்கள் போய் வெகு நேரத்துக்கு மனசு தவியாய்த் தவிதவித்தது. மல்லிகா வீட்டில் தொலைபேசினால், தொலைபேசி எடுக்கப்படவே இல்லை.
அந்தப் பிள்ளைகளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ, என்று உக்கி உருகி, மருகிக்கொண்டிருக்க, வேறு வழியின்றி கணவருக்கே போன் செய்தபோது,
பேசவே முடியவில்லை. கண்ணீராய் வந்தது.

”அநியாயமாய் அவர்களை விரட்டிவிட்டீர்களே? அவர்கள் தற்கொலை செய்யப் போகிறார்களாம், தெரியுமா?”

கணவர் அசரவில்லை. அப்படித் திட்டினார். ‘உனக்கென்று எப்படித்தான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் வந்து வாய்க்கிறார்கள்? படிப்பு முடியும் வரை கூடப் பொறுமையில்லையென்றால், அதுகளை நிற்க வைத்துச் சுடணும். இனியும் அவர்களைப் பற்றி என்னிடம் பேசாதே?”

படிப்பு, பொருளாதாரத் தேவை, வாழ்க்கை, பற்றியெல்லாம் உபதேசித்தபோது, மல்லிகா ஒரு கேள்வி கேட்டாள்.

”படிப்பு என்னை விட அவருக்கு கம்மிங்கறதுக்காக, நாங்க காதலிக்கக் கூடாதா மேடம்? ஜாதியைப் பற்றி எங்களுக்கே கவலையில்லாத போது எங்கப்பா அம்மாவுக்கென்ன உரிமை இருக்கு, இது பத்திப் பேச?”

யோசிக்க வேண்டிய கேள்வியே என்று மாட்டுக்குக் கொம்பு சீவிவிட மனம் வரவில்லை. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் ஏக்கம், கனவு, எதிர்பார்ப்புக்கு ஒரு விலையும் இல்லையா? என்றே மனசு பரிதவித்தது.

சாப்பிட முடியவில்லை. பொருந்தி அமர்ந்து ஒரு வேலை செய்ய முடியவில்லை. நின்றால் நிமிர்ந்தால், புழுக் குடைச்சலாய் அவர்களுக்கு என்னாச்சோ, என்றே கவலையில் வியர்த்து, விறுவிறுத்து, நிற்க, ஆச்சரியமாய் அலுவலகத்திலிருந்து திரும்பிய கணவர், புன்சிரிப்பு தவழ வீட்டினுள் நுழைந்தார்.

உடனே என்னோடு வெளியே வா, என்று அழைக்க, ஒன்றுமே புரியாமல், கணவரோடு செல்ல, அருகிலிருந்த ஹாக்கர் செண்டரின், ஒரு குறிப்பிட்ட இருக்கையின் பின்புறமாய்ச் சென்று நின்றவர், “அங்கே பார்!” என்று சுட்டினார்.

மீசூப்பும், ஏதோ குளிர்பானமுமாய், இருவர் மெய்ம்மறந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வேறு யார்? ஜோசப்பும் மல்லிகாவும்தான். மீசூப்பில் மிதந்த  fishball ஐ சாப்ஸ்டிக்கால் குத்தி, மல்லிகாவுக்கு பரிவோடு ஜோசப் ஊட்டிக்கொண்டிருந்தான். மல்லிகா டிஷ்யூவால், ஜோசப்பின் கன்னத்தில் தெறித்த சூப்புத் துகளைக் காதலோடு துடைத்துவிட்டுக்கொண்டிருந்தாள்.

“இவர்களா தற்கொலை செய்யப் போகிறார்கள் என்று அப்படி அழுதாய்?” என்று கணவர் கேட்க, எனக்குத்தான் வெட்கமாகப் போய்விட்டது. எப்படியோ அவர்களுக்கு ஒன்றுமே ஆகவில்லையே என்ற நிம்மதிப் பெருமூச்சோடு அன்று பார்த்ததுதான் இவர்களை.

3 ஆண்டுகட்குப் பிறகு இன்றுதான் பார்க்கிறாள் ஜோசப்பை. திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருக்கிறான்.

”மேடம், சாருக்கு என் மீது கோபமிருக்கும். ஆனால் இப்பொழுது அதையெல்லாம் நினைக்காமல், சாரும் நீங்களும் அவசியம் திருமணத்துக்கு வரவேண்டும்” என்று ரொம்ப அடக்கமாய்ச் சொல்லி, பத்திரிகையை நீட்டிவிட்டு, சாயை கூட குடிக்காமல், அவசரமாய்ப் போய்விட்டான்.
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி. மணப்பெண் மல்லிகா அல்ல. மணமகளின் பெயர் மார்கரெட், என்று பார்த்தபோது, படித்தபோது, உண்டான அதிர்ச்சி இம்மட்டு அம்மட்டு அல்ல. அது சரி. மல்லிகா என்ன ஆனாள்?

உயிரையே விடத் தயாராக இருந்தாளே? காதலுக்காக அப்படி உருகிய இவர்களுக்கென்ன வந்தது?

ஹ்ம்ம். இதே சிங்கப்பூரில் எங்கேனும், என்றேனும், ஞான் மல்லிகாவைப் பார்க்காமலா போய்விடுவேன்!!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *